பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிக் கல்வித் துறை பாகம் - 3

பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பெண் கல்விக்கான சிறப்பு முயற்சிகள்

கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகள்

கிராமப்புறப் பெண்கள் எழுத்தறிவு தேசிய சரசரியான 46.13 விழுக்காட்டை விடக் குறைவாக உள்ள வட்டாரங்களில் கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யா லயா உண்டு உறைவிடப் பள்ளி 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 - 14 வயது பெண் குழந்தைகளுக்குக் கல்வியை வழங்கி, பாலின வேறுபாட்டைக் குறைப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்தின்கீழ் 14 மாவட்டங்களில் கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்களில், 61 கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.

இப்பள்ளிகளில் கல்விச் செயல்பாடுகளுடன் தையல், பூவேலைப்பாடு, மண்புழு உரம் தயாரித்தல், கணினிக் கல்வி, விளையாட்டு, யோகா மற்றும் கராத்தே போன்ற இணைச் செயல்பாடுகளும் கற்றுத் தரப்படுகின்றன. ஒவ்வொரு மாணவிக்கும் மாதமொன்றுக்கு ரூ.100/- ஊக்கத் தொகையாக அவர்தம் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மாணவிகள் இப்பள்ளியில் தங்கியிருக்கும் காலத்திற்குக் காப்பீடும் செய்யப்படுகிறது. இப்பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவிகள் தேசிய படிப்புதவித் தொகைக்கான தேர்வு எழுத பயிற்றுவிக்கப் படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 68 மாணவிகள் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். எட்டாம் வகுப்பு முடித்த மாணவிகள் ஒன்பதாம் வகுப்பில் முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவதுடன் அவர்களுக்கு விடுதி வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

இப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10.65 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள மாணவிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவிகள்

ஆண்டு

மாணவிகளின் எண்ணிக்கை

2011-12

4471

2012-13

4461

2013-14

4507

2014-15

4633

2015-16

4614

2016-17

4534

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் உள்ளடங்கிய கல்வி

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கல்வியுடன் உதவி உபகரணங்கள் வழங்கி, தொடர்ந்து கல்வி கற்க வழிவகை செய்யப்படுகிறது. 1,36,134 சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளில், 1,27,864 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 8,270 குழந்தைகள் வீட்டுவழிக் கல்வி மூலமாகப் பயின்று வருகின்றனர். இவர்களுக்காக ரூ. 8.88 இலட்சம் மதிப்பில் தேவையான உதவி உபகரணங்கள் 2016-17 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.

இதன் விவரம் பின்வருமாறு:

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள வசதிகள்

வ. எண்

குழந்தைகளின் எண்ணிக்கை

வசதிகள்

1

11664

கற்றல் உபரகணப் பெட்டி

2

14452

பாதுகாவலர்

3

14745

போக்குவரத்து

4

293

பிரெய்லி புத்தகங்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுவாரியாகப் பயின்றுவரும் மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

2011-2012 - 80117 மாணவர்கள்

2012-2013 - 110118 மாணவர்கள்

2013-2014 - 126641 மாணவர்கள்

2014-2015 - 132353 மாணவர்கள்

2015-2016 - 136263 மாணவர்கள்

2016-2017 - 136134 மாணவர்கள்

பாடப்பொருள் தகவமைத்தல்

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு ஏற்ற நெகிழ்வான பாடத்திட்டத்தினை வழங்கும் வகையில் பாடப்பொருள் தகவமைத்தல் சார்ந்த பயிற்சி 20,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், 10,002 நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சி

2016 -17ஆம் ஆண்டில் சுகாதாரத் துறையுடன் இணைந்து மூளைக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி 41,300 பெற்றோர்கள் பயனடையும் வகையில் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

கல்விக்கான மாநில ஆதார வளமையம்

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சென்னையில் மாநில ஆதார வளமையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உதவி உபகரணங்களுடன் கூடிய மையமாக இது திகழ்கிறது. பேச்சுத் திறன், கேட்டல் மற்றும் பார்வைக் குறைபாடு, மதியிறுக்கம் மற்றும் மூளை முடக்குவாத குழந்தைகள் எனப் பலதரப்பட்ட சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கு இம்மையத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழிகாட்டுதலும் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ள எண்ணற்ற இக்குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலம் ஊடாடும் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ஆரம்ப நிலை செயல்பாடுகள்

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை செயல்பாடுகள், அவர்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கும் உறுதுணையாக அமைகிறது. மேலும் உதவித் தொழில்நுட்ப உபகரணங்கள், கேட்கும் திறன், குடும்ப ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல், மருத்துவ சேவை, செவிலியர் சேவை, ஊட்டச்சத்து, தொழிற்பயிற்சி, இயன்முறை பயிற்சி, மனநலப் பயிற்சி, பார்வை சிகிச்சை மற்றும் இதர சேவைகளும் வழங்கப்படுகின்றன. மாநில ஆதார வள மையத்தில் முன்னோட்டப் பயிற்சியாகத் தொடங்கப்பட்ட ஆரம்ப நிலை செயல்பாடுகள் மூலம் குழந்தைகள் நல்ல முன்னேற்றம் அடைந்ததால், தமிழகம் முழுவதும் 85 ஆரம்ப நிலை ஆயத்தப் பயிற்சி மையங்கள் ரூ. 5.78 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

தர மேம்பாடு

கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்தல், பாடநூல்களுக்குப் பொருத்தமான கற்றல் உபகரணங்களை வழங்குதல், ஆசிரியர்களுக்குத் திறன் வளர் பயிற்சி வழங்குதல் மற்றும் அவர்களின் தனித்திறன்களை மேம்படுத்துதல் என பல்வேறு விதமான செயல்பாடுகளின் மூலம் தொடக்கக் கல்வியின் தரத்தினை மேம்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தர மேம்பாட்டு வழிமுறைகள்

எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல்

செயல்வழிக்கற்றல் என்பது குழந்தை மையக் கல்வியாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் கருத்துகளை உள்வாங்கும் வேகம் மாறுபடும். குழந்தைகள் அவரவர் கற்கும் வேகத்திற்குத் தகுந்தவாறு அடிப்படைக் கருத்துகளைக் கற்க வாய்ப்பளிக்கிறது. வகுப்பறையில் வெவ்வேறு வயதுடைய சக குழந்தைகளுடன் பழகுவதனால், சமூகத் திறன் வளர்கிறது. இந்நிலை மாணவர்களின் குழுக் கற்றல், பரிமாற்றம் மற்றும் சுய கற்றலுக்கு அதிக அளவில் வாய்ப்பளிக்கின்றது. 2012 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட முப்பருவக் கல்வி முறைக்கு ஏற்ப, செயல் வழிக் கற்றல் அட்டைகள் எளிமைப்படுத்தப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டன. மாணவர்களின் உள்ளார்ந்த கருத்துகளை வெளிக்கொணர செயல்வழிக் கற்றல் முறை வாய்ப்பளிக்கிறது.

மாணவர்களின் ஈடுபாடு, புரிதல் திறன், சுய கற்றல், கருத்துப் பரிமாற்றம் போன்ற செயல் திறன்களை வளர்க்க, செயல்வழிக் கற்றலில் வாய்ப்புள்ளது. இம்முறையை நன்கு செயல்படுத்திட திறன் வளர் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது வழி கல்விக்கான செயல்வழிக் கற்றல் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பிற மொழிகளில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்பட்டுள்ளது என்பதை அடைவு ஆய்வுகள் மூலம் அறியமுடிகிறது.

செயல்திட்டவழிக் கற்றல்

அன்றாட வாழ்வில் எழும் சிக்கல்களை கண்டறிந்து அவற்றைக் களையவும், தீர்வு காணும் அணுகுமுறையைப் பெறவும், அதனை நடைமுறையில் பயன்படுத்துவதற்கு மாணவர்களின் ஆர்வத்தைத் துாண்டவும் செயல்திட்ட வழிக் கற்றல் உதவுகிறது. இப்படைப்புகள் "புத்தாக்கத்திற்கான வடிவமைப்பு” எனும் உலகளாவிய அமைப்பால் நடத்தப்படும் தேசிய அளவிலான போட்டிக்கு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

முப்பருவக் கல்வி

முப்பருவக்கல்வி முறை 1 முதல் 8 வகுப்பு வரை 2012-13 ஆம் கல்வியாண்டிலும், 9ஆம் வகுப்பிற்கு 2013-14ஆம் கல்வியாண்டிலும் நடைமுறைபடுத்தப்பட்டதன் விளைவாக மாணவர்களின் கற்றல் அடைவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை மாநில அளவிலான ஆய்வுகள் உறுதி படுத்துகின்றன. மேலும், இது மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைத்தது மட்டுமின்றி, கற்றலில் கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தேசிய கலைத்திட்ட வரைவு 2005-இன் பரிந்துரையின் அடிப்படையில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்புகளுக்கு 2012-13 ஆம் ஆண்டிலும், 9 ஆம் வகுப்பிற்கு 2013-14 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்மதிப்பீட்டு முறை, கற்றலை மன்னத்தின் திசையிலிருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைக்கிறது. இம்முறை, கல்விச் செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளின் பரிமாணங்களை மதிப்பீடு செய்கிறது. மேலும், குழந்தையின் தனிப்பட்ட மதிப்பீட்டுத் தேவைக்கேற்ப நெகிழ்வான் முறையாக அமைந்துள்ளது.

புத்தகப் பூங்கொத்து

குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த, பள்ளி வேலை நேரங்களில் புத்தகப் பூங்கொத்து முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் எளிதில் எடுத்து பயன்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள இப்புத்தகங்கள் வாசிப்புத் திறன், சொல் வளம், பொது அறிவு, உயர்நிலை சிந்தனைத் திறன், கற்பனை மற்றும் படைப்பாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது. இம்முறை குழந்தைகளின் சுய வாசித்தலை ஊக்கப் படுத்துகிறது. இப்புத்தகப் பூங்கொத்தில், கதைகள், விவசாயம், சாலைப்பாதுகாப்பு, பாரம்பரிய விளையாட்டுகள், ஒழுக்க நெறிகள், படைப்பாற்றல், இயற்கையைப் பாதுகாத்தல் மற்றும் சமூக நெறி போன்ற புத்தகங்கள் உள்ளன.

கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்

மாணவர்கள் எளிதாக கற்பதற்கு கீழ்க்கண்ட கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்தபடுகிறது.

* கணித உபகரணப் பெட்டி

• அறிவியல் உபகரணப் பெட்டி

* அசைப்படக் குறுந்தகடுகள்

* நடமாடும் அறிவியல் ஆய்வகம்

தற்காப்புக் கலை பயிற்சி

நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 30,000 பெண் குழந்தைகளுக்கு 2016-17 ஆம் ஆண்டில் தற்காப்புக் கலையாக (கராத்தே) கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி கற்றலுக்கான சிறப்பு முயற்சிகள்

குழந்தைகள் எளிதாக ஆங்கிலத்தில் பேச, கேட்க, கலந்துரையாட, உச்சரிப்பை அடிப்படையாகக் கொண்ட 43 குறுந்தகடுகள் உருவாக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஆங்கிலவழிக் கல்வி

2012 - 13 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 4,84,498 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயின்று வருகின்றார்கள். ஆங்கில வழிக் கற்பித்தலுக்கான பயிற்சி, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2.7.10 காலமுறை மதிப்பீடு மாணவர்களின் வாசித்தல், எழுதுதல் திறன் மற்றும் அடிப்படை கணித அறிவு போன்றவற்றை அறிய குறிப்பிட்ட கால இடைவெளியில் அடைவுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இந்த ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஆகஸ்டு மற்றும் பிப்ரவரி / மார்ச் மாதங்களில் நடத்தப்படுகின்றது. மேலும், இது ஆசிரியர்கள் குறைதீர் கற்பித்தலை மேற்கொண்டு, மாணவர்களின் அடைவுநிலையை மேம்படுத்த உதவுகிறது.

மாநில அடைவுத் திறனாய்வு

மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை அளவீடு செய்வதற்கு மாநில அளவிலான திறன் அடைவு மதிப்பீடு, தெரிவு செய்யப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள திறன்களில் நடத்தப்படுகிறது.

• சரளமாக வாசித்தல்.

• கேட்ட தகவல்களை நினைவில் கொள்ளல்.

* இலக்கணம்

• மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துகளை எடுத்துரைத்தல்.

* எழுத்துகளை உச்சரித்தல்.

• கணித அடிப்படைத் திறன்கள்.

• அறிவியல் சார்ந்த அறிவு மற்றும் செயல்திறன்கள்.

ஆய்வின் வெளிப்பாடு

2013 முதல் 2015 வரை நடத்தப்பட்ட மாநில அடைவுத் திறனாய்வு முடிவுகளின் படி 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ள விவரம் கீழ்க்கண்ட அட்டவணைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

வகுப்பு - 3

ஆண்டு

பாடங்கள்

தமிழ்

ஆங்கிலம்

கணிதம்

2013

84

72

77

2014

90

83

88

2015

95

93

95

வகுப்பு - 5

ஆண்டு

 

பாடங்கள்

தமிழ்

ஆங்கிலம்

கணிதம்

2013

64

67

69

2014

83

75

75

2015

94

89

92

வகுப்பு - 8

ஆண்டு

பாடங்கள்

தமிழ்

ஆங்கிலம்

கணிதம்

2013

72

43

40

2014

77

67

66

2015

89

82

84

ஆசிரியர் செயல்திறன்

ஆசிரியர்களின் சுயமதிப்பீட்டிற்காக கீழ்க்காணும் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன

* குழந்தைகளுக்கான கற்றல் அனுபவங்களை வடிவமைத்தல்.

* பாடப்பகுதியினைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் அதனைப் பற்றிய அறிவு.

• கற்றல் மேம்பாட்டு உத்திகள்.

* மாணவர் - ஆசிரியருக்கிடையேயான உறவு.

* ஆசிரியப் பணித் திறன் முன்னேற்றம்.

* பள்ளி வளர்ச்சி.

* ஆசிரியர் வருகை.

• சுத்தம் மற்றும் சுகாதாரம்.

ஆசிரியர்கள் தமது கற்பித்தல் நிகழ்வுகளில் மேற் கொள்ள வேண்டிய செயல்திட்டங்களை மேம்படுத்திக் கொள்ளவும், வகுப்பறை நிர்வாகத்தை வளப்படுத்தவும் இந்த சுயமதிப்பீடு, ஆசிரியர்கள் தங்கள் இலக்கினை அடைய உதவுகிறது.

பள்ளித் தரமதிப்பீட்டுத் திட்டம்

இத்திட்டம் பள்ளியை மதிப்பீடு செய்வதற்கான ஒரு விரிவான செயற்கருவியாகும். ஒவ்வொரு பள்ளியின் முக்கியச் செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்தவும், அப்பள்ளியிலுள்ள குறைகளைக் களையவும், புதிய உத்திகளைக் கையாண்டு நிவர்த்தி செய்யவும் இக்கட்டமைப்பு உதவுகிறது.

ஆசிரியர் பணியிடைப் பயிற்சி

ஆசிரியர் பணியிடைப் பயிற்சி, தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறு வளமையம் மற்றும் வட்டார வளமைய அளவில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் கட்டகங்கள் தயாரிக்கப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

(அ) கற்றல் கற்பித்தல் முறைகள்

கற்பித்தலில் புதுமை முறைகளான செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற அணுகு முறைகள் குறித்தான பயிற்சிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது.

(ஆ) பாடப்பொருள்

தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் கேட்டல், பேசுதல், எழுதுதல், வாசித்தல் போன்ற திறன்களை மேம்படுத்துவதற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வகுப்பறையில் அறிவியல் மற்றும் கணித பாடங்களை திறம்பட கற்பிப்பதற்கு பல்லூடகத்தை பயன்படுத்தி பயிற்சி வழங்கப்படுகிறது.

(இ) பள்ளி சுகாதாரம் மற்றும் குழந்தை உளவியல்

2017-18 ஆம் கல்வியாண்டில் நமது பண்பாடு, பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு, பள்ளி சுகாதாரம், உடல் நலம் பேணுதல், மன அழுத்த மேலாண்மை மற்றும் நன்னெறிக் கல்வி போன்ற பயிற்சிகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட உள்ளன.

(ஈ) தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி

2017-18 ஆம் கல்வியாண்டில், 'தலைமைப்பண்பு வளர்த்தல் பயிற்சியானது புதுதில்லி, தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படும். உயர் தொடக்க வகுப்புத் தலைமை ஆசிரியர்கள் 6950 பேர் இப்பயிற்சியினால் பயன் பெறுவர்.

(உ) ஆசிரியர் பயிற்றுநர்களின் திறன் மேம்பாடு

குறுவள மையங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

ஆசிரியர் நியமனம்

தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எனவே ஆசிரியர்களைத் தகுதித் தேர்வின் மூலமாக தெரிவு செய்யும் முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

பகுதிநேரப் பயிற்றுநர்கள்

குழந்தைகளின் பன்முகத் திறன்களை வளர்க்கும் விதமாக 6,7,8 வகுப்புகளில் இசை, ஓவியம், கலை, விளையாட்டு மற்றும் கணினி ஆகிய புலங்களில் பகுதி நேர பயிற்றுநர்கள் மூலமாக குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் - மாணவர் விகிதம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 தொடக்க நிலை வகுப்புகளில் 1:30 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தையும், உயர் தொடக்க வகுப்புகளில் 1:35 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தையும் வலியுறுத்துகிறது. தரமான கற்றல் கற்பித்தலை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தலையாய முன்னுரிமையாக கருதப்படுவதால், சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ள விகிதத்தைவிட சிறப்பாக, தொடக்கநிலை வகுப்புகளில் 1:24.93 எனவும், உயர் தொடக்க வகுப்புகளில் 1:25.21 எனவும் ஆசிரியர் மாணவர் விகிதம் அமைந்துள்ளது.

கணினி பயிற்சி

கணினி வழிக் கற்றல்

மாணவர்கள் தற்போதைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சிறப்பான கணினி அறிவைப் பெறும் வகையில் பள்ளிகளில் கணினி வழிக் கற்றல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கணினி வழிக்கல்வியை அளிக்கும் விதமாக 9982 அரசுப் பள்ளிகளில் 26,366 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கான கணினிப் பயிற்சி

மாணவர்களுக்குக் கணினிவழிக் கல்வி வழங்குவதற்காகக் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிரியர்களுக்குக் கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. மைக்ரோசாப்ட், தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இன்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இதுவரை 1,16,127 ஆசிரியர்களுக்குக் கணினிப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் கண்காட்சி

மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தவும், திறன்வாய்ந்த மாணவர்களை அடையாளம் காணவும், அன்றாட வாழ்க்கை அனுபவங்களை அறிவியலுடன் தொடர்புபடுத்தவும் "தேசியக் கட்டமைப்பில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் பங்கு" எனும் தலைப்பில் குறுவள அளவில் ஒவ்வோர் ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

மாணவர்களுக்கான தொழில்நுட்ப மன்றப்போட்டிகள்

மாணவர்களை அறிவியல், கணக்கு மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் உற்சாகத்துடன் பங்கேற்கச் செய்ய இம்மன்றங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 'ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பயன்பாடு' என்னும் தலைப்பில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

மாணவர்களின் திறன் மற்றும் உள்ளார்ந்த ஆளுமைத் திறன்களை வெளிப்படுத்தி, மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 32,656 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2016-2017 ஆம் கல்வி ஆண்டில், ரூ. 51.14 இலட்சம் மதிப்பில் நடத்தப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள்

2011- 2016 ஆம் ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில், புதிய பள்ளிக் கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறைகள் ரூ. 1002.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. தற்போது ரூ. 70.11 கோடி செலவில், 4602 உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுவர் சித்திரங்கள் வரைதல்

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் குழந்தைகள் ஆங்கிலச் சொற்களை ஓசையுடன் தெளிவாக உச்சரிக்கத்தக்க வகையில் குழந்தை நேய சுவர் சித்திரங்கள் 2184 பள்ளிகளில் ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் வரையப்பட்டுள்ளது. மாணவர்கள் மகிழ்ந்து விளையாடிக் கற்கவும், ஆங்கிலச் சொற்களை மிகச் சரியாக உச்சரிப்பதற்கும், இச்சுவர் சித்திரங்கள் பெரிதும் துணையாக உள்ளன.

சிறப்பு முயற்சிகள்

'பாலா' என்னும் புதுமைத் திட்டம் 2013-14 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் வகுப்பறை சூழலில் கற்றலுக்கு உகந்த ஒரு வெளியினை ஏற்படுத்துகிறது.

'பாலா வகுப்பறை'

இச்சூழல் மாணவர்களைக் பள்ளிக்கு ஈர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களைப் பள்ளி நேரம் கடந்தும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தி, தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியம்

அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரித்திட, ஆண்டுதோறும் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி வகுப்பறைகளில் கற்போருக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் 2016-2017 ஆம் ஆண்டில், பள்ளி மானியமாக ரூ. 30.41 கோடி தொடக்கப் பிரிவுகள் உள்ள வகுப்பறைகளை மேம்படுத்தவும், பராமரிப்பு மானியமாக ரூ.27.51. கோடி உள்கட்டமைப்பு வசதிகளை பரமாரிக்கவும் வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்

தொடக்கக் கல்வி நிர்வாகம்

தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 32 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் 836 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வாயிலாக தொடக்க கல்வி இயக்ககத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. 35,414 தொடக்கப் பள்ளிகளில் 29.10 லட்சம் மாணவர்களும், 9,708 நடுநிலைப் பள்ளிகளில் 17.42 இலட்சம் மாணவர்களும் கல்வி பயில்கின்றனர். தொடக்கக் கல்விப் பணியில் 2.23 இலட்சம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அலுவலகக் கட்டடங்கள்

30 மாவட்டங்களில் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் அரசுக் கட்டடங்களிலும், 2 தொடக்கக் கல்வி அலுவலகங்கள் வாடகை கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன. 413 உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுள், 99 அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. 2012-13 ஆம் ஆண்டு முதல் 2015-16ஆம் ஆண்டு வரை, 3 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும், 8 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும் புதிய கட்டடங்கள் ரூ.2.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன.

கணினி மற்றும் இணையதள வசதி

2015-16 ஆம் ஆண்டில் 413 உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கும், கணினி மற்றும் இணையதள வசதிகள் ரூ.4.36 கோடி செலவில் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இதற்கான நிதி உதவியை அளித்துள்ளது.

மாற்றுச் சான்றிதழ்

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளியை விட்டுச் செல்லும் போது வழங்கப்படும் "பதிவுத்தாள்" நடைமுறை மாற்றப்பட்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் "மாற்றுச் சான்றிதழ்" முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இணையதள வழி மாறுதல் கலந்தாய்வு

இக்கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பணியிட மாறுதல்கள் இணையதள வழி கலந்தாய்வு மூலம் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்டுள்ளது. இவ்விணைய வழிக் கலந்தாய்வில் 237 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் 3600 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மாணவர்கள் நலன் கருதி இக்கலந்தாய்வு பள்ளி திறப்பதற்கு முன்பாகவே கோடை விடுமுறையில் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் விகிதம் என்பது ஒரு முக்கியமான தரக் குறியீடாகும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இல் ஆசிரியர் -மாணவர் விகிதம் தொடக்க நிலை வகுப்பில் 1:30 எனவும் மற்றும் உயர் தொடக்க நிலை வகுப்பில் 1:35 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாரியாக மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களின் தேவை இறுதி செய்யப்பட்டு உபரியாகக் கணக்கிடப்பட்ட 1569 ஆசிரியர்கள் இணையவழிக் கலந்தாய்வில் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

கற்பித்தல் நாட்கள்

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கற்பித்தல் நாட்கள் சிறு வயதுக் குழந்தைகளின் நலன் கருதி 220 நாட்களிலிருந்து 210 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலும், தொடக்க / நடுநிலை பள்ளிகளிலும் ஒரே சீரான பணி நாள் நடைமுறை அமையும். குறைக்கப்பட்டுள்ள இந்த 10 கற்பித்தல் நாட்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மற்றும் குறுவளமைய அளவிலான பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

கல்வி மேலாண்மை தகவல் முறைமை

கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை வழியாக அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்கப்பட்டு, திறன் அட்டை வழங்கப்பட உள்ளது. பல்வேறு துறைகளுக்கிடையேயும், துறைகளுக்குள்ளேயும் அலுவலக ரீதியான தொடர்பு கொள்ளவும், பள்ளிகளிலுள்ள சிறந்த நடைமுறைகளைச் செயல்படுத்தவும், இடைநின்ற குழந்தைகளைக் கண்காணிக்கவும் இத்திட்டம் பயன் படுகின்றது.

சமுதாய பங்கேற்பு

பள்ளி மேலாண்மைக் குழு

கல்வி மேலாண்மையை கடைக்கோடிக்கும் பரவலாக்குதலில் சமுதாயப் பங்கேற்பு அவசியமானதாகும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் வரையறுக்கப்பட்டுள்ள வசதிகளையும், கல்வி உரிமையினையும் உறுதி செய்யும் பொறுப்பு பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளைச் சார்ந்துள்ளது. 42,167 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

சமுதாயப் பங்கேற்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மாணவர்களிடையே நல்ல பண்புகளை வளர்க்கும் வகையில் பள்ளி ஆண்டு விழா, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள், கிராமக் கல்வித் திருவிழாக்கள், கண்காட்சிகள் மற்றும் போட்டிகள் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

சமுதாயப் பங்களிப்பு

கல்விச்சீர் விழா, நூலகம், திறன்மிகு வகுப்பறை, கை கழுவும் வசதி பள்ளி வளர்ச்சிக்காக நிலம் தானமாக பெறுதல், கட்டடம் மற்றும் கழிப்பறை கட்டுதல், வாகன வசதி, கல்விச் சீர், விளையாட்டுப் பொருள்கள் வழங்குதல், மாணவர்கள் கை கழுவும் வசதி ஏற்படுத்துதல், திறன் பலகை வசதி மற்றும் பள்ளிகளுக்குத் தேவையான கணினி, நுால்கள், கற்றல் உபகரணங்கள் போன்றவை ரூ. 305.08 கோடி மதிப்பில் சமுதாயப் பங்களிப்பாகப் பெறப்பட்டுள்ளன.

முடிவுரை

அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மிகுந்த கவனத்துடன் செயல்படுத்தி வருகிறது. வகுப்பறைச் செயல்பாடுகளை வலுவூட்டும் வகையில் தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்வதுடன் அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து மாணவர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தப் பெருமுயற்சி எடுத்து வருகிறது. மாணவர்களின் உள்ளார்ந்த திறமையையும் அவர்களின் படைப்பாற்றலையும் வெளிக் கொணரும் வகையில் பல்வேறு திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

இடைநிலை, மேல்நிலைக் கல்வி மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்

"கல்வி என்பது வாழ்வதற்கு தயார் செய்வது அல்ல; வாழ்க்கையே கல்விதான்”

- ஜான் டூயி

இடைநிலைக் கல்வியின் முக்கியத்துவம்

ஒரு சமுதாயம் தொடர்ந்து வளர்ச்சி பெறுவதற்கு ஆதாரமாக விளங்குவது கல்வியே ஆகும். வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான படிநிலைகளுள் ஒன்றாகக் கல்வி திகழ்கிறது. சமூக வாழ்விற்குத் தேவையான செயல்திறன்களுடன் குழந்தைகளைக் கல்வி செதுக்குகிறது. குழந்தைகளின் கல்விப் பயணத்தில் மிக முக்கிய கட்டமாக இடைநிலைக் கல்வி திகழ்கிறது. மேலும், குழந்தைகளின் எதிர்காலம் இடைநிலைக் கல்வி நிலையில் அவர்கள் பெறும் கல்வியின் தரத்தைச் சார்ந்தே அமைகிறது.

பல்வேறு தளங்களில் இயங்கக் கூடிய அறிவார்ந்த திறன்கள் மட்டுமின்றி அவற்றினூடே ஊடுருவி செயலாற்றக் கூடிய அடிப்படைத் திறன்களை தருவதிலும் இடைநிலைக் கல்வி முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கல்வியாளர்கள் வகுத்துள்ளபடி, குழந்தைகளிடம் கல்வியை வேரூன்றச் செய்வதோடு, அவர்களிடம் மக்களாட்சிக்குரிய குடிமைப்பண்பு மற்றும் தலைமைப்பண்பு ஆகியவற்றை ஆழப்பதிப்பதிலும் சமூக வாழ்விற்குச் செழுமையும் வளமும் சேர்க்கப் பங்கேற்கும் வகையில் அவர்களின் ஆற்றலை வளர்ப்பதிலும் இடைநிலைக் கல்வி வல்லமையுடையதாக விளங்குகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இடைநிலைக்கல்வியை மேம்படுத்துவதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவில் குறிப்பிடத் தக்க நிதியினை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. அரசு செயல்படுத்தி வரும் மாணவருக்கான பாடநூல்கள், குறிப்பேடுகள், காலணிகள், சத்துணவு, புத்தகப் பைகள், வடிவியல் கருவிப்பெட்டிகள், நில வரை பட நூல்கள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள், வண்ணப்பென்சில்கள், வண்ணக்குச்சிகள், சிறப்பு ஊக்கத் தொகை, பேருந்துப் பயண அட்டைகள் போன்ற நலத்திட்டங்கள் கல்விக் கொள்கையில் மாநில அரசு கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டிற்கு சான்றாக விளங்குகிறது.

இடைநிலைக் கல்விக்கான தொலைநோக்கு

குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்கள் மற்றும் ஆற்றல்களை அனைத்து வகைகளிலும் முழுமையாக மேம்படுத்துவதே இடைநிலைக் கல்வியின் நோக்கமாகும். ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய முழுத்திறன்களைப் பயன்படுத்தி உயர்வடையும் வகையில் இடைநிலைக் கல்வியினை முழுமையானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் உருவாக்கிட மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. உயர்ந்த மதிப்புகள் அடிப்படையாகக் கொண்ட அறிவாற்றல், சமூகம், உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த பண்புகளை மாணவர்களிடம் உருவாக்கும் கல்வி முறையை மாநில அரசு தன்னுடைய தொலைநோக்காகக் கொண்டுள்ளது. அரசின் நோக்கங்களிலும், முயற்சிகளிலும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் துணைநிற்கிறது.

கல்வியில் தரம், சம வாய்ப்பு மற்றும் அனைவருக்குமான கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதின் வாயிலாக, வகுப்பறைகளின் சமூகக் கலாச்சாரச் சூழல், அறிவு, விழுமியங்கள் மற்றும் திறன்கள் பற்றிய எண்ணம் ஆகியவற்றில் மாற்றங்களைக் காணும் வகையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டம் வகுப்பறைகளுக்கு உள்ளும் புறமும் மாணவர் பெற்ற அறிவுக்கிடையே தொடர்பையும் உருவாக்கி வருகிறது.

குறிக்கோள்கள்

மாநில அரசு தொலைநோக்கினை எய்திடும் வகையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திற்காக கீழ்க்கண்ட நோக்கங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாணவர்களுக்கு இனிமையான மற்றும் பயன் தரத்தக்க கற்றல் சூழ்நிலையை உறுதி செய்தல்.

*பாலினப் பாகுபாடு, சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற இடர்களால் எந்த ஒரு குழந்தையும் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை அடையமுடியாமல் அல்லது விடுபட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்தல்.

* உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் மாணவர்களின் இடைநிற்றலை முழுவதுமாகக் குறைத்து 100 விழுக்காடு தக்க வைத்தல்.

* வேலை வாய்ப்பிற்கான மென் திறன்கள் மற்றும் தொழில் திறன்களோடு கூடிய தரமான மற்றும் வாழ்வுசார் கல்வியை வழங்குதல்.

* சிறப்பு அணுகுமுறைகளின் வாயிலாக இடைநிலை மற்றும் மேல்நிலைத் தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துதல்.

* கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மாதிரிப் பள்ளிகளையும் பெண்களுக்கான தங்கும் விடுதிகளையும் நிறுவுவதின் மூலம் சமுதாய ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து சமநிலையை எய்துதல்.

* அறிவியல் செயல்திட்ட வழி கற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் ஆகியவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்.

* கற்றலுக்கும் மதிப்பீட்டிற்காகவும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முப்பருவக் கல்விமுறை ஆகியவற்றைப் பின்பற்றி குழந்தைகள் தங்களின் கல்விசார் செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் இணைகலைத் திட்டச் செயல்பாடுகள் ஆகியவற்றில் தம் உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்த வாய்ப்புகளை வழங்குதல்.

* மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை தூண்டுதல்.

* மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கும் வகையில் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளித்தல்.

* மாணவர்களிடையே உடல் நலம் குறித்த விழிப்புணர்வைப் பரவச் செய்து அவர்களிடம் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை வளர்த்தல்.

* கட்டணமில்லாப் போக்குவரத்து வசதி, மற்றும் தேவையின் அடிப்படையில் விடுதி வசதி ஆகியவற்றை வழங்கி 100 விழுக்காடு பள்ளி செல்வதை உறுதி செய்தல்.

• சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு உள்ளடங்கிய கல்வியை உறுதிசெய்தல்.

செயல்பாடுகள்

பள்ளி வசதி மற்றும் பள்ளிகளைத் தரம் உயர்த்துதல்

மாநிலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பள்ளி வசதியை ஏற்படுத்துவதே இடைநிலைக் கல்வியைப் பரவலாக்குவதற்கான அடிப்படையாகும். 5 கி.மீ. தொலைவுக்குள் உயர்நிலைப் பள்ளியை ஏற்படுத்துவதே அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் தலையாய நோக்கமாகும். இதற்காக, பள்ளிகள் இல்லாத குடியிருப்புகளைக் கண்டறிய பள்ளி புவியியல் தகவல் முறைமை (GIS) பயன்படுத்தப்படுகிறது. பள்ளிகளில்லாத இக்குடியிருப்புகளில் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படுவதன் வாயிலாகப் பள்ளி வசதிகள் வழங்கப்படுகின்றன.

இக்குறிக்கோளை அடையும் வகையில் 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் 2016-17ஆம் கல்வியாண்டுவரை 829 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப் பட்டுள்ளன. அவற்றுள் 571 பள்ளிகள் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் வாயிலாகவும் மற்றுமுள்ள 258 பள்ளிகள் மாநில நிதி ஒதுக்கீட்டின் வாயிலாகவும் தரம் உயர்த்தப்பட்டன. இதேபோல், 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் 2016-17ஆம் கல்வியாண்டு வரையில் 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்

கல்வி யாண்டு

நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயத்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை

உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயத்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை

மாநில அரசு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்

மாநில அரசு

2011-12

158

552

100

2012-13

-

-

100

2013-14

50

-

100

2014-15

50

-

102

2016-17

-

19

-

மொத்தம்

258

571

402

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்

புதியதாகத் தரம் உயர்த்தப்பட்ட 402 மேல்நிலைப் பள்ளிகளின் கல்வித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 3618 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை மாநில அரசு உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் 9 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இப்பள்ளிகளுக்குத் தலைமை ஏற்கவும் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளவும் 402 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டன. அவ்வாறே 829 தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் 4145 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் சேர்க்கை - உயர்வு

மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில் மாநில அரசு புதுமையான பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அவையாவன:

* 14 வகையான மாணவர் நலத்திட்டங்கள்.

* பள்ளி வசதி இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் புதிய பள்ளிகளை ஏற்படுத்துதல்.

* பாடவாரியாக ஆசிரியர்களை நியமித்தல்.

• கூடுதலாக ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமித்தல்.

* தற்போது இயங்கிவரும் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை ஏற்படுத்துதல்.

* அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விப் பிரிவுகளை விரிவுபடுத்துதல்.

* மெல்லக் கற்போருக்கான மாற்றுக் கற்பித்தல் திட்டம்.

* திறன் மிகு மாணவர்களுக்கான TANEXCEL திட்டம்.

* தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்த உதவுதல்.

* பள்ளியின் தரத்தை மேம்படுத்தும் வண்ணம், தலைமையாசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல்.

* வசதி வாய்ப்புகளற்ற சமூகப் பின்னணி கொண்ட மாணவியர்க்கு, உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சிகள் நடத்துதல்.

* சிறுபான்மைப் பிரிவு மாணவர்கள் கற்றலுக்குத் தனிக்கவனம் செலுத்துதல்.

* பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளின் செயல்திறனை உயர்த்துவதற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துதல். * * பள்ளி அளவிலான கல்விச் செயல்பாடுகளில் சமுதாயத்தின் பங்கேற்பைத் திரட்டுதல்.

* சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு உள்ளடங்கிய கல்வியை அளித்தல். சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கூடுதல் வசதிகளுடன் கூடிய உதவிஅறைகள் மற்றும் உதவியாளர்களை அளித்தல்.

கடந்த பல ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை படிப்படியாக அதிகரிக்க இம்முன்னோடித் திட்டங்கள் காரணிகளாக அமைந்துள்ளன. இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கைப் பதிவுகள் ஆரோக்கியமானதாகவும் ஊக்கம் அளிப்பதாகவும் காணப் படுகின்றன. இடைநிலை அளவில் கடந்த 2009-10ஆம் கல்வியாண்டில் 21,84,077-ஆக இருந்த மாணவர் சேர்க்கை, 2016-17ஆம் கல்வியாண்டில் 22,51,962-ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று, மேல்நிலைக் கல்வியில் 2009-10ஆம் கல்வியாண்டில் 13,67,965-ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2016-17ஆம் கல்வியாண்டில் 18,10,212-ஆக உயர்ந்துள்ளது.

கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் மாதிரிப் பள்ளிகள்

மாதிரிப் பள்ளிகள், அவற்றின் பெயருக்கேற்றவாறு தற்சார்புடனும், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடனும் தரமான மற்றும் உகந்த கற்றல் சூழல்களுடன் கூடிய பிற வசதிகளையும் கொண்டும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில், 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வட்டாரங்களில் பள்ளி வசதியையும் தரமான இடைநிலைக் கல்வியையும் வழங்கும் பொருட்டு மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. மேற்கண்ட 44 மாதிரிப் பள்ளிகளின் கட்டுமானத்திற்காக ரூ.190.92 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவியர் விடுதிகள்

13 மாவட்டங்களில் உள்ள 44 கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பினை வழங்கும் பொருட்டு 2009-10ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட, பட்டியல் இன, பழங்குடியின, இதர பின்தங்கிய மற்றும் சிறுபான்மையின் மாணவியர்களையும், வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளோர்களையும் இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

இவ்விடுதியில் கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு சேர முன்னுரிமை தரப்படுகிறது. மேலும் குறைந்தது 50% மாணவியர் பட்டியல் இன, பழங்குடியின், இதர பின்தங்கிய மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்தவர்களாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இவ்விடுதிகளில் மாணவியருக்கு, நவீன சமையற் கூடம், சூரிய ஆற்றலில் இயங்கும் சுடுநீர்க் கருவி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி, தடையற்ற மின்சார வசதி, கண்காணிப்புக் கேமிரா, கழிவெரிக்கும் சாதனம் மற்றும் பிற நவீன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

அனைத்து மாணவியர் விடுதிகளும் மாநில அரசால் வழங்கப்பட்ட சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுப்பட்டியலைப் பின்பற்றுகின்றன. விடுதியின் பொதுச் சுத்தம் அதிலும் குறிப்பாக சமையற்கூடத்தின் சுத்தத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவியருக்குத் தொடர்ந்து உடல்நலச் பரிசோதனை செய்யப்படுவதோடு அவர்களின் நலவாழ்வை உறுதி செய்யும் நோக்கோடு மாணவியர் தகவல் அட்டையும் பராமரிக்கப்படுகிறது. இவ்விடுதியிலுள்ள அனைத்து மாணவியரும் குழு மருத்துவ ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006

'தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006', 2006-07 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின் வாயிலாக, முதலாம் வகுப்பு மாணவர்கள் பாடத்திட்டம் பகுதி 1-இன் கீழ் தமிழ் கற்பது கட்டாயமாக்கப்பட்டு, 2015-16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை இது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிற கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும் மழலையர், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2015-16 ஆம் ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிப்படியாக தமிழ் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுகள்

2012-13ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழி பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பையும் மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட உயர்வையும் கருத்தில் கொண்டு, அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் ஆங்கிலவழி பிரிவுகள் கூடுதலாகப் பல அரசுப் பள்ளிகளுக்கு 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டன. தற்பொழுது, 3,916 அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் பிரிவுகள் உள்ளன.

(அ) ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர் நியமனம்

அரசுப் பள்ளிகளில் தகுதி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதை மாநில அரசு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் தேவைக்கேற்ப ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களைத் தெரிவு செய்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு போதுமான எண்ணிக்கையில் பாடவாரி ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது. குறிப்பிடத் தக்க இந்நியமன நடவடிக்கையால் இடைநிலைக் கல்வியில் மாணவர் ஆசிரியர் விகிதம் 20:1 என்ற நிலையை அடைந்துள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு அரசு தேர்வுத் துறை நடத்திய எழுத்துத் தேர்வின் அடிப்படையில் 4122 நபர்கள் வெளிப்படைத் தன்மையுடன் தெரிவு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர். கருணை அடிப்படை நியமனத்தில் 82 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

(ஆ) ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு

2017-18 ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே மே மாதத்தில் வெளிப்படையான முறையில் இணையவழியில் நடத்தப்பட்டு 9122 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பள்ளி உட்கட்டமைப்பு

தரமான கல்வி வழங்குவதற்கு ஏற்ற சூழலை அமைத்துத் தருவது அடிப்படைத் தேவையாகும். கற்போர்க்கு உகந்த சூழலில் கற்றல் நடைபெற மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்குவதில் மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநில அரசு நபார்டு மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் நிதி உதவியோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான பள்ளிகளில் உட்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது.

(அ) நபார்டு திட்ட உதவிகள்

நபார்டு திட்டத்தின் நிதி உதவியோடு கூடுதல் வகுப்பறைகள், தளவாடங்கள், ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வகக் கருவிகள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் சுற்றுச் சுவர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

(ஆ) அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகள்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும், அவற்றைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளிகளுக்குத் தேவையான பலவித உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியைத் தமிழக அரசு பல்வேறு தலைப்புகளில் ஒதுக்கியுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட பணிகளை முடிக்கும் வகையில் மாநில அரசு கூடுதல் நிதியாக ரூ. 1496.13 கோடி வழங்கியுள்ளது.

இடைநிலைக் கல்வி நிலையில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி

இடைநிலைக் கல்வி நிலையில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி ஒரு சிறப்புத் திட்டமாகும். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சரிநிகர் கல்வியை வழங்குவதற்கான மாநில அரசின் கொள்கையில் பல நலத்திட்ட உதவிகள் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு:

• சிறப்பு ஆசிரியர்களை நியமித்தல்.

• மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல்.

* மருத்துவ மதிப்பீடு முகாம்கள்.

*மாற்றுத் திறனுக்கு ஏற்ற வகையில் துணைச் சாதனங்கள் வழங்குதல்.

* பாதுகாவலர் மற்றும் போக்குவரத்து வசதிக்கான படி வழங்குதல்.

* உதவியாளரை நியமித்தல்.

* வாசிப்பு உதவியாளர் படி.

• தளவாட வசதிகள் அடங்கிய வகுப்பறைகளை ஏற்படுத்துதல்.

இடைநிலைக் கல்விக்கான குறியீடுகள்

இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை உருவாக்கியுள்ள "மதிப்பீடு வரைவு ஆவணம்”, இடைநிலைக் கல்வியில் முன்னேற்றத்தை அளவிடத் திறன் வாய்ந்த கருவியாகும். கீழ்க்கண்ட 7 செயல்திறன் குறியீடுகளின் உதவியுடன் இம்முன்னேற்றத்தை இது கணக்கிடுகிறது.

1. இடைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கை

2. இடைநிலைக் கல்வியில் மொத்தச் சேர்க்கை விகிதம்

3. பாலினச் சமநிலைக்குறியீடு

4. பாலினச் சமத்துவக் குறியீடு

5. பட்டியல் இனத்தோர் - சமூக சமத்துவக் குறியீடு

6. பழங்குடியினர் - சமூக சமத்துவக் குறியீடு

7. இடைநிலைக் கல்வி அடைவு விகிதம்

இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம்

மாநில அரசு, கல்வியை பரந்த தொலைநோக்கோடு அணுகி வருகிறது. பள்ளிகளில் மாணவர் நேயச் சூழலை நிறுவுவதில் அரசு வெற்றி கண்டுள்ளதால் இடைநிற்றல் விகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இடைநிலைக் கல்வியில் தக்க வைத்தல் விகிதம்

புதிய கற்றல் கற்பித்தல் திட்டங்கள் மற்றும் பிற புதிய உத்திகள் பள்ளிகளின் அகச்செயல்திறனைப் வலுவூட்டியதன் விளைவாக கணிசமான அளவில் தக்கவைத்தல் விகிதம் உயர்ந்துள்ளது.

மாணவர் - ஆசிரியர் விகிதம்

தேசிய அளவிலான விதிமுறைகளின்படி மாணவர் ஆசிரியர் விகிதம் 40:1 ஆக உள்ளது. ஆனால் மாநில அளவிலான மாணவர் ஆசிரியர் விகிதம் 20:1 ஆகத் திகழ்கிறது. தேவையின் அடிப்படையில் ஆசிரியர்களைப் பணி அமர்த்துவதில் மாநில அரசு முன்னோடியாகத் திகழ்வதோடு அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்சி பெற்ற பாடவாரியான ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இருப்பதையும் உறுதி செய்துள்ளது.

கல்வி தர மேம்பாடு

கல்வியில் ஆய்வுகளையும் புதுமைகளையும் உருவாக்குவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் மாநில அரசு இடையறாத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. கல்வித் தர மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் என்பது ஒரு தொடர் நிகழ்வாகும். இதனடிப்படையில் மாநில அரசு கல்வி முறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி செயல்படுத்தி வருகிறது.

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையும் முப்பருவக்கல்வி முறையும்

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை மாணவர்களின் கல்வித் திறனை மட்டுமல்லாது அவர்களின் ஆளுமைத் திறன்கள் மற்றும் இயல்புகள் ஆகியவற்றையும் முழுமையாக மதிப்பிட உதவும் கருவியாகும். மேலும், மாணவர்கள் நாள்தோறும் சுமந்து வந்த புத்தகச் சுமையைக் குறைக்கும் வண்ணம் மாநில அரசால் முப்பருவக் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இம்முப்பருவக் கல்வி முறை ஒரு கல்வியாண்டை மூன்று இணையான பருவங்களாகப் பகுக்கிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனி பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் சுமையைக் குறைப்பதாலும், பாடங்களைப் படிப்பதில் இனிய அனுபவம் பெறுவதாலும் இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆசிரியர் பணித்திறன் மேம்பாடு

வகுப்பறைச் செயல்பாடுகளில் தரத்தை உறுதி செய்ய அனைத்து ஆசிரியர்களுக்கும் தொடர்ச்சியான மற்றும் நீடித்த பணி மேம்பாடு அவசியமாகும். கடந்த 6 ஆண்டுகளில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ள ஆசிரியர் பணியிடைத் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிக் கட்டகத்தைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் ரூ.51.61 கோடி செலவில் 10 நாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்க்கான நடமாடும் ஆலோசனை வாகனங்கள்

வளரிளம் பருவத்தின் தொடக்கம் எளிதில் உணர்ச்சி வயப்படும் காலம் ஆகும். வாழ்க்கையின் இந்த நிலையில், வளரிளம் பருவ மாணவர் பல்வேறு வகையான சவால்களால் தாக்குறவும் அவற்றால் அவர்களின் கல்வி அடைவுகள் பாதிப்படையவும் கூடும். மாணவர்கள் இக்காலகட்டத்தைக் கடந்திட, அவர்களுக்கு வழிகாட்டுதலும் உண்மையான உதவியும் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும். மேலும், இவ்வளரிளம் பருவத்தினர் உளநலம் பேணும் வகையிலும், கல்வியில் முன்னேற்றம் காணும் வகையிலும், வழிகாட்டல் திட்டமிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.

மாநிலத்தில் 32 மாவட்டங்களும், 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இம்மண்டலங்களுக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 17 நடமாடும் உளவியல் ஆலோசனை வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்நடமாடும் உளவியல் ஆலோசனை வாகனங்களில் தொலைக்காட்சிப்பெட்டி, குறுந்தகடு இயக்கி போன்ற நவீன் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 2016-17ஆம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதிலுமிருந்து 1242 பள்ளிகளைச் சேர்ந்த 2,31,542 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மாநிலப் பொதுக்கல்வி வாரியம்

மாநிலப் பொதுக்கல்வி வாரியம், பாடத்திட்ட வடிவமைப்பு, கலைத்திட்டக் கட்டமைப்பு மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கிய பாடநூல்களுக்கு ஒப்பளிப்பு வழங்குதல் ஆகியவற்றை முறைப்படுத்தும் ஆணைக்குழுவாகச் செயல்படுகிறது. இவையன்றி தனிப்பட்ட வெளியீட்டாளர்களின் நூல்கள் பரிந்துரைக்கப்பட்ட கலைத்திட்டத்தைப் பின்பற்றியுள்ளனவா என கூர்ந்தாய்வு செய்து ஒப்பளிப்பும் வழங்குகிறது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சியினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

அ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாணவர்களின் செயல்திறன் கடந்த ஆண்டுகளில் அரசுத் தேர்வுகளில் உயர்வடைந்துள்ள மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சான்றாக விளங்குகின்றது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 2013-இல் 89%ஆக இருந்த தேர்ச்சி விழுக்காடு 2017-இல் 94.4% ஆக உயர்ந்துள்ளது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் மொழிப்பாடத்தில் 69 மாணவர்களும், கணிதத்தில் 13,759 மாணவர்களும், அறிவியலில் 17,481 மாணவர்களும் மற்றும் சமூக அறிவியலில் 61,115 மாணவர்களும் நூறு விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்களின் செயல்திறன் குறிப்பிடத்தக்க மாற்றம் அடைந்துள்ளது. இதேபோன்று, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 2013-இல் 88.1%ஆக இருந்த தேர்ச்சி விழுக்காடு 2017-இல் 92.1% ஆக அதிகரித்துள்ளது.

ஆ. நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகள் அரசுப் பொதுத்தேர்வில், நூறு விழுக்காடு பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. பள்ளிக் கல்வியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு கல்விச் சீர்திருத்தங்கள் அரசுத் தேர்வுகளின் முடிவுகளில் பிரதிபலித்துள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளின் அரசுப் பள்ளித் தேர்வு முடிவுகளைக் கீழ்க்கண்ட அட்டவணை காட்டுகிறது.

நூறு விழுக்காடு பெற்ற அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை

கல்வியாண்டு

அரசுப் பள்ளிகள்

பத்தாம் வகுப்பு

பன்னிரண்டாம் வகுப்பு

2011-12

362

54

2012-13

453

115

2013-14

558

166

2014-15

1,164

187

2015-16

1,467

266

2016-17

1,557

292

ஆதாரம் - DGE

சிறப்புத் திட்டங்கள்

பல்வேறு மாணவர் மையப் புதுமைகளை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் அரசு வெற்றி கண்டுவந்துள்ளது.

TANEXCEL திட்டம்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மாநிலத்தில் முதலிடம் பெறும் வகையில் தயார் செய்வது இத்திட்டத்தின் குறிக்கோளாகும். இத்திட்டத்தின் மூலம் 2016-17ஆம் ஆண்டில் 6700 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட பங்கேற்பு மற்றும் மெல்லக் கற்போர் அடைவுத்திறன்திட்டம்

சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களின் பள்ளி வருகையை மேம்படுத்தும் வண்ணம் அவர்களை ஈர்ப்பதற்காக மேம்படுத்தப்பட்ட பங்கேற்பு திட்டம் என்னும் புதுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 2016-17ல் மெல்லக் கற்போருக்காகத் தொடங்கப்பட்ட மெல்லக்கற்போர் அடைவுத் திறன் திட்டம் 2017-18ஆம் ஆண்டில் சிறப்புக் கவன மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

கல்வி இணைச் செயல்பாடுகள்

சதுரங்க விளையாட்டு

சதுரங்க விளையாட்டு அறிவாற்றல் மற்றும் செயல்முறை சார்ந்த திறன்களை அறிமுகப்படுத்த உதவும் வழிமுறையாகும். இவ்விளையாட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், நுண்ணாய்வுச் சிந்தனை மற்றும் வகைமை அறிதல், முன் தயாரிப்பு, வெளி விழிப்புணர்வு, கருத்துக் குவிப்பு மற்றும் ஒருமுகச் சிந்தனை ஆகியவற்றை மேம்படுத்த மாணவர்களுக்கு உதவுகிறது. இது ஒரு மதிப்புமிகு திறனாக மட்டுமின்றி மாணவர்கள் எதிர்காலத்தில் பள்ளி மற்றும் போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் வகையில் மன உறுதியை வளர்த்திடும்.

2012-13- ஆம் கல்வியாண்டிலிருந்து சதுரங்க விளையாட்டு இடைநிலைக் கல்விச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாகவே விளங்குகிறது. 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் 7 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களுக்கிடையே பல்வேறு நிலைகளில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு சதுரங்கப் போட்டிகளை நடத்துவதற்கு ரூ.22 இலட்சத்தை வழங்கி வருகிறது.

மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

மாணவர்களிடையே விளையாட்டு உணர்வு ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உருவாக்கி நல்வழிப் படுத்துகிறது பள்ளிக் கல்வித் துறை ஆண்டுதோறும் குடியரசுத் தினத் தடகளப் போட்டிகள், குடியரசு தினக் குழுப் போட்டிகள் மற்றும் பாரதியார் தினப் போட்டிகளைக் பல்வேறு நிலைகளில் நடத்துகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் சிறந்த சாதனையாளர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப் படுகின்றன. 6ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 11 முதல் 17 வயது வரையுள்ள மாணவர்களுக்கு 26 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை அடையாளம் காண்பதோடு அவர்களை பள்ளி விளையாட்டுகள் தொடர்பான தேசிய கூட்டமைப்பு நடத்தும் அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும் பயிற்சி அளிக்கிறது. இப்போட்டிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடு பெருமைக்குரிய சாதனைகளைப் படைத்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டு முதல் அரசு குடியரசு தின தடகளப் போட்டிகள், குடியரசு தினக்குழுப் போட்டிகள், பாரதியார் தினப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ரூ.10 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. மேலும் இந்த நிதி ஒதுக்கீடானது மாணவர்களுக்குத் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது.

யோகா

மாணவர்களின் உணர்வுகளைச் சமநிலைப் படுத்துவதற்கான முக்கிய கூறாக யோகா திகழ்வதை அரசு கருத்தில் கொண்டுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சாரண, சாரணியர் இயக்கம்

தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்கம் செயல்பட்டுவருகிறது. இவ்வியக்கம், மாணவர்களிடம் அவர்களின் வளரும் பருவத்திற்கேற்ப, உள்ளார்ந்த திறன், விரும்பத்தக்க குணநலன், குடியுரிமை, குடிமை உணர்வு, உதவும் மனப்பான்மை, சுயகட்டுப்பாடு, தலைமைப் பண்பு மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றைக் கற்பிக்கிறது. மாணவர்கள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொல்லியல் சின்னங்களை சுத்தப்படுத்துதல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு உதவுதல் போன்ற சமூக நலப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தில் பணியாளர்களின் உழைப்பூதியத்திற்கும், அலுவலகப் பராமரிப்புச் செலவிற்கும் ரூ.7 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. சிறந்து விளங்கும் சாரண, சாரணியர்களுக்குத் தமிழக ஆளுநர் அவர்களால் “இராஜ்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழகச் சாரண, சாரணியர் தேசிய அளவிலான முகாம்களில் பங்கேற்பதை ஊக்குவிக்க ரூ.5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மன்றம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அதற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் தேவையான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த சுற்றுச் சூழல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 11,460 பள்ளிகளில் சுற்றுச் சூழல் மன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. சுற்றுச் சூழல் மன்றச் செயல்பாடுகளுக்காக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை வாயிலாக ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுதோறும் ரூ. 5,000 வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து மரக்கன்றுகள் நடுதல், பள்ளிகளில் தோட்டங்களை உருவாக்கி பராமரித்தல் போன்ற பசுமைச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அரசால் வடிவமைத்துச் செயல்படுத்தப்படும் சுற்றுச்சூழல் செயல்திட்டங்களின் சமுதாயத் தூதுவர்களாக மாணவர்கள் விளங்குகின்றனர்.

இளஞ் செஞ்சிலுவைச் சங்கம்

உடல் நலம், சேவை மற்றும் நட்புறவு ஆகியவை இளஞ் செஞ்சிலுவைச் சங்கத்தின் நோக்கங்களாகும். மாநிலம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 3,19,850 மாணவர்களைக் கொண்ட 6,397 இளஞ் செஞ்சிலுவைச் சங்க அலகுகள் உள்ளன. பள்ளிகளில் கல்விசார் செயல்பாடுகளின் வாயிலாக மாணவர்களுக்கு விழுமியங்களை ஊட்டவேண்டும் என்பதை தேசிய கலைத் திட்ட கட்டமைப்பு வலியுறுத்துகிறது. தேசிய கலைத் திட்டக் கட்டமைப்பு 2005-இன் எதிர்பார்ப்பின்படி, இளஞ் செஞ்சிலுவைச் சங்கத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிரியர்கள் ஆலோசகர்களாகவும் மாணவர்கள் இளநிலையாளர்களாகவும் விளங்குகின்றனர்.

இள நிலையாளர்களாக விளங்கும் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்புப் பயிற்சி முதலுதவிப் பயிற்சி, தீ விபத்துப் பாதுகாப்புப் பயிற்சி, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி, கண் மற்றும் இரத்த தானத்தின் முக்கியத்துவம், சுற்றுச் சூழல் மாசுபடுவதிலிருந்து காப்பாற்றுதல், வன அழித்தலை தடுத்தல் போன்றவை சார்ந்து திறன் வளர்க்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டம்

இளைஞர் திறன் மேம்பாட்டுத் திட்டம் மாணவர்களின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினாப்போட்டி, வாய்ப்பாட்டு மற்றும் கருவியிசைப் போட்டி, கவிதை எழுதுதல் போட்டி, பாரம்பரிய மற்றும் கிராமிய நடனப்போட்டி, நடிப்புப் போட்டி ஆகிய 10 விதமான போட்டிகள் மீது தனிக்கவனம் செலுத்துகிறது. ஆண்டு தோறும் இப்போட்டிகள் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டு, இறுதிப் போட்டிகள் மாநில அளவில் நடத்தப்படுகின்றன.

நாட்டு நலப்பணித் திட்டம்

நாட்டு நலப்பணித் திட்டம், மாணவர்களின் ஆளுமைத்திறனை வளர்ப்பதோடு சமூகத் தொண்டுகளான மருத்துவ முகாம், இரத்ததான முகாம், மாணவர்களுக்கும் மக்களுக்குமான நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்துதல் போன்றவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 1,953 அலகுகளில் 97,650 மாணவத் தொண்டர்கள் உள்ளனர். திட்டச் செயல்பாடுகளுக்காக ரூ.2.44 கோடியும், சிறப்பு முகாம்களுக்காக ரூ.2.19 கோடியும் ஆண்டு மானியமாக வழங்கப்படுகிறது.

பிற செயல்பாடுகள்

அறிவியல் கண்காட்சி

எதிர்காலக் கல்விக்கான தொலைநோக்கில், தமிழ்நாடு அரசு மாணவர்களின் அறிவியல் உளப்பாங்கை வளர்ப்பதற்கும் அவர்களின் உள்ளார்ந்த அறிவியல் வேட்கை, புதுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை காட்சிப்படுத்தக் களம் அமைத்துத் கொடுப்பதற்கும் அடித்தளமிட ஆர்வம் காட்டி வருகிறது. அறிவியல் கண்காட்சி மாணவர்களின் படைப்புத் திறனைக் காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. இக்கண்காட்சிகள் பல்வேறு நிலைகளில் நடத்தப்படுகின்றன.

பெற்றோர் ஆசிரியர் கழகம்

பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளிக்கும் அது பயனளிக்கும் சமுதாயத்திற்கும் பாலமாக செயல்படுகிறது. இக்கழகம் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும் ஆர்வத்தையும் அறிந்து கொள்வதற்கும், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் தரத்தை மேம்படுத்தத் தேவையான திட்டங்களை வகுப்பதற்கும் உதவுகிறது. மேலும் இக்கழகம் பள்ளிகளின் சிறப்பான செயல்பாட்டிற்குத் தேவையான வளங்களைத் திரட்டுவதற்குப் பள்ளி நிர்வாகத்திற்குத் துணைபுரிகிறது. மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகமானது அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் வினா வங்கிப் புத்தகங்கள் மற்றும் மாதிரி வினாத் தாள்கள் தயாரிக்க உதவிபுரிகிறது.

ஆசிரியர் இல்லம்

சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஆசிரியர் இல்லங்கள் ஆசிரியர் சமூகத்திற்கு பயனடையும் வகையில் அமைந்துள்ளன. பல்வேறு பணிகள் காரணமாக சென்னை மற்றும் திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு வருகைதரும் ஆசிரியர்கள் குறைந்த கட்டணத்தில் வசதியாகத் தங்குவதற்கு ஆசிரியர் இல்லங்கள் பயன்படுகின்றன. கோயம்புத்தூர் மாநகருக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படவுள்ளது.

நிதி ஒதுக்கீடு

மாநில அரசு கடந்த ஆறு ஆண்டுகளாகப் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக அளவில் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றது. பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.11,721.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கு 2017-18-ஆம் நிதியாண்டிற்கு ரூ.1,193.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு

2.2
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top