பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிக் கல்வித் துறை பாகம் - 5

பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பொது நூலகங்கள்

"பல்கலைக்கழகம் என்பது நூலகத்தைச் சுற்றி அமைந்த கட்டடங்களின் தொகுப்பே "

- ஷெல்பி ஃபுட்

அறிமுகம்

சுதந்திரம், செழுமை மற்றும் சமூக வளர்ச்சியானது மானுட சமுதாயத்தின் விழுமியத்தைக் குறிப்பதாகும். தெளிந்த, அறிவார்ந்த குடிமக்களே மக்களாட்சியில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கவும், அதன் வளர்ச்சியில் ஈடுபடவும் இயலும். சமூக வளர்ச்சியானது தரமான கல்வி, பண்பாடு, கலாச்சாரம் தொடர்புடைய அறிவினை அளவற்று பெறும் வழிகளைச் சார்ந்து அமைகிறது. இவ்வழிகளை அடையும் அறிவுக் கூர்மையின் நுழைவு வாயிலாக பொது நூலகம் இயங்குகிறது. வாழ்நாள் கற்றலை அடிப்படையாகவும், சுய முடிவெடுக்கும் திறனை உருவாக்கவும், கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தவும் மற்றும் நல்ல சமூக உருவாக்கத்தின் மையமாக பொது நூலகங்கள் செயல்படுகின்றன. "குறைந்த செலவில் நிறைந்த மக்களுக்கு சிறந்த வாசிப்பு” என்ற குறிக்கோளின்படி பொது நூலகத் துறையானது சமூக வளர்ச்சியில் பங்கெடுத்து வருகிறது.

குறிக்கோள்கள்

* நிறைந்த நூலகப் பணியின் மூலம் அனைத்து தரப்பினரின் தகவல் தேவையினைப் பூர்த்தி செய்தல்.

* பழைய மற்றும் அரிய நூல்களை மின்மயமாக்கி, பாதுகாத்தல்.

* 1,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள இடங்களில் நூலகங்களை அமைத்து செயல்படுத்துதல்.

• நூலகங்களில் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கச் செய்தல்.

• நூலகங்களில் தரமான நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் நூல்களை வாங்கி வழங்குதல்.

* நூலகங்களில் நவீன தொழில் நுட்பத்தினை புகுத்தி நூலகச் சேவையினை மேம்படுத்துதல்.

இலக்கு

தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலகச் சேவையானது பின்வரும் இலக்குகளை உள்ளடக்கிச் செயல்பட்டு வருகிறது.

* குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துதல்.

* அனைத்து தரப்பினருக்கும் சுயகற்றல் மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல்.

* தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.

* குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல்.

• பாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கலைகள்,

* அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.

* கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல்.

* அனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுத்தல்.

நூலக இயக்கம்

"தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948”-இன்படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன.

1.

கன்னிமாரா பொது நூலகம்

1

2.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

1

3.

மாவட்ட மைய நூலகங்கள்

32

4.

கிளை நூலகங்கள்

1926

5.

நடமாடும் நூலகங்கள்

14

6.

ஊர்ப்புற நூலகங்கள்

1914

7.

பகுதி நேர நூலகங்கள்

715

மொத்தம்

4603

இவை தவிர, மக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் கடவுச் சீட்டு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கன்னிமாரா பொது நூலகம்

தமிழ்நாட்டின் மாநில மைய நூலகமாக கன்னிமாரா பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரிலுள்ள அருங்காட்சியக வளாகத்தில் இயங்கி வரும் இந்நூலகம் 1896-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் குறிப்புதவி நூலகமாக விளங்கிய இந்நூலகம், 1930ஆம் ஆண்டு முதல் பொது மக்களுக்கு நூல்களை இரவல் வழங்கும் நூலகமாக செயல்பட்டு வருகிறது. கன்னிமாரா பொது நூலகத்தில் இலக்கியம், வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த 8,35,980 புத்தகங்கள் உள்ளன. இந்தியாவின் நான்கு தேசிய வைப்பு நூலகங்களில் ஒன்றாக செயல்பட்டுவரும் இந்நூலகத்திற்கு, நூல்கள் (செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்கள்) விநியோகச் சட்டம் 1954-இன்படி இந்தியாவில் வெளியாகும் அனைத்து நூல்கள், செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களின் ஒரு பிரதியானது இலவசமாகப் பெறப்படுவதன் காரணமாக, அதனை வாசிக்கும் ஆர்வமுடைய வாசகர்களின் வருகையானது இன்றளவும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

நூலகச் செயல்பாடுகள் அனைத்தும் கணினிமயமாக்கப் பட்டுள்ளதால் இந்நூலகத்தைப் பயன்படுத்தும் பொது மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. 2016-17-ஆம் ஆண்டில் 5,86,012 வாசகர்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், 2016-17-ஆம் ஆண்டில் 3,02,053 நூல்கள் இரவலாக வழங்கப்பட்டு, மொத்தம் 38,18,125 நூல்கள் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. கன்னிமாரா பொது நூலகத்தில் அரிய நூல்கள் பிரிவு, நுண்படப் பிரிவு, பாடநூல்கள் பிரிவு, பருவ இதழ்கள் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு, குடிமைப்பணி கல்வி மையம், குழந்தைகள் பிரிவு ஆகிய பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நூலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாசகர் வாசகர் வட்டமானது, நூலக ஆர்வலர்களுக்குத் தேவையான மற்றும் பயனுள்ள பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நூலகத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் www.connemarapubliclibrarychennai.com எனும் இணையத் தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

சென்னை கோட்டூர்புரத்தில் 3.48 இலட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.178.78 கோடி செலவில் கட்டப்பட்ட, தெற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம், 9 தளங்களைக் கொண்டு மாபெரும் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நூலகத்தில் அதிநவீன கலையரங்கம், திறந்தவெளி அரங்கம், சிறிய மாநாட்டுக் கூடம், புத்தக வெளியீட்டு அரங்கம், உணவு வளாகம், ஆராய்ச்சியாளர்களுக்கான தங்கும் விடுதி ஆகிய வசதிகளுடன் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

இந்நூலகத்தில் 3,79,286 தலைப்புகளில் 5,70,990 எண்ணிக்கை கொண்ட அனைத்து வகையான நூல்கள் இடம் பெற்றுள்ளன. வாசகர்களின் தேவைக்கேற்ப நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, பார்வையற்றோர் பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பாடநூல் பிரிவு, தமிழ் மற்றும் தென்னிந்திய மொழி நூல்கள் பிரிவு, ஓலைச்சுவடிகள் பிரிவு, போட்டித் தேர்வு பிரிவு, அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பகுதி ஆகிய பிரிவுகளுடன் அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக இந்நூலகம் அமைந்துள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் குழந்தைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

குழந்தைகள் பிரிவு - அண்ணா நூற்றாண்டு நூலகம்

மேலும், பார்வையற்றோர் பிரிவைப் பயன்படுத்தும் 1,600க்கும் அதிகமான வாசகர்கள் பல்வேறு தரப்பட்ட போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறும் பொருட்டு, தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தாள்கள் மின்னஞ்சல் வழியாக ஒலி வடிவில் பெறும் வகையிலும், பதிவு செய்யப்பட்ட ஒலி வடிவக் குறிப்புகளும் பார்வையற்றோர் பிரிவில் இடம்பெற்றுள்ளன. சொந்த நூல் படிக்கும் பிரிவானது, வாசகர்களின் வசதியினைக் கருத்தில் கொண்டு 40 இருக்கைகளிலிருந்து 160 இருக்கைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை பயன்படுத்தும் 175-க்கும் மேற்பட்ட வாசகர்கள் பல்வேறு வகைப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசுப் பணிகளில் தேர்வு பெற்றுள்ளனர்.

இந்நூலகத்திலுள்ள மாநாட்டுக் கூடம், கருத்தரங்கு கூடம், திறந்தவெளி கலையரங்கம் முதலியவற்றில் பொதுப் பணித் துறை நிர்ணயித்த வாடகை வீதத்தில் அரசு விழாக்கள், கலை மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள், பள்ளி ஆண்டு விழா மற்றும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, தேசிய, மாநில அளவிலான கருத்தரங்குகள், சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நடத்தும் கருத்தரங்குகள் மற்றும் அரசால் அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 1,200 வாசகர்கள் இந்நூலகத்தினை பயன்படுத்தி வருகின்றனர். இந்நூலகம் குறித்துத் தேவையான அனைத்துத் தகவல்களையும் www.annacentenarylibrary.com என்ற இணையத் தளத்தின் மூலம் நூலக ஆர்வலர்கள் அறிந்து கொள்ளலாம்.

2015-16-ஆம் ஆண்டில், வாசகர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் உடனடியாகப் பெறுவதற்கு, இந்நூலகத்தில் மின் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் இயங்கி வந்த அரசு கீழ்திசைச் சுவடிகள் நூலகமானது முழுமையாக அண்ணா நூற்றாண்டு நுாலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது, இந்நூலகத்திற்கு ரூ.2.00 கோடி மதிப்பில் மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் 3,594 தலைப்புகளில் நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமை, “பொன்மாலைப் பொழுது" என்ற தலைப்பில் பல்வேறு சிறந்த துறைகளில் ஆளுமைகளுடனான நிகழ்ச்சிகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை தோறும் போட்டித் தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மாவட்ட மைய நூலகங்கள்

ஒவ்வொரு மாவட்ட தலைமையிடத்திலும் பொது மக்களின் வாழ்நாள் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக சேவையாற்றி வருகின்றன. ஒரு மாவட்டத்தின் அனைத்து வகை நூலகங்களுக்குமான புதிய நூல்கள் மாவட்ட மைய நூலகத்தின் வாயிலாகப் பெறப்பட்டு, பகுத்து வழங்கப் படுகின்றன.

கிளை நூலகங்கள்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் மொத்தம் 1,926 கிளை நூலகங்கள் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. இந்நூலகங்கள் புத்தகப் பிரிவு, நாளிதழ் மற்றும் பருவ இதழ் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான நூலகங்களில் இணைய தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது வளர்ந்து வரும் வாசகர்கள் பயன்பாட்டின் அடிப்படையில், தாலுகா தலைமையிடங்களில் செயல்பட்டு வரும் 295 கிளை நுாலகங்கள் முழு நேர கிளை நூலகங்களாக செயல்படுகின்றன. 2011 முதல் 2016 வரையுள்ள காலகட்டத்தில் 516 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

ஊர்ப்புற நூலகங்கள்

குக்கிராமங்களின் நூலகத் தேவையினை உணர்ந்து, கிராமங்களில் வசிக்கும் பொது மக்களிடையே வாசிப்புத் திறனை மேம்படுத்தி, கிராமப்புற மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க ஏற்படுத்தப்பட்ட சீரிய நூலகத் திட்டமே ஊர்ப்புற நூலகத் திட்டமாகும். தமிழகத்தில் 1,914 ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 1,157 ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

பகுதி நேர நூலகங்கள்

சிற்றூர்களில் வாழும் பொது மக்களிடையே புத்தக அறிமுகத்தை ஏற்படுத்தி, வாசிப்புத் தன்மையினை வளர்க்கும் விதமாகவும், அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும், 1000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள கிராமங்களில் பகுதிநேர நூலகங்கள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் தற்போது 715 பகுதிநேர நூலகங்கள் மக்கள் சேவையில் மகத்தான பணியினைச் செய்து வருகின்றன.

நடமாடும் நூலகங்கள்

மலைப்பிரதேசங்கள் போன்ற நூலக வசதி குறைவாக உள்ள இடங்கள் மற்றும் நூலகத்திற்கு வர இயலாத பொதுமக்களின் அறியாமையினை அகற்றி கல்வி அறிவை வளர்த்திட, தமிழகத்தில் நடமாடும் நூலகம் என்ற புதிய வடிவிலான நூலகம், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்த திரு.கனகசபை பிள்ளை என்பவரால் உருவாக்கப்பட்டு, “இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை” என்றழைக்கப்படும் முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் 1931-இல் தொடங்கப்பட்டது. இந்நூலகச் சேவையினை விரிவுபடுத்தும் நோக்கில், 2014-15-ஆம் ஆண்டு ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் நடமாடும் நூலக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. தற்போது, தமிழகத்தில் மொத்தம் 14 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் சிறந்த முறையில் செயலாற்றி வருகின்றன.

தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம்

1535 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, இந்தியாவின் பழம்பெரும் நூலகங்களில் ஓன்றான தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையமானது, மன்னர் சரபோஜி (1798-1832) காலத்தில் அன்னாரது பேராதரவினால் உலகின் தலைசிறந்த நூலகங்களில் ஒன்றாக உருவெடுத்தது. 1918 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்நூலகம், 1986-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம், 1975-இன்படி பதிவு பெற்ற சங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராட்டியம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 47,334 ஓலைச் சுவடிகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. மேலும், இந்நூலகத்தில் கலை, பண்பாடு மற்றும் இலக்கியம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் சித்திரங்கள் உள்ளன.

இந்நூலகத்தின் வளர்ச்சிக்காகவும், பணியாளர் நலனுக்காகவும் 2013-14-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு இந்நூலகத்திற்கான மானியத்தை ரூ.40.00 இலட்சத்திலிருந்து ரூ.75.00 இலட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளது. இந்நூலகத்தினை சர்வேதேச ஆய்வு மையமாக தரம் உயர்த்த 2013-ஆம் ஆண்டில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சரசுவதி மகால் நூலகம்

இந்நூலகம் மற்றும் ஆய்வு மையத்திலுள்ள தொன்மை வாய்ந்த அரிய நூல்கள் மற்றும் ஓலைச் சுவடிகளை, சாதாரண மக்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை பயன்படுத்தும் வகையில், 2014-15 ஆம் ஆண்டில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் நூலகம், சென்னை

தமிழறிஞர் மற்றும் நூல் ஆராய்ச்சியாளரான டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்களின் நினைவாக 1943-ஆம் ஆண்டு இந்நூலகம் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் தமிழறிஞர்கள் பலர் அன்னாருக்கு எழுதிய 3,000-க்கும் மேற்பட்ட கடிதங்கள், உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் எழுதிய நாட்குறிப்புகள், 1,832 நூல்கள், 939 ஏட்டுச் சுவடிகள் மற்றும் பல அரிய தமிழ் நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், 1923-ஆம் ஆண்டு முதலான பழைய அரிய அச்சு நூல்கள் மற்றும் கடிதங்கள் ஆகியவை குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 2016-17-ஆம் ஆண்டில் இந்நூலகத்திற்கு ரூ.17.30 இலட்சம் மானியமாக வழங்கப் பட்டுள்ளது.

மறைமலையடிகள் நூலகம், சென்னை

கன்னிமாரா பொது நூலக வளாகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் மறைமலையடிகள் நூலகமானது அரிய தமிழ் நூல்களின் களஞ்சியமாக விளங்கி வருகிறது. இந்நூலகத்தில் சங்க இலக்கியம், திருக்குறள், இலக்கண நூல்கள், புராணங்கள், இதழியல், வாழ்க்கை வரலாறு, நாலடியார், திருவாசகம், மொழி பெயர்ப்பிற்கான தமிழ் மூலநூல்கள், 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அரிய அகராதிகள், மருத்துவ நூல்கள், கலை மற்றும் பண்பாடு சார்ந்த நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் என சுமார் 80,000 நூல்கள் உள்ளன. 3,528 உறுப்பினர்களைக் கொண்ட இந்நூலகத்தை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நூலகப் பராமரிப்பிற்காக ஆண்டு தோறும் ரூபாய் ஒரு இலட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

நிதி

நூலக நிதி

பொது நூலகத் துறையின் முக்கிய வருவாய் நூலக வரியே ஆகும். தமிழ்நாடு பொது நூலகச் சட்டம், 1948, பிரிவு 12(1)(a)-இன்படி, உள்ளாட்சி நிறுவனங்கள் வசூலிக்கும் சொத்து வரியில் ஒரு ரூபாய்க்கு 10 பைசா வீதம் நூலக வரி வசூலிக்கப்படுகிறது. நூலகங்களுக்குத் தேவையான நூல்கள், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் வாங்குதல், புதிய கட்டடங்கள் கட்டுதல், பழுதடைந்த நூலகக் கட்டடங்களைப் புதுப்பித்தல், நூலகங்களுக்குத் தேவையான எழுது பொருட்கள், நுகர் பொருட்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குதல், மேலும் நூலகர்கள், ஊர்புற நூலகர், பகுதிநேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஊதியம் மற்றும் நூலக மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் நேரடியாக நூலக நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2016-17-ஆம் ஆண்டிற்கான நூலக வரியாக ரூ.74.57 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

பொது நிதி

தமிழ்நாடு பொது நூலகச் சட்டம், 1948 இன், தமிழ்நாடு பொது நூலகத் திருத்தச் சட்டம் 2001, பிரிவு 14 A மற்றும் தமிழ்நாடு பொது நுாலக விதிகள், 1950 இல் விதி 23-A(1) ஆகியவற்றின்படி, நிதி நிலையில் நலிவடைந்த நூலக ஆணைக்குழுக்களுக்கு உதவும் பொருட்டு “பொது நிதி” உருவாக்கப்பட்டு, அதிக வருவாய் உள்ள மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூலக வரிவசூலில் 20% க்கு மிகாமல் பெறப்படும் பொது நிதியானது, குறைந்த வருவாயில் நலிவுற்ற நிலையில் உள்ள மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, குறிப்பிட்ட இனங்களுக்குச் செலவிடப்படுகிறது.

இராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை மானியம்

கொல்கொத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசின் “இராஜா ராம்மோகன் ராய் நூலக” அறக்கட்டளையானது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் பொது நூலகங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நூல்கள் வாங்குதல், தளவாடங்கள் வாங்குதல், நூலகர்களுக்கு சிறப்பு பயிற்சியளித்தல், கருத்தரங்கு நடத்துதல், நூலகக் கட்டடங்கள் கட்டுதல், நூலகங்களில் குழந்தைகள் பிரிவு உருவாக்குதல், 25 / 50 / 75 / 100 ஆண்டுகள் நிறைவடைந்த நூலகங்களுக்கு விழா கொண்டாடுதல் மற்றும் நூலகத்தின் அடிப்படை வசதியினை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கி, பொது நூலகங்களை ஊக்குவித்து வருகிறது. இவ்வறக்கட்டளையானது ஆண்டுதோறும் இணை மானியமாக ரூ.3.00 கோடி வழங்கி வருகிறது. இத்துடன் தமிழக நூலக ஆணைக்குழு நிதியிலிருந்து தனது பங்காக ரூ.3.00 கோடி வழங்குகிறது.

சாதனைகள்

*சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான பிரிவு

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்ட மைய நூலகத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

*மாநில ஆதார வள மையத்தில் நூலகம்

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கென சிறப்பு நூலகம் ஒன்று, சென்னையில் மாநில ஆதார வளமையத்தில் 2013-ஆம் ஆண்டு ரூ.17.00 இலட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது.

*மாதிரி நூலகங்கள்

தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மைய நூலகங்கள் தலா ரூ.50.00 இலட்சம் மதிப்பில் மாதிரி நூலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

*நவீனமயமாக்கப்பட்ட குழந்தைகள் பிரிவு

திருச்சிராப்பள்ளி, ஈரோடு, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள மாவட்ட மைய நூலகங்களில் செயல்பட்டு வரும் சிறுவர் பிரிவுகள் மொத்தம் ரூ.20.00 இலட்சம் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

*நூல்கள் பாதுகாப்பு மையம்

ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டிற்காக பழமையான மற்றும் அரியவகை நூல்களை பாதுகாக்கும் பொருட்டு, முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் 'நுால்கள் பாதுகாப்பு மையம்” உருவாக்கப்பட்டுள்ளது.

*மின் நூல் படிப்பான்

கன்னிமாரா பொது நுாலகத்தில் 18 மின் நூல் படிப்பான்கள் மற்றும் 32 மாவட்ட மைய நூலகங்களில் தலா 4 மின் நூல் படிப்பான்கள் ரூ.10.00 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

*இலவச இணையதள வசதி

கன்னிமாரா பொது நூலகம் மற்றும் அனைத்து மாவட்ட மைய நூலகங்களின் இணையதள வசதியினைப் பயன்படுத்தி, போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக விண்ணப்பிக்கும் முறையானது செயல்பட்டு வருகிறது.

*குடிமைப்பணி கல்வி மையத்தில் போட்டித் தேர்வு பயிற்சிகள்

கன்னிமாரா பொது நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், மற்றும் 273 கிளை நூலகங்களில் குடிமைப்பணி கல்வி மையங்கள் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்ற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்ட மைய நூலகங்களிலுள்ள குடிமைப்பணிப் பிரிவிற்கு மாவட்டத்திற்கு ரூ.2.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.15.00 இலட்சம் மதிப்பில் தோற்றுவிக்கப்பட்டுள்ள "போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள்” மூலம் 7,002 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

*மாவட்ட மைய நூலகங்களில் "சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு”

தமிழ்நாட்டிலுள்ள பொது நூலகங்களைப் பயன்படுத்தி வரும் நகர்ப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அவர்களுக்குச் சொந்தமான நூல்களை, நூலகங்களில் வைத்து படிப்பதற்கான சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டு, முதற்கட்டமாக, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் வேலூர் ஆகிய 12 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகங்களுக்கு ரூ.2.40 இலட்சம் மதிப்பில் "சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு” தோற்றுவிக்கப்பட்டு, 1,33,512 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

செயல்பாடுகள்

நூலகக் கட்டமைப்பு

தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் 4,603 பொது நூலகங்களில் 1,753 நூலகங்கள் சொந்தக் கட்டடங்களிலும், 2,516 நூலகங்கள் வாடகையில்லா இலவசக் கட்டடங்களிலும், 320 நூலகங்கள் தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருவதோடு, 14 நடமாடும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. துறையின் தொலைநோக்கு பார்வையான, "அனைத்து நூலகங்களும் சொந்தக் கட்டடத்தில் செயல்படுத்துதல்" என்ற இலக்குடன், 2016-17-ஆம் ஆண்டில் ரூ.135.73 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், ரூ.22.21 இலட்சம் மதிப்பில் கட்டடங்கள் பராமரிக்கவும் செலவிடப்பட்டுள்ளது.

கணினிமயமாக்கம்

மாநில மைய நூலகமான கன்னிமாரா பொது நூலகம் மற்றும் அனைத்து மாவட்ட மைய நூலகங்களில் இராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளையின் இணை மானிய நிதியுதவியின் அடிப்படையில் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட வசதிகளுடன் பொது நூலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னிமாரா பொது நூலகத்துடன் மாவட்ட மைய நூலகங்கள் அனைத்தும் இணையதள இணைப்பு வாயிலாக இணைக்கப்பட்டு, அந்நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய தகவல்களை இணையதளம் வாயிலாக பொது மக்கள் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாசகர் வட்டம்

நூலகச் செயல்பாடுகளில் பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் இருக்கும் வகையில், அனைத்து நூலகங்களிலும் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், நூலக உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களைக் கொண்டு "வாசகர் வட்டம்” என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

புதிய நூலகங்கள் உருவாவதற்கும், பொது மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்தி, நூலகத்தை வாசகர்கள் முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், புத்தகங்களுக்கும் வாசகர்களுக்குமான பிணைப்பினை உறுதிப்படுத்துவதற்கும், பொது நூலகத் துறையுடன் கைகோர்த்து துணை நிற்கும் வாசகர் வட்டங்கள் வாயிலாக புதிய நூல்கள் மற்றும் படைப்பாளிகள் அறிமுகம், இலக்கியச் சொற்பொழிவு, புத்தகக் கண்காட்சி, மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கதை சொல்லுதல், வினாடி வினா போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இன்றியமையாத நிகழ்ச்சிகள் அனைத்து நுாலகங்களிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தமிழகத்தில் நூலக இயக்கம் வளர மிகுந்த முனைப்பும், ஈடுபாடும் கொண்ட வாசகர் வட்டத் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2014-15-ஆம் ஆண்டு முதல் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வாசகர் வட்டத் தலைவர்களுக்கு "நுாலக ஆர்வலர்" என்ற விருதானது, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

நூலக உறுப்பினர் மற்றும் புரவலர் சேர்க்கை

மக்களின் தேவைகளை அறிந்து, நூலகச் சேவையினை மென்மேலும் விரிவுபடுத்துவதற்கு, பொது நூலகங்களில் உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்க்கையினை துரிதப்படுத்துவது மிகவும் அத்தியாவசியம் ஆகும். பொது நூலகத் துறையின் தீவிர முயற்சியின் காரணமாக, 2011-12-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை 22,75,705 மற்றும் புரவலர்கள் எண்ணிக்கை 57,609 ஆகும். குறிப்பாக, 2016-17ஆம் ஆண்டில் 2,92,725 உறுப்பினர்களும் 3,821 புரவலர்களும் மற்றும் 34 பெரும் புரவலர்களும் புதிதாகச் சேர்க்கப் பட்டுள்ளனர்.

புதிய முயற்சிகள்

போட்டித் தேர்வுக்கு தயாராகும் வாசகர்களுக்கான பருவ இதழ்கள்

போட்டித் தேர்விற்குத் தயாராகும் அனைத்து பகுதி வாசகர்களுக்கும் ஒரே மாதிரியான முன்னணி ஆங்கில பருவ இதழ்கள் கிடைக்கும் நோக்கத்தோடு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதி உதவியுடன் ரூ.2 கோடி மதிப்பில் 32 மாவட்ட மைய நூலகங்களுக்கு 61 பருவ இதழ்களும், 241 முழுநேர கிளை நூலகங்களுக்கு 34 பருவ இதழ்களும் மற்றும் 320 கிளை நூலகங்களுக்கு 19 பருவ இதழ்களும் வாங்கப்பட்டுள்ளன.

அச்சு மற்றும் இணைய வழி நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிதி உதவியுடன் ரூ.1.30 கோடி மதிப்பில் அச்சு மற்றும் இணைய வழியான நூல்கள், தேசிய மற்றும் சர்வதேச பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் வாங்கப்பட்டுள்ளன.

விழாக்கள்

பொது நூலக தினம்

பல சமூக சீர்திருத்தங்கள் செய்து, கல்வியில் பெருநாட்டம் கொண்ட புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இராஜா ராம்மோகன் ராய் அவர்களின் பெருமையினை இவ்வுலகிற்கு உணர்த்தும் வண்ணம், அவர் பிறந்த நாளான மே 22 ஆம் நாளில் தமிழகத்தின் அனைத்து நூலகங்களிலும் “பொது நூலக தினம்” கொண்டாடப்படுகிறது.

நூலகர் தினம்

தமிழ்நாடு பொது நூலகச் சட்டத்தை இயற்றியவரும், நூலகவியலின் விதிகள் மற்றும் “கோலன் நூற்பகுப்பாக்க முறை'யினை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும், “இந்திய நூலக அறிவியலின் தந்தை” என்று போற்றப் படுபவருமான முனைவர். சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் அவர்களைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், அவர் பிறந்த நாளான ஆகஸ்டு 12 ஆம் நாள் "நூலகர் தினமாக” அனைத்து நூலகங்களிலும் மிகவும் பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசிய நூலக வார விழா

நமது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டி, உறவாடும் நூல்களையும், அதனைப் பாதுகாக்கும் நூலகங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், நூலகங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் நாள் முதல் 20 ஆம் நாள் வரை "தேசிய நூலக வார விழா” கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இசையரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், விழிப்புணர்வுப் பேரணி, கலை நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி, கருத்தரங்கம், நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம் போன்ற நிகழ்சிகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

உலக புத்தக தினம்

உலக புத்தக தின விழாவானது, ஏப்ரல் 23-ஆம் நாளில் அனைத்து நூலகங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழில் முன்னணி எழுத்தாளர்கள், சாகித்திய அகாதமி மற்றும் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப் படுகிறார்கள்.

விருதுகள்

முனைவர் எஸ். ஆர். அரங்கநாதன் விருது

நூல்களையும், நூலகங்களையும் பாதுகாப்பதோடு, புத்தகங்களையும், வாசகர்களையும் இணைக்கும் பாலமாகவும், முழு மனதுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்றி வரும் நூலகர்களை பாராட்டி, கெளரவிக்கும் வகையில், ஆண்டு தோறும் சிறந்த நூலகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய நூலக வார விழாவில் ரூ.2,000/- பணமுடிப்புடன் வெள்ளிப் பதக்கம் அடங்கிய "முனைவர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது” வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

சிறந்த நூலகங்களுக்கு பரிசு

பொது நூலக இயக்ககத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றும் பொருட்டு, அதிக உறுப்பினர் சேர்க்கை, அதிக புரவலர் சேர்க்கை மற்றும் அதிக நன்கொடைகள் (இலவச காலிமனைகள், கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள்) பெற்று, அர்ப்பணிப்புடன் செயல்படும் மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்களுக்கு 2012-13-ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் "கேடயங்கள்” வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

கொடையாளர் / பெரும் புரவலர் / புரவலர்களுக்குப் பட்டயங்கள்

தமிழகத்திலுள்ள பொது நூலகங்களின் வளர்ச்சியில் பொது மக்களும் பங்குகொள்ளும் வகையில், நூலகங்களுக்கு ரூ.10,000/-, ரூ.5,000/- மற்றும் ரூ.1,000/- நன்கொடையாக அளிப்பவருக்கு, முறையே கொடையாளர், பெரும் புரவலர் மற்றும் புரவலர் சான்றிதழ் (பட்டயம்) வழங்கப்படுகிறது. இந்த நன்கொடைகள் வங்கிகளில் வைப்பு நிதியில் வைக்கப்பட்டு, அதன் வட்டியானது, நூலகங்களுக்கு பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு

2017-18 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில், பொது நூலக இயக்ககத்திற்கு ரூ.88.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முடிவுரை

தமிழகத்தில் பொது நூலகங்கள் சமூகத்திற்கு மிகச் சிறந்த சேவையினை வழங்குவதாலும், குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கு, அவர்களது கல்வி மற்றும் பணி முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல் சேவையை வழங்குவதில் பெரும்பங்காற்றுவதாலும் பொது நூலகங்களின் வளர்ச்சி மிக இன்றியமையாததாகும்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

"ஆசிரியரது தாக்கம் அழிவில்லாதது அதன் தாக்கம் எந்த எல்லையைத் தொடும் என்பதை அவராலேயே கணிக்க இயலாது"

- ஹென்றி ஆடம்ஸ்.

அறிமுகம்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழகப் பள்ளிக்கல்வித்துறையை இந்தியாவில் முதன்மை இடத்தில் நிலைநிறுத்துவதற்கென கணினிவழிக் கற்றல் எனும் தளத்திலிருந்து மெய்நிகர் வகுப்பறைகள், கருத்துப் பரிமாற்ற அடிப்படையிலான ஆசிரியர் பயிற்சி, கணினிசார் கற்றல் வளங்கள் கொண்ட வகுப்பறை மேம்பாடு போன்ற தொழில்நுட்ப அடிப்படையில், கல்வியை நடைமுறை வாழ்க்கையுடன் இணைத்து மாணவர்கள் புரிந்து கற்றுக்கொள்ளும் வகையிலான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

குறிக்கோள்கள்

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் செயல்பாடுகள், கல்வியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட பயிற்சிக் கையேடுகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல்

* மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, தகவல் தொழில் நுட்ப தளத்தைப் பயன்படுத்திக் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றியமைத்தல்

* பொருத்தமான மின்னியல் பாடப் பொருள்களைத் தேவைக்கேற்பவும் வயது நிலைக்கேற்பவும் உருவாக்கி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல்

* கல்விச் செயற்கைக்கோள் வாயிலாக மேலாய்வு செய்யவும், கல்வியாளர்களுடன் இடைவினை புரியவும் தொழில்நுட்ப வசதிகளை முழுமையாகப் பயன்படுத்துதல்

* மாநில அளவிலிருந்து ஒன்றிய அளவு வரையிலும் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரையிலும் அனைத்து நிலைகளிலும் தேவைக்கேற்ற பயிற்சிகளைத் திட்டமிட்டு நடத்துதல்

* கல்விச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான தகுதி மற்றும் திறமை வாய்ந்த மனித வளத்தைக் கண்டறிய, தகவல் தொகுப்பு உருவாக்குதல் மற்றும் தொடர்ந்து புதுப்பித்தல்

* தெரிவு செய்யப்பட்டுள்ள மனித வளத்தின் திறன் மேம்பாட்டிற்குக் கணினிவழிக் கற்றல்தளம் மற்றும் ஊடாட்டுப் பலகைகளைப் பயன்படுத்திப் பயிற்சிச் செயல்பாடுகளைக் கொண்டு சேர்த்தல்

* தொலைநோக்கு 2023இன் இலக்கை அடையவும் கணினிவழிக் கற்றல் முறைகளுக்கேற்பத் தொடர்ந்து மாற்றங்களை மேற்கொள்ளவும் கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல்களை உருவாக்குதல் மற்றும் மறு சீரமைத்தல்

*அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து தேசிய அடைவு ஆய்வு முடிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, தேசிய அளவில் மாணவர்கள் திறம்படச் செயல்படாமைக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்துதல்

* அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணித்திறன் மேம்படத் தேவையான பணியிடைப் பயிற்சிகளை வழங்குதல்

* ஆசிரியர்களது புதுமையான கற்றல் கற்பித்தல் உத்திகளை அடையாளங்கண்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவற்றைப் பொது வலைத்தளம் வாயிலாகப் பரவலாக்குதல் மற்றும் www.youtube.com SCERT TN CHANNEL இணையத்தளத்தில் அவ்வப்போது தொடர்ந்து பதிவேற்றம் செய்தல்

*மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களின் தொடர் பள்ளிப் பார்வைகளின் வாயிலாகப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி நிகழ்வுகளை மேற்பார்வை செய்தல் மற்றும் ஆசிரியர்களின் பணித்திறன் மேம்பாட்டிற்கு உதவுதல்

*கல்வி ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் அடிப்படையில் குழந்தைகள் நலனுக்கேற்ற கொள்கைகளை வகுக்க அரசுக்குத் துணைபுரிதல்

*தரமான கல்வியை வழங்கிட சர்வதேச, தேசிய அமைப்புகளான ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியம், தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசியக் கல்வித் திட்டமிடல் மற்றும் நிருவாகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மைய நிறுவனம் - புதுதில்லி, மண்டல ஆசிரியர் கல்வி நிறுவனம் - மைசூரு, மண்டல ஆங்கில நிறுவனம் தென்னிந்தியா, பெங்களூரு மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து கல்விசார் தேவைகளை நிறைவு செய்யத் தேவையான ஆதரவைப் பெறுதல்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மறுசீரமைப்பு

தரம் உயர்த்தப்பட்ட "மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ரூபாய் 1.96 கோடி செலவில் 9 புதிய துறைகள் அமைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் தேவைகளுக்கும், சமூக மாற்றங்களுக்கும் ஏற்ப தரமான பாடநூல்களை உருவாக்கிச் சீரமைத்து, பணிமுன்/பணியிடைப் பயிற்சிகள் வாயிலாக ஆசிரியர்களின் பணித்திறனை மேம்படுத்தி, மாநில மற்றும் மாவட்ட அளவிலான கல்விசார் சிக்கல்களை உடனுக்குடன் ஆய்வு செய்து பொருத்தமான முடிவுகளைக்காலதாமதமின்றிச் செயல்படுத்த ஏதுவாகத் தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, கணிதத்துறை, அறிவியல் துறை, சமூக அறிவியல் துறை, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறை, திட்டமிடல் மற்றும் மேலாண்மைத் துறை, கலைத் திட்டம் மற்றும் மதிப்பீட்டுத் துறை, கல்வித் தொழில்நுட்பத் துறை என்னும் 9 துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் கல்வித் தரத்தினை உயர்த்திடவும், ஆசிரியர்களுக்கான பணிமுன் மற்றும் பணியிடைப் பயிற்சிகளைத் திட்டமிடவும், அரசின் புதிய கல்வித் திட்டங்களைச் செயல்படுத்தவும், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்விப் பட்டயப் பயிற்சியின் பாடத்திட்டம் மற்றும் பாடநூல் சீரமைப்புகளை மேற்கொள்ளவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பரிந்துரைக்கப்பட்ட பணியிடங்கள், நேரடி நியமனம் மற்றும் பணிநிரவல் மூலமாக நிரப்பப்பட்டுள்ளன. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்கீழ் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் இளநிலை விரிவுரையாளர் உள்ளிட்ட 109 கல்வியாளர்கள் 01.04.2017 அன்று பணியமர்த்தப்பட்டனர்.

தரமான பணிமுன் பயிற்சி

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பயிற்சி ஆசிரியர்களது கற்பித்தல் ஆற்றலை மேம்படுத்தும் வண்ணம், தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்ட கட்டமைப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பயிற்சி ஆசிரியர்கள், கற்பித்தல் வழிமுறைகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களையும், குழந்தை மைய அணுகுமுறைகளையும், கணினிமயக் கற்றல் சூழலையும் திறமையாகக் கையாளும் வகையில் பயிற்சியளிக்கப்படுகின்றனர். பயிற்சி ஆசிரியர்களை வாழ்வியல் திறன்களான உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சிகளில் ஈடுபடச்செய்தல் மூலம் அவர்களின் உடல் செயல்பாடுகளை வளர்க்க வழிவகை செய்யப்படுகிறது.

மேலும், தூய்மையான சுற்றுப்புறம் சார்ந்த செயல்பாடுகளை நடத்த ஏற்பாடு செய்வதன் வாயிலாகப் பசுமையான மற்றும் சுத்தமான வளாகத்தைத் தங்களது நிறுவனத்தில் உருவாக்கிட பயிற்சி ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அறிவியல் வாரம் கொண்டாடுவதால் பயிற்சி ஆசிரியர்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் புதுமையான அறிவியல் கற்பித்தல் வழிமுறைகளை அறிந்து கொள்கின்றனர். இது, பயிற்சி ஆசிரியர்களின் அறிவியல் மனப்பான்மையையும் மேம்படுத்துகிறது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ், தமிழ்நாட்டில் 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், 7 ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 34 அரசுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 321 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 403 ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தொடக்கக்கல்விப் பட்டயப் படிப்பை வழங்கி வருகின்றன.

ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2013-14ஆம் ஆண்டு முதல், முதலாமாண்டு தொடக்கக் கல்விப் பட்டயப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இணையவழி ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நடைமுறை, மாணவர்கள் எளிதாகத் தங்கள் மாவட்டங்களில் உள்ள கலந்தாய்வு மையங்களுக்குச் சென்று தாங்கள் பயில விரும்பும் நிறுவனத்தைத் தாமே தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்புதுமையான நடைமுறையின் வாயிலாக இதுவரை 10,000 மாணவர்கள் சேர்க்கை பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் மறுசீரமைப்பு

சமூக மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள், வாழ்க்கையை எதிர்கொள்ள கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு 21ஆம் நூற்றாண்டில் மாணவர்களுக்குத் தேவையான திறன்களை வளர்க்கவும், வாழ்க்கைச் சூழலில் தாக்கம் விளைவிக்கும் புதிய தொழில் நுட்ப மாற்றங்களை அவர்கள் அறியச் செய்யவும், சமுதாயத்தை மனவுறுதியுடன் எதிர்கொள்ளத் தேவையான மதிப்புகளையும் திறன்களையும் அவர்களிடம் மேம்படுத்தவும், 1 முதல் 12 வரையிலான வகுப்புகளின் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை மூன்று ஆண்டு காலத்தில் படிப்படியாக வடிவமைப்பதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இம்மாற்றங்கள் கீழ்கண்டுள்ளவாறு மூன்றாண்டுகளில் மேற்கொள்ளப்படும்.

பாடத்திட்ட மாற்றம்

ஆண்டு

வகுப்புகள்

2018 -19

1, 6, 9,11

2019 - 20

2,7,10,12

2020 - 21

3,4,5,8

கல்விச் செயற்கைக்கோள் (EDUSAT)

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது 2016-17ஆம் கல்வியாண்டிலிருந்து 32 மாவட்டங்களில் உள்ள 58 மையங்களுக்குக் கல்விச் செயற்கைக்கோள் வழியாக காணொலிக் கலந்துரையாடல் முறையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு யோகா, குழந்தை உரிமைகள், பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும், வாழ்வியல் திறன்கள், ஆளுமைத் திறன் மேம்பாடு, பணிமுன் பயிற்சி, ஆங்கிலத்தில் தகவல் தொடர்புத் திறனை வளர்த்தல், பட உட்கிரகிப்புச் செயலித் தொழில்நுட்பம் (IRAT), பேரிடர் மேலாண்மை , வாராந்திர ஃபோலிக் அமிலம் அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் (WIFS), தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை பயிற்சித் தாள்கள் உருவாக்குதல் மற்றும் மென்திறன் பயிற்சி போன்ற தனித்துவமான பயிற்சிகளை மாதத்தில் 15 நாள்கள், மூன்று மணி நேரம் வீதம் வழங்கி வருகிறது. இதுவரை 1700 பயிற்சி ஆசிரியர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர்.

கூடுதலாக, அனைவருக்கும் கல்வித் திட்டமானது பல்வேறு பயிற்சிக் கருத்துகளைக் கருத்தாளர்கள் பயனடையும் வகையில் கல்விச் செயற்கைக்கோள் வழியாக அளித்து வருகின்றது. இப்பயிற்சிகளினால் 2500 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாணவர்கள், 160 விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மெய்நிகர் வகுப்பறைகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த இணையவழிக்கல்வி, 2016-17ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் 770 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 11 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் மெய்நிகர் வகுப்பறைகள் மூலம் இணையவழிக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் ஒரே நேரத்தில் சிறந்த வல்லுநர், ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் பாடங்கள் குக்கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கும் சென்று சேர்கின்றன. இதன்வழியாகப் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

பாடநூல்களை மின்மயமாக்குதல்

தமிழக அரசு, தொழில் நுட்ப உதவியுடன் தரமான கல்வியைச் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளும் தடையின்றிப் பெறவேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது. மின்னியப் பதிப்புகளாக மாற்றப்பட்ட பத்தாம் வகுப்புப் பாடநூல்களின் பயன்பாடு 01.04.2017 முதல் அறிமுகப்படுத்தப் பட்டது.

பள்ளிப் பாடநூல்களை ஒலி இணைக்கப்பட்ட மின்னியப் பாடநுால்களாக உருவாக்குதல் (DAISY - Digital Accessible Information System)

சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு (பார்வையற்ற) உதவும் வகையில் பள்ளிப் பாடநூல்களை ஒலி இணைக்கப்பட்ட மின்னியப் பாடநூல்களாக உருவாக்கும் பொருட்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் டெய்சி என்னும் மின்னிய (டிஜிட்டல்) ஒலிக் கருவியைப் பயன்படுத்தும் பார்வையற்றோர் பள்ளிகளைச் சேர்ந்த முதல்வர்கள், ஆசிரியர்களை ஒருங்கிணைத்துக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்ற பாடப்பொருளை முன், பின்னாகவும் குறிப்பிட்ட இடத்திலிருந்தும் தொடர்ந்தும் படித்துக் காட்டும் சாதனம், பார்வையற்றோர் மட்டுமல்லாது, கற்றல் குறைபாடு உடையோர், எழுத, படிக்கச் சிரமப்படுவோர், மூளைத் தண்டுவடப் பாதிப்பு உடையோர், மதி இறுக்க முடையோருக்குப் பயனுடையதாக அமையும் எனக் கண்டறியப்பட்டது.

டெய்சி மென்பொருள் (DAISY Software) இணைக்கப்பட்ட இக்கருவி, ஆங்கிலப் பாடப்பொருளைப் படித்துக் காட்டும் வகையில் மட்டுமே இயங்கி வருகிறது. இது தற்போது தமிழ் பாடப்பொருளைப் படித்துக் காட்டுவதற்கான வசதிகளை இணைத்து மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்குப் (பார்வையற்ற) பயன்படும் வகையில் பாடப்புத்தகங்களை ஒலிவடிவப் பாடநூல்களாக்குவதற்கான பயிற்சி, நடைமுறையில் உள்ள தமிழகப் பள்ளிப் பாடப் புத்தகங்களை வடிவமைத்த வடிவமைப்பாளர்கள், பாடப்புத்தக ஆசிரியர்கள், கல்வியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. இவ்வாறான ஒலி வடிவப் புத்தகங்களினால் பார்வையற்ற மாணவர்கள் மட்டுமின்றி கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களும் பயனடைவர்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளப் பதிவேற்றங்கள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், SCERT TN CHANNEL வலைப்பக்கத்தில் www.youtube.com இணையதள முகவரியில் மாவட்டங்களில் மிகச் சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களது புதுமையான பயிற்றுவிக்கும் முறைகளைக் காணொலிக் காட்சிகளாகப் பதிவேற்றம் செய்துள்ளது. மேலும், அறிவியல் ஆர்வமூட்டும் காணொலிக் குறுங்காட்சிகள் நானூறினைத் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து பதிவேற்றம் செய்துள்ளது. 145 அறிவியல் மின்னியப் பாடங்கள் தற்போதைய பத்தாம் வகுப்பு அறிவியல் பாடங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுக் காணொலிகளாகப் பதிவேற்றப் பட்டுள்ளன.

ஒவ்வொரு மாணவனின் உள்ளங்கையிலும் தொழில் நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முயற்சியில் 'படஉட்கிரகிப்புச் செயலித் தொழில்நுட்பம்' ஒரு மைல்கல் ஆகும். அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களை உட்படுத்தி இருநூறு அறிவியல் ஆய்வுகள் காணொலிகளாகப் பதிவு செய்யப்பட்டு, அவை பாட வல்லுநர்களால் ஆய்வு செய்யப் பட்டுள்ளன. மாணவர்களே செய்து காட்டும் இந்த அறிவியல் ஆய்வுகள், சக மாணவர்களைத் தாங்களே பள்ளிகளில் ஆய்வுகளைச் செய்ய ஊக்கப்படுத்தும். 1 முதல் 5 வகுப்பு வரையிலான தமிழ்ப்பாட நூல்களில் இடம்பெற்றுள்ள 40 பாடல்களுக்கென உருவாக்கப்பட்ட காணொலிகளை இதுவரை உலகெங்கிலும் இருந்து 4 இலட்சம் பேர் கண்டு மகிழ்ந்துள்ளனர். இவை "தாயெனப்படுவது தமிழ்” என்னும் பெயரில் குறுந்தகடாக 35,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் 950 கல்விக் காணொலிகள் உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

சைகையுடன் கூடிய ஒலிப்பு முறை

தொடக்கப்பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துகளை முறையாக ஒலித்துப் பழக, சைகையுடன் கூடிய ஒலிப்பு முறையில் காணொலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எழுத்துகளைப் பார்த்தும், உடலை அசைத்தும், உச்சரித்தும், கேட்டும், உணர்ந்தும் ஐம்புலன்களை ஒருங்கிணைத்துக் கற்றுக் கொடுப்பதை வலுவூட்டுவதாக இக்காணொலிகள் அமைய உள்ளன. இசையுடன் கூடிய பாடல்கள், பாரம்பரியக் கலைகள், பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கியதாக இக்காணொலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நாபிறழ், நாநெகிழ் பயிற்சிக்கு மாணவர் பட்டிமன்றம், மயங்கொலி எழுத்துகள் ஒலிப்புப் பயிற்சிக்கு மாவட்டக் கலைப்போட்டி முதலான நிகழ்வுகளை உருவாக்கித் தமிழகப் பள்ளிகளில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் பங்கேற்புடன் காணொலிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் படிக்கத் தொடங்கும் எந்நாட்டவரும் 30 நாள்களில் தமிழ் எழுத்துகளை உச்சரிக்க, படிக்க அறிந்துகொள்ளும் வகையில் இக்காணொலிகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநில அளவிலான மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் பணிமனையினை வல்லுநர்கள் மற்றும் நிறுவனக் கல்வியாளர்களைக் கொண்டு நடத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தொழில்முறை சார்ந்த முன்னேற்றங்களைப் பெறுவதற்கும் பொருத்தமான உயர் கல்வியினைத் தேர்ந்தெடுப்பதற்கும் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இவ்விடைவெளிகளைக் குறைக்க உயர்கல்வி வாய்ப்புகள் சார்ந்த புதிய தகவல்களை மாணவர்கள் பெறுவதற்குமான வழிகாட்டல் நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியானது பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அவற்றின் எதிர்காலம் பற்றி மாணவர்கள் அறிந்து தங்களுக்குப் பொருத்தமான உயர்கல்வியினைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் 3 இலட்சம் கையேடுகள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித்தனியே உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய வழிகாட்டிக் கையேடுகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வழங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் கலந்துரையாடல்கள் அடிப்படையில் மாணவர்கள் சார்ந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் 15 இலட்சம் மாணவர்கள் நேரடியாகப் பயனடைந்துள்ளனர்.

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சித் தாள்கள்

மாணவர்கள் பாடப்பொருளினைப் புரிந்து கொண்டு படிக்கவும், சிந்தனைத் திறனை வளர்க்கும் ஆற்றலைப் பெறுவதற்கும், 1 முதல் 10 வகுப்புகளுக்கு அனைத்துப் பாடங்களிலும் பயிற்சித் தாள்கள் தயாரிக்கப்பட்டு தொடக்கக்கல்வித் துறைக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் மாணவர்கள் பயன்பாட்டிற்கென மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கி வருகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பயிற்சி

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியபர் பயிற்சி நிறுவனங்களில் இரண்டாம் ஆண்டு பயிலும் சுமார் 2500 மாணவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் பயிற்சியும் மாதிரித் தகுதித் தேர்வுகளும் நடத்தப்பட்டன. மேலும், மாணவ ஆசிரியர்கள் தமக்கு விருப்பமான நேரத்தில் இணையத்தின் வாயிலாக மாதிரித் தேர்வுகளை எழுதி தமது அடைவு நிலையைத் தாமே சோதித்து மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மாதிரி வினாத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி

பாடப்பொருள் அறிவினை மேம்படுத்தவும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை வகுக்கவும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரி தாவரவியல், உயிரி விலங்கியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வரலாறு, கணினி அறிவியல் ஆகிய பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 201617ஆம் கல்வியாண்டில் 28,800 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

செயல்திட்ட வழிக் கற்றல் பயிற்சி (Project Based Learning)

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையை வலுப்படுத்தும் நோக்கில் தொடக்க, நடுநிலைப் பள்ளி நிலை ஆசிரியர்களுக்குச் செயல்திட்ட வழிக்கற்றல் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்குத் தொடக்க, நடுநிலை அடிப்படையில் வகுப்பு மற்றும் பாடவாரியாக மொத்தம் 10 கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாநில, மாவட்ட அளவில் பயிற்சிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேடிக் கற்றுக் கொள்ளும் திறனை வளர்க்கும் வகையிலான 500 செயல்திட்டங்கள் இதில் வடிவமைக்கப்பட்டிருந்தன. 1.2 இலட்சம் ஆசிரியர்கள் தங்கள் தொழில்முறைத் திறனை வளர்த்துக் கொள்ளவும் 40இலட்சம் மாணவர்களிடம் கண்டறிந்து கற்றல் திறனை வளர்க்கவும் இப்பயிற்சி உதவியது.

நிருவாகத் திறன் பயிற்சி

பதவி உயர்வு பெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிருவாகத்திறன் மற்றும் கல்வி சார் மேற்பார்வை குறித்த இரண்டு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினைப் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து வழங்கினர். இப்பயிற்சி மூலம் 85 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கணக்குப் பதிவுகள், நீதிமன்ற வழக்குகள், அலுவலக நிருவாகம், வகுப்பறை மேற்பார்வை, பள்ளிப்பார்வை, கணக்காய்வு, அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற தலைப்புகளில் கருத்து வளம் பெற்றனர்.

ஆராய்ச்சிப் புலத்தின் செயல்பாடுகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அளவுசார் ஆய்வுகளில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மீளாய்வு இயக்க உறுப்பினர்கள் பாராட்டியுள்ளனர். வருங்காலத்தில் தரநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்து இரண்டு நாள் பணிமனை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக்கல்வியாளர்களுக்கு நடத்தப்பட்டது. பணிமனையில் இந்தியா மற்றும் மேலைநாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு தனியாள் ஆய்வுகள் குறித்து விளக்கமாக விவாதிக்கப்பட்டன. ஆய்வுக்குரிய பிரச்சினைகளைக் கண்டறியவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பணிமனையின் வாயிலாக 64 கல்வியாளர்கள் தரநிலை ஆய்வுகள் குறித்த ஆழ்ந்த அறிவைப் பெற்றுள்ளனர்.

பள்ளித்தரம் மற்றும் மதிப்பீடு

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளித்தர மேம்பாட்டிற்கான திட்டவரைவினைத் தேசியக் கல்வித் திட்டமிடல் மற்றும் நிருவாகப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இத்திட்டவரைவு, வேறுபட்ட புவியியல் பகுதிகளான திருச்சிராப்பள்ளி, சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் 40 பள்ளிகளில் கள ஆய்வு செய்யப்பட்டது. அப்பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்குரிய மேம்பாட்டுத் திட்டங்களையும், பள்ளி அடைய வேண்டிய எதிர்கால இலக்குகளையும் நிர்ணயித்தனர். இனங் காணப்பட்ட நிலைகளில் படிப்படியான முன்னேற்றத்தினை இப்பள்ளிகள் அடைந்துள்ளன. இந்த ஆண்டில் இந்தப் பள்ளித்தரம் மற்றும் மதிப்பீட்டை அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தத் தேவையான தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாண்டு முதல் ஒவ்வொரு பள்ளியும் பிற நிறுவனங்களுடன் இணைந்து தம்மைத் தாமே மதிப்பிடும் திறனைப் பெறும்.

பிற நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் செயல்பாடுகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வித் திட்டத்துடன் இணைந்து தொடக்க, உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. தகுதி வாய்ந்த வல்லுநர்களையும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்களையும், ஆசிரியர்களையும் தெரிவுசெய்து செயல்பாடுகளுடன் கூடிய பயிற்சிக் கையேடுகளை வடிவமைத்து வருகிறது. வட்டார வள மையம், குறுவள மையங்களுக்கான பல்வேறு பயிற்சிகள் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. வட்டாரவள மையத்தில் வழங்கப்பட்ட அறிவியல் கற்பித்தலில் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துதல் பயிற்சியில் 18,911 ஆசிரியர்கள், தமிழ் இலக்கணம் கற்பித்தல் பயிற்சியில் 17,338 ஆசிரியர்கள், கணித உபகரணங்களைப் பயன்படுத்துதல் பயிற்சியில் 19,207 ஆசிரியர்கள், வரைபடத் திறன்களில் வரலாற்றுப் பாடத்தைப் புரிந்துக்கொள்ளுதல் பயிற்சியில் 15,389 ஆசிரியர்கள், ஆங்கிலம் கற்பித்தல் திறனை மேம்படுத்துதல் பயிற்சியில் 17,447 ஆசிரியர்கள் உயர் தொடக்க நிலையில் பயனடைந்துள்ளனர்.

குறுவள மையத்தில் வழங்கப்பட்ட கணிதத் திறனை மேம்படுத்தும் பயிற்சியில் 66,870 ஆசிரியர்கள், அறிவியல் கற்பித்தலில் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியில் 52,403 ஆசிரியர்கள், தமிழ் படித்தல், எழுதுதல் திறனை மேம்படுத்துதல் பயிற்சியில் 63,851 ஆசிரியர்கள், ஆங்கிலம் கற்பித்தல் திறனை மேம்படுத்துதல் பயிற்சியில் 28,576 ஆசிரியர்கள், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டை மேம்படுத்துதல் பயிற்சியில் 2,10,867 ஆசிரியர்கள், வரைதல் மற்றும் கையெழுத்துத் திறனை மேம்படுத்துதல் பயிற்சியில் 1,06,326 ஆசிரியர்கள், பொம்மலாட்டம் மற்றும் கதை கூறுதல் வழி மதிப்புக் கல்வி அளித்தல் பயிற்சியில் 1,04,934 ஆசிரியர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் குறித்த பயிற்சியில் 1,05,218 ஆசிரியர்கள், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு மற்றும் சாலைப் பாதுகாப்பை உடற்கல்வியுடன் இணைத்தல் பயிற்சியில் 95,694 ஆசிரியர்கள் தொடக்க நிலையில் பயனடைந்துள்ளர்.

குறுவள மையத்தில் வழங்கப்பட்ட படைப்பாற்றல் கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டை மேம்படுத்தும் பயிற்சியில் 74,561 ஆசிரியர்கள், வரைபடம் மற்றும் கையெழுத்துத் திறனை மேம்படுத்தும் பயிற்சியில் 75,462 ஆசிரியர்கள், போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தப் படுத்தும் பயிற்சியில் 74,557 ஆசிரியர்கள், குழந்தைகளின் கற்றல் அடைவுத்திறன் குறித்துக் கலந்துரையாடும் வகையில் வழங்கப்பட்ட பயிற்சியில் 75,152 ஆசிரியர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த பயிற்சியில் 73,863 ஆசிரியர்கள், மன அழுத்த மேலாண்மை மற்றும் வளரிளம் பருவம் குறித்த பயிற்சியில் 67,824 ஆசிரியர்கள் உயர் தொடக்க நிலையில் பயனடைந்துள்ளனர்.

பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும்

கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களைக் கையாளும் ஆசிரியர்களுக்குப் பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும் என்ற பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே ஒழுக்க நெறியைப் வளர்க்கவும் விழுமியங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் கற்ற விழுமியங்களை வாழ்க்கைச் சூழல்களில் பயன்படுத்தவும் ஏறத்தாழ 100 விழுமியங்களை இனங்கண்டு அவற்றைப் பாடப்பொருளோடு இணைத்துக் கற்பிக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி, 10,000 நடுநிலைப் பள்ளிகளிலும், 8,700 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பணிபுரியும் 40,000 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் 45 இலட்சம் மாணவர்கள் நேரடியாகப் பயன்பெற்றுள்ளனர்.

நன்னெறிக் கல்விப் பாடத்திட்டம் மறுவடிவமைப்பு

அரசு, தமிழ் நீதிநூலான திருக்குறளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட அதிகாரங்களை ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு, ஆணை வழங்கியுள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இதற்கென வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்ப்பதற்கென குறள் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு நன்னெறிக் கல்விப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 105 அதிகாரங்கள் 6 முதல் 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

தென் கொரியா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே கல்வி மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம்

தென்கொரிய கல்வி மற்றும் கலாச்சார ஆய்வு நிறுவனம், தமிழகத்தின் கல்வி, கலாச்சார மாண்புகள் தென்கொரியாவுடன் இணைந்திருப்பதைக் கண்டு, தமிழகமும் தென்கொரிய அரசின் கல்வித்துறையும், கலாச்சாரம் மற்றும் கல்விப் பரிமாற்றம் செய்வதற்கான கருத்தரங்கினை நடத்தியது. தமிழகத்திற்கும் உள்ள நீண்டகாலக் கலாச்சாரப் பிணைப்பு குறித்து தமிழகக் கல்வியாளர்களும் கருத்துகளை வழங்கினர். பன்னாட்டு அடைவுத் தேர்வுகளில் முதல் ஐந்து இடங்களுள் தென்கொரியா தொடர்ந்து நீடிப்பதால் தமிழகம், தென்கொரிய கல்வி மற்றும் கலாச்சாரப் பகிர்வு, தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு எதிர் காலத்தில் நன்மை பயக்கும்.

சிங்கப்பூர் தமிழாசிரியர்களுடனான கல்விக் கலந்துரையாடல்

தமிழக மாவட்டங்களில் தமிழ்மொழி கற்றல் சார்ந்த தகவல் தொழில் நுட்ப முன்முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த கலந்துரையாடல், சிங்கப்பூர் அமைச்சகக் கல்வியாளர் மற்றும் முதன்மை ஆசிரியர்களுடன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ்மொழி கற்றல் கற்பித்தல், ஆசிரியர் கல்விக் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம், மதிப்பீடு சார்ந்த செயல்பாடுகள், சிங்கப்பூர் நாட்டில் செயல்படுத்தப்படும் கலைத்திட்ட மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு, ஆசிரியர் நியமனங்கள், பதவி உயர்வு போன்ற செயல்பாடுகள் குறித்த செய்திகள் கலந்துரையாடப்பட்டன. தமிழகக் கல்வித்துறையின் தரத்தினை மதிப்பிடவும் உயர்த்தவும் இவ்வாறான ஒப்பீடுகள் உதவும் என்ற வகையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் இக்கருத்துப் பகிர்வில் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் தமிழ், தென்கொரிய மொழிகளுக்கிடையே உள்ள மொழியின் தொன்மை மற்றும் செறிவு குறித்து தென்கொரிய ஆய்வாளர்களும், தென்கொரியாவிற்கும்,

ஆங்கிலப் பாடநூல்களில் இலக்கணப் பயிற்சித் தாள்களை இணைத்தல்

மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த மூன்று முதல் எட்டு வகுப்புகள் வரை ஆங்கிலப்பாடப்புத்தகங்களுடன் இலக்கணப் பயிற்சித்தாள்களை இணைத்து, இந்தக் கல்வியாண்டு முதல் அளிக்கப்பட உள்ளன. இலக்கணப் பயிற்சித்தாள்கள் இணைக்கப்பட்ட பாடநுால்கள் 01.04.2017 அன்று வெளியிடப்பட்டன. இவை மாணவர்களின் ஆங்கில இலக்கண அறிவை மேம்படுத்தி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த உதவும்.

பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிப்புத் திட்டம்

வகுப்பு ஏழு முதல் பத்து வரை சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்பாடங்கள், உலக வங்கிக் குழுவினரின் பரிந்துரைக்கேற்ப புனே-யசதா அமைப்பின் பேரிடர் மேலாண்மை இயக்குநர், மும்பை - ஜேடி டாடா பேரிடர் புலக் கல்வியாளர்கள், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆகியோரைக் கொண்டு மீளாய்வு செய்யப்பட்டன. இக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட கருத்துகள், அடுத்தடுத்த பாடப்புத்தகச் சீரமைப்புகளின்போது செயல்படுத்தப்படும். 11, 12 ஆம் வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம் மற்றும் புவியியல் பாடங்களிலும், தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சியில் சமூக அறிவியல் வளநூல் கற்பித்தல் பாடத்திலும் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணச் செயல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

வருவாய்த்துறையின் பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிப்புத் திட்டத்துடன் இணைந்து 4,500 நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகப் பள்ளி மாணவர்களிடையே பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆறு முதல் பன்னிரண்டு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 01.04.2017 அன்று பணப்பரிசு, சான்றிதழ், மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியம்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியத்துடன் (யுனிசெப்) ஒருங்கிணைந்து வாராந்திர ஃபோலிக் அமிலம் அடங்கிய இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டத்தைத் (WIFS) தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தி வருகிறது. இதில் அனைத்துப் பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இரத்த சோகையைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வளரிளம் பருவ மாணவ மாணவியர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை மேம்படுத்தி இரத்தசோகையைத் தடுத்தலே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரைப் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழனன்று ஃபோலிக் அமிலம் அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

சேவையும் அங்கீகாரமும்

விசாகா விருது

விசாகா என்னும் பெயரில் மாணவர்களுக்கான தேசிய ரொக்கமில்லாப் பணப் பரிமாற்ற கல்வியறிவு முகாம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே பணப் பரிமாற்றங்களை இயன்ற அளவு குறைத்து ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் மாணவ சமுதாயத்தினரைக் கொண்டு விழிப்புணர்வு அளிக்க இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், டிஜிட்டல் இந்தியா என்னும் தொலைநோக்கினை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்ட 20 நிறுவனங்கள் பரிசுக்கென தேர்வு செய்யப்பட்டன. இதில் மாணவர், கல்வியாளர்களின் சிறந்த பணிக்காகத் தமிழ் நாட்டிற்கு 5 பரிசுகள் கிடைத்துள்ளன.

நாட்டு நலப்பணித் திட்ட விருது

நாட்டு நலப்பணித் திட்டத்தின்கீழ், வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மேலாக, 100 மணி நேரத்திற்கும் கூடுதலாகச் சமூகப் பணியாற்றியமைக்குக் கிருஷ்ணகிரி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன நாட்டு நலப்பணித் திட்ட அலகிற்குத் தேசிய இளைஞர் தலைமைத்துவ விருதும் ரூ.30,000/- கேட்புக் காசோலையும் முதல் பரிசாக நடுவண் அரசால் வழங்கப்பட்டது. ரொக்கமில்லா பணப் பரிமாற்றம் சார்ந்து பரப்புரைப் பணி செய்தமைக்கும், 100 மணி நேரத்திற்கும் மேலாகச் சமூகப் பணியாற்றியமைக்கும் ஒட்டன்சத்திரம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன நாட்டு நலப்பணித் திட்ட அலகிற்கு ரூ.25,000/- கேட்புக் காசோலை இரண்டாம் பரிசாக நடுவண் அரசால் வழங்கப்பட்டது.

தேசிய மக்கள் தொகைக் கல்வித் திட்டம்

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நிதி உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மக்கள்தொகை கல்வி சார்ந்து, விழிப்புணர்வும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு வளர் இளம் பருவ மாணவர்களின் பிரச்சினை சார்ந்தும், ஆண் பெண் சமத்துவம் சார்ந்தும், போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்தும், HIV பாதிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடு

2017-18ஆம் நிதியாண்டிற்கு ரூ.63.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முடிவுரை

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதுமையான உத்திகளான பட உட்கிரகிப்புச் செயலித் தொழில்நுட்பம், பாடப்பொருளைக் கணினி மயமாக்கல், பாடங்களை இருபரிமாண மற்றும் முப்பரிமாண உருவங்களாகவும் காணொலிக் காட்சிகளாகவும் மாற்றுதல் வாயிலாக சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கும் கற்பிக்க ஆசிரியர்களுக்கு உதவுகிறது. மேலும், இந்நிறுவனம் கற்றலில் ஏற்படும் இடைவெளிகளை நீக்கவும் மாணவர்களுக்குப் பல்வேறு கற்றல் வளங்களை அளிக்கவும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணைபுரிந்தும் வருகிறது.

ஆதாரம் : பள்ளிக்கல்வி துறை

2.95
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top