பள்ளிக் கல்வித்துறை நலத்திட்டங்கள் - 2018 - 2019
பள்ளிக் கல்வித்துறையின் (2018 -2019) கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
- Contents
முன்னுரை
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களை ஊக்குவிக்கவும் மற்றும் பள்ளிகளில் தக்க வைத்துக் கொள்ளவும் அரசு பின்வரும் விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது.
பாடப்புத்தகங்கள்
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணாக்கர்களது புத்தக சுமையினை குறைக்கும் நோக்கத்தோடு 2012-13 ஆம் கல்வியாண்டில் முப்பருவமுறை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாடப்புத்தகங்கள் பருவத்தின் தொடக்க நாள் அன்றே மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகிறது. முதல் பருவம் ஜூன் மாதத்திலும், இரண்டாம் பருவம் அக்டோபர் மாதத்திலும் மற்றும் மூன்றாம் பருவம் ஜனவரி மாதத்திலும் துவங்குகிறது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 1முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 77.47 இலட்சம் மாணாக்கர்கள் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.
2018-19 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடர ரூ.195.25கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நோட்டுப்புத்தகங்கள்
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் திட்டம் 2012-13 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 61.60 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு பருவத்தின் தொடக்க நாளன்று நோட்டு புத்தகங்கள் மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகின்றன.
2018-19 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடரரூ107.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மடிக்கணினி
201-12 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப் பட்டுவருகிறது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 5.30 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைய உள்ளனர்.
2018-19 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடரரூ.758.04கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு இணைச் சீருடைகள்
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பதிவு செய்யும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு நான்கு இணைச் சீருடைகள் வழங்கப் பட்டுவருகிறது. 2011-12 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஒரு இணைச் சீருடை இரண்டு இணைச் சீருடைகளாகவும், 2012-13 ஆம் ஆண்டில் நான்கு இணைச் சீருடைகளாகவும் உயர்த்தப்பட்டது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 41.19 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
2018-19 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடரரூ.414.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலணிகள்
2012-13 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்1 முதல்10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 56.95இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
2018-19 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடரரூ.81.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புத்தகப்பை
2012-13 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு புத்தகப் பை வழங்கப்பட்டு வருகிறது. 2012-13 முதல் ஒவ்வோர் ஆண்டும் இத்திட்டம் செயல்பட அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 68.89 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
கிரயான்ஸ்
ஒவ்வோர் ஆண்டும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு கிரையான்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. கிரையான்ஸ் வழங்கும் திட்டம் 2012-13 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 9.26 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
வண்ணப் பென்சில்கள்
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு வண்ணப் பென்சில்கள் வழங்கும் திட்டம் 2012-13 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 15.48 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
கணித உபகரணப்பெட்டி
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கணித உபகரணப் பெட்டி வழங்கும் திட்டம் 2012-13 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும், 7 மற்றும் 8 ஆம் வகுப்பில் புதிதாக சேரும் மாணாக்கர்களுக்கும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 7.12 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
2018-19 ஆம் கல்வியாண்டில் புத்தகப் பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள் மற்றும் கணினி உபகரணப் பெட்டி வழங்கும் திட்டங்களை தொடர்ந்திட ரூ.88.58கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கம்பளிச் சட்டை
மலைப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கம்பளிச் சட்டை வழங்கும் திட்டம் 2013-14 ஆம் ஆண்டில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 1.16 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
2018-19 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடரரூ.3கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மழைக்கால ஆடை உறைக் காலணி மற்றும் காலுறை
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பதிவு செய்யும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணாக்கர்களுக்கு மழைக் கால ஆடை, உறைக் காலணி மற்றும் காலுறை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2016-17 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 116 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
புவியியல் வரைபடம்
ஒவ்வோர் ஆண்டும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு புவியியல் வரைபடம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் 2012-13 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017-18 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினால் 7.11 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
2018-19 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடரரூ.3.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து பயண அட்டை
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணாக்கர்களுக்கும் அவர்களது பள்ளிக்கு எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக ஒவ்வோர் ஆண்டும் பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் போக்குவரத்து துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
2017-18 ஆம் ஆண்டில் பள்ளிகளில் பயிலும் 17.61 இலட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டம் 2018-19 ஆம் கல்வியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சத்துணவுதி திட்டம்
புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2017-18 ஆம் கல்வியாண்டில் 40.53 இலட்சம் மாணாக்கர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டம் 2018-19 ஆம் கல்வியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணாக்கர்களுக்கான நிதி உதவி
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்களின் வருவாய் ஈட்டும் பெற்றோர் (தாய்/தந்தை) மரணமடைந்தாலோ, விபத்து காரணமாக நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, நிதி உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறான எதிர்பாராத சூழ்நிலையினால் இப்பெற்றோர்களின் குழந்தைகள் பாதிக்கப்படாமல்
இருக்க வேண்டும் என்பதில் இவ்வரசு உறுதியாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணாக்கரின் பெயரில் ரூ 75,000/- பொதுத் துறை நிறுவனத்தில் செலுத்தப்படுகிறது. இந்நிதி உதவித் தொகை 2014-15 ஆம் கல்வியாண்டில் ரூ 50,000/- லிருந்து ரூ 75,000/-ஆக உயர்த்த ப்பட்டது. 2017-18 ஆம் ஆண்டில் 1487 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.
2018-19 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடர ரூ.4.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணாக்கர் விபத்து நிவாரண நிதியுதவி
மாணாக்கர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட இந்த அரசு, மாணாக்கர்களுக்கான விபத்து நிவாரண நிதி உதவித் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. பள்ளி மற்றும் பள்ளிசார் செயல்பாடுகளின்போது எதிர்பாராது நிகழும் விபத்திற்கு உள்ளாகும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இத்திட்டத்தின்மூலம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இறப்பு நேரிடின், மாணாக்கரின் குடும்பத்திற்கு ரூ. 1 இலட்சமும் பெரிய காயங்களுக்கு ரூ.50,000/-மும் மற்றும் சிறிய காயங்களுக்கு ரூ.25,000/-மும் என்ற அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும். வழக்கமான பிற காப்பீட்டுத் திட்டங்களைப் போலன்றி, விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள்ளாகப்மாணாக்கருக்கு நிவாரண நிதியானது இதன்மூலம் விரைந்து வழங்கப்படும். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 81 இலட்சத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் - தமிழ்நாடு அரசு - பள்ளிக் கல்வித்துறை