முன்னுரை
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விலிருந்து ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதுகாக்கும் பொருட்டு, அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையே உள்ள இடைவெளி, பருவமாற்றங்கள், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவு ஆகிய காரணங்களால் விலையேற்றம் ஏற்படுகிறது. இத்தகைய நிலைமைகளை சாமாளிக்க கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு தீவிரமாக கண்காணித்து தேவைப்படும் நேரங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காணப்படும்போது, இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில், ஒதுக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டு நிதி ரூ.50 கோடியிலிருந்து விலை உயர்ந்துள்ள பொருட்களை உற்பத்தி மையங்களிலிருந்து கொள்முதல் செய்து இவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அமுதம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மானிய விலையில் அரசு விற்பனை செய்து வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் விலை கண்காணிப்பு குழு (Price Monitoring Committee) அமைக்கப்பட்டு அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வகைகளின் விலைகளை கண்காணித்து, அதன் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தீவிரமாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உயர்ந்து வரும் காய்கறிகளின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தி மையங்களிலிருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து, நுகர்வோரின் தேவைக்கேற்ப விற்பனை செய்து வருகின்றன. தற்போது 70 பண்ணை பசுமை காய்கறி கடைகள் மற்றும் 2 நடமாடும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
வெளிச்சந்தையில் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் அதிக விலையில் விற்கப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவினர் பயன்பெறும் வகையில் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு மானிய விலையில் ரூ. 30க்கும், 1 லிட்டர் பாமாயில் ரூ.25/-க்கும் வழங்கப்படுகின்றன.
ஆதாரம் - கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை