பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண் கல்வி, ஆராய்ச்சி 2018 – 2019

வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையின் 2018 – 2019ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பிரதான நோக்கம் வேளாண்மையை மேம்பபடுத்துவதற்கு தரமான வேளாண்மைக் கல்வி வழங்குவதன் மூலமாக தேவையான மனித வளத்தினை உருவாக்குதல், வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் வேளாண்மை விரிவாக்கக் கல்வியினை வலுப்படுத்தி உழவர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் மூலமாக வேளாண்மை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதாகும். மேலும், உழவர்கள் மற்றும் இதர பயனாளிகளுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்த வேளாண் வணிக மேம்பாட்டினை மாநிலம் மற்றும் தேசிய வேளாண்மை கொள்கை சார்ந்து செயல்பட்டு வருகின்றது. திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி வாயிலாக உழவர்கள் மற்றும் ஊரக இளைஞர்கள் புதிய தொழில் நுட்பங்களை கடைப்பிடிக்கவும், பண்ணையம் சார்ந்த திறனை மேம்படுத்திக் கொள்ளவும், பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேளாண் உற்பத்தியை சந்தைப் படுத்தும் நோக்கத்துடன் செயல் படவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் அழைப்பு மையம் (கிஸான் கால் சென்டர்)

இம்மையத்தின் மூலம் விவசாயிகள் 1551 அல்லது 1800-180-1551 என்ற எண்ணில் வட்டார மொழியில் வல்லுநர்களுடன் தொலை பேசியில் கலந்துரையாடலாம். இம்மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்படுகின்றது. 2017-18ஆம் ஆண்டில் மொத்தம் 2,51,015 தொலைபேசி அழைப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், சென்னை

சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் உழவர்கள், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற ஆண், பெண் இருபாலாரும் பயன்பெறும் வண்ணம், பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 2017 - 18ஆம் ஆண்டு 75 பயிற்சிகள் 31 பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு 2,177 நபர்கள் பயனடைந்துள்ளனர். இப்பயிற்சிகள் மாடித் தோட்டம், வீட்டு காற்கறி தோட்டம் அமைத்தல், நீர் பண்புகள் தரப்படுத்துதல், பால் மற்றும் பால் வகைப் பொருட்கள் மதிப்புக்கூட்டுதல், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல், உள்ளரங்க தாவரங்களைப் பராமரித்தல், காளான் உற்பத்தி, மண்புழு உரம் தயாரித்தல், அங்கக பண்ணையம், நில எழிலூட்டுதல், போன்சாய் தயாரித்தல், நாற்றங்கால் தொழில்நுட்பம், பூங்கொத்து அலங்கரித்தல் மற்றும் பூச்செண்டு தயாரித்தல், மசாலா பொருட்கள் தயாரித்தல், அடுமனைப் பொருட்கள் போன்ற தலைப்புகளில் நடத்தப்பட்டுள்ளன.

தரமான விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், 2017-18ஆம் ஆண்டு, 175 முக்கியமான பயிர் இரகங்களில், 1,749 குவிண்டால் வல்லுநர் விதைகள், 1440 குவிண்டால் ஆதார விதைகள், 206 குவிண்டால் சான்றிதழ் விதைகள் மற்றும் 669 குவிண்டால் உண்மை நிலை விதைகள் உற்பத்தி செய்து விநியோகித்துள்ளது. மேலும், 29.23 இலட்சம் நாற்றுக்கள் உற்பத்தி செய்து விநியோகித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 11 இடங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி விதை விற்பனை இயந்திரங்கள் மூலம், காய்கறி மற்றும் மலர் பயிர் விதைகள் 2.5 இலட்சம் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2018 - 2019 ஆம் ஆண்டு, 1600 குவிண்டால் வல்லுநர் விதைகள், 7,113 குவிண்டால் ஆதார விதைகள், 26,225 குவிண்டால் சான்றிதழ் விதைகள், 1894 குவிண்டால் உண்மை நிலை விதைகளும், தோட்டக்கலைப் பயிர்களில் 105 குவிண்டால் சான்றிதழ் விதைகளும், 100 குவிண்டால் உண்மை நிலை விதைகளும், 32.56 இலட்சம் நாற்றுக்கள் உற்பத்தி செய்து விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்

வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம், தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து பெறப்படும் புள்ளி விபரங்களை தொகுத்து ஆய்வு செய்து வட்டார அளவில் மத்திய கால வானிலை முன்னறிவிப்புகள் வானிலை சார்ந்த பண்ணையம் செய்வதற்காக வெளியிடுகின்றது. வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு வாரம் இருமுறை அறிவிப்புகளாக வெளியிடப்படுகின்றன.

2017-18ஆம் ஆண்டில் மொத்தம், 96 தகவல் குறிப்புகள் ஒவ்வொன்றும் நான்கு பரிந்துரைகளுடன் ஆறு தலைப்புகளான வேளாண்மைப் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள், மலைத்தோட்டப்பயிர்கள், கால்நடைகள், கோழி மற்றும் இதர பறவைகள் மற்றும் காலநிலை குறித்த தகவல்கள் தயாரிக்கப்பட்டு 96 குறுந்தகவல்களாக ஒரு முறைக்கு 8.89 இலட்சம் உழவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தெற்கு மாவட்டங்களுக்கு சிறப்புச் செய்திகள் வெளியிடப்பட்டன.

விலை முன்னறிவிப்பு மற்றும் சந்தை நுண்தகவல்

உலக வங்கியின் நிதி உதவியுடன் 2017-18ஆம் ஆண்டு தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் (TNIAMP) திட்டத்தில் மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, தேங்காய், கொப்பரைத் தேங்காய், பருத்தி, தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், வெங்காயம், மஞ்சள், கொத்தமல்லி, மிளகாய் மற்றும் வாழைப்பழம் (நேந்திரன், பூவன் மற்றும் கற்பூர வள்ளி) ஆகிய 16 வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு விலை முன்னறிவிப்பு பயிர் விதைப்பதற்கு முன்பும், அறுவடைக்கு முன்பும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் சென்றடைய செய்து தக்க முடிவுகளை எடுக்க இத்திட்டம் உதவுகிறது,

வேளாண் வணிக மேம்பாடு

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம், பல்கலைக் கழகம் உருவாக்கிய தொழில் நுட்பங்களை வணிகப்படுத்தி வேளாண்மை சார்ந்த பதிய நிறுவனங்களைப் பேணிக்காத்து வருகிறது. நூறு நிறுவனங்களுக்கும் மேலாக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் பதிவு செய்துள்ளன. மேலும், 45 தொழில்நுட்பங்கள் வணிகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை, தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம், பின்வரும் தொழில் நுட்பங்கள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தென்னை டானிக், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் பஞ்சகாவ்யா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் சூடோமோனாஸ் மற்றும் ட்ரைகோடெர்மா நுண்ணுயிரிகள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் பூச்சி விரட்டி மற்றும் கம்பு மாவில் உடனடியாக உணவு தயாரிக்கும் கலவை ஆகியன வணிகப்படுத்தப்பட்டன. 2017-18ஆம் ஆண்டு மக்காச்சோள வீரியஒட்டு கோ எச்(ம) 8 விதை உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் கரும்புச் சாற்றினை பாட்டிலில் அடைக்கும் பனைமர பொருட்கள் ல மதிப்புக் கூட்டுதல், சிறுதானியத்தில் உமி நீக்குதல் ஆகிய தொழில்நுட்பம் வணிகப்படுத்தப்பட்டன.

அறிவுசார் சொத்துரிமைக் காப்புரிமை (Intellectual Property Rights)

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் இதுவரை ஒன்பது காப்புரிமைகளைப் (Patent) பெறவும், மேலும், 59 கண்டுபிடிப்புகளை பதிவு செய்யவும் உதவியுள்ளது. பயிர் இரகங்கள் பாதுகாப்பு மற்றும் உழவர்கள் உரிமை பாதுகாப்பு சட்டத்தில் நடைமுறையில் உள்ள 64 இரகங்களுக்கு காப்புரிமை பெற பதிவு செய்துள்ளது.

சர்க்கரைத்துறை

கரும்பு சாகுபடியில் பாசன நீர் மற்றும் உரங்களின் பயன்பாட்டு திறனை மேம்படுத்தி சாகுபடி செலவினை குறைக்கும் நோக்குடன் கரும்பு சாகுபடியில் நுண்ணீர் பாசனத்தினை பின்பற்ற கரும்பு விவசாயிகள் பல்வேறு திட்டங்களின் மூலம் ஊக்குவிக்கப்படுகின்றனர். மாநில அரசு நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கி வருகிறது.

சர்க்கரை ஆலைகளால் பெறப்படும் கரும்பின் அளவில் ஏற்படும் குறைவிற்கு பருவமழை பொய்த்தல், கரும்பின் உற்பத்திச் செலவில் உயர்வு, கரும்பு அறுவடை ஆட்கள் பற்றாக்குறை மற்றும் கரும்பு விலை நிலுவை ஆகியன முக்கிய காரணங்களாகும். எனவே கரும்பு உற்பத்தி திறனை உயர்த்தும் நோக்குடன், 50% கரும்பு சாகுபடி பரப்பில் கோ-86032 இரகத்தின் வீரியத்தன்மையை மேம்படுத்துதல், உயர் சர்க்கரை கட்டுமானம் தரக்கூடிய கரும்பு இரகங்களை இரக பரிசோதனை மூலம் கண்டுணர்தல், 20% கரும்பு சாகுபடி பரப்பில் அகலப்பார் நடவு முறையினை பின்பற்றி இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல், உயிர் இடுபொருட்களை பயன்படுத்துதல் மற்றும் இதர கரும்பு பெருக்க திட்டங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும் சர்க்கரைத்துறை திட்டமிட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் ரூ.15 கோடி மானிய உதவியுடன் கோ-86032 கரும்பு இரகத்தினை தூய்மைப்படுத்துதல், புதிய கரும்பு இரகங்களை பயிரிடுதல், பருசீவல் மற்றும் திசு வளர்ப்பு நாற்றுகள் பயன்படுத்துதல், கரும்பு சாகுபடியில் ஊடுபயிரினை ஊக்குவித்தல் மற்றும் சோகை மடக்கு மூலம் மண்ணின் வளத்தை பெருக்குதல் ஆகிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

விவசாயிகள் பயிரிடும் கரும்புக்கு நியாயமான விலை கிடைத்திடவும் மற்றும் விலையினை காலத்தே வழங்குவதை உறுதி செய்யும் நோக்குடனும் நடப்பு 2017-18 அரவைப் பருவம் முதல் வருவாய் பகிர்மான அடிப்படையிலான கரும்பு விலை நிர்ணய முறையினை நடைமுறைப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இவ்விலைக் கொள்கையின் கீழ் விவசாயிகள் மத்திய அரசு அறிவிக்கும் நியாயமான மற்றும் ஆதாய விலையினை பெறுவதை உறுதி செய்வதுடன், மத்திய அரசு விலைக்கு மேல் கூடுதலாக சர்க்கரை ஆலைகளின் இலாபத்தில் ஒரு பகிர்வும் விவசாயிகளுக்கு கிடைக்கும். மேலும் இவ்விலைக் கொள்கை மாற்றத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாகவும் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் பொருட்டும், கரும்புக்கான வாகன வாடகையை சர்க்கரை ஆலைகளே தொடர்ந்து ஏற்பதுடன் மாநில அரசு பரிந்துரை விலையான ரூ.2750/- மெட்ரிக் டன் நடப்பு பருவத்திலும் பெறும் வகையில் புதிய வருவாய் பகிர்மான அடிப்படையில் பெறப்படும் விலைக்கும், தற்போது பெற்று வரும் மாநில அரசு பரிந்துரை விலைக்கும் இடையேயான வித்தியாசத்தினை கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக கரும்பு விவசாயிகளுக்கு நேரிடையாக வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை

2.97222222222
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top