பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண்மைப் பொறியியல் 2018 - 19

வேளாண்மைப் பொறியியல் 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

வேளாண்மைப் பொறியியல் துறை 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தொடர்ந்து தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு, பாசன நீர்மேலாண்மை, பண்ணை இயந்திரமயமாக்குதல், அறுவடைக்குப் பின் செய்நேர்த்தி தொழில் நுட்பம் மற்றும் வேளாண் விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல், வேளாண் பணிகளில் பசுமை ஆற்றலை பயன்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பண்ணை உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் பொருட்டு வேளாண்மைப் பொறியியல் துறை உருவாக்கப்பட்டது.

வேளாண்மைப் பொறியியல் துறையின் செயல்பாடுகள்

அ) வேளாண்மை இயந்திரமயமாக்குதல்

ஆ) மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு

இ) நீர் மேலாண்மை

ஈ) வேளாண்மையில் பசுமை ஆற்றல் பயன்பாடு

உ) அரசு பண்ணை மற்றும் பூங்காக்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு

வேளாண்மை இயந்திரமயமாக்குதல்

தற்போதைய சூழலில் விவசாயத்தில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்றாகும். வேளாண்மை இயந்திரமயமாக்குதல் மூலம் விதைகள், இயற்கை உரங்கள், இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றினை துல்லியமாக பயன்படுத்தி கடுமையான வேளாண் பணிகளை தவிர்த்து விவசாயிகளின் நிகர வருமானத்தை அதிகரிக்க இயலும். மேலும் குறித்த காலத்தே பண்ணைப்பணிகள் மேற்கொள்ளவும், ஒரு அலகு பரப்பளவில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் இயந்திரமயமாக்கல் உதவுகிறது.

வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல்

வேளாண்மைப் பொறியியல் துறையில், நிலமேம்பாட்டிற்கும், சிறுபாசன வசதிக்கும் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளின் பயன்பாட்டிற்கென உள்ளது. இவற்றை தேவைப்படும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வாடகைக்கு வழங்கப்படுகிறது.

நிலமேம்பாட்டு இயந்திரங்கள்

வேளாண்மைப் பொறியியல் துறையில் நிலம் சமன்படுத்துதல் மற்றும் நிலம் சீரமைத்தலுக்காக 78 புல்டோசர்கள், உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள 168 டிராக்டர்கள், துல்லியமாக நிலத்தை சமன் செய்வதற்காக 63 லேசர் நிலம் சமன் படுத்தும் கருவிகள், 48 நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக 16 நீர் இறைக்கும் பம்புகள் உள்ளன. இவ்வியந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த வாடகை கட்டணங்களை செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகிறது. மேலும், வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்காகவும் புல்டோசர்கள், டிராக்டர்கள் மற்றும் நீர் இறைக்கும் பம்புகள் பயன்படுத்தப்படுகின்றது.

சிறுபாசன இயந்திரங்கள்

வண்டல் மண் பகுதிகளில் ஆழ்துளை குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கு 30 சுழல் விசைத் துளைக்கருவிகள், கடின பாறைப் பகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்டல் மண் பகுதிகளுக்கு 6 பெர்குலேஷன் துளைக்கருவிகள், 33 கைத்துளைக் கருவிகள், குறைந்த ஆழமுள்ள பகுதிகளில் குழாய் கிணறுகள் அமைப்பதற்கு 25 சிறுவிசைத் துளை கருவிகள், திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்தவும், விவசாய நிலங்களில் உள்ள பாறைகளை தகர்த்தி அப்புறப்படுத்துவதற்கும் 18 பாறை வெடிக்கருவிகள், குழாய் கிணறு மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைப்பதற்கு ஏற்ற நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்திடும் பொருட்டு 21 நிலத்தடி நீர் ஆய்வுக் கருவிகள் என பல்வேறு சிறுபாசனத்திட்டக்கருவிகள் வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ளது.

வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல் (Promotion of Agricultural Mechanization)

தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் மற்றும் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத்திட்டங்களின் கீழ் தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு மானிய உதவி வழங்குதல் மற்றும் வட்டாரம், கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைத்தல் போன்றவற்றின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் பிரபலப்படுத்தப்படுகிறது.

வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம் (Sub Mission on Agricultural MechanizationSMAM)

வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத்திட்டன்கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண்

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

அறுவடைக்குப்பின் செய்நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இயந்திரங்கள் வழங்குதல் (Distribution of Post Harvest Technology and Management Machinery)

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பண்ணை அளவிலேயே விஞ்ஞான முறையில் சேமித்து அவற்றின் மதிப்பு கூட்டி தங்களின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த அறுவடைக்குப் பின் செய்நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், தனிப்பட்ட விவசாயிகள், விவசாய குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

வேளாண்மை இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைத்தலில் தனியாரை ஊக்குவித்தல் (Private initiatives in establishing agricultural machinery Custom Hiring Centres)

உயர் தொழில் நுட்பம் மற்றும் அதிக விலையுள்ள பண்ணை இயந்திரங்களை வாங்கி பராமரிக்க இயலாத நிலையில் சிறு மற்றும் குறு விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு முற்போக்கு விவசாயிகள், விவசாயிகள் குழுக்கள், தொழில் முனைவோர் மற்றும் விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் வட்டாரம் மற்றும் கிராம் அளவில் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு குறைந்த வாடகை கட்டணத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கப்படுகிறது.

வாடகைக்கு வழங்கும் மைய உரிமையாளரை விவசாயிகள் கைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான இயந்திரங்களை தேர்வு செய்து, முன்பதிவு செய்திட "உழவன் செயலி" என்ற கைபேசி செயலி ஒன்று விவசாய சமுதாய நலனிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் (Block based Custom Hiring Centre)

வட்டார அளவில் மேற்கொள்ளப்படும் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்கிட உள்ள நிறுவனங்களே வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் ஆகும். பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் வாடகை மையத்திற்கு அதிகபட்சமாக 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

வாடகைக்கு வழங்குவதற்கான உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிக உற்பத்தித் திறனுடைய உபகரணங்கள் (Hi- Tech, High Productive Equipment for Custom Hiring)

கரும்பு சாகுபடியில் வேலையாட்கள் பற்றாக்குறையினை களைந்து, சாகுபடி செலவினையும் குறைத்து, விவசாயிகளின் நிகர வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, நிலம் தயார் செய்தல் முதல் அறுவடை வரையிலான அனைத்து பணிகள் மற்றும் சோகை மேலாண்மையை மேற்கொண்டிட தேவையான அதிக திறனுடைய உயர் தொழில்நுட்ப இயந்திரங்களைக் கொண்ட வாடகை மையங்கள் சர்க்கரை ஆலைகளுடன் ஒருங்கிணைந்து நிறுவப்படுகின்றது.

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்கள் மூலம் ரூ.1.50 கோடி செலவில், கரும்பு சாகுபடிக்கேற்ற ஒரு உயர்தொழில்நுட்ப இயந்திரங்களைக் கொண்ட வாடகை மையமானது 40 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சம் ரூ.60 இலட்சம் வரை மானிய உதவியுடன் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நிறுவப்படுகிறது.

பண்ணை சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் கிராம அளவிலான வாடகை மையங்கள் (Village based Custom Hiring Centre in low farm power availability Districts)

பண்ணை சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் குறித்த நேரத்தில் பண்ணைப் பணிகளை மேற்கொண்டு தங்கள் நிகர வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, குறைந்தபட்சம் எட்டு விவசாயிகளை கொண்ட குழு ஒன்று கிராம அளவிலான வாடகை மையங்களை அமைக்க ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

கிராம அளவிலான பண்ணை இயந்திரங்கள் வாடகை மையங்கள், ரூ.10 இலட்சம் திட்ட மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்டு அமைக்கப்படும் வாடகை மையத்திற்கு, திட்ட மதிப்பில் 80 சதவீதம் மானியத்தின்படி அதிகபட்சம் ரூ.8 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு

வேளாண்மையில் நிலையான உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் இரு முக்கிய இயற்கை வளங்களான மண் மற்றும் நீர் வளத்தை திறன்பட பாதுகாப்பது இன்றியமையாதது ஆகும்.

நதிப்பள்ளத்தாக்குத் திட்டம் (River Valley Project- RVP)

தமிழகத்தில் நதிப்பள்ளத்தாக்குத் திட்டமானது தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்பெண்ணையாறு மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மேட்டூர் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 2013-14ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு பணிகளான நிலத்தினை மேம்படுத்துதல், ஓடை பராமரிப்பு பணிகள், வண்டல் மண் சேகரிப்பு கட்டுமானங்கள் மற்றும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (Dam Rehabilitation and Improvement Project-DRIP)

நீர்வள ஆதாரத்துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட அணைகளில் உலக வங்கி நிதி உதவியுடன் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், பன்னோக்கு நீர்த்தேக்கங்களில் வண்டல்மண் படிவதை தடுக்கும் நோக்கில், கிருஷ்ணகிரி மற்றும் குந்தா அணைகளின் நீர்பிடிப்புப்பகுதிகளில் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறையில் மண்வளப் பாதுகாப்பு மற்றும் நீர்வடிப்பகுதி மேலாண்மை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், வைகை, பரப்பலாறு, குடகனாறு, நங்காஞ்சியாறு அணைகளின் நீர்பிடிப்புப்பகுதிகளில் இத்திட்டமானது ரூ.23.47 கோடி செலவில் 2018-19ஆம் ஆண்டு முதல் 2020-21ஆம் ஆண்டு வரை மூன்றாண்டுகளில் செயல்படுத்திட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

சிறப்புப் பகுதி மேம்பாட்டுத்திட்டம் (Special Area Development Programme -SADP)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதன் வனப்பகுதிகளின் அருகே உள்ள கிராமங்களின் தேவைகளின் அடிப்படையில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்" என்ற திட்டமானது தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையான அணுகு முறையில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மையின் மூலம் சுற்றுச் சூழலை பாதுகாத்தல், புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் நீடித்த நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனிப்பட்ட விவசாயிகளின் நிலங்களில், மண் மற்றும் நீர்வள பாதுகாப்புப் பணிகள் பழங்குடியின் விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியத்துடனும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 80 சதவீதம் மானியத்துடனும், இதர விவசாயிகளின் நிலங்களில் 50 சதவீதம் மானியத்துடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 100 சதவீத அரசு செலவில் சமுதாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம் - மானாவாரி நில மேம்பாடு மூலம் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் (Water Harvesting Structures through Rainfed Area Development)

வேளாண் வளர்ச்சிக்கு பொருத்தமான முறைகளை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும். நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ், மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில், மானாவாரி நிலங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப் படுகின்றன. முதற்கட்டமாக 2017-18ஆம் ஆண்டில், ரூ.4.64 கோடி செலவில், அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள், சமுதாய மற்றும் கிராம குளங்கள் போன்ற 95 நீர் சேகரிப்புக் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக, 23 மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ரூ.99.00 இலட்சம் செலவில் 15 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 2018-19ஆம் ஆண்டில் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் ரூ.33.19 கோடி செலவில் 561 மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மை

தமிழ்நாட்டில் 95 சதவீதம் மேற்பரப்பு நீர் மற்றும் 80 சதவீதம் நிலத்தடி நீர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நீர் ஆதாரங்களை மேலும் பயன்படுத்திட எந்தவித வாய்ப்பும் இல்லாததால், நீர் பயன்பாட்டு திறனை அதிகரிக்க வேண்டும். கால்வாய், ஏரி மற்றும் கிணற்றுப் பாசனப்பகுதிகளில், ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் பாசனப் பகுதிகளில் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க, வேளாண்மைப் பொறியியல் துறை பண்ணை மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்தி வருகிறது.

பிரதம மந்திரியின் வேளாண்மை பாசனத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர் என்ற உப திட்டம் - பாசனப்பகுதிகளில் உள்ள நீர்ப்பாசன இடைவெளியினை இணைப்பதற்குரிய ஊக்குவிக்கும் திட்டம் (ISBIG)

கால்வாய் மற்றும் கண்மாய் பாசனப்பகுதி வாய்க்கால்களில் நீர் வீணாவதைக் குறைக்கவும், தலைமடை, கடைமடை விவசாயிகளிடையே நியாயமான முறையில் நீரை பங்கிட்டுக் கொள்ள, முறை பாசனத்தை நடைமுறைப்படுத்தவும், பாசனப்பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டம் தமிழ்நாட்டில் 1980-81ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2015-16ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் பிரதம மந்திரியின் வேளாண்மைப் பாசனத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர் என்ற உபதிட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 36 பாசனப் பகுதிகளில் 9,41,004 எக்டர் பரப்பிற்கு 2,014 எண்கள் பாசன நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள் அமைக்கப்பட்டு, செயல்பாட்டு மானியமாக ரூ.44.38 கோடி வழங்கப்பட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக உள்ளது. இந்த வைப்புத் தொகையிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையினை கொண்டு, பாசன நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள் மூலம் வாய்க்கால்கள் மற்றும் கட்டமைப்புகளின் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'பாசனப்பகுதிகளில் உள்ள நீர்ப்பாசன இடைவெளியினை இணைப்பதற்குரிய ஊக்குவிக்கும் திட்டம்" என்ற புதிய திட்டத்தினை தற்பொழுது மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பாசனப்பகுதிகளில் சூரிய சக்தியின் மூலம் நீர் இறைத்து 30 சதவீதம் பரப்பில் நுண்ணீ ர் பாசனம் மூலம் பாசனம் செய்தல் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். ஒருங்கிணைந்த நிலத்தடி நீரின் பயன்பாட்டினை 30 சதவீதம் செயல்திட்ட பரப்பில் மேம்படுத்துதல், பங்கேற்பு பாசன மேலாண்மை மூலம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினை வலுப்படுத்துதல் மற்றும் தமிழ் நாட்டில் பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தினை நவீனப்படுத்தி வலுப்படுத்துதல் மூலம் நீர் மேலாண்மைக் கல்வியினை பிரபலப்படுத்துதல்.

ஈரோடு மாவட்டத்தில் காளிங்கராயன் அணைக்கட்டு திட்டம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மணிமுக்தா நதி திட்டம், கடலூர் மாவட்டத்தில் பிலான்துறை அணைக்கட்டு திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் எல்லீஸ் அணைக்கட்டுத் திட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு அணைக்கட்டு திட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் களிங்கலார் நிசாபா நதி திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் குதிரையார் நீர்த்தேக்கத்திட்டம் ஆகிய 8 பாசனப்பகுதிகளில் 2018-19ஆம் ஆண்டில், ரூ.171.90 கோடியில் 18,193 எக்டர் பரப்பில் பண்ணை மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து செயல்படுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 19 புதிய பாசனத் திட்டப்பகுதிகளில், நான்கு ஆண்டுகளில் ரூ.418.64 கோடி செலவில், 65,334 எக்டர் பாசனப்பரப்பில் பாசன பகுதி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள மத்திய அரசுக்கு பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசன திட்டம் – ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் (Pradhan Mantri Krishi Sinchayee Yojana : Per Drop More Crop)

மானாவாரி நிலங்கள் பருவ மழை மாறுதலுக்கு உட்பட்ட நிலங்களாகும். வறட்சியினை தடுக்கும் விதமாக, பாதுகாப்பான முறையில் அதிக எண்ணிக்கையில் மழை நீர் சேகரிப்பு கட்டுமானங்களை அமைப்பது மிகவும் இன்றியமையாதது. மாநில அளவிலான பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசன திட்ட ஒப்புதல் குழு, ரூ.25 கோடி செலவில், 840 நீர் சேகரிப்புக் கட்டுமானங்கள் அமைப்பதற்கான ஆண்டு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2016-17ஆம் ஆண்டில், முதல் தவணையாக ரூ.11.25 கோடி செலவில் 377 நீர் சேகரிப்பு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2017-18ஆம் ஆண்டில் முடிவடைந்தது. மீதமுள்ள ரூ.15.60 கோடி செலவில் நீர் சேகரிப்பு கட்டுமானப்பணிகள் அமைத்திட தொடர்ந்து செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நுண்ணீர்ப் பாசன திட்டம்- பிரதம மந்திரி வேளாண் திட்டத்தில், "துளி நீரில் அதிக பயிர்" (Interventions in Micro Irrigation under PMKSY-Per Drop More Crop)

தமிழகத்தில் பண்ணையளவில் பாசனநீர் சேதாரத்தை குறைத்து, நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்திட நுண்ணீர்ப் பாசன திட்டமானது பிரதம மந்திரி வேளாண் திட்டத்தில், "துளி நீரில் அதிக மகசூல்", என்ற பிரிவின் கீழ் தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நுண்ணீர் பாசன அமைப்பின் அளவீடு எடுத்தல் பணி வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18ஆம் ஆண்டு முதல் 1,22,130 எக்டர் பரப்பில், மேற்கண்ட பணிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு நீர்வள நவீனமயமாக்குதல் திட்டம்(TNIAMP)

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாட்டில், தமிழ்நாடு நீர்வள நவீனமயமாக்குதல் திட்டம் 2017-18ஆம் ஆண்டு முதல் 2023-24ஆம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கு பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் விற்பனைத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது. வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 66 உபவடிநிலப் பகுதிகளில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீட்டில், 2,800 பண்ணைக் குட்டைகளை அமைத்து பயிர்களின் முக்கிய வளர்ச்சிப் பருவங்களில் விவசாயிகள் கூடுதல் பாசனம் வழங்கிட உத்தேசிக்கப்பட்டு, முதற்கட்டமாக 14 உப வடிநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நபார்டு நிதி உதவியுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் சித்தாறு உய வடிநில பகுதிகளில் நீர்ப்பாசன கட்டமைப்புகளை புனரமைத்தல் (Rehabilitation of Irrigation Network in Chittar Sub Basin in Tirunelveli District under NABARD Assistance)

சித்தாறு உபவடிநிலப்பகுதிகளில் 40 சதவீதத்திற்கும் மேலாக மழையை மட்டுமே சார்ந்திருக்கும் புன்செய் நிலங்கள் உள்ளன. இவ்வுபவடிநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் வறண்ட மற்றும் பின்தங்கிய வட்டாரங்கள் உள்ளன. எனவே, மழைநீர் சேகரித்தல், கிணற்றுப் பாசனத்திற்கு உதவ நிலத்தடிநீர் செறிவூட்டுதல் மற்றும் அனைத்து நீர்ப்பாசன ஆதாரங்களின் மேலாண்மைக்குத் தேவையான பாசன உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது ரூ.21.52 கோடி நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கடனுதவி மற்றும் மாநில அரசின் பங்காக ரூ.1.13 கோடி என மொத்த மதிப்பீடு ரூ.22.65 கோடிக்கு நபார்டு வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டம் 2017-18ஆம் ஆண்டு முதல் 2019-20 ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.

வளம் குன்றிய நிலங்களை சீர்திருத்துதல் (Reclamation of Problem soils)

மத்திய அரசின் பங்களிப்புடன் “வளம் குன்றிய நிலங்களை சீர்திருத்துதல்" என்ற திட்டத்தினை ஒரு முன்னோடி திட்டமாக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் துணைதிட்டமாக 2016-17ஆம் ஆண்டில் செயல்படுத்திட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில், ரூ.6.67 கோடி செலவில் 1,100 எக்டர் பரப்பில் மண்ணின் வளம் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்குடன் அந்தந்த பகுதிகளுக்கேற்ற பொருத்தமான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை, ரூ.5.09 கோடி செலவில் 892 எக்டர் பரப்பில் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன..

வேளாண்மையில் பசுமை ஆற்றல் மேம்பாடு

சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டம் (Green Energy Initiatives in Agriculture - Provision of Solar Powered Pumping Systems)

வேளாண்மையில் சூரிய சக்தியின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்கான தொழில்நுட்பத்தை பரவலாக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2013-14 மற்றும் 2016-17ஆம் நிதியாண்டுகளில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு 80 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அத்திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டங்களின் கீழ் இதுவரை ரூ.101.40 கோடி மானியத்தில், 2,826 சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாய நிலங்களில் நிறுவப்பட்டு, விவசாயிகள் அவற்றை சிறப்பான முறையில் பாசனத்திற்கு ஈடுபடுத்தி பயன்பெற்று வருகின்றனர். இதன் மூலம் சுமார் 7,065 எக்டர் பரப்பு பாசனம் அடைந்துள்ளது. மேற்கூறிய 2,826 சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கப்பட்டதால் 14 மெகாவாட் சக்திக்கு நிகரான மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு 1,77 கோடி மின்அலகுகள் ஆண்டொன்றுக்கு சேமிக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளுக்கு விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பும் தேவையும் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், 2017-18ஆம் நிதியாண்டில், ரூ.49.90 கோடி செலவில், பத்து குதிரை திறன் வரை சக்தி கொண்ட சூரிய சக்தியால் இயங்கும் 1000 பம்புசெட்டுகளை விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட 90 சதவீதம் மானியமானது, மாநில நிதியாக 40 சதவீதமும், மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் மானிய நிதி 20 சதவீதமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மானிய நிதி 30 சதவீதமுமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைக்கும் பட்சத்தில் இலவச மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் அதனை துறப்பதற்கும், இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் செய்துள்ள விவசாயிகள் அதனைத் திரும்ப பெற்றுக் கொள்ளவும் சம்மதம் தெரிவிப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஆவதற்கு தகுதி பெறுவார்கள். இத்திட்டமானது, தற்சமயம் நடைபெற்று வருகிறது.

உள் கட்டமைப்பு மேம்பாடு (Infrastructure Development)

வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைகளுக்கு கட்டுமானப்பணிகள், பண்ணைகள் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் அமைத்தல் போன்ற பணிகளை அமைத்து தருவதுடன், மேற்கண்ட துறைகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் வேளாண்மைப் பொறியியல் துறை வழங்கி வருகின்றது.

வேளாண்மை உள்கட்டமைப்பு மேம்பாடு (Agriculture Infrastructure Development)

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் (IAEC)

விவசாயிகளின் நலத்திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்திடவும், விவசாய சமுதாய நலனுக்காக தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கிடவும், வட்டார அளவில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு போன்ற துறைகளை ஒரு குடையின் கீழ் உள்ளடக்கிய அமைப்பே ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்.

நபார்டு நிதி உதவியுடன், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் இதுவரை 46 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும், 4 பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை 38 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் 8 கட்டுமானப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்(SAEC)

தரமான இடுபொருட்களை விநியோகிப்பதற்கும், கிராமப்புற பிரச்சாரங்கள் மற்றும் பயிற்சிகள் நடத்துவதற்கும், வயல்களில் செயல் விளக்கங்கள் நடத்துவதற்கும், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்ப தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள விவசாயம் தொடர்புடைய துறை அதிகாரிகள் சந்திப்பிற்கு ஏற்ற இடமாகவும் வருவாய் கிராம் அளவில் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படுகின்றது.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் நிதி உதவியுடன் துணை வேளாண்மை விரிவாக்க மையம் ஒன்றிற்கு ரூ.30 இலட்சம் வீதம் 9 மாவட்டங்களில் 17 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் 2017-18ஆம் ஆண்டு முதல் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.

தோட்டக்கலைத் துறை உட்கட்டமைப்பு மேம்பாடு (Horticulture Infrastructure Development)

மாவட்ட அளவில் விவசாயிகளின் திறன் வளர்த்தல் மற்றும் பயிற்சிகள் அளிப்பதற்காக 15 தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையங்கள் மற்றும் தோட்டக்கலை தொழில் நுட்ப ஆதார மையக் கட்டிடங்கள் 2014-15ஆம் ஆண்டு முதல் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர தேசிய ஊரக மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD), பண்ணை வரவு கணக்கு (FRA), தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM), தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP) மற்றும் வெளியுறவு நிதி உதவியுடன் மாநில தோட்டக்கலை பண்ணைகளை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பூங்காக்கள் மற்றும் தோட்டங்களின் கட்டுமானப் பணிகளை பராமரித்தல் போன்ற பணிகள் வேளாண்மைப் பொறியியல் துறையிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தாவரவியல் பூங்கா உருவாக்குதல், கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் கொய் மலர்களுக்கான மகத்துவ மையம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரத்தில் காய்கறிகளுக்கான மகத்துவ மையம், உதகமண்டலத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவினை செம்மைப்படுத்துதல், கொடைக்கானல் ரோஜா பூங்கா அமைத்தல், கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவினை நவீனமயமாக்கல் மற்றும் சென்னையில் செம்மொழி பூங்காவினை சீரமைத்தல் போன்ற பணிகளும் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்த ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சேமிப்பிற்கான உள்கட்டமைப்பு மேம்பாடு (Storage Infrastructure Development)

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்காக, 2015-16ஆம் ஆண்டு முதல் 41 எண்கள் திறந்த பரிவர்த்தனைக் கூடங்கள், சேமிப்புக் கிடங்குகள், குளிர் பதனக் கிடங்குகள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையங்கள்(AEEC)

வேளாண் இயந்திரமயமாக்குதல், நீர் அறுவடை மற்றும் நீர் மேலாண்மை, அறுவடைக்குப்பின் செய்நேர்த்தி தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை இயந்திரங்களின் பயன்பாட்டினால் வேளாண் விளைப் பொருள்களின் மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும் அதன் மூலம் விவசாயிகளின் நிகர வருமானத்தை அதிகரிக்கவும், தேவையான தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொள்ள விவசாயிகளுக்கு உதவிடும் இடமே வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையமாகும்.

நிர்வாக அமைப்பு (Establishment)

தலைமையிடத்தில் ஒரு தலைமைப் பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல்) -பொது, ஒரு தலைமைப் பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல்)நதிப்பள்ளத்தாக்கு திட்டம், மூன்று கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் இரண்டு செயற் பொறியாளர்கள் உள்ளனர்.

மண்டல அளவில் 11 கண்காணிப்புப் பொறியாளர்கள், மாவட்ட அளவில் 31 செயற் பொறியாளர்கள், சிறப்பு திட்டங்களுக்காக 5 செயற் பொறியாளர்கள், வருவாய் கோட்ட அளவிலும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் 125 உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் 3,836 இதர பணியாளர்களும் இத்துறையில் உள்ளனர்.

மண்டல அளவில் வேளாண்மைப் பொறியியல் துறையின் செயல்பாடுகளை தொழில் நுட்பத்துடன் நிர்வகிக்கும் பொறுப்பு கண்காணிப்புப் பொறியாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாவட்ட அளவில் வேளாண்மைப் பொறியியல் துறையின் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் அந்தந்த மாவட்ட செயற் பொறியாளர்களின் கட்டுப்பாட்டிலும், வருவாய் கோட்ட அளவில் வேளாண்மைப் பொறியியல் துறையின் செயல்பாடுகளை செயல்படுத்துவது உதவி செயற் பொறியளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை

2.8275862069
ஜான்சன். சே Aug 11, 2019 09:57 AM

செயற்கை கோள் மூலம் எங்கள் நிலத்தில் நிலத்தடிநீர் ஆய்வுசெய்து பார்க்க யாரை எங்கு அணுக வேண்டும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top