பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊராட்சி துவக்க நிலை செயல்பாடுகள்

புதுவாழ்வு திட்டத்தின் ஊராட்சி துவக்க நிலை செயல்பாடுகள் பற்றிய தகவல்.

தகவல் பலகை நிறுவுதல்

அனைத்து திட்ட செயல்பாடுகளையும் மக்களுக்கு தெரியப்படுத்த, ஊராட்சி அலுவலகம் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் தகவல் பலகையினை ஒவ்வொரு குடியிருப்பிலும் அமைக்க வேண்டும் .

செய்தித்தொடர்பு முகாம்களை நடத்துவது

நம் ஊராட்சியில் உள்ள அனைத்து ஏழை எளியோரும் திட்டத்தினைப்பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், கீழ்கண்ட விவரங்களை அனைத்துக் குடியிருப்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.

இதில், திட்டத்தின் நோக்கம், உயிர் மூச்சு, திட்டத்தின் சிறப்பு அம்சங்கள், மக்கள் பங்கேற்பு மற்றும் கிராமசபையில் பங்கேற்க வேண்டியதன் அவசியம், மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து விளக்க வேண்டும்.

இளைஞர்களின் மேம்பாடு மற்றும் அவர்களின் பங்கேற்பு குறித்த முக்கியத்துவத்தையும் குடியிருப்பு வாரியாக எடுத்துரைக்க வேண்டும்.

ஏழை எளியோர் அதிகம் வாழும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி செய்தித்தொடர்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

செய்தித் தொடர்பு முகாம்களில், சொல்லப்படும் செய்திகளை எந்த அளவிற்கு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்பதை ஆராய வேண்டும்.

ஒருவேளை மக்களுக்கு, திட்டம் பற்றிய தகவல் முழுமையாக சென்றடையாத நிலையில் இருந்தால் அந்தப்பகுதிகளில் மீண்டும் செய்தித்தொடர்பு நிகழ்ச்சியினை நடத்த வேண்டும்.

குடியிருப்புகளில் நடைபெறும் செய்தித்தொடர்பு நிகழ்ச்சியின் போது, “புதுவாழ்வு பாருங்கள்“ என்னும் வீடியோ படத்தினை, மக்களுக்குக் காண்பிக்க வேண்டும்.

திட்டத்தின் நோக்கம், உயிர்மூச்சு, சிறப்பம்சம், மக்கள் பங்கேற்பு மற்றும் கிராமசபையில் பங்கேற்க வேண்டியதன் தேவை குறித்து கீழ்கொடுக்கப்பட்டிருக்கும் முறைகளை கொண்டு அனைவருக்கும் நாம் தெரிவிக்க வேண்டும்.

குடியிருப்பு வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அத்துறையில் அனுபவம் உள்ளவர்களைக் கொண்டு பல்வேறு வகையான ஊனத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து மாற்றுத்திறனாளிகளை இனம் கண்டறிய வேண்டும்.

இந்த செய்தித்தொடர்பு முகாம்களை நடத்த திட்ட ஒருங்கிணைப்பு அணியினர் நமது ஊராட்சிக்கு உதவுவார்கள்.

மக்கள் நிலை ஆய்வு

நோக்கம்

மக்களின் வாழ்க்கை நிலையினை பங்கேற்பு முறையில் அறிந்து கொண்டு, கிராம மக்களே ஒன்று சேர்ந்து அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைகளின் அடிப்படையில் வரிசை படுத்த உதவுவதே, மக்கள் நிலை ஆய்வாகும்.

அ. மக்கள் நிலை ஆய்வுக்குழு அமைத்தல்

நமது கிராம சபைக் கூட்டத்தில் வைத்து, மக்கள் நிலை ஆய்வினை மேற்கொள்வதற்காக ஒரு குழுவினை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் குடியிருப்பு வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். நாம் தேர்ந்தெடுக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குணங்களை உடையவர்களாக இருக்க வேண்டும்.

நம் கிராமத்தை சேர்ந்தவராகவும், நம்முடன் குடியிருப்பவராகவும் இருக்கவேண்டும்.

கிராமத்தைப் பற்றி முழுவதும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

மக்கள் நலனில் அக்கறை உடையவராக இருக்க வேண்டும்.

பாகுபாடு பாராமல் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும்.

மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்.

ஆ. மக்கள் நிலை ஆய்வு குழு பயிற்சி

நமது மக்கள் நிலை ஆய்வு குழுவிற்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்படும். அப்பயிற்சியில்

நமது கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை எப்படி ஆராய்வது என்பதைப் பற்றி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மற்ற கிராமங்களில் நடைபெற்ற மக்கள் நிலை ஆய்வு வீடியோ படங்கள் அவர்களுக்கு காண்பிக்கப்படும்.

மக்கள் நிலை ஆய்வு நடைபெறும் கிராமங்களுக்கு சென்று மக்கள் நிலை ஆய்வினை நேரில் கண்டறிய ஏற்பாடு செய்வது.

பிறகு இந்த மக்கள் நிலை ஆய்வுக் குழு, நமது கிராமத்திலும் இந்த ஆய்வினை மேற்கொள்வார்கள்.

இ. கிராம அளவிலான கூட்டம்

மக்கள் நிலை ஆய்வுக் குழு பயிற்சிக்குப் பின் கிராம அளவிலான கூட்டம் நடத்தி மக்கள் நிலை ஆய்வு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்கி பின்வரும் விபரங்களை, கூட்டத்தில் முடிவு செய்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மக்கள் நிலை ஆய்வு செய்யப்படும் பகுதி

குடியிருப்புவாரியாக மக்கள் நிலை ஆய்வு நடத்தப்படும்.

குடியிருப்பில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 150க்கு மேல் இருக்குமேயானால், ஒரே குடியிருப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இந்த ஆய்வினை மக்களின் வசதிக்கேற்ப நடத்தி முழுமையான விபரங்களை சேகரிக்கலாம்.

இடத்தேர்வு

எந்தெந்த பகுதிகளில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தபின், அங்கே எந்த இடத்தில் நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும், இடத்தை தேர்ந்தெடுக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை மனதில் கொள்ள வேண்டும்.

சாதி மத பேதமற்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான இடமாக இருக்க வேண்டும்.

அனைவரும் வருவதற்கு (முக்கியமாக பெண்கள்) ஏதுவாக இருக்க வேண்டும்.

அனைத்து மக்களும் கலந்து கொள்ளவும், வரைபடம் வரையப் போதுமான இட வசதி உள்ள இடமாகவும் இருக்க வேண்டும்.

நாள் மற்றும் நேரத்தினை முடிவு செய்தல்

நாம் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு இடத்திலும் என்று, எப்பொழுது மக்கள் நிலை ஆய்வினை நடத்தப் போகின்றோம் என்பதனை முன்கூட்டியே முடிவு செய்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

ஈ. மற்ற முன் ஏற்பாடுகள்

கிராம வரைபடம் வரைய தேவையான உள்ளூரில் கிடைக்கும் வளங்களை நமது மக்கள் நிலை ஆய்வு குழு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒலி பெருக்கி மற்றும் ஒளி விளக்குகள் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இரண்டாம் கட்ட தகவல்களை கிராம அதிகாரிகள் மற்றும் கிராம அளவிலான பணியாளர்களிடம் பெறப்பட வேண்டும்.

மக்கள் நிலை ஆய்வு நடத்தும் முறை

உ. ஊரினை சுற்றிப் பார்த்து அறிந்து கொள்ளுதல்

மக்கள் நிலை ஆய்வுக்குழு நம் கிராமத்தில் உள்ள மக்கள் மற்றும் திட்ட அலுவலர்களுடன் இணைந்து நடந்து சென்று நம் ஊரினை சுற்றி பார்ப்பார்கள்.

அவர்கள் வீடுகளின் வகைகள், கிராமத்தின் வளங்கள், மக்களின் பழக்க வழக்கங்கள், கிராமத்தின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார அமைப்பு, தொழில் வளங்கள் போன்றவற்றினைக் கவனிப்பார்கள்.

கிராம வரைபடம் வரைவதற்கு அனைத்து தரப்பினரும் வந்து கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு வீட்டிலிருந்து ஒரு நபராவது வந்து கலந்து கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஊ. கிராம வரைபடம் வரைதல்

எதற்காக கிராம வரைபடம் வரைய வேண்டும்?

நம் கிராமத்திலுள்ள மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

சமூக மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் இலக்கு மக்களை அடையாளம் காண உதவுகிறது.

நமது கிராமத்திலுள்ள வளங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

நம் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிராமத்தின் நிலை மற்றும் முன்னேற்றத்தினைப் பற்றி கலந்துரையாட வாய்ப்பு அளிக்கிறது.

நம் கிராமத்தை பற்றிய புள்ளி விபரங்களை சரிபார்த்து, எடுக்கப்பட்ட விபரங்களை உறுதிசெய்ய உதவியாக இருக்கிறது.

கிராம வரைபடம் எவ்வாறு வரைவது?

நம் மக்கள் நிலை ஆய்வுக் குழு, கிராம வரைபடம் வரைவதின் நோக்கத்தை நமது ஊர் மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

பெண்கள் மற்றும் ஆண்களின் பங்கேற்பு சம அளவில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பின்பு நாமாக முன் வந்து கிராம வரைபடம் வரைய வேண்டும். அப்போது ஊராட்சிமன்றக் கட்டிடம், அஞ்சலகம், பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்ற பொது இடங்களை முதலில் நாம் குறிப்பிட வேண்டும்.

நம் கிராமத்தில் உள்ள குடும்பங்களின் வாழ்க்கை நிலையினை நம் மக்கள் நிலை ஆய்வுக் குழுவுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் குழந்தை தொழிலாளர்கள், மற்றும் ஆதரவற்ற நலிவுற்றோர்களாகிய விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், நாடோடிப் பழங்குடியினர், திருநங்கைகள், கொத்தடிமைகள், வீடற்றோர், ஆதரவில்லலாத/ முதியோர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களை நம் வரைபடத்தில் குறிப்பிட்டு காண்பிக்க வேண்டும்.

கிராம சமூக வரைப்படம் வரைந்த பின்பு அனைத்து வீடுகளும் விடுப்படாமல் வரையப்பட்டுள்ளதா, அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி படுத்த வேண்டும் மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் சரி செய்ய வேண்டும்.

எ.மாற்றுத்திறனாளிகள்

உடல் மற்றும் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தங்கள் அன்றாட வேலைகளை செய்வது மற்றும் சமூகப் பொருளாதார செயல்களில் ஈடுபடுவதில் சிரமப்படுபவர்களை மாற்றுத்திறனாளி எனலாம்.

40 சதவீதத்திற்கும் குறைவாக ஊனமிருந்தால், வட்டார மாற்றுத்திறனாளி நிறுவனம் சான்றளித்தப்பின் அவர்களை மாற்றுத்திறனாளி பட்டியலில் இணைக்கலாம்.

அவர்கள்,

 • எலும்பு மற்றும் நரம்பு சம்மந்தப்பட்டவர்கள்
 • பார்வை குறைபாடு உடையவர்கள்
 • காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர்
 • மூளைவளர்ச்சி குன்றியோர்
 • மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்
 • தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் போன்றவர்கள்

ஏ. பழங்குடியினர்

பழங்குடியினர் அல்லது ஆதிவாசிகள் பெரும்பாலும் இயற்கையை சார்ந்து வாழ்பவர்கள்.

இவர்கள் சமூகப்பொருளாதார நிலையில் மற்ற மக்களை விட பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள்.

ஆகவே பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த மிகவும் ஏழை மற்றும் ஏழை மக்களை கண்டறிந்து அவர்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

அவ்வாறு இனம் கண்டறியும் போது இவர்கள் பழங்குடியினர் வகுப்பினரை சார்ந்தவர்களா என்பதை வருவாய்த்துறை அலுவலர்களின் துணையுடன் உறுதிப்படுத்த வேண்டும்.

கிராம வரைபடத்தில் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் தனித்தனியான அட்டைகளில் பதிவு செய்ய வேண்டும்.

தரையில் வரையப்பட்ட கிராம வரைபடத்தினை, பெரிய காகிதத்தில் நாம் வரைய வேண்டும்.

சேகரிக்கப்பட்ட விவரங்களை மக்கள் நிலை ஆய்வுக்குழு நம்மிடம் சமர்ப்பித்து அதில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை சரி செய்ய வழிவகை செய்வார்கள்.

ஐ. சமூக மற்றும் பொருளாதார நிலை ஆய்வு

கிராம வரைபடத்தை வரைந்த பின்பு நாம் சமூக பொருளாதார நிலை ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். இந்த சமூக மற்றும் பொருளாதார நிலை ஆய்வு சிறு சிறு கூட்டங்களில் நடத்தப்படும்.

குழு ஒன்று

நம் மக்கள் நிலை ஆய்வுக்குழு நம் கிராமத்தில் வசிக்கும் மக்களின் சமூகப் பொருளாதார நிலையினை நம்முடன் கலந்து பேசி புரிந்து கொள்வார்கள்.

குடியிருப்பில் உள்ள ஒரு பகுதி மக்களை மட்டும் தனியாக வைத்து முதல் நிலையாக பொருளாதார நிலை ஆய்வு செய்யப்படும்.

மிகவும் ஏழை, ஏழை, நடுத்தரம் மற்றும் வசதி படைத்தோர் என்ற பிரிவுகளாக குடும்பங்களை மக்களே பிரிப்பார்கள். அதற்கான தகுதிகளை மக்களே முடிவு செய்ய வேண்டும்.

குழு இரண்டு

முதல் குழுவில் செய்தது போலவே இரண்டாவது குழுவிலும் நம் மக்களை மிகவும் ஏழை, ஏழை, நடுத்தரம் மற்றும் வசதி படைத்தோர் என்று பிரிவுகளாக பிரிக்க வேண்டும்.

பின்பு, நம் மக்கள் நிலை ஆய்வுக்குழு முதல் குழு மற்றும் இரண்டாவது குழுவின் முடிவுகளை ஒப்பிட்டு சரிபார்க்கும்.

குழு மூன்று

முதல் குழு மற்றும் இரண்டாவது குழுவின் முடிவுகளில் வேறுபாடு ஏதேனும் இருப்பின் மாறுபட்டு இருக்கும் குடும்பங்களின் அட்டைகளை நாம் எடுத்து, அதை மூன்றாவது குழுவுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மக்களின் கருத்தினை இறுதி கருத்தாக எடுத்து மிகவும் ஏழை மற்றும் ஏழை பட்டியலினை தயார் செய்ய வேண்டும்.

ஒ. நலிவுற்றோரைக் கண்டறிதல்

மிகவும் ஏழை என தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களில் சமூகப் பாதுகாப்பு மற்றும் அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் நபர்களை தேர்வு செய்து அவர்களை நலிவுற்றோராக வகைபடுத்தி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் (50 வயதிற்குட்பட்டவர்கள் ) போதிய வருமானமும் சமூக பாதுகாப்பும் இல்லாதவர்கள்.

ஆதரவற்ற மகளிர் (வாழ்க்கைக்கு தேவையான எவ்வித ஆதாரமும் இல்லாமல் தனியாக வசிப்பவர்கள்)

அனாதை குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள்

ஆதரவற்ற முதியோர்கள் (60 வயதுக்கு மேல்) (குழந்தைகளின் அரவணைப்பின்றி தனியாக வாழ்பவர்கள் )

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகள் (மிகவும் ஏழை, ஏழை குடும்பத்தை சார்ந்தவர்கள்)

நாடோடிப் பழங்குடியினர் (நரிக்குறவர்கள், களைக்கூத்தாடி போன்றவர்கள்)

மிகவும் ஏழை, ஏழை குடும்பத்தை சார்ந்த தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் (காச நோய், இருதய நோய், யானைக்கால், வலிப்பு, இரத்த கசிவு மற்றும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள்)

ஓ. இலக்கு மக்கள் பட்டியலை வெளியிடுதல்

மக்கள் நிலை ஆய்வுக்குழுவினரால் கண்டறியப்பட்ட இலக்கு மக்கள் பட்டியலை ஊராட்சியிலுள்ள அனைத்து குடியிருப்புகளிலும் பொது இடங்களிலும், தகவல் பலகையிலும் குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்காவது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒட்டப்பட வேண்டும்.

இலக்கு மக்கள் பட்டியல் மக்கள் நிலை ஆய்வுக்குழுவினராலும் ஊராட்சி மன்ற தலைவராலும் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

இலக்கு மக்கள் பட்டியலில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை மக்கள் நிலை ஆய்வுக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.

அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்கள் கிராம சபையில் அளிக்கப்படும்.

தர மதிப்பீடு

நமது திட்டஒருங்கிணைப்பு அணி குறைந்த பட்சம் 10 சதவீத வீடுகளைத் தேர்ந்தெடுத்து, இலக்கு பட்டியலின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வீடுகள் அனைத்து குடியிருப்புகளிலிருந்து தேர்ந் -தெடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். (திட்ட ஒருங்கிணைப்பு அணி) மக்கள் நிலை ஆய்வுப் பட்டியலில் முறையற்றதாகவோ, பாகுபாடு உடையதாகவோ இருக்கும் பட்சத்தில் திட்ட ஒருங்கிணைப்பு அணி கிராம சபையில் இந்த மக்கள் நிலை ஆய்வு பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவித்துவிடுவார்கள்.

ஒள. கிராம சபையில் அங்கீகாரம்

மக்கள் பங்கேற்புடன் கண்டறியப்பட்ட மிகவும் ஏழை, ஏழை, நலிவுற்றோர் மற்றும் உடல் மாற்றுத்திறனாளிகள் பட்டியலானது அனைத்து மக்கள் முன்னிலையிலும் வாசிக்கப்பட வேண்டும்.

கிராம சபைக்கூட்டத்தில், குறைந்தபட்சம் 50 சதவீத குடியிருப்பு மக்கள் கலந்து கொள்ள வேண்டும். இதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இலக்கு மக்கள் பட்டியலில் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இலக்கு மக்கள் பட்டியலை தயார் செய்தபின் கிராம வறுமை ஒழிப்பு சங்கக் கூட்டத்தில் பட்டியலில் உள்ளவர்களை முன்னுரிமை படுத்தி அதனை இறுதி பட்டியலாக தனியாக பராமரிக்கபட வேண்டும். இதனடிப்படையில் திட்ட பயன்களை வழங்க வேண்டும்

மேலும் குறைந்த பட்சம் 50 சதவீதம் பெண்கள் அவசியம் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும்.

கிராம சபைக்கூட்டத்தில், அனைத்து மக்களின் சம்மதத்துடன் இலக்கு மக்கள் பட்டியல் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

முரண்பாடுகளைக் களைதல்

அனைத்து மக்களின் ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில், மக்களுக்குள்ளாக கலந்து ஆலோசித்து சரியான தீர்வு காணப்பட வேண்டும்.

மக்களிடம் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் நாம் ஏற்றுக்கொண்ட உயிர்மூச்சு கொள்கைகளை மீறாமல் அப்பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

இலக்கு மக்கள் பட்டியல், தொடர்ந்து மூன்று முறை கிராம சபையில் அங்கீகரிக்க படவில்லையெனில், புதுவாழ்வு திட்டத்தை அவ்வூராட்சியிலிருந்து விலக்கிக்கொள்ளலாம்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திடம் பட்டியல் ஒப்படைத்தல்

ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உருவாக்கப்பட்டு பயிற்சி அளித்த பின், மக்கள் நிலை ஆய்வு பட்டியல் மற்றும் கிராம வரைபடங்களை உடைய காகித அட்டைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு பின் நமது கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தங்களது உழைப்பின் பலனை உணர்வதற்காக மற்றொரு மக்கள் நிலை ஆய்வினை நமது கிராமத்தில் நடத்துவார்கள்.

இதனிடையே விடுபட்ட இலக்கு மக்கள் கண்டறியப்பட்டாலோ, குடிபெயர்ந்தவர்கள் கிராமத்தில் திரும்பி வரும் பட்சத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கிராம சபையில் ஒப்புதல் வாங்கி இலக்கு மக்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமது நிறுவனங்கள்

ஒற்றுமையே பலம் என்பதை, நாம் உணர்ந்து, புதுவாழ்வு திட்டத்தில் நாம் அனைவரும் மக்கள் அமைப்புகளில் ஒருங்கிணைய வேண்டும். மக்கள் அமைப்புகள் மூலம், பலவிதமான தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், நம்மிடையே நம்பகத்தன்மையை உருவாக்கவும், கிராம வளர்ச்சிக்கான பொதுவான முடிவுகளை எடுக்கவும், அவற்றை செயல்படுத்தவும் கீழ்கண்ட கிராம நிறுவனங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.

கிராமங்களில் ஏற்கனவே உள்ளவை

 1. கிராம சபை
 2. ஊராட்சி மன்றம்
 3. சுய உதவிக்குழு
 4. சுய உதவிக்குழுக் கூட்டமைப்பு

புதுவாழ்வு திட்டத்தில், நமது வளர்ச்சிக்காக, கீழ்கண்ட புதிய நிறுவனங்களை நாம் உருவாக்குவோம்.

 1. ஊர்க் கூட்டம்
 2. கிராம வறுமை ஒழிப்பு சங்கம்
 3. சமூக தணிக்கைக் குழு
 4. தொழில் குழு மற்றும் கூட்டமைப்புகள்

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாடு

3.09090909091
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top