பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சமுதாய கொள்முதல்

புதுவாழ்வு திட்டத்தின் கீழ் பொருட்களை வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் -அறிமுகம்

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி மற்றும் வாழ்வாதார நிதி போன்ற நிதிகள் தனிதனியாக ஊராட்சியில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் வந்து சேரும். அந்த நிதியில் மக்கள் தேவைக்கேற்ப பொருள்கள், சேவைகள் மற்றும் வேலைகளை கிராம வறுமை ஒழிப்பு சங்க திட்ட விதிகளின் படி வாங்கி கொள்ளலாம். அவ்வாறு வாங்கும் பொழுது நாம் சில கொள்கைகளையும், நடைமுறைகளையும் பின்பற்றினால் தரமான பொருளை வாங்க முடியும். இதற்கு இந்த கொள்முதல் கையேடு பயன்படுகிறது.

கொள்முதல்-மற்றும் சமுதாய கொள்முதல்

 • கொள்முதல் என்பது நமக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, சேவைகளை பெறுவது மற்றும் வேலைகளைப் பெறுவது ஆகும்.
 • கொள்முதல் செய்யும் பொழுது சரியான விலையில் தரமான பொருட்களை வாங்க வேண்டும். ஏனென்றால் புது வாழ்வு திட்டமானது “திட்டமும் நமதே, நிதியும் நமதே” என்ற கொள்கையுடன் செயல்படுவதாகும்.
 • நாம் நமது வீடுகளில் செலவு செய்யும் பொழுது தரம், சரியான விலை மற்றும் கையிருப்பை கணக்கிட்டு ஆராய்ந்து பொருட்களை வாங்குவது போல நமது இலக்கு மக்களுக்கான கொள்முதலின்போதும் நியாயமான முறையில் பொருட்களை வாங்க வேண்டும்.

சமுதாயத்தில் உள்ள இலக்கு மக்கள், தாங்களே தங்களுக்காக சில நடைமுறைகளையும், கொள்கைகளையும், பின்பற்றி பொருட்களையும், சேவைகளையும், வேலைகளையும் வாங்குவது சமுதாய கொள்முதல் எனப்படும்.

சமுதாய கொள்முதலின் பயன்கள்

 • தரமான பொருட்களை வாங்கிட முடியும்
 • சரியான விலையில் கொள்முதல் செய்திட முடியும்
 • இடைத்தரகரை சாராது கொள்முதல் செய்திடலாம்.
 • இலக்கு மக்களுக்குள் நம்பிக்கை வளரும்.

சமுதாய கொள்முதல் கொள்கைகளைப் பயன்படுத்துபவர்கள்

ஒட்டுமொத்த சமுதாயமும் சமுதாய கொள்முதல் கொள்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். முக்கியமாக,

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம்.
 • தொழில் குழு கூட்டமைப்புகள்
 • ஒத்த தொழில் குழுக்கள்
 • திட்ட பயனாளிகள்

சமுதாய கொள்முதலின் கொள்கைகள்

1. கொள்முதல் நடவடிக்கைகளை நாம் அனைவரும் அறிந்து வெளிப்படையாக செயல்படுத்த வேண்டும்.

2. கொள்முதல் செய்யும் பொருட்களின் பட்டியலை ஊர் பொது இடங்களில் உள்ள தகவல் அறிவிப்புப் பலகைகளில் குறைந்தது மூன்று நாட்களுக்கு வெளியிட வேண்டும்.

3. சரியான விலையில் தரமான பொருட்களை குறைவான சரியான விலை பட்டியல் படி வாங்க வேண்டும்.

4. சமுதாய கொள்முதல் பயன்பாட்டிற்காகவும், நாம் பெற்ற விலைப்பட்டியலை ஒப்பிட விலை வங்கியை உபயோகிக்க வேண்டும்.

5. சரியான விலையில் தரமான பொருளை உள்ளூரிலேயே வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

6. கொள்முதல் நடவடிக்கைகளை உரிய விலை ஒப்பீடு செய்த விவரம்,பதிவேடுகளில் பதியப்பட வேண்டும் (தீர்மான புத்தகத்தில்)

7. கொள்முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கொள்முதல் செய்துள்ளதை சமூக தணிக்கைக்குழு கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

8. அனைத்து விதமான கொள்முதலிலும் இந்த சமுதாய கொள்முதல் கொள்கைகளை வழிகாட்டியாக பயன்படுத்த வேண்டும்.

நிதி மற்றும் கொள்முதல் துணைக் குழு உறுப்பினர்கள்

1. கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களிலிருந்து மூன்று நபர்கள் (இலக்குமக்கள்) நிதி மற்றும் கொள்முதல் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

2. இந்த மூன்று உறுப்பினர்களில் குறைந்தது இரண்டு நபர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.

3. மேலும், இரண்டு நபர்களை கொள்முதல் செய்யும் பொருளுக்கேற்ப நியமனம் செய்து கொள்ளலாம்.

4. கொள்முதல் செய்யும் பொழுது இடைத்தரகரை சார்ந்திருக்கத் தேவையில்லை. தேவைப்படின் கிராமத்தில் உள்ள நல்ல விவரம் தெரிந்த நபர்களை குறிப்பிட்ட பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகளை கொள்முதல் செய்யும் பொழுது சேர்த்து கொள்ளலாம்.

5. நிதி மற்றும் கொள்முதல் துணைக்குழு உறுப்பினர்கள் வறுமை ஒழிப்பு சங்சம் மற்றும் தொழில் குழுவின் கொள்முதலின் பொழுது உறுதுணையாக இருப்பார்கள்.

நிதி மற்றும் கொள்முதல் துணைக்குழு உறுப்பினர்களின் தகுதிகள்

 • சேவை மனப்பான்மை உடையவர்களாக இருக்க வேண்டும்.
 • நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.
 • விவரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
 • பொறுப்புள்ளவர்களாகவும்,சமுதாயத்தில் மதிப்பு மிக்கவராகவும் இருக்க வேண்டும்.

கொள்முதலுக்கான பயிற்சிகள்

பயிற்சி பெறுபவர்கள்:

 • கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள்
 • சமூக தணிக்கைக்குழு உறுப்பினர்கள்
 • நிதி மற்றும் கொள்முதல் துணைக்குழுஉறுப்பினர்கள்
 • தொழில் குழு கூட்டமைப்பு உறுப்பினர்கள்

பயிற்சி அளிப்பவர்கள்:

 • புது வாழ்வு திட்ட ஒருங்கிணைப்பு அணி பணியாளர்கள்.
 • நல்ல அனுபவமுள்ள சமுதாய பயிற்சியாளர்கள்.

இந்த பயிற்சியில் கொள்முதல் செய்யும் முறை மற்றும் சமுதாய கொள்முதலில் உள்ள நன்மைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படும்.

கொள்முதல் வகைகள்

கொள்முதல் மூன்று வகையாக பிரிக்கப்படும்

அவை

1. பொருட்கள்

2. சேவைகள்

3. வேலைகள் – எனப்படும்

1. பொருட்கள்

பொருட்கள் என்பது மக்களின் தேவைக்காக பயன்படுத்தப்படுவது. நமது புது வாழ்வு திட்டத்தில், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பயன்பாட்டிற்காகவும், தொழில் குழு கூட்டமைப்புகள் மற்றும் கூட்டமைப்புகளின் தேவைக்காகவும் நாம் கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது.

 • கிராம வறுமை ஒழிப்புச் சங்க அலுவலகத்திற்குத் தேவையான பொருட்கள் (எ.கா.) மேசை, நாற்காலி, பீரோ, மின் விசிறி.
 • ஒத்த தொழில் குழுக்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகளுக்கு தேவையான பொருட்கள் (எ.கா) மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் தளவாட பொருட்கள்.
 • திட்ட பயனாளிகளுக்கு தேவையான பொருட்கள் (எ.கா.) மாடு – ஆடு

2. சேவைகள்

சேவைகள் என்பது

(அ) திறன் வளர்த்தல்

(ஆ) ஆலோசனை பெறுதல்

(இ) விற்பனை வாய்ப்பு ஏற்படுத்துதல்

(அ) திறன் வளர்த்தல்

 • மக்களின் தேவைக்கேற்ப பயிற்சி அளித்தல். (எ.கா)
 • சுய உதவிக் குழு, பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள்
 • தொழில் குழு கூட்டமைப்புகள்
 • ஊனமுற்றோர் மற்றும் நலிவுற்றோர்க்கு பயிற்சியளித்தல்

(ஆ) ஆலோசனை பெறுதல்

 • தொழில் நுட்ப ஆலோசனை பெறுதல்
 • தொழில் திட்டத்தினை ஆராய்ந்து ஒப்புதல் பெறுதல்
 • மக்கள் தேவைக்கேற்ப பிற சேவைகள்

(இ) விற்பனை வாய்ப்பு ஏற்படுத்துதல்

உற்பத்தியான பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தையில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல்.

தேவையான சேவைகளைத் தரக்கூடியவர்களின் பட்டியல்

 • தனி நபர்கள்
 • நிறுவனங்கள் மற்றும்
 • சேவை ரீதியான தனியார் / அரசு அமைப்புகள்

இப்பட்டியலை தயாரிக்க உறுதுணையாக இருப்பவர்கள்

 • ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்
 • திட்ட ஒருங்கிணைப்பு அணி
 • மாவட்ட திட்ட அலுவலகம்
 • கிராம வறுமை ஒழிப்புச் சங்கம்

3. வேலைகள்

 • கட்டிட வேலை
 • தொழிற் கூடம் கட்டுதல் மற்றும்
 • சாலை அமைத்தல்
 • தொழில் நுட்பப்பணிகள் மேற்கொள்ளுதல்

கொள்முதலுக்கான வரம்புகள் மற்றும் முறைகள்

 • கொள்முதலுக்கான வரம்புகள் மற்றும் முறைகளை பின்பற்றி குறிப்பிட்ட பொருளை, குறிப்பிட்ட விலையில் மற்றும் குறிப்பிட்ட முறையில் கொள்முதல் செய்திடல் வேண்டும்.
 • கொள்முதல் செய்யும் பொழுது தொழில் சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறுவதும், விலைப்புள்ளிகள் (கொட்டேசன்கள்) வாங்குவதும், செய்தித்தாளில் விளம்பரம் செய்வதும், தரமான கொள்முதலுக்கு வழிகாட்டுகிறது.
 • சமுதாய கொள்முதலின் போது மக்கள் சுயகட்டுப்பாடுடன் பொருட்களை தேர்வு செய்ய மற்றும் கொள்முதல் செய்ய வழிகாட்டுகிறது.
 • கொள்முதல் மதிப்பு வரம்புகளுக்கு கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது அவசியமானதாகும்.
 • கிராம சபை தீர்மானம் செய்து, கொள்முதல் கையேட்டில் கொடுக்கப்பட்ட மதிப்பீடு வரம்புகளை குறைக்கலாம். ஆனால் அதை உயர்த்தும் உரிமை கிராம சபைக்கு கிடையாது.

கொள்முதல் செய்யும் விதி முறைகள்

புதுவாழ்வு திட்டத்தில் நாம் வாங்கும் அனைத்து விதமான பொருட்கள், சேவைகள், வேலைகள் விலைகளுக்கு ஏற்ப நாம் சில கொள்முதல் விதி முறைகளை பின்பற்ற வேண்டும்.

அ. பொருட்களைக் கொள்முதல் செய்யும் முறை

 1. தேவைப்படும் பொருட்களுக்கான பட்டியலை தயார் செய்ய வேண்டும்.
 2. நிதி மற்றும் கொள்முதல் துணை குழு உறுப்பினர்களின் உதவியுடன் பொருட்களுக்கான வரம்புகள் மற்றும் முறைகளை பின்பற்றி விலை புள்ளிகளை (கொட்டேசன்களை) வாங்க வேண்டும்.
 3. கால்நடை, விதைகள், செடிகள் வாங்கும் பொழுது விலைப்புள்ளிகள் (கொட்டேசன்கள் ) இல்லாமலேயே கொள்முதல் செய்யலாம்.பெறப்பட்ட விலைபுள்ளிகளை (கொட்டேசன்) கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொழில் குழுவினரின் முன்னிலையில் பிரிக்கப் பட்டதற்கான ஆதாரத்தினை பதிவு செய்ய வேண்டும்.
 4. பெறப்பட்ட அனைத்து விலைபுள்ளிகளை (கொட்டேசன்) கொள்முதல் செய்யும் மூன்று நாட்களுக்கு முன்பு தேர்வு செய்த விவரத்துடன் அறிவிப்புப் பலகையில் தமிழில் தெரிவிக்க வேண்டும்.
 5. ஏதேனும் மறுப்பு இருந்தால், அதனை கருத்தில் கொண்டு புதிய விலைபுள்ளிகளை (கொட்டேசன்) பெறப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 6. தேர்வு செய்யப்பட்ட விலை புள்ளிகளை மாவட்ட விலை வங்கியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒப்பிடும் போது விலை வங்கி பட்டியலை விட அதிகமாக இருந்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் தீர ஆலோசித்த பின்னர் பொருட்களை வாங்க வேண்டும்.
 7. கிராம வறுமை ஒழிப்பு சங்கம், தொழில் குழு கூட்டமைப்பு கூட்டத்தின் தீர்மான புத்தகத்தில் பொருள், விற்பனையாளர் விவரம், தொகை மற்றும் பொருளின் விவரம் பதிவு செய்யப்பட வேண்டும்
 8. கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டத்தில் நிதி மற்றும் கொள்முதல் துணை குழுவின் பரிந்துரையின் பேரில் பொருட்கள் வாங்க தேவையான தீர்மானம் இயற்ற வேண்டும்.
 9. வாங்கப்பட்ட பொருட்களின் விவரத்தை சொத்து இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
 10. வாங்கிய பொருட்களின் மீது காப்பீடு (இன்சூரன்ஸ்) எடுக்கப்பட வேண்டும்.
 11. கொள்முதல் செய்த விவரங்கள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். கிராம சபை மற்றும் ஊர் கூட்டத்தில் கொள்முதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

ஆ. சேவைகளை கொள்முதல் செய்யும் முறை

 1. தேவைப்படும் சேவைகளுக்கான பட்டியலை தயார் செய்ய வேண்டும்.
 2. நிதி மற்றும் கொள்முதல் துணை குழு உறுப்பினர்களின் உதவியுடன் சேவைக்கான வரம்புகள் மற்றும் முறைகளை பின்பற்றி விலைபுள்ளிகளை (கொட்டேசன்களை) வாங்க வேண்டும்.
 3. பெறப்பட்டவிலைபுள்ளிகளை (கொட்டேசன்) கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொழில் குழுவினரின் முன்னிலையில் பிரிக்க பட்டதற்கான ஆதாரத்தினைப் பதிவு செய்ய வேண்டும்.
 4. பெறப்பட்ட அனைத்து விலைபுள்ளிகளை (கொட்டேசன்) கொள்முதல் செய்யும் மூன்று நாட்களுக்கு முன்பு தேர்வு செய்த விவரத்துடன் அறிவிப்பு பலகையில் தமிழில் தெரிவிக்க வேண்டும்.
 5. ஏதேனும் மறுப்பு இருந்தால், அதனைக் கருத்தில் கொண்டு புதிய விலைபுள்ளிகளை (கொட்டேசன்) பெறப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 6. தேர்வு செய்யப்பட்ட விலைபுள்ளிகளை மாவட்ட விலை வங்கியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒப்பிடும் போது விலை வங்கி பட்டியலை விட அதிகமாக இருந்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் தீர ஆலோசித்த பின்னர் சேவைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
 7. கிராம வறுமை ஒழிப்பு சங்கக் கூட்டத்தில் நிதி மற்றும் கொள்முதல் துணை குழுவின் பரிந்துரையின் பேரில் சேவைகளை வாங்க தேவையான தீர்மானம் இயற்ற வேண்டும்.
 8. கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டத்தின் தீர்மான புத்தகத்தில் சேவை கொள்முதல் செய்த விவரம், தொகை, நிறுவனத்தின் பெயரை பதிவு செய்ய வேண்டும் .
 9. பெறப்பட்ட சேவைகளின் விவரங்களை உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
 10. கொள்முதல் செய்த விவரங்கள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். கிராம சபை மற்றும் ஊர் கூட்டத்தில் கொள்முதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இ. வேலைகளை கொள்முதல் செய்யும் முறை

 1. தேவைப்படும் வேலைகளுக்கான பட்டியலை தயார் செய்ய வேண்டும்.
 2. நிதி மற்றும் கொள்முதல் துணை குழு உறுப்பினர்களின் உதவியுடன் வேலைக்கான வரம்புகள் மற்றும் முறைகளை பின்பற்றி விலை புள்ளி வாங்க வேண்டும்.
 3. பெறப்பட்ட விலைபுள்ளிகள் (கொட்டேசன்கள்) கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் தொழில் குழுவினரின் முன்னிலையில் பிரிக்கப் பட்டதற்கான ஆதாரத்தினை பதிவு செய்ய வேண்டும்.
 4. பெறப்பட்ட அனைத்து விலைபுள்ளிகள் (கொட்டேசன்கள்) கொள்முதல் செய்யும் மூன்று நாட்களுக்கு முன்பு தேர்வு செய்த விவரத்துடன் அறிவிப்பு பலகையில் தமிழில் தெரிவிக்க வேண்டும்
 5. ஏதேனும் மறுப்பு இருந்தால், அதனை கருத்தில் கொண்டு புதிய விலைபுள்ளிகள் (கொட்டேசன்கள் பெறப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 6. தேர்வு செய்யப்பட்ட விலைபுள்ளிகளை மாவட்ட விலை வங்கியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒப்பிடும் போது விலை வங்கி பட்டியலை விட அதிகமாக இருந்தால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் தீர ஆலோசித்த பின்னர் வேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
 7. கிராம வறுமை ஒழிப்பு சங்கக் கூட்டத்தில் நிதி மற்றும் கொள்முதல் துணைக் குழுவின் பரிந்துரையின் பேரில் வேலைகளை வாங்க தேவையான தீர்மானம் இயற்ற வேண்டும்.
 8. கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டத்தின் தீர்மானப் புத்தகத்தில் வேலை விவரம், தொகை மற்றும் வேலைகளின் பெயர் பதிவு செய்யப்பட வேண்டும்.
 9. பெறப்பட்ட வேலைகளின் விவரங்களை உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
 10. கொள்முதல் செய்த விவரங்கள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். கிராம சபை மற்றும் ஊர் கூட்டத்தில் கொள்முதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

கொள்முதல் ஆவண பதிவு

நாம் கொள்முதல் செய்யும் பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகளை கொள்முதல் செய்யும் ஒவ்வொரு நிலையிலும் அதற்கான ஆவண பதிவேடுகளில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும். ஆவணப் பதிவு மூலம் கொள்முதல் கொள்கைகள் பின்பற்றபடுவதை உறுதி செய்ய முடியும்.

கொள்முதல் ஆவண பதிவு நிலைகள்

 • விலைபுள்ளிகள் (கொட்டேசன்கள்) வாங்கிய விவரங்களை பதிவு செய்தல் மற்றும் தொகுத்து வைக்க வேண்டும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம், தொழில் குழு உறுப்பினர்களின் முன்னிலையில் விலைபுள்ளிகளை (கொட்டேசன்களை) பிரித்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
 • கொள்முதலின் விவரங்களை தீர்மானமாக ஏற்றுக் கொள்வதைத் தெளிவாகப் பதிவு செய்தல், இந்த தீர்மானம் சமூக தனிக்கைக் குழு கண்காணிக்கவும், பொது மக்கள் பார்வைக்கு ஏற்றதாகவும் இருக்கும்.
 • அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்ட கொள்முதல் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகளை சொத்து இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்
 • கொள்முதல் செய்த பொருட்களை காப்பீடு செய்ய வேண்டும்

விலை வங்கி

பல்வேறு பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகளுக்கான நியாயமான விலையை சந்தை நிலவரம் அறிந்து பட்டியலிட்டு வைத்து இருப்பது விலை வங்கி எனப்படும்.

 • இந்த விலை வங்கியை மாவட்ட திட்ட அலுவலகம் தயாரித்து தொகுத்து பராமரிக்கும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொழில் குழு கூட்டமைப்பின் உபயோகத்திற்காக விலை வங்கியை திட்ட ஒருங்கிணைப்பு அணியும் பதிவு செய்து பராமரிக்கும்.
 • கொள்முதல் செய்யும் போது விலைப்பட்டியலை இந்த விலை வங்கியுடன் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொழில் குழு கூட்டமைப்புகள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
 • மாவட்ட அளவில் அரையாண்டிற்கு ஒரு முறை சந்தை நிலவரத்தினை கருத்தில் கொண்டு புதிய விலைப்பட்டியல்களை தயார் செய்ய வேண்டும்.
 • அருகில் உள்ள நகர்/பேரூராட்சி ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் விலைப்பட்டியல்களை (பொருட்களின் வகை வாரியாக) விலை விவரம் சேகரித்து ஒன்றிய அளவில் தமிழில் தொகுத்து வைத்தல் வேண்டும். இந்த செயல்பாடுகளை உதவி திட்ட மேலாளர் (சந்தை படுத்துதல்) உறுதி செய்ய வேண்டும்.
 • கொள்முதல் செய்ய இருக்கும் பொருளின் விலை சரியான விலையோடு ஒப்பிட்டுப் பார்த்து தரமானப் பொருளை, சரியான விலையில் வாங்குவதற்கு விலை வங்கி வழிகாட்டுகிறது.

சமுதாய கொள்முதலுக்கான பல்வேறு அமைப்புகளின் மற்றும் குழுக்களின் கடமைகள்/ பொறுப்புகள்

வ.எண்

அமைப்பு / குழுவின் பெயர்

கடமைகள் / பொறுப்புகள்

1

மாவட்ட திட்ட அலுவலகம்

 • அனைத்து பொருட்களுக்கான விலைப்பட்டியலை தயார் செய்து (விலை வங்கி) அவ்வப்போது புதுப்பித்து வெளியிடுதல்.
 • தயாரிப்பாளர்கள், பயிற்சியாளர்கள், விற்பனையாளர்கள் பட்டியலை உருவாக்குதல்
 • கொள்முதலுக்கான வழிமுறைகளை தெரிவித்தல். வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணியாளர்களுக்கு ஆலோசனை அளித்தல்

2

திட்ட ஒருங்கிணைப்பு அணி

 • கொள்முதலுக்கான பயிற்சி அளிப்பது மற்றும் வழிகாட்டுதலை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொழில் குழுவிற்கு அளிப்பது.

3

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

 • கொள்முதலுக்கான தீர்மானங்களை இயற்றி பொருள், சேவை, வேலைகள் போன்றவற்றிற்கான நிதியை வழங்குதல்
 • துணைகுழுக்களின் செயல்பாட்டினை ஒருங்கிணைந்து வழிக்காட்டுதல்

4

நிதி மற்றும் கொள்முதல் துணைகுழு

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கான கொள்முதல்

 • கொள்முதல் விதிகளுக்கு உட்பட்டு பொருட்கள் வாங்க, கொடுக்க வேண்டிய பயிற்சி, பயிற்சிக்கான நிறுவனம், தேவைப்படும் பயிற்சியாளர்கள், ஊனமுற்றோர்களுக்கு தேவைப்படும் உதவி பொருட்கள் போன்றவற்றைக் கொள்முதல் செய்ய உதவி செய்வது.
 • கொள்முதல் விதிகளின்படி கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மட்டுமே கொள்முதலில் ஈடுபடும்.

தொழில் குழு கூட்டமைப்பிற்கான கொள்முதல்

 • பொருட்களின் விலை, தயாரிப்பாளர், விற்பனையாளர்கள் போன்றவற்றின் விவரங்களை சேகரித்து, தொழில் குழு கூட்டமைப்புகள் சிறப்பாக செயல்பட உதவுவது.
 • தொழில் குழு கூட்டமைப்பு கொள்முதல் விதிகளை பின்பற்றுவதற்கு உறுதுணையாக மட்டுமே இருக்க வேண்டும்.
 • கொள்முதல் விதிகளின்படி தொழில் குழு கூட்டமைப்பு மட்டுமே கொள்முதலில் ஈடுபடும்

5

தொழில் மற்றும் கண்காணிப்பு துணை குழு

 • பொருட்களின் விலை மற்றும் தரத்தை ஆராய்தல்
 • திட்டங்களில் பொருள், சேவை மற்றும் வேலை, கொள்முதல் பணிகளை கண்காணித்தல்

6

சமூக தணிக்கை குழு

 • சமுதாய அளவில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொழில் குழு பொருட்களை, சேவைகளை மற்றும் வேலைகளின் தரத்தினை ஆராய்ந்து கிராம சபையில் அறிக்கை சமர்ப்பித்தல்

7

கிராம சபை

 • சமூக தணிக்கை குழு சமர்ப்பிக்கும் கொள்முதல் அறிக்கையை ஆராய்ந்து முடிவு எடுக்கும்
 • கொள்முதலுக்கான வரம்புகளுக்கு கிராம சபை ஒப்புதல் அளிக்கும். கிராம சபை தீர்மானம் செய்து, கொள்முதல் கையேட்டில் கொடுக்கப்பட்ட மதிப்பீடு வரம்புகளை குறைக்கலாம். ஆனால் அதை உயர்த்தும் உரிமை கிராம சபைக்கு கிடையாது.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.78260869565
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top