பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புதுவாழ்வு திட்டக்கையேடு - ஓர் அறிமுகம்

புதுவாழ்வு திட்டம் பற்றிய குறிப்புகள்.

புதுவாழ்வு திட்டத்தின் நோக்கம்

புதுவாழ்வு திட்டம் கீழ்கண்ட மூன்று முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வறுமை ஒழிப்பதற்கான செயல்களை மேற்கொள்கின்றன.

மிகவும் ஏழை, ஏழை, நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படும் மக்கள் அமைப்புகளை உருவாக்ககுதல் மற்றும் வலுப்படுத்துதல்.

நம்முடைய திறன்களை கண்டறிந்து, அவற்றை வளர்த்துக் கொள்வதற்கு மக்கள் அமைப்புகளுக்கு காட்டுவது.

நீடித்து நிலைத்த வருவாய் தரும் தொழில்களைக் கண்டறிந்து, அதற்கு தேவையான திறன்களை வளர்ப்பதற்கும் அதற்கான நிதியினைப் பெற்று தொழில் புரிவதற்கும் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் உதவி புரிவது.

புதுவாழ்வு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

இத்திட்டத்தில் நாமே நமது தேவைகள் மற்றும் அதில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிந்து நமது வளர்ச்சிக்கு தேவையான செயல்பாடுகளை திட்டமிட்டு அதனை செயல்படுத்தி அதனை நாமே கண்காணிப்பது.

நம் கிராமத்திலுள்ள ஏழைகள், மிகவும் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரை நாமே கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டிய உதவிகளை செய்திடுவது.

நாமே நமது திட்ட நிதியை நேரடியாகப் பெற்று, அதனை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் மக்கள் வளர்ச்சிக்காகவும் செலவு செய்வது.

இத்திட்டத்தினை மக்கள் ஒன்று சேர்ந்து செயல்படுத்த, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், சுய உதவிக்குழுக்கள், கூட்டமைப்புகள் மற்றும் தொழில் குழுக்கள் போன்ற மக்கள் அமைப்புகளை உருவாக்குவது.

ஏழை, எளிய மக்களின் திட்டம் குறித்த முக்கிய விவரங்களை கிராம சபையில் மக்களுக்கு தெரிவித்து முடிவுகள் எடுக்கப்படுவது.

பெண்களை முன்னிறுத்தி அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படுவது.

நாம் கடைபிடிக்க வேண்டிய உயிர் மூச்சு

நாம் உயிர் வாழ்வதற்கு உயிர்மூச்சு எவ்வளவு முக்கியமோ, அதுபோல் இத்திட்டத்தை செயல்படுத்த பின்வரும் ஆறு கோட்பாடுகள் முக்கியமாகும். அதனால் இந்த கோட்பாடுகளை உயிர்மூச்சு என அழைக்கின்றோம்.

புதுவாழ்வு திட்டத்தினை நம் கிராமத்தில் செயல்படுத்த வேண்டுமானால் இந்த ஆறு முக்கிய கோட்பாடுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

உயிர்மூச்சு 1 - நாம் அனைவரும் ஒன்றுகூடி முடிவெடுத்து செயல்படுவோம்

புதுவாழ்வு திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கிராமத்தில் உள்ள அனைவரும் பங்கு கொண்டு முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது திட்டத்தினைக் குறித்த அனைத்து விவரங்களும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த முதல் உயிர்மூச்சு, நாம் மக்கள் பங்கேற்புடன் நமது வளர்ச்சிக்கு அனைத்து திட்டங்களையும் தீட்டி செயல்படுத்த வழிவகுக்கிறது.

உயிர்மூச்சு 2 - அனைத்து செயல்களிலும் வெளிப்படையாக இருப்போம்

திட்டத்தின் அனைத்து விவரங்களும் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். இதன் மூலம் திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

நிதி பயன்பாடு, கொள்முதல், பயனாளிகள் விபரம் உட்பட அனைத்து திட்ட தகவல்களும் தகவல் பலகையில் இடம்பெறச் செய்து, கிராம சபை கூட்டத்தில் தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும்.

எல்லாவிதமான அனைத்து பதிவேடுகளை பார்வையிடவும், சரிபார்க்கவும் மற்றும் கிராம சபையில் ஆலோசனைகளை தெரிவிக்கவும் கிராமத்தினர் அனைவருக்கும் உரிமை உண்டு.

உயிர்மூச்சு 3 - மகளிருக்கு முன்னுரிமை அளிப்போம்

மக்கள் தொகையில் 50 விழுக்காடு பெண்கள் உள்ளனர். எனவே, மகளிர் முன்னேறாமல் சமுதாயம் முன்னேற முடியாது.

மகளிர் ஒன்று கூடும்பொழுதுதான் நமது கிராமம் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் காண முடியும்.

நமது திட்டத்தில் மகளிருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

உயிர்மூச்சு 4 - ஏழை, எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறச் செய்வோம்.

இத்திட்டத்தில் மிகவும் ஏழை மற்றும் ஏழை குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமாக நமது வருமானத்தை பெருக்கி நமது வாழ்க்கை நிலையினை உயர்த்தலாம்.

உயிர்மூச்சு 5 - மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு உறுதுணையாக இருப்போம்

நமது ஊராட்சியில் உள்ள மிகவும் ஏழை குடும்பத்தை சார்ந்த விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர்கள், தீவிர நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நாடோடிப் பழங்குடியினர், திருநங்கைகள் மற்றும் கொத்தடிமைகள் போன்ற நலிவுற்றோர்கள் வாழ்வில் முன்னேற நமது கிராமத்தில் உள்ள அனைவரும் உறுதுணையாக இருப்போம்.

திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் திறன்களை மேம்படுத்தி, வாழ்வில் மேன்மை அடையச் செய்வோம்.

உயிர்மூச்சு 6 - நமது கிராம நிதியினை நாணயத்துடன் பயன்படுத்துவோம்

மக்கள் அமைப்புகளுக்கு வழங்கப்படும் கிராம நிதி நமது நிதியைப் போன்றது. ஆகவே அதனை செலவிடும்பொழுது மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும்.

திட்ட விதிமுறைப்படி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

நிதி பயன்பாடு குறித்த விபரங்களை தகவல் பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும் மற்றும் கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும் .

நிதி பயன்பாட்டு விபரங்கள் சமூக தணிக்கை குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அனைத்து நிதி நடவடிக்கைகளும் (வரவு, செலவு) பதிவேடுகளில் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

புதுவாழ்வு திட்டத்தில் எவ்வாறு இணைவது?

முதலில், புதுவாழ்வு திட்ட ஒருங்கிணைப்பு அணி பணியாளர்கள், திட்டம் குறித்த விவரங்களையும், உயிர் மூச்சின் முக்கியத்துவத்தையும் குறித்து குடியிருப்புக் கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைப்பார்கள்.

நமது கிராமத்தில், இத்திட்டத்தினை கொண்டுவர, பின்வரும் முயற்சிகளை கிராம மக்களாகிய நாம் அனைவரும் எடுக்க வேண்டும்.

புதுவாழ்வு திட்டத்தின் உயிர்மூச்சினை நம் மக்கள் அனைவரும் அறிந்து கொண்டவுடன் ஒரு கிராம சபையில், திட்ட உயிர்மூச்சினை ஏற்று செயல்படுவோம் என்று நமது ஒப்புதலினை தெரிவிக்க வேண்டும். அதனை நமது ஊராட்சியின் கிராம சபை தீர்மானப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த தீர்மானத்தினை நாம் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

கிராம சபை தீர்மானத்தினை பெற்றுக் கொண்டவுடன், மாவட்ட திட்ட அலுவலகம் ஊராட்சியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும். இதற்கு ஊராட்சி துவக்க நிதி ஒப்பந்தம் என்று பெயர். இந்த ஒப்பந்தப் படிவம் இக்கையேட்டில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் நமது ஊராட்சி பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கின்றது.

மக்கள் நிலை ஆய்வின் மூலம் இலக்கு மக்களைக் கண்டறிவது மற்றும் கிராம சபையில் ஒப்புதல் பெறுதல்.

கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த தன்னாட்சியுடன் மக்கள் அமைப்புகளை உருவாக்குவது. கிராம வறுமை ஒழிப்பு சங்கம்.

சமூக தணிக்கை குழு

நமது குடியிருப்புகளில் மிகவும் ஏழை, ஏழை பட்டியலில் உள்ளவர்கள் சுய உதவிக் குழுவில் இல்லாவிட்டால் அவர்கள் சுய உதவிக் குழுவில் இணைக்கப்பட வேண்டும்.

ஒப்பந்தத்தில் உள்ள உயிர்மூச்சு கொள்கைகளை அந்த கிராமம் கடைப்பிடிக்கவில்லையெனில் புதுவாழ்வு திட்டம் அப்பகுதியில் இருந்து விலக்கிக் கொள்ளப்படும் என்பதும் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள செயல்களை மெற்கொள்ள மாவட்ட திட்ட அலுவலகம் நமது ஊராட்சிக்கு ரூ.25,000/ரூ.35,000/ ரூ.45,000 ( மக்கள் தொகைக்கு ஏற்றவாறு) தொடக்க நிதியாக வழங்கும்.

இதற்கு “--------------- ஊராட்சி தொடக்க நிதி“ என்று தனியாக ஒரு வங்கிக்கணக்கினை துவக்க வேண்டும்.

இந்த வங்கிக் கணக்கினை நமது ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் இணைந்து செயல்படுத்துவார்கள்.

தொடக்க நிதியினை பெற்ற பின், நமது ஊராட்சி, திட்ட செயல்பாடுகளை படிப்படியாக மேற்கொள்ளும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம்.

3.25806451613
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
அருள் May 25, 2017 10:01 AM

இத்திட்டதில் ஆண்களின் பங்கு &பயன்கள் என்ன?

Dr. D Rajasekar Jan 18, 2017 12:18 PM

வாழ்த்துக்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top