பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / உரம் / மானாவாரி நிலங்களுக்கேற்ற நிரந்தர உர நிர்வாக ஆய்வு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மானாவாரி நிலங்களுக்கேற்ற நிரந்தர உர நிர்வாக ஆய்வு

மானாவாரி நிலங்களுக்கேற்ற நிரந்தர உர நிர்வாக ஆய்வு பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள நிரந்தர உர நிர்வாக ஆய்வுத்திடலானது இந்தியாவிலேயே மிக பழமை வாய்ந்தது. இவ்வாராய்ச்சியானது இங்கிலாந்தில் உள்ள ரோதம்ஸ்தட் நிரந்தர உர நிர்வாக ஆய்விற்குப்பின் துவக்கப்பட்டது. 1909-ஆம் ஆண்டு புன் செய் நிலத்தில் துவக்கப்பட்ட இவ்வாய்வானது 1937-ல் மானாவாரி உர நிர்வாக திடலாக மாற்றப்பட்டது. இந்த ஆய்வு பத்து நடத்து முறைகளை உள்ளடக்கியது : தழைச்சத்து, தழை + மணிச்சத்து, தழை + சாம்பல்சத்து, தழை + மணி + சாம்பல்சத்து, மணி + சாம்பல்சத்து, சாம்பல்சத்து மட்டும், மணிச்சத்து மட்டும், தொழுஉரம், தொழுஉர கழிவு மற்றும் எதுவுமே இடாதது ஆகும்.

நடைமுறைகள்

 • சமீபத்திய ஆய்வில் மேற்கண்ட பத்து நடத்து முறைகளுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் பரிந்துரைத்த உர அளவும், மண் பரிசோதனையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவும் சேர்க்கப்பட்டுள்ளது.
 • இந்த ஆய்வின் மிக முக்கிய நோக்கமானது, தொடர் தீவிர வேளாண்மையில் அங்கக, அனங்கக உரங்களை இடுவதால் பயிர் விளைச்சல், மண்ணின் நுண்ணூட்ட சத்தின் அளவு, மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களின் தொகுப்பு, உர சுழற்சி முறை ஆகியவற்றை அறிய முடிகிறது. மேலும், அங்கக, அனங்கக உரமிடுவதால் மண்ணில் ஏற்படும் பௌதீக மற்றும் வேதியியல் மாற்றங்கள், மண் நலன், பயிர் மகசூல் எவ்வாறு மானாவாரி நிலங்களில் மாறுபடுகிறது என்பதையும் அறிய பேருதவியாக உள்ளது. தொடங்கிய காலம் முதல் 1992 வரை சோளம் - பருத்தி பயிர் சுழற்சியும், 1993 முதல் இவ்வருடம் வரை சோளம் தனிப்யிராகவும் பயிர் செய்யப்படுகிறது. இது வரை 145 தனிப்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
 • இத்தகு பழமைவாய்ந்த ஆய்வின் முடிவுகளின் மூலம் கீழ்க்கண்ட விளக்கங்களை தெளிவாக அறிய முடிகிறது.
 • மானாவாரி பயிருக்கு தழை, மணி, சாம்பல் பேரூட்டங்களில் ஏதாவது ஒன்றை மட்டும் அளிப்பதன் மூலம் மகசூல் குறைகிறது. அதாவது தழைச்சத்தை தனியாக அளித்தால் மகசூல் குறைகிறது. மேலும், மணிச்சத்து அளிக்கப்படாவிட்டால் மகசூல் கணிசமாகவே குறைகிறது. அதாவது 50 சதவீத மகசூல் குறைபாடு உண்டாகிறது.
 • தழை மற்றும் மணி, தழை, மணி, சாம்பல் மற்றும் தொழுஉரம் ஆகிய சத்து விகிதங்களை தொடர்ந்து அளிப்பதன் மூலம் ஏற்படும் பயிர் மகசூல் அதிகமாக உள்ளது. தொடர்ந்து மண்ணில் மணிச்சத்தை இடாமல் இருந்தால் மண்ணில் இயற்கையாகவே உள்ள மணிச்சத்தும் குறைந்து காணப்படுகிறது. இது சுமார் எக்டருக்கு 15 கிலோ என்ற அளவிலிருந்து எக்டருக்கு 1.7 முதல் 2.0 கிலோ என்ற அளவிற்கு குறைந்துள்ளது. சாம்பல் சத்தின் அளவும் மண்ணில் அங்கக உரம் இடாததால் குறைந்தே காணப்படுகிறது.
 • தொடர் அங்கக உரம் அளிப்பதால் மண்ணின் நீர் பிடிப்புத்தன்மை, துவார அளவு மற்றும் மண் விரிவு தன்மை அதிகரிக்கிறது. மேலும், மண்ணில் கரிமத்தின் அளவு, தொழுஉரம் மற்றும் அங்கக உரங்களை அளிப்பதால் அதிகரிக்கிறது.
 • மண் வளத்தை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும், உயிர் கரி விகிதத்தின் அளவும் அதிகரித்து காணப்படுகிறது.
 • பொதுவாக, தழை, மணி, சாம்பல் சத்துக்களையோ அல்லது தொழுஉரத்தையோ மண்ணில் தொடர்ச்சியாக அளிப்பதன் மூலம் நிலையான அதிக விளைச்சலும், மண்ணின் வளமும், பௌதீக வேதியியல் தன்மைகளும் மேம்படுகிறது.
 • மேலும் பயிருக்கு தேவையான தழை, மணி சாம்பல் சத்தின் அளவும் அதிகரித்து, மண்வளமும் மேம்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மானாவாரி உழவர்கள், தங்கள் நிலங்களில் பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி, சாம்பல் சத்துக்களையோ அல்லது தொழுஉரத்தையோ தொடர்ந்து ஒரு எக்டருக்கு 10 டன் இட்டு மண்வளம் காத்து, நிலையான பயிர் மகசூலை அதிகரிக்கலாம்.

மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை

 • பயிர் அறுவடை செய்தபின் மண்மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.
 • மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி மற்றும் பண்ணைக் கழிவுகள் ஆகியவற்றை கையினால் அப்புறப்படுத்தவேண்டும்.
 • மாதிரிகள் எடுக்கும்போது ஆங்கில எழுத்து 'V' வடிவம் போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கிவிட வேண்டும்.
 • பிறகு நிலத்தின் மேல் மட்ட பகுதியிலிருந்து 015 செ.மீ. ஆழம் வரை ஒரே பருமனில் அரை அங்குல கனத்தில் செதுக்கி மாதிரி சேகரிக்க வேண்டும்.
 • இவ்வாறாக குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.
 • மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அவற்றை நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு சேகரித்த மாதிரிகளை பிளாஸ்டிக் வாளியில் இட்டு நன்றாகக் கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு அரை கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.
 • மண் மாதிரிகளை பாலித்தீன் அல்லது துணிப்பையில் சேகரித்து மாதிரி விவர அட்டையில் பெயர் மற்றும் முகவரி, சர்வே எண் (அ) நிலத்தின் பெயர், பயிரிடப்போகும் பயிர் இரகம் (இறவை, மானாவாரி) மற்றும் வயலில் உள்ள (அ) பயிரில் தென்படும் பிரச்சனை விவரங்களுடன், உங்கள் மாவட்டத்திலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி பயன் பெறவும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை - மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் - கோயம்புத்தூர் - 641 003

2.95714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top