பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரதமரின் வேளாண் பாசனத்திட்டம்

பிரதமரின் வேளாண் பாசனத்திட்டம் (பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நம்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பு சுமார் 14 கோடியே பத்து லட்சம் ஹெக்டர். இதில் 45 சதவீத நிலங்களுக்கு மட்டுமே,  அதாவது சுமார் ஆறுகோடியே  ஐம்பது லட்சம் ஹெக்டர் நிலப்பரப்புக்கு மட்டுமே பாசன வசதி உள்ளது. பாசன வசதி இல்லாத பகுதிகளில் மழையை மட்டுமே நம்பி மேற்கொள்ளப்படும் சாகுபடி எல்லாமே நிச்சயமற்றவை ; மிக குறைவாக விளைச்சல் தருபவை. விவசாயிகளுக்கு உத்திரவாதமான பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்கள் விவசாயத் தொழில் நுட்பத்திலும்,  இடுபொருள்களிலும் கூடுதலாகச் செலவிட்டு, அதன் பயனாக உற்பத்தியைப் பெருக்கி,  அதிக ஆதாயத்தைப் பெற ஆர்வமாகவே இருக்கிறார்கள்.

எனவே, இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் உள்ள விவசாய நிலங்கள் அனைத்திற்கும் ஏதேனும் ஒரு உத்திரவாதமான பாசன வசதியை ஏற்படுத்தி தருவதே பிரதமரின் வேளாண் பாசனத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் "ஒவ்வொரு துளிக்கும் கூடுதல் பயிர்" என்ற உத்வேகத்துடன் விவசாயிகள் செயல்பட்டு,  அதனால் கிராமங்கள் வளம் பெறவேண்டும்.

நோக்கங்கள்

* மாவட்ட அளவில் அல்லது வருவாய்க் கோட்ட அளவில் நீர்ப் பாசனத் திட்டங்களை வரைந்து,  அவற்றைச் செய்லபடுத்துவதற்கான செலவுகளை ஒரு  குவியத்திற்குள் கொண்டுவருதல்.

* விவசாய நிலங்களுக்குப் பாசன நீர் கிடைப்பது உறுதி செய்யப் படுவதால்,  சாகுபடி செய்யும் பரப்பை அதிகரித்தல்.

* நீர்வள ஆதாரங்களை எல்லாம் ஒன்றிணைத்தும்,  விநியோக முறையையும் மேம்படுத்தி,  உசிதமான தொழில் நுட்பங்கள் மூலம் பாசன நீரைத் திறம்படப் பயன்படுத்துவதை உறுதிசெய்தல்.

* நிலத்தில் பாசனம் செய்யும் தருணத்திலும் தண்ணீர் வீணாவதைக்  குறைத்து,  அதிக நேரத்திற்கும் அதிக பரப்புக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வது.

* துல்லிய பாசன முறை மற்றும் அது போன்ற தண்ணீர் சிக்கன நுட்பங்களைப் பெருமளவில் விவசாயிகளைப் பின்பற்றச் செய்தல்.

* நீர்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மீண்டும் நீரைச் சேமிக்கும் திறனை அதிகரித்து நீண்டகாலத்திற்கான தண்ணீர் சேமிப்பு ஏற்பாடுகளைச் செய்தல்.

* மண்வளப் பாதுகாப்பு,  தண்ணீர் சேமிப்பு,  நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்துதல்,  பூமிப்பரப்பில் வழிந்தோடிக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுத்துச் சேமிப்பது ஆகிய அனைத்து விதமான பணிகளையும் ஒன்றிணைத்து,  மானாவாரி சாகுபடி நிலங்களை மேம்படுத்துதல்.

* எவ்விதமான பயிர்களை எந்த முறையில் சாகுபடி செய்யவேண்டும் என்றும்,  மழை நீரைச் சேமித்து,  நீரைத் திறம்படக் கையாள்வது குறித்தும் விவசாயிகளுக்கும், களப்பணியாளர்களுக்கும் அறிவுறுத்திப் பயிற்சி அளித்தல்.

* நகர்ப்புறங்களில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரைப் பாசனத்திற்கு பயன் படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிதல்.

* நீர்பாசனத்துறையில் தனியாரின் முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்தல்

செயல்படும் விதம்

1) 2015-16 ஆண்டு முதல்  2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு வேளாண் பாசனத் திட்டத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

2) தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும்

(i) மத்திய நீர் வளம் நதிகள் அபிவிருத்தி, கங்கைப் புனரமைப்பு அமைச்சகத்தின் கீழ் செயல் படும் முடுக்கிவிடப்பட்ட பாசனப் பயன் திட்டம் (AIBP),

(ii)மத்திய நிலவளத்துறை செயல்படுத்தும், ஒருங்கிணைந்த நீர்ப்பிடிப்பு மேலாண்மைத் திட்டம் (IWMP),

(iii) மத்திய விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை செயல்படுத்தும் நிலைபெறு வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழான பண்ணைப் பாசன நீர் மேலாண்மைத்திட்டம் ஆகிய மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைந்து இப்புதிய திட்டம் உருவாக்கபட்டுள்ளது.

3) பிரதமரின் வேளாண் பாசனத்திட்டம்,  ஒருகுறிப்பிட்ட பகுதியை மேம்படுத்த வேண்டும் என்ற அணுகுமுறையோடு செயல்படுத்தப் படும். இதன் படி மாநிலங்கள் ஐந்து முதல் ஏழாண்டுகள் காலத்திற்கு உத்தேசப் பயன் தரும் விதமாக மாவட்ட அளவில் அல்லது ஒண்டிய அளவில் பாசன திட்டங்களை வரையலாம். அவ்வாறு வரையப்பட்ட திட்டங்கள்  ஒப்புதலுக்குப் பிறகு நிறைவேற்றப்படும். மேலும் மாநிலங்கள் ஏற்கனவே உத்தேசித்திருந்த மாநில அளவிலான அல்லது மாவட்ட அளவிலான பாசனத்திட்டங்களுக்கும் இதன் மூலம் நிதி உதவி பெறலாம்.

4) வடகிழக்கு மாநிலங்கள் உள்பட  நாட்டின் அனைத்து மாநிலங்களும்,  யூனியன் பிரதேயசங்களும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளன.

5) பிரதமரின் தலைமையிலான தேசிய வழிகாட்டுக் குழு ஒன்றுக்கு இதற்கான கொள்கை விவரங்களையும் திட்டங்களுக்கான கட்டமைப்புகளையும் வழங்கும். நீதி ஆயோகின் துணைத் தலைவர் தலைமையிலான தேசிய செயலாக்கக் குழு,  பாசனத் திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும்.

6) மழைநீர் சேகரிப்பு,  பாசனநீர் வேளாண்மை,  சாகுபடி செய்யும் பயிர் வகைகளில் ஒழுங்கு ஆகிய விஷயங்களை விவசாயிகளுக்கும் களப்பணியாளர்களுக்கும் எடுத்துரைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள 2015-16 ஆம் ஆண்டிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பிரதமரின் வேளாண் பாசனத்திட்டத்தின் முக்கிய கூறுகள்

(அ) முடுக்கிவிடப்பட்ட பாசனப் பயன்திட்டம் (AIBP):

தேசிய அளவிலான பாசனத்திட்டங்கள் உள்பட,  தற்போது செயல்படுத்தப் பட்டுவரும் எல்லாவிதமான பெரிய மற்றும் சிறிய பாசனத் திட்டங்கள் அனைத்தையும் துரிதமாக நிறைவேற்றுவது.

(ஆ) ஒவ்வொரு நிலத்திற்கும் பாசனநீர் :

 • சிறிய  பாசனத் திட்டம் மூலமாக (நிலமட்டத்தில் அல்லது நிலத்தடியில் கிடைக்கும் நீரைக்  கொண்டு ) புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குதல்.
 • நீர்நிலைகளை மீட்டெடுப்பது,  தூர்வாருவது,  புனரமைப்பது போன்ற பணிகளும் பாரம்பரியமான நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன் மழை நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளையும் புதிதாக அமைப்பது.
 • பாசன வசதிபெறும் ஆயக்கட்டுப் பகுதிகளை மேம்படுத்துதல். நீர் ஆதார நிலையில் இருந்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்ற நிலம் வரையில் நீர் விநியோக முறையை உருவாக்கி பலப்படுத்துதல்.
 • அதிகபட்ச அளவு மழை பொழிகின்ற காலங்களில்,  மழைநீர் நிலப்பரப்பில் ஓடி வீணாகி விடுவதை தடுக்கத் தேங்கு குழிகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் வளத்தை அதிகரித்தல்.
 • நீர்நிலைகளில் கிடைக்கின்ற நீர் முழுவதும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற இடங்களில், நீர்மேலாண்மையையும் விநியோக முறையையும் மேம்படுத்தி,  முழு அளவில் நீர்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்வது. ஆயக்கட்டுப் பகுதிகளில் குறைந்தது பத்து சதவீதம் பகுதியை நுண்ணீர் பாசனமுறை அல்லது துல்லிய பாசனமுறைக்கு மாற்றுவது.
 • அதிக அளவில் நீர் கிடைக்கின்ற இடங்களில் இருந்து, அருகில் இருக்கும் நீர்ப் பற்றாக்குறையான பகுதிகளுக்கு நீரை எடுத்துச் சென்று பாசனத்திற்கு வழங்குவது.
 • நம் நாட்டின் பாரம்பரியமான நீர்நிலைகளை,  அதாவது ஜல்மந்திர் (குஜராத்), கத்ரி & குல் (இமாசல பிரதேசம்), ஜபோ (நாகலாந்து), ஏரி,கண்மாய், ஊருணி (தமிழ்நாடு), டோங்ஸ் (அசாம்), காடாஸ் & பண்ட்ஹாஸ் (ஒடிஸா மற்றும் மத்தியப்பிரதேசம் ) போன்றவற்றை சாத்தியப்படும் இடங்களில் புதிதாக உருவாக்குவதும், ஏற்கனவே உள்ளவற்றை புனரமைப்பாகும்.

(இ) ஒவ்வொரு சொட்டுக்கும் கூடுதல் பயிர் :

 • மாநில / மாவட்ட பாசனத் திட்டத்தைத் தயாரிப்பது, வருடாந்திரத் திட்டத்திற்கு அனுமதி அளிப்பது,  திட்டச் செயல்பாடுகளைக் கண்காணித்து நிருவகிப்பது.
 • மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்  திட்டத்தின் கீழ் நீர்நிலைகளில்  மேற்கொள்ளப்படும் பாய்கால் வசதி, வடிகால் வசதி,  வண்டல் போக்கு வசதி போன்ற வேலைகளுக்கு அனுமதிக்கப்படும் திட்டச்செலவின் உச்ச வரம்பான 40 சதவீதத்திற்கும் மேலாகும் செலவுகளுக்கு நிதிஅளித்தல்.
 • நீர் ஆதாரங்களை உருவாக்கும் பணிகளின் துணைப் பணியாக ஆழ்துளைக் கிணறு உள்ளிட்ட நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்
 • நிலத்தடி நீர்வளம் அதிகப்படியாக சுரண்டப்பட்டுவிட்டதாகவோ அல்லது சிக்கலான நிலையில் இருக்கிறது என்றோ அறிவிக்கப்படாத பகுதிகளிலும், ஒவ்வொரு நிலத்திற்கும் பாசனநீர் திட்டம், முடுக்கிவிடப்பட்ட பாசன பயன் திட்டம் போன்றவை செயல் படுத்தப்படாத பகுதிகளிலும் மட்டுமே இத்தகைய நுண்நீர்ப் பாசனச் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
 • கால்வாய்கள் முடிவடைகிற இடங்களில்,  இரண்டாம் கட்ட நீர்த்தேக்க வசதிகளை உருவாக்குதல், மழை காலங்களில் அல்லது வற்றாத  ஊற்றுகளில் கிடைக்கம் அபரிமிதமான நீரைச் சேமிக்க இவை உதவும்.
 • நீர் இறைப்பதற்கான டீசல்/மின்சார /சூரியசக்தி மோட்டார்களையும்,  நீரை எடுத்துச் செல்வதற்கான குழாய்களைப் பதிப்பதுமான பணிகள்.
 • அறிவியல் முறைப்படி நிலத்தின் ஈரத்தன்மையைத் தக்கவைப்பது மற்றும் மழை நீர் உள்ளிட்ட கிடைக்கும் நீர் வளங்களை உச்சபட்ச அளவுக்குப் பயன்படுத்துதல் குறித்து, விவசாயிகளுக்குப் புரிய வைப்பதற்கான பயிற்சித் திட்டங்களை நடத்துதல்.
 • நீர் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்காக விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதுடன், குறைந்த செலவில் விளக்கக் கையேடுகளையும் வெளியிடுவது,  மேம்பட்ட தொழில் நுடட்பப் பயன்பாடு,  விவசாயிகள்  அனைவருக்குமான பொதுவான பாசன வசதிகள் மூலம் நீர் மேலாண்மை போன்றவற்றைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்.
 • பாசன நுட்பங்கள், நீர் மேலாண்மை,  அறிவியல் முறைப்படி நிலத்தின் ஈரத்தன்மையைத் தக்கவைக்கும் உத்திகள் போன்றவற்றை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் விரிவாக்கப் பணியாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட துறைகளின்  நிபுணர்களின் மூலமாகப் பயிற்சி அளித்தல்
 • துல்லிய பாசன நுட்பங்கள், பண்ணையில் நேரடியான நீர் மேலாண்மை, சாகுபடிப் பயிர்களை வரிசைப்படி முறைப்படுத்துதல் முதலானவற்றை பின்னப்பற்றுவது பற்றி தகவல் தொழில் நுட்ப உத்திகளைக் கொண்டு தொடர்ந்து கண்காணித்து தேவைப்படுகின்ற இடங்களில் தலையிட்டுத் தவறுகளைச் சரிசெய்வது.

(ஈ) நீர்ப்பாதை அபிவிருத்தி

 • பூமிப்பரப்பில் வழிந்தோடும் நீரைப் பயனுள்ள வகையில் கையாள்வதும், நிலத்தின் ஈரத்தன்மையை மேம்படுத்தி, மண்வளத்தைப் பாதுகாப்பதுமான  பணிகள். மழைநீர்ச் சேகரிப்பு ஏற்பாடுகளும் வடிகால் ஏற்பாடுகளும் நிலத்தின்  ஈரத்தன்மையைத் தக்கவைப்பதற்கு உறு துணையாக இருக்கும் படி மேற்கொள்ளப்படும்.
 • மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படும் பின்தங்கிய பகுதிகளில் நீர் ஆதாரமாக உள்ள பாரம்பரியமான நீர்நிலைகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் புதுப்பித்தலும்,  புதிய நீர்நிலைகளை  உருவாக்குதலும்.

ஆதாரம் : http://pmksy.gov.in/

2.97457627119
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top