பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / வேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்

வேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

வேளாண்மை இலாபகரமானதுதான். அதற்கு நல்லதோர் மேலாண்மை வேண்டும். வேளாண்மையில் உற்பத்தித் திறனைக் கூட்டலாம். அதற்கும் தொழில் நுட்பப் பரிமாற்றம் தேவைக்கேற்ப வேண்டும். வேளாண் வணிகம் சிறந்ததுதான். தேவைக்கேற்ப வழங்குதலும், வழங்குவதற்கு ஏதுவான விலையும், விலை கிட்டுவதற்குரிய தரமும், தரத்திற்கேற்ற பல்நிலை அணுகுமுறைகளும் இடம் பெற்றிருக்கும் வரை. ஆனால் இன்றைய வேளாண்மையில் தமிழக வேளாண் பெருமக்களின் கருத்து என்னவெனில், "வேண்டாம் வேளாண்மை” என்பதாகும். ஏனென்றால், பாசன நீர் பற்றாக்குறை, பயிர் சாகுபடிச் செயல்பாடுகளில் போதிய ஆள் வசதியின்மை, தரமற்ற விதைகள், கன்றுகள், நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாகுபடிச் செலவினம், தொழில் நுட்பப் பரிமாற்றங்களில் தொய்வு, நிலையற்ற உற்பத்தித் திறன், விளைச்சல் நிலப்பரப்பில் ஏகபோக வீழ்ச்சி, விளை பொருட்களின் விலை வீழ்ச்சி மற்றும் விற்பனைத் தகவல் பரிமாற்றங்களில் தொய்வு நிலை போன்றவை முக்கியக் காரணங்களாகும்.

ஆனால் வேளாண்மை சிறந்தது, உயர்ந்தது என்ற முன்னோடி விவசாயிகளின் சிலரது உற்சாகக் குரல்களும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன. இதற்குக் காரணம், தன்னிடம் இருக்கின்ற இயற்கை ஆதாரங்களை மிகவும் நுணுக்கமாக திறம்படக் கையாண்டு வருவதால் மட்டுமே என்று சொன்னால் அது மிகையாகாது. என்ன பயிர், எக்காலச் சூழலில், எந்த நுட்பங்கள் மூலம் செய்திடலாமென்ற தெளிவான அணுகுமுறையும் தேவை. "உளுந்து விதைத்தவன் - இலாபத்தில் உயர்ந்து நிற்கலாம். பச்சைப் பயறு விதைத்தவன் - விளைச்சலில் பரிசுகளைக் கூடப் பெறலாம் முயற்சித்தால் முடியாதது ஏதுமில்லை" என்பதை சாதனையாளர்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.

இவை முன்னோடி விவசாயிகளுக்குப் பொருந்தும். ஆனால் பாமரனாகக் காட்சியளிக்கும் சிறு, குறு விவசாயிகளுக்குத் தான் தொழில் நுட்பப்பரிமாற்றங்களும், விளை பொருட்களின் விற்பனை விலைத் தகவல்களும், பாசனத்திற்கான நீரைப் பயன்படுத்தும் திறனும், போய்ச்சேரவேண்டும். சராசரியாக தமிழகத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் 0.9 எக்டர் நிலம் மட்டுமே உள்ளது. இந்த நிலத்தில் சிறப்பான உற்பத்தித் திறனைக் கொண்டுவர ஓர் ஒருங்கிணைந்த செயல்பாடு வேண்டும்.

ஒருங்கிணைந்த செயல்பாடு

ஒருங்கிணைந்த செயல்பாட்டினை எப்படிக் கொண்டு வருவது என்றால், சிறிது கடினம் தான். அதற்காக, கடினத்தைக் கடினம் கடினம் என்று சொல்லிக் கொண்டே இருப்பது வாழ்வினை நல்வழியில் செலுத்த முடியாமல் போக வழிவகுக்கும். எனவே மாற்று வழிகள் மற்றும் மாற்று அணுகுமுறைகளை நாடவேண்டும்.

இதுவரை தொழில் நுட்பப் பங்களிப்பினை, பரிமாற்றத்தினை வேளாண் பல்கலையும், வேளாண்மைத்துறையும் மட்டுமே செய்து வந்திருக்கின்றன. அதிலும், இடைப்பட்ட காலகட்டத்தில், ஓர் தொய்வு நிலை. இதன் விளைவால், உற்பத்தியிழப்பும், உற்பத்தித் திறன் குறைவும் தான் மிஞ்சியது. எனவே மாற்று வழிமுறையும், அணுகுமுறையும் வேண்டும். மாற்று வழிகளாகத் தெரிவது யாதெனில், உழவு சார்ந்த உழவர் துறைகளை ஒருங்கிணைக்க முயற்சிப்பது. அதாவது உழவரிடத்தில் ஆடுமாடுகளும் இருக்கும்; கோழிகளும் இருக்கும்; பருவகாலத்திற்கேற்ற பயிர் இரகங்களும் இருக்கும்; ஏரிருக்கும்; எருதிருக்கும்; பண்ணை இயந்திரங்களும் இருக்கும் ; இவைகளை உரிய நிலையில் ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் நுட்பம் மட்டும் இராது. எனவே அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, விவசாய சங்கங்கள் அமைத்து ஓர் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப ஆலோசனையினை வழங்கினால் உற்பத்தி பெருகும். அதற்கு வழிசேர்க்கத்தான் நீர்வள, நிலவளத் திட்டம்.

நீர்வள நிலவளத் திட்டம்

நீர்வள நிலவளத் திட்டம் (IAM WARM Project) முற்றிலும் மாறுபட்ட திட்டமே! பிற திட்டங்களின் தன்மை, செயல்பாடு, பயனளிப்பு இவைகளை இத்திட்டத்தோடு ஒப்பிடும் போது இதன் தன்மை, நோக்கம், செயல்பாடு, பயனளிப்பு ஆகியன மாறுபட்டதாயிருக்கிறது. எப்படியெனில், மேற்சொன்ன ஒருங்கிணைந்த செயல்பாடு இதனுள் விதைக்கப்பட்டிருக்கிறது.

இங்ஙனம் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் பங்கேற்க உறுதிபூண்டுள்ள துறைகள் பின்வருமாறு.

 1. நீர் வள ஆதார அமைப்பு (பொதுப் பணித்துறை)
 2. வேளாண்மைத் துறை
 3. வேளாண்மைப் பொறியியல் துறை
 4. தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை
 5. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
 6. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை
 7. கால்நடை மற்றும் மருத்துவப் பணிகள் துறை
 8. மீன்வளத் துறை

எட்டுத் திசையிலும் வாழ்கின்ற வேளாண் பெருமக்களின் வாழ்வுத் தரமுயர்த்த எட்டுத் துறைகளின் பங்களிப்பு ஏற்றம் நிறைந்ததாய் அமைய வேண்டி, ஒவ்வொரு துறை சார் தொழில் நுட்பமும் குறிப்பிட்ட ஆற்று துணைப் படுகைகளின் (Sub basin) பண்ணைகளில் சங்கமித்து உற்பத்தியை உயர்த்திட வழிவகுக்கும்.

உதாரணமாக தென்னைப் பண்ணை அமைக்க தரமான நாற்றுகளை வேளாண் பல்கலைக் கழகமும், வளர்ந்த மரங்களில் காய் பறிக்க மரமேறும் கருவியினை வழங்கிட வேளாண் பொறியியல் துறையும், கறவை மாடுகளின் தரமுயர்த்த செயற்கைக் கருவூட்டல் அணுகுமுறையும் மாடுகளுக்கேற்ற தீவனப் புல் சாகுபடி நுட்பம் தந்து தென்னை மர இடைவெளியில் ஊடுபயிராக வளர்த்திடும் நுட்பத்தினை வேளாண் துறை மற்றும் கால் நடைத் துறையும், நீர்த் தேவையினைப் பூர்த்தி செய்து சொட்டு நீர் பாசன அமைப்பினை வழங்கிட வேளாண் பொறியியல் துறையும், அறுவடை செய்த வேளாண் விளை பொருளுக்கு விற்பனை செய்திடும் விற்பனை வாய்ப்புகளையும், வழிமுறைகளையும் வகுத்துத்தர வேளாண் விற்பனைத் துறையும், நிலையான பாசன நீர் வழங்க நீர்வள ஆதார அமைப்பும், மின்சாரம் இல்லாக் காலங்களில் பாசனத்திற்கு வழி வகுக்க பண்ணைக் குட்டையும், இல்லத்து உணவுத் தேவைக்கு பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு செய்திடும் தொழில் நுட்பத்தினை வழங்கிட மீன் வளத்துறையும் என ஒருங்கிணைந்த செயல்பாட்டில் உயரும் உழவர் வாழ்க்கை.

நீர்வள நிலவளத் திட்டத்தின் தார்மீக நோக்கம்

விற்பனை வாய்ப்புகளை அதிகப்படுத்தவும், விளை பொருட்களை சேமித்து வைத்து, பக்குவப்படுத்தி தேவையான காலத்தில் விற்பனை செய்து இலாபம் ஈட்டவும் வேளாண் வணிக வளர்ச்சி அமைப்பு ஒன்றினை நீர்வள நிலவளத் திட்டத்தின் வாயிலாக உழவர் பெருமக்கள் பயனடையும் வண்ணம் ஏற்படுத்தி நிபுணர்களின் ஆலோசனைகளை பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வேளாண் வணிக வளர்ச்சி அமைப்பு (Agribusiness Development Facility)

இத்திட்டமானது தமிழகத்தில் சிறு மற்றும் நடுத்தர விவசாயத் தொழில் முனைவோரின் வளர்ச்சியினை வலுப்படுத்துதலை மையமாகக் கொண்டுள்ளது. மேற்கூறிய நோக்கத்திற்காக துவங்கப்படும் வேளாண்மை வணிக வளர்ச்சி அமைப்பானது கீழ்க்கண்ட மூன்று முக்கிய நோக்கங்களை உள்ளடக்கியது. அவையாவன

 • நிதி ஆதாரங்களை அதிகரிப்பது
 • தொழில் வளர்ச்சி சேவையினைப் பெருக்குவது
 • தொழில், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை சூழலை வளர்ப்பது

முதல் வேளாண்மை வணிக வளர்ச்சி அமைப்பிற்கான விரிவான வழிமுறைகள் வகுக்கப்படும். அப்பொழுது வேளாண் தொழில்களின் வளர்ச்சியினை அதிகரிப்பதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மூலம் நிதி கிடைப்பதை அதிகரிக்கலாம்.

நிதி ஆதாரங்களை அதிகரித்தல்

 • வங்கி நிதி பெறுவதற்கான ஓர் வரைவுத் திட்டத்தை சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொழுது அதனுடன் இணைந்து பணியாற்றி அதிக நிதியை தொழிற் சேவை வங்கிகளிடமிருந்து பெற்றுத் தர உதவுதல்.
 • அருகிலுள்ள வங்கிகளுடன் இணைந்து பணியாற்றி விவசாயத் தொழிலுக்கான கடன் மற்றும் கடன் பெறும் வழிமுறைகளை விவசாயத் தொழில் முனைவோருக்கு அளித்தல்.
 • மத்திய மற்றும் மாநில அரசுகளின் அறுவடை பின்சார் மற்றும் மதிப்புக் கூட்டு உதவித்திட்டங்களைத் தொகுத்து சிறிய தொழில் முனைவோர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உதவுதல்.

தொழில் வளர்ச்சி சேவைகளைப் பெருக்குதல்

தொழில் வளர்ச்சி சேவையினைப் பெருக்கிட பின் வரும் அணுகுமுறைகளைக் கூட்டாக கடைப்பிடித்தல் சிறப்பானதாக அமையும்.

 • தொழில் முறை பயிற்சித் திட்டங்கள்
 • தொழில்நுட்ப உதவி மற்றும் சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பயிற்சி
 • உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை வலுப்படுத்துதல்
 • சந்தைப்படுத்தலுக்கான வழிமுறைகள்
 • தகவல் தொழில் நுட்ப முயற்சிகள் மற்றும் இதர வழிகளில் அறிவைப்பரப்புதல்
 • தரம் மற்றும் பதப்படுத்தும் அளவீடுகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பயிற்சி
 • சிறந்த வேளாண்மை வழிமுறைகள்
 • ஏற்றுமதித் தரம் வாய்ந்த விளை பொருட்களில் நச்சுத் தன்மையின் அபாய அளவு மற்றும் முக்கிய தடுப்பளவு அறிதல்
 • ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஊக்குவித்தல்
 • அறுவடை பின்சார் தொழில் நுட்ப உதவி வழங்குதல்
 • அனைத்து அலுவலர்களின் (மேலிருந்து கீழ்வரை) ஒத்துழைப்பினைப் பெறும் வழிமுறைகள்

மேற்கூறியவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலப்பு திட்டங்கள் மூலம் அதிக தொழில் வளர்ச்சி சேவையை அடையலாம். பெரிய நிறுவனங்கள், விவசாயம் சார்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள், உற்பத்தி செய்வோரது அமைப்புகளுக்கான முன்னோக்கு மற்றும் பின்நோக்கு இணைப்புகள் விவசாய தொழில் வளர்ச்சி அமைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை சிறிய வேளாண் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வளமான மற்றும் நம் பிக்கையான தொழில் தொடர்புகளை ஏற்படுத்துவது இதில் முக்கிய அம்சமாகும். பண்ணை முதல் உணவுத்தட்டு வரை உள்ள சந்தை இடைவெளி மற்றும் இடர்பாடுகளை அறிதல் மற்றும் சரியான இடையீடுகளை அந்த மதிப்பு தொடரில் ஏற்படுத்துவது வேளாண் தொழில் வளர்ச்சி அமைப்பின் முக்கிய அம்சமாகும்.

வேளாண் வணிக வளர்ச்சி அமைப்பானது தனியார் தொழில் முனைவோருக்கு கீழ்க்கண்ட தொழில் நுட்ப உதவிகளை வழங்க முனைந்துள்ளது.

 • விளை பொருள்களின் மேம்பாடு மற்றும் மதிப்பூட்டல்
 • மேன்மையான தொழில் நுட்பங்களை பெறுதல்
 • பொலிவான, தரமான பையில் அடைத்தல்
 • வணிகம் புரிதல் மற்றும் பிற தேவையான உதவிகளை மேற்கூறியவாறு வழங்கி உற்பத்தித் திறனையும், போட்டி மனப்பான்மையையும் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை பிரிவுகளில் அதிகரிக்க வேளாண் தொழில் வளர்ச்சி அமைப்பு தனியார் தொழில் முனைவோருக்கு வழங்குகிறது.

பயிற்சித் தேவைகளுக்கேற்ப, வேளாண்மைத் தொழில் வளர்ச்சி அமைப்பு பல்கலைக் கழகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, தேவையான தகுதிகளை (Capacity Building) முன்னேற்ற உதவும். அந்தந்த பகுதியில் பணிகளை செய்யக்கூடியவர்கள் இல்லை என்றாலோ அல்லது இதனை செயல்படுத்த அதிக காலம் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலோ வேளாண்மை தொழில் வளர்ச்சி அமைப்பு, உள்நாடு மற்றும் வெளிநாடு அளவில் செயல்பட்டு தேவையானவற்றைப் பெற்றிட தக்க சூழ்நிலைகளைக் கடைப்பிடிக்கும்.

தொழில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை சூழல்

ஏற்கெனவே உள்ள செயல் திட்டங்களில் வேளாண் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள காரணிகளை அறிந்து அவைகளை சிறந்த முறையில் களையவும் இந்த வேளாண் தொழில் வளர்ச்சி அமைப்பு உதவுகிறது. மேலும் இந்த வேளாண் தொழில் வளர்ச்சி திட்டம் அதனுடைய உறுப்பினர்களுக்கு புதிய தொழில்களை நிறுவுவதிலும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலுக்கு உதவுவதிலும் துணை புரிகிறது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரை முன்னேற்றுவதை இந்த வேளாண்மை தொழில் வளர்ச்சி அமைப்பு முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல் படுகிறது. எனவே சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகள் இவ்வசதியினை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

வேளாண் வணிக மையம் (Agribusiness Centre)

இம்மையம் தற்பொழுதுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 12 முதல் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படும். இது ஒரு சிறிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் போல செயல்படும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு எடுத்து செல்லாமல் இம்மையத்திற்கே கொண்டு வந்து பலன் பெறலாம். இம்மையம் பாசனநீர் பயன்படுத்துவோர் சங்கத்தினரால் பராமரிக்கப்படும். இம்மையத்தில் உலர் களம், சேமிப்பு வசதி மற்றும் தரம் பிரிப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாது ஒரு சிறிய அலுவலகமும் அமைக்கப்படும்.

இங்கு ஈரப்பதத்தினை அளவிட ஈரமானியும், தரமான எடையினை உறுதி செய்ய எடை போடும் கருவியும், பிற உயிரினங்களாலும், சுற்றுச் சூழலாலும் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்க உன்னேஜ் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் இம்மையம் ஒரு வேளாண் வணிகம் மற்றும் தொழில் நுட்பத்திற்கான கல்வி மையமாகவும் (Knowledge Center) இயங்கும். விவசாயத்தைப் பொருத்த வரை விவசாயிகளின் சந்தேகங்கள், தொழில் நுட்பங்கள், வேளாண் வணிக ரீதியான கருத்துப் பரிமாற்றம் போன்றவைகளுக்காக வேளாண் வணிக மையம் வேளாண்மை விற்பனைத்துறை சார்பாக பாசன நீர் உபயோகிப்போர் சங்கத்திற்கு கட்டித்தரப்பட உள்ளது. எனவே, வாய்ப்புகளைப் பயன்படுத்திட மேற்கூறியதுறைகள் மூலம் முயற்சி செய்யலாம். அல்லது தகவல் தொடர்புகளுக்கு தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம் : நீர்வள நிலவளத் திட்டம், திட்ட இயக்ககம், பொதுப் பணித்துறை,

3.13636363636
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top