பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்

செம்மறி ஆடு வளர்ப்பவர்கள், மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய இனப்பெருக்க மேலாண்மை, நோய்த்தடுப்பு மற்றும் ஆட்டுக் கொட்டகை மேலாண்மை குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

மழைக்காலங்களில் இனப்பெருக்க மேலாண்மை

செம்மறி ஆடுகள் ஆண்டு முழுவதும் பருவம் அடைந்து குட்டிகள் ஈன்ற போதிலும், குறிப்பிட்ட காலங்களில்தான் அதிக ஆடுகள் பலமுறை சினைப் பருவத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. பொதுவாக ஜூன் மாதத்தில் இருந்தே தென்மேற்குப் பருவமழை தொடங்கி விடுவதால் பெரும்பாலான ஆடுகள் சினைப்பருவத்திற்கு வரும். எனவே மழைக்காலத்திற்கு முன்பாகப் பெட்டை ஆடுகளின் உடல் ஆரோக்கிய நிலையைச் சீர்செய்ய வேண்டும். ஏற்கனவே குட்டி ஈன்று குட்டியை பிரிந்த ஆடுகளும் மற்றும் புதிய இளம்பெட்டை ஆடுகளும் நல்ல முறையில் கருத்தரிக்க சத்துக்கள் நிறைந்த அடர்தீவனமிடல் வேண்டும்.

அடர்தீவனக் கலவையின் அளவினை 200-250 கிராம் வரை அளித்து அவற்றின் எரிசக்தி மற்றும் புரதச்சத்து தேவையினைப் பூர்த்தி செய்தல் வேண்டும். இவ்வாறு அளிக்கும் பொழுது, சினை முட்டைகள் நன்கு வளர்ச்சி அடைவதுடன் ஆடுகளின் உடல்நிலை மேம்பட்டுச் சினைபிடிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும், குட்டி ஈனும் திறனும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மழைக்காலங்களுக்கு முன்பாக ஆடுகளைச் செழுமை செய்து இனப்பெருக்கம் செய்தல் அவசியமான ஒன்றாகும்.

மழைக்காலங்களில் நோய்த்தாக்கம் மற்றும் பராமரிப்பு

ஆடுகள் நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரித் தாக்குதல்களினால் பல வகையான நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இதனால் ஆடுகளின் வளர்ச்சித்திறன் பாதிப்படைவதுடன் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே ஆடுகளைத் தாக்கக்கூடிய நோய்களில் இருந்து காக்க, மழைக்காலங்களில் குடற்புழு நீக்கம் செய்தல் மற்றும் தடுப்பூசி செலுத்தி உற்பத்தி நிலையை மேன்மை அடைய செய்தல் முக்கியமான ஒன்றாகும்

ஆடுகளைத் தாக்கும் நோய்களில் குடற்புழு நோய் மிக முக்கியமானதாகும். குடற்புழுக்களில் தட்டைப்புழு, நாடாப்புழு மற்றும் உருண்டைப்புழுக்கள் என மூன்று வகைகள் உள்ளன. பொதுவாகக் குடற்புழுக்கள் பாதிக்கப்பட்ட ஆடுகளில் இறப்பை ஏற்படுத்தாவிடினும் உற்பத்தித் திறனை மிக அதிக அளவில் குறைத்து விடும். ஆடுகளில் புழுக்களின் தாக்கத்ததைச் சாணப் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறிந்து கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி சுழற்சி முறையில் குடற்புழு நீக்க மருந்துகளை கொடுக்கலாம். சில வகை உண்ணிகள் தங்கள் வாழ்க்கைச் சுழற்சிக்கு ஒரே ஒரு கால்நடையை நம்பியுள்ளன. ஆனால், சிலவகை உண்ணிகளின் வாழ்க்கைச் சுழற்சி முடிவுற ஒன்றிற்கும் மேற்பட்ட கால்நடைகள் தேவைப்படுகின்றன. மென்னுண்ணிகள் தரை மற்றும் சுவர்களில் காணப்படும் வெடிப்புகள், மரப்பட்டைகளின் அடியில், மண் தரை, மணல் அருகிலுள்ள நிழலான பகுதிகள், மணல் குழிகள், கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தும் மணல்பரப்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் ஆகிய இடங்களில் காணப்படும். வன்னுண்ணிகள் கால்நடைகளின் உடலில் காணப்படும்.

உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்

1. இரத்த இழப்பு

உண்ணிகள் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன. ஒவ்வோர் உண்ணிக்கும் தன் வாழ்நாளைப் பூர்த்தி செய்யச் சுமார் 30 சொட்டு இரத்தம் தேவைப்படுகின்றது. நூற்றுக்கணக்கான உண்ணிகள் கால்நடைகளைக் கடித்து இரத்தம் குடிப்பதனால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இதனால் கால்நடைகள் எடை குறைந்தும், வளர்ச்சி குன்றியும் காணப்படும். சில சமயங்களில் அதிக உண்ணிப் பாதிப்புக்கு உள்ளாகும்போது இறப்பும் ஏற்படுகிறது.

2 உறுத்தல் உண்ணிகள்

கால்நடைகளைக் கடிப்பதனால் கால்நடைகளுக்குப் பெரும் உறுத்துதல் ஏற்படுகிறது. இதனால் அவை தீவனம் உட்கொள்வதில் கவனம் செலுத்தாது. இதனால் பால் உற்பத்தி, உடல் எடை குறைந்துவிடுகிறது.

3. பக்கவாதம்(உண்ணி வாதம்)

உண்ணிகளின் உமிழ்நீரில் உள்ள நச்சுப் பொருள்கள் கால்நடைகளைக் கடிக்கும்போது கால்நடைகளின் உற்பத்தித் திறன் பாதிப்படைகிறது. கடின உண்ணிகள் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருவிதப் பக்கவாதத்தை உண்டாக்குகின்றன. இதனால் நரம்பு மண்டலப் பாதிப்பு ஏற்படுகிறது. சுவாச மண்டலத்திலுள்ள தசைகள் செயலிழந்து போவதனால் இறப்பும் ஏற்படுகிறது. பக்கவாதத்தின் தீவிரம் உண்ணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் அவை இரத்தம் உறிஞ்சும் நேரத்தைப் பொறுத்தும் இருக்கும்.

4. காயங்கள்

உண்ணிகள் கால்நடைகளைக் கடிக்கும் போது அவற்றின் வாய்ப்பகுதிகள் தோலைக்  காயப்படுத்துகின்றன. உண்ணிகள் கால்நடைகளை விட்டு வெளியேறும்போது கடித்த இடத்தில் காயம் உண்டாகிப் புண்கள் ஏற்படுகின்றன. மேலும் இந்தக் காயங்கள் மூலம் கிருமிகள் உடலினுள் சென்று பல உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கின்றன.

5. ஈப்புழு நோய்க்கு வழிவகுத்தல்

உண்ணிகளால் ஏற்படும் காயங்கள் ஈக்களைக் கவர்ந்து ஈர்ப்பதனால் கால்நடைகளில் ஈப்புழு நோய் ஏற்படுகிறது.

6. வால் பகுதி இழப்பு

உண்ணிகள் கொத்து கொத்தாக வாலின் நுனிப்பகுதியில் காணப்படும்போது, அவை வாலின் நுனிப்பகுதியை முற்றிலும் கடித்துச் சேதப்படுத்துகின்றன. இதனால் அந்தப் பகுதி இல்லாமல் போய்விடுகின்றது. இதனால் கால்நடைகள் தங்களின் வாலின் நுனிப்பகுதியால் ஈக்களை விரட்டுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது.

7. தோல் பாதிப்பு

உண்ணிகளின் வாய்ப்பகுதி தோலைத் துளைத்துக்கொண்டு செல்வதால் தோலில் அடையாளங்கள் உண்டாகிவிடுகின்றன. இந்த அடையாளங்கள் தோலின் மதிப்பை வெகுவாகக் குறைத்துவிடுகின்றன.

பாதிப்புக்குள்ளான தோலைப் பதப்படுத்தவும் முடிவதில்லை. இவை தோல் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுவதில்லை. ஆதலால், மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

உண்ணிகளால் ஏற்படும் மறைமுகப் பாதிப்புகள்

உண்ணிகள் மேற்கூறிய நேரடிப் பாதிப்புகளை உண்டாக்குவது மட்டுமல்லாது பலவித நோய்களையும் பரப்புகின்றன. நோய்களைப் பரப்புவதில் உண்ணிகள் கொசுக்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளன. உலகின் 80 விழுக்காடு கால்நடைகள் உண்ணிகள் பரப்பும் நோய்களால் தாக்கப்படுவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

உண்ணிகளால் பரப்பப்படும் நோய்கள்

மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகளில் இரத்த நீர்க்காய்ச்சல், உண்ணிக் காய்ச்சல், பித்தப்பை நோய்களையும் நாய்களில் இரத்த நீர்க்காய்ச்சல், எர்லிகியோஸிஸ், ஹெப்படோசூனோஸிஸ் போன்ற நோய்களையும் பரப்புகின்றன.

உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்

  • உண்ணிகள் மேற்கூறிய நேரடிப் பாதிப்புகளை உண்டாக்குவதுடன், நோய் நுண்மப் பரப்பிகளாகவும் செயல்படுவதனால் அவற்றைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்துவது இன்றியமையாதது. உண்ணிகளின் வாழ்விடங்களை அறிந்து அதற்கேற்ப அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். கோழிகளின் தங்குமிடங்களில் காணப்படும் உடைப்புகள், வெடிப்புகளை வெப்ப நிலையில் உள்ள தார் மூலம் அடைத்தல் வேண்டும். மருந்துக் கலவைப் புகை மூட்டம் மூலமும், தீ உமிழ் துப்பாக்கி மூலமும் இந்த உண்ணிகளை அழிக்கலாம்.
  • கடின உண்ணிகளைப் பொறுத்தவரையில் தரையில் காணப்படும் இளம் உண்ணிகள் இளம் பருவ நிலைகளையும் கால்நடைகளின் உடலில் காணப்படும் உண்ணிகளின் பருவ நிலைகளையும் நாம் கட்டுப்படுத்துவது அவசியம். உண்ணி நீக்க மருந்துகளைக் கால்நடைகளின் உடலில் தெளிப்பான் மூலமாகவோ அல்லது மருந்து கலந்த நீரைத் தொட்டியில் நிரப்பி அதில் கால்நடைகளை அமிழ்த்தி எடுத்தும் உண்ணிகளை நீக்கலாம்.
  • உண்ணிகளைக் கட்டுப்படுத்த வேதிப் பொருள்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகளைக் கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட அளவு மருந்தை நீரில் கலந்து தெளித்தோ அல்லது மருத்துவக்குளியல் மூலமாகவோ பயன்படுத்தலாம். முதலில் கால்நடைகளை நீரில் நனைத்துவிட்டுப் பின்னர் உண்ணி நீக்க மருந்தைத் தெளித்துக் குறிப்பிட்ட நேரம் கழித்துக் குளிப்பாட்டுதல் அவசியம்.
  • உண்ணிகளைக் கட்டுப்படுத்தப் பல வேதிப்பொருள்கள் காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பைரீதிராய்டு வகை வேதிப்பொருள்கள் மிகவும் பயனுள்ளவையாகவும் நச்சுத்தன்மை குறைவாக உள்ளதாகவும் கண்டறிப்பட்டுள்ளது. இந்த வகை மருந்துகளான டெல்டாமெதிரின், புளூமெதிரின், சைப்பர்மெதிரின் போன்றவை உண்ணிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கார்பாரில், புரோபாஸர், அமிட்ராஸ், பிப்பேரானில் ஆகிய மருந்துகளும் உண்ணிகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஐவர்மெக்டின், டோராமெக்டின் மருந்துகளும் உண்ணிகளைக் கட்டுப்படுத்துவதில் வல்லவை.
  • இவை ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன. உண்ணி நீக்க மருந்துகளை அளிக்கும்போது ஒரே மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் பலவித உண்ணிநீக்க மருந்துகளைச் சுழற்சி முறையில் பயன்படுத்துதல் வேண்டும். இதனால் உண்ணிகள் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்புச்சக்தியை வளர்த்துக்கொள்வதனைத் தடுக்கலாம். உண்ணிகளால் பாதிப்புக்குள்ளான மேய்ச்சல் நிலங்களை உழுதுவிடவோ அல்லது எரித்துவிடவோ செய்தல் வேண்டும்.
  • இப்போது உண்ணி நீக்க மருந்துகள் தடவப்பட்ட காது வளையங்கள், காதுப்பட்டைகள், கழுத்துப்பட்டைகள் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு உண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம். இம்முறையில் மருந்துகள் சிறிது சிறிதாக உடலில் உட்கொள்ளப்படுவதனால் இவற்றின் உண்ணிகளைக் கொல்லும் திறன் அதிக நாள்கள் காணப்படும்.
  • தற்பொழுது உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகளில் உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • உண்ணிகளைக் கட்டுப்படுத்தப்படும் வேதிப்பொருள்களால் சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுவதனாலும் உண்ணிகள் இந்த வேதிப்பொருள்களுக்கெதிராக எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்திக் கொள்வதாலும் தற்போது வேதிப்பொருள்கள் அல்லாத மற்ற முறைகளில் ஆராய்ச்சியாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இவற்றில் உயிரியல் முறைகள், மூலிகைச் செடிகள், சவுண்டல், முயல் மசால் போன்றவற்றை வளர்த்து உண்ணிகளைக் கட்டுப்படுத்துதல், உண்ணிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் அடங்கும்.
  • உண்ணிகள் வராமல் கால்நடைகள் மற்றும் பண்ணையைச் சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியம். உடலைத் தினமும் தேய்த்துவிடுதல் மற்றும் உரோமப்பகுதிகளைத் தினமும் சுத்தம் செய்தல் மூலம் உண்ணிகளைக் கண்டுபிடித்து அழித்து அவற்றைக் கட்டுப்படுத்தலாம். மேற்கூறிய வழிகளில் உண்ணிகளைக் கட்டுப்படுத்தியும் அவற்றினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தியும் பண்ணையாளர்கள் தங்களின் இலாபத்தை அதிகரிக்கலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை

ஆதாரம் : கால்நடைக்கதிர் மாத இதழ்

3.01092896175
ராமகிருஷ்ணன் Dec 23, 2017 09:22 PM

மிகவும் நல்ல விஷயம் தான்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top