மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பு
- கறவை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பதில் இந்தியாவில் வெவ்வேறு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன
- தொன்று தொட்டு அமைக்கப்படும் மாட்டுக்கொட்டகைகள் தேவைக்கேற்பவும், கிடைக்கும் மூலப்பொருட்களுக்கேற்றவாறும், விவசாயிகளின் விருப்பத்திற்கேற்றவாறும் அமைக்கப்படுகின்றன
- கொட்டகைகளின் கட்டிட வடிவமைப்பு, கட்டடங்கள் வடிவமைக்கப் பயன்படும் பொருட்கள் போன்றவற்றைப் பொருத்து மாடுகளுக்குத் தேவைப்படும் ஏற்ற சூழ்நிலை அமையும்
- நன்றாக வடிவமைக்கப்படும் கால்நடைக்கொட்டகைகள் மாடுகளுக்கு வெப்பத்தால் ஏற்படும் அயற்சியைக் குறைத்து தீவன எடுப்பை அதிகரித்து, பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திறனை அதிகரிக்கின்றன
- இந்தியாவில் நிலவும் பல்வேறு விதமான தட்பவெப்ப சூழ்நிலைகள், பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கறவை மாடுக்களுக்கேற்ற கட்டிடங்களை அமைப்பது இயலாததாகும்
- எனவே, கறவை மாடுகளுக்கேற்ற கொட்டகைகள் கீழ்க்கண்ட இரண்டு முறைகளில் அமைக்கப்படுகின்றன
திறந்த வெளி வீடமைப்பு
இந்த வகை வீட்டமைப்பில் சிகிச்சசையளிக்கும் மற்றும் பால் கறக்கும் நேரத்தைத் தவிர மாடுகள் திறந்தவெளியில், நாள் முழுவதும் பராமரிக்கப்படுகின்றன
இம்முறையில் மாடுகளுக்கு மழை, அதிகப்படியான வெயில் மற்றம் குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்க கொட்டகை அமைக்கப்படுகிறது
பால் கறக்கும் நேரத்தின் போது, பால் கறக்கும் கொட்டகையில் மாடுகளைக் கட்டி அவற்றுக்கு பொதுவான தீவனத் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டியில் தீவனம் மற்றும் தண்ணீரை அளிக்கவேண்டும்
மாடுகள் பராமரிக்கப்படும் திறந்தவெளியினைச் சுற்றிலும் கம்பி வேலி அல்லது சுவர் அமைக்கப்பட்டு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன
நன்மைகள்
- பண்ணையினை அமைக்கும் செலவு குறைவு
- எதிர்காலத் தேவைக்கு பண்ணையினை விரிவாக்கம் செய்வது எளிது
- இந்த முறை வளர்ப்பில் மாடுகள் சுற்றித் திரிவதால் அவற்றுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடும்
- மாடுகளை சுத்தமாக வைத்திருக்க முடியும்
- எல்லா மாடுகளுக்கும் பொதுவான தீவனம் மற்றும் தண்ணீரை அளிக்கமுடியும்
- இம்முறையில், தனியாக கொட்டகையில் வைத்து, மாடுகளிலிருந்து பால் கறக்கப்படுவதால் சுத்தமான பால் உற்பத்தியினை பெறலாம்
- மாடுகள் சினைப் பருவத்தினை அடைந்திருப்பதை எளிதில் கண்டறியலாம்
- இவ் வகை பராமரிப்பில் சாதாரணமாக மாடுகளுக்குத் தேவைப்படும் இடத்தின் அளவில் வைத்திருக்கும் மாடுகளை விட 10-15 சதவிகிதம் அதிக எண்ணிக்கையிலான மாடுகளை குறைந்த காலத்திற்கு வைத்து பராமரிக்கமுடியும்.
தீமைகள்
- அதிக மழை பெய்யும் இடங்களிலும், அதிக பனிப்பொழிவு உள்ள இடங்களான இமயமலைப் பிரதேசங்களிலும் இந்த வகை பண்ணை அமைப்பு ஏற்றதல்ல
- இம்மாதிரியான பண்ணை அமைப்புக்கு அதிகப்படியான இடம் தேவை
- தீவனம் பொதுவாக அளிக்கப்படுவதால் மாடுகளுக்கிடையே தீவனத்திற்கு போட்டி ஏற்படும்
- ஒவ்வொரு மாட்டையும் தனியாக பராமரிப்பது கடினம்
- பால் கறக்கும் மாடுகளுக்கு தனியாக பால் கறக்கும் இடம் தேவை
முறையான கொட்டகை அமைப்பு
- இந்த முறை வீடமைப்பில், மாடுகள் கொட்டகையில் கட்டி பராமரிக்கப்படுகின்றன
- ஒரே கொட்டகையில் மாடுகளுக்குத் தீவனம் அளிக்கப்பட்டு பால் கறக்கப்படுகிறது
- இவ்வகை கொட்டகைகளில் முழுவதும் கூரை வேயப்பட்டு, பக்கவாட்டுச் சுவர்களில் சன்னல்கள் பொருத்தப்பட்டு, போதுமான அளவு காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்குமாறு அமைக்கப்படுகிறது
- இவ்வகை வீடமைப்பு குளிர் பிரதேசங்களுக்கும், அதிக மழை பொழியும் இடங்களுக்கும் ஏற்றது
கறவை மாட்டுப்பண்ணையில் தேவைப்படும் பல்வேறு கட்டிடங்கள்
கறவை மாட்டுப்பண்ணையில் கீழ்க்காணும் பல்வேறுவிதமான வடிவமைப்புகள் தேவை
- தீவனம் கொண்டு செல்லும் பாதை
- தீவனத்தொட்டி
- நிற்கும் இடம்
- கழிவுநீர் வாய்க்கால்
- பால் கறக்கும் இடம்
- முக்கியமான கட்டிடங்கள்
- கறவை மாட்டுக் கொட்டகை
- பால் கறக்கும் இடம் அல்லது கொட்டகை
- பால் கறக்கும் இடம் அல்லது கொட்டகை
- கன்றுக் கொட்டகை
- பால் வற்றிய மாடுகளுக்கான கொட்டகை
- காளை மாடுகளுக்கான கொட்டகை
- நோயுற்ற மாடுகளுக்கான கொட்டகை
- புதிதாக வாங்கிய மாடுகளை தனியாக பராமரிக்கத் தேவையான கொட்டகை
- இதர கட்டிடங்கள்
- சேமிப்பு அறை
- பால் வைக்கும் அறை
- தீவனக் கொட்டகை (வைக்கோல் அல்லது இதர தீவனக் கொட்டகை)
முக்கியமான கட்டிடங்கள்
அ. கறவை மாட்டுக்கான கொட்டகை
கறவை மாட்டுக் கொட்டகையில் கீழ்வரும் பகுதிகள் இருக்கவேண்டும்
- தீவனம் எடுப்பதற்கான வழி
- தீவனத் தொட்டி
- மாடுகள் நிற்பதற்கான இடம்
- கழிவு நீர் வெளியேறும் வாய்க்கால்
- பால் கறக்கும் பகுதி
பண்ணையில் பராமரிக்கப்படும் மாடுகளின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றை பராமரிக்கலாம்
ஒரு வரிசை அமைப்பு
இந்த வகை அமைப்பில் 12-16 மாடுகளைப் பராமரிக்க முடியும்
இரு வரிசை அமைப்பு
பண்ணையில் 16க்கும் மேற்பட்ட மாடுகள் இருப்பின் இந்த வகை அமைப்பில் கட்டி மாடுகளைப் பராமரிக்கலாம்
இரு வரிசை அமைப்பில் 50 மாடுகள் வரை ஒரு கொட்டகையில் கட்டி பராமரிக்க முடியும்
இரண்டு கொட்டகைகளுக்கும் இடையில் 30 அடிக்கு மேல் இடைவெளி இருக்கவேண்டும் அல்லது கட்டிடத்தின் உயரத்தில் இரண்டு மடங்கு அளவுக்கு இடைவெளி இருக்கவேண்டும்
இரு வரிசை அமைப்பில் இரண்டு முறைகள் உள்ளன. அவையாவன
1. வால் நோக்கிய அமைப்பு அல்லது முகப்பகுதி வெளியில் இருக்கும் அமைப்பு
நன்மைகள்
- இம்முறை கொட்டகை அமைப்பினை சுத்தம் செய்வதும், மாடுகளில் பால் கறப்பதும் எளிது
- மாடுகளில் பால் கறப்பதை மேற்பார்வையிடுவதும் இம்முறை கொட்டகை அமைப்பில் எளிது
- இம்முறை வீட்டமைப்பில் மாடுகளுக்கிடையில் நோய்கள் பரவுவதும் குறைவு
- மாடுகளுக்கு கொட்டகையின் வெளிப்பகுதியில் இருந்து சுகாதாரமான காற்று கிடைக்கிறது
2. முகம் நோக்கிய அமைப்பு அல்லது முகப்பகுதி உள்ளே நோக்கும் அமைப்பு
நன்மைகள்
- மாடுகளைக் கொட்டகைக்குள் ஓட்டுவது எளிது
- மாடுகளுக்குத் தீவனம் அளிப்பதும் எளிது
- சூரிய ஒளி நேரடியாக இவ்வாய்க்கால்களில் விழுவதால் கழிவு நீர் செல்லும் வாய்க்கால்களை சுத்தப்படுத்துவதும் எளிது
- மாட்டுக்கொட்டகையினைப் பார்வையிடும் பார்வையாளர்கள் எளிதில் கொட்டகையினை பார்வையிடலாம்
தீமைகள்
- மாடுகளைப் பால் கறக்கும்போது மேற்பார்வையிடுவது கடினம்
- மாடுகளுக்கிடையே நோய்கள் பரவும் வாய்ப்பும் அதிகம்
ஆ. பால் கறக்கும் இடம்
- பால் பண்ணையில் சுற்றிலும் மூடப்பட்ட, பால் கறப்பதற்கென்றே தனியாக உள்ள இடம் பால் கறக்கும் இடமாகும்
- இப்பகுதி பண்ணையில் நடுவில் இருக்குமாறு அமைக்கப்பட்டு, பண்ணையின் இதர கட்டிடங்கள் இதனைச் சுற்றிலும் அமையுமாறு இருக்கவேண்டும்
- மாடுகள் தனியாக நின்று, பால் கறப்பதற்கேற்ற வகையில், பால் கறக்கும் இடத்தில் தனித்தனி பகுதிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறான பால் கறக்கும் அறை போன்ற இடங்கள் பண்ணையிலுள்ள மாடுகளின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவிகிதம் இருக்கவேண்டும்
- மாடுகளுக்கு பால் கறக்கும்போது, அவைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மொத்தமாக பால் கறக்கவேண்டும்
பால் கறக்குமிடத்தின் நீள அகலங்கள்
- மாடுகள் நிற்கும் இடத்தின் நீளம் - 1.5-1.7 மீட்டர்
- மாடுகள் நிற்கும் இடத்தின் அகலம் – 1.05 -1.2 மீட்டர் (நிற்கும் இடத்தின் நீளத்தில் 80 சதவிகிதம்)
- நடுவிலுள்ள நடக்கும் பகுதியின் அகலம் – 1.5-1.8 மீட்டர்
- தீவனத் தொட்டியின் அகலம் – 0.75 மீ
- கழிவு நீர் வெளியேறும் வாய்க்காலின் அகலம் – 0.3 மீ
இ. கன்று ஈனுவதற்கான கொட்டகை
- கன்று ஈனும் தேதிக்கு 2-3 வாரங்களுக்கு முன்பாக சினை மாடுகளை கன்று ஈனும் கொட்டகையில் கட்டி வைத்து பராமரிக்கவேண்டும்
- மூன்று மீட்டர் அகலமும், 4 மீட்டர் நீளத்துடன் கூடிய 12 சதுர மீட்டர் பரப்பளவில் கன்று ஈனும் நிலையிலுள்ள மாடுகளை பராமரிக்க கொட்டகையினை அமைக்கவேண்டும்
- பண்ணையாளரின் வீட்டிற்கு அருகில் கன்று ஈனும் கொட்டகையினை அமைப்பதால், பண்ணையாளர் மாடுகளை மேற்பார்வையிடுவது எளிதாக இருக்கும்
ஈ. கன்றுகளுக்கான கொட்டகை
- இளங் கன்றுகளை தனியாக பராமரிப்பதற்கு கன்று கொட்டகை அவசியமாகும்ம்
- பால் கறக்கும் கொட்டகை அல்லது இடத்திற்கு அருகில் கன்றுக் கொட்டகை அமைக்கவேண்டும்
- மேற்கூறியவாறு கன்றுக் கொட்டகையினை அமைப்பதால் கன்றுகளை அவற்றின் தாய் மாடுகளிடம் எளிதில் அழைத்துச் செல்ல முடியும்
- அதிக எண்ணிக்கையிலான கன்றுகள் பண்ணையில் இருந்தால், கன்றுகளுக்கென தனியாக ஒரு பெரிய கொட்டகையினை, மாடுகளை பால் கறக்கும் இடத்தற்கு அருகில் அமைக்கவேண்டும்
உ. இளம் மாடுகள் அல்லது கிடேரிகளுக்கான கொட்டகை
- கிடேரிக் கன்றுகளை தனியாக பராமரிப்பதற்கு இக் கொட்டகை அவசியம்
- ஆறு மாத வயதிற்கு மேல், இனப்பெருக்க வயதிற்குள் உள்ள கிடேரிக் கன்றுகளை, பால் ஊட்டும் கன்றுகளிலிருந்து தனியாக பிரித்து வளர்க்க வேண்டும்
- அதிக எண்ணிக்கையில் இளங்கிடேரிகள் இருந்தால், அவைகளை வயதிற்கேற்றவாறு பிரித்து தனியாக வளர்க்கவேண்டும்.
ஊ. பால் வற்றிய மாடுகளுக்கான கொட்டகை
- பெரிய பண்ணைகளில், பால் கறக்கும் மாடுகளும், பால் வற்றிய மாடுகளையும் தனியாக பராமரிக்க வேண்டும்
- கொட்டகையின் மூடப்பட்ட பகுதியிலுள்ள தரைப்பகுதி, சிமெண்ட் கான்கிரீட்டினால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
- நம் நாடான இந்தியாவில் இருக்கும் சிறிய பண்ணைகளில், பால் வற்றிய மாடுகளும், பால் கறக்கும் மாடுகளும் ஒன்றாக கட்டி பராமரிக்கப்படுகின்றன
- பொதுவாக பண்ணையிலுள்ள மாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி மாடுகள் பால் வற்றி சினையாகவோ அல்லது பால் வற்றிய மாடுகளாகவோ இருக்கும்.
எ. காளை மாட்டுக் கொட்டகை
- காளை மாடுகளை தனியாக பண்ணையில் பராமரிக்க இக்கொட்டகை தேவைப்படும்
- பண்ணையின் ஒரு கடைக்கோடியில் காளை மாட்டுக் கொட்டகை அமைக்கவேண்டும்
- ஒவ்வொரு காளைக்கும் தனியாக கொட்டகை இருக்கவேண்டும்
- இயற்கை முறை இனவிருத்தி அல்லது காளை மாடுகளைப் பயன்படுத்தி இனவிருத்தி செய்யும் முறையில் பண்ணையிலுள்ள ஒவ்வொரு 50 மாடுகளுக்கும் ஒரு காளை மாட்டினை வைத்திருக்கவேண்டும்
- பண்ணையில் மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டு இனவிருத்தி செய்தால் காளைகளை பண்ணையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
- காளை மாட்டுக் கொட்டகை 3 X 4 மீட்டர் அளவு மூடிய பகுதியுடனும் , 120 சதுர மீட்டர் திறந்த வெளியுடன் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும்.
ஏ. நோயுற்ற மாடுகளுக்கான கொட்டகை
- நோயற்ற மாடுகளிலிருந்து, நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளைத் தனியாக பிரித்து பராமரிப்பதன் மூலம் நோயற்ற மாடுகளுக்கு நோய் பரவுவதைத் தவிர்க்கலாம்
- இந்த கொட்டகை பண்ணையின் ஒரு மூலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வதால், மற்ற பண்ணையிலுள்ள மாடுகள் இப்பகுதியில் செல்வதை தடுக்க முடியும்
ஐ. புதிதாக வாங்கிய மாடுகளை தனியாக பராமரிக்கத் தேவையான கொட்டகை
- பண்ணையில் நுழைவு வாயிலுக்கருகில் இந்த கொட்டகையினை அமைக்கவேண்டும்
- புதிதாக வாங்கப்பட்ட மாடுகளை, பண்ணைக்குள் நுழையும்போது இந்த கொட்டகையில் கட்டி 30 முதல் 40 நாட்களுக்கு தனியாக கட்டி, நோய் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்
2.இதர கட்டிடங்கள்
அ. சேமிப்பு அறை
சேமிப்பு அறையின் நான்கு புறமும் மூடப்பட்டு, எலிகள் புகாதவாறு அமைக்க வேண்டும்
கான்கிரீட்டினால் ஆன ஒரு சேமிப்பு அறை, தீவனம் கலப்பதற்கேற்றவாறு தனியாக அமைக்கப்பட வேண்டும். மேலும் பால் கறக்கும் கொட்டகைக்கு அருகில், சிறிய தீவன சேமிப்பு அறையும் அமைக்கவேண்டும்
ஆ. பால் வைக்கும் அறை
400-700 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யும் பெரிய மாட்டுப் பண்ணைகளில், கறந்த பாலை வைப்பதற்கும், பாலை குளிர்விப்பதற்கும் 3.7 X 5 மீட்டர் அளவுடைய அறைகளும், இதற்கு மேல் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு 40 லிட்டர்கள் பாலுக்கும் அதிகப்படியாக 0.37 சதுர மீட்டர் அளவு இடம் தேவைப்படும்
நூறு லிட்டருக்கும் குறைவாக உற்பத்தி செய்யும் சிறிய பால் பண்ணைக்கு, 3.75 X 3 மீட்டர் அளவுடைய அறை பால் வைப்பதற்கும், தீவனத்தினை சேமித்து வைப்பதற்கும் அமைக்கவேண்டும்
இ. தீவனக் கொட்டகை
வயது முதிர்ச்சியடைந்த ஒரு மாடு ஒரு நாளைக்கு 5 முதல் 10 கிலோ வரை வைக்கோல் அல்லது இதர பசும் தீவனத்தினை எடுத்துக்கொள்ளும். ஆனால் ஒரு இளங்கன்று ஒரு நாளுக்கு 2 முதல் 5 கிலோ வரை வைக்கோல் அல்லது இதர பசும் தீவனத்தினை உட்கொள்ளும்
இவ்வாறு மாடுகளுக்குத் தேவையான தீவனத்தின் அளவினைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு தீவனம் சேமிக்கும் அறையினை அமைக்கவேண்டும்
பல்வேறு வகையான மாடுகளுக்குத் தேவைப்படும் இடஅளவு
கால்நடைகளின் வகை
|
இட அளவு
|
ஒரு கொட்டகையில் கட்டப்படும் அதிகப்படியான மாடுகளின் எண்ணிக்கை
|
கட்டிடத்தின் உயரம்
|
|
|
காளை மாடுகள்
|
12.0
|
24.0
|
1
|
அதிக மற்றும் மிதமான மழை பெய்யும் இடங்களில் 175 செ.மீ, மழை குறைவாக உள்ள பகுதிகளில் 220 cm
|
கறவை மாடுகள்
|
3.5
|
7.0
|
50
|
எருமைகள்
|
4.0
|
8.0
|
50
|
கன்று ஈனும் மாடுகள்
|
12.0
|
12.0
|
1
|
இளங்கன்றுகள்
|
1.0
|
2.0
|
30
|
வயது முதிர்ந்த கன்றுகள்
|
2.0
|
4.0
|
30
|
கால்நடைகளுக்குத் தேவையான தீவன மற்றும் மற்றும் தண்ணீர்த் தொட்டி அளவுகள்
கால்நடைகளின்
|
ஒரு கால்நடைக்குத் தேவைப்படும் இட அளவு
|
100 கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனத் தொட்டியின் நீளம்
|
100 கால்நடைகளுக்குத் தேவைப்படும் தண்ணீர்த்தொட்டியின் அளவு
|
மாடுகள் மற்றும் எருமைகள்
|
60 – 75
|
6000 – 7500
|
600 – 750
|
கன்றுகள்
|
40 – 50
|
4000 – 5000
|
400 – 500
|
தீவனத்தொட்டியின் நீள அகலங்கள்
|
கால்நடைகளின் வகை
|
அகலம் (செமீ)
|
ஆழம்(செமீ)
|
உட்புறச்சுவரின் உயரம் (செமீ)
|
வளர்ந்த மாடுகள் மற்றும் எருமைகள்
|
60
|
40
|
50
|
கன்றுகளுக்கு
|
40
|
15
|
20
|
ஆதாரம் : தமிழ்நாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்