பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / வறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்

வறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

நம் நாட்டில் 63 விழுக்காடு விவசாயம் மழையைச் சார்ந்தே உள்ளன. ஏற்கனவே கால்நடைகளுக்குச் சத்துகள் குறைவாக உள்ள நிலையில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தீவனப்பயிர்களைப் பயிரிட்டு, ஊட்டச்சத்துகள் பற்றாக்குறையினை ஓரளவேனும் நிவர்த்தி செய்யலாம்.

மழை அளவு, மழைக்காலம் தீவிரம் மற்றும் விநியோகம் மானாவாரிப் பகுதிகளில் நிலையற்றதாக உள்ளது. அந்த வறண்ட நிலங்களில் தீவனப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. நீர்ப்பாசன வசதிகள் இல்லாத நிலையில் பயிர் உற்பத்தி ஈரப்பதம் பாதுகாத்தலைப் பொறுத்து உள்ளது. எனவே, பயிர் உற்பத்தி, மண் மற்றும் பயிர் மேலாண்மையில் உறுதித்தன்மையைப் பொறுத்தே அமையும். எனவே, வறட்சியான நிலங்களில் தீவனப்பயிர்ச் சாகுபடிக்கு நிலையற்றதாக உள்ளது. தீவனப்பயிர்களில் தானியவகை மற்றும் புல்வகைத் தீவனப்பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவையாக உள்ளதால், அவற்றினை வறட்சி நிலங்களில் பயிர் செய்து தீவனப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய முயற்சிக்கலாம். நல்ல பசுந்தீவனங்கள், கால்நடைகள் விரும்பி உண்ணக்கூடியதாகவும், பல்லாண்டு பயிராகவும், வறட்சியைத் தாங்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு உள்ள பயிர்களைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

சோளம்

வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. இப்பயிர் வெப்பமண்டலப் பகுதியில் நன்றாக வளரக்கூடியது. குறைந்த அளவு மழை (300 – 350 மி.மீ. ஓர் ஆண்டிற்கு) இருக்கும் இடங்களிலும் வளரும் தன்மை வாய்ந்தது. எல்லா மண் வகைகளிலும் இதைப் பயிரிடலாம். இப்பயிரில் ஹைட்ரோசயனிக் குளுக்கோசைட நச்சு பொருள் அதிகம் இருப்பதால் பூ பூத்தபின் அறுவடை செய்து கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும். உலர் தன்மை (24.17), புரதச்சத்து உள்ளது.

ஓர் ஹெக்டர் நிலப்பரப்பிற்கு 30 – 35 கிலோ விதை தேவை. விதைகளை வரிசைக்கு வரிசை 30 – 40 செ.மீ இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளி விட்டு பார்களில் விதைக்கலாம். வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியில் பார்களின் இருப்புறமும் விதைக்கலாம். விதைத்த 65 – 70 நாட்களில் அறுவடை செய்யலாம். கோ 27 முதல் அறுவடையில் 40 டன் மறுதாம்புப் பயிரில் 25 டன் மகசூல் கிடைக்கும்.

கொழுக்கட்டைப் புல்

இது மேய்ச்சல் நிலங்களுக்கு ஏற்ற தீவனப்புல். ஆண்டு ஒன்றிற்கு ஒர் ஹெக்டர் 40 டன் பசுந்தீவன மகசூல் 4 முதல் 6  அறுவடைகளில் தரக்கூடிய தீவனப்பயிர்.  இது அதிகமாகத் தூர் கட்டும் தன்மை கொண்டது.  இதன் இலைத் தண்டு விகிதம் அதிகம். இதில், 9.06 விழுக்காடு புரதச்சத்தும், 41.0 விழுக்காடு மாவுச்சத்து மற்றும் 0.58 விழுக்காடு சுண்ணாம்புச் சத்து உள்ளது. இதன் செரிக்கப்படும் திறன் 49.45 விழுக்காடு, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் விதைக்க வேண்டும். வடிகால் வசதியுள்ள இரு மண்பாட்டு மற்றும் சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிலம் மிகவும் ஏற்றது. களர் உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம். ஓர் எக்டருக்கு 8 கிலோ விதையை மண்ணுடன் கலந்து தூவி விதைக்க வேண்டும். ஜிப்ரலிக் அமிலம் 250 பிபிஎம் அல்லது நேர்த்தி செய்வதன் மூலமும், விதையை 48 மணி நேரம் குளிர்ந்த தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் விதையின் எடை மிகவும் குறைவாக இருப்பதால் விதைக்கும்போது காற்றில் பறந்து செல்ல வாய்ப்புள்ளது. மேலும் விதைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால் விதைப்பதும் கடினமாக இருக்கும். எனவே, மணலுடன் அல்லது மண்ணுடனோ கலந்து விதைக்க வேண்டும்.

வேலிமசால்

தென் அமெரிக்காவைத் தாயகமாக் கொண்ட வேலிமசால் அடர்த்தியாகவும் வளரக்கூடிய ஒரு சிறந்த பயறுவகைப் பசுந்தீவனம் ஆகும்.  இச்செடி வெட்ட வெட்ட மறுபடியும் துளிர்த்துச் சுவையான பசுந்தீவனத்தைத் தரும். இப்பயிர் எல்லா மண் வகைகளிலும் எல்லாப் பருவங்களிலும் நன்கு வளரும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. நச்சுப் பொருள் அற்றது. கால்நடைகளுக்கு மிகவும் ஏற்றது. வேலி மசால் 19.3 விழுக்காடு புரசதச்சத்தும், 27 விழுக்காடு உலர் தீவனத்தன்மையையும், 55.3 விழுக்காடு செரிக்கும் தன்மையும் கொண்டது. அதிகமான விதை பிடிக்கும் தன்மை இதன் சிறப்பாகும். சுமார் 2 மீட்டர் உயரம் வளரக்கூடிய இச்செடி விதைத்த் 60 நாட்களில் பூக்கும். ஆண்டொன்றுக்கு ஓர் எக்டரிலிருந்து 12.5 டன் பசுந்தீவனவாகத் தனிப்பயிரிலிருந்து கிடைக்கும்.

ஓர் எக்டர் நிலப்பரப்பிற்கு 20 கிலோ விதை தேவை, வரிசைக்கு வரிசை 50 செ.மீ. இடைவெளி வரிசையில் விதைக்க வேண்டும். விதைகள் நன்றாக முளைக்க கொதிக்க வைத்த நீரில் விதைகளைப் போட்டு 5 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி விட்டு நிழலில் உலர்த்திப் பின்பு விதைக்கலாம். விதைத்த 80 முதல் 90 நாள்களில் முதல் அறுவடையும் பின்பு 45  நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.

முயல் மசால்

வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சிறந்த பயறுவகைத் தீவனப் பயிராகும். இப்பயிர் மானாவாரி மேய்ச்சல் நிலங்களுக்கு ஏற்றது. இதைத் கொழுக்கட்டைப் புல்லுடன் 1.3 என்ற விகிதத்தில் மானாவாரி நிலங்களில் பயிரிடலாம். முதல் வருடத்தில் வளர்ச்சி குறைவாக இருப்பதால் மகசூல் குறைவாக இருக்கும். பிறகு பயிர் நன்கு வளர்ச்சி அடைந்து தானாககே விதை உற்பத்தி செய்யும் தருணத்தில் அதிக மகசூல் கொடுக்கிறது. முயல் மசால் ஆண்டிற்கு 450-850 மி.மீ மழையளவு உள்ள பகுதிகளிலும் வளரும். இது பல அறுவடைகளைத் தாங்கி அதிகமான கிளைகள் விடக்கூடிய ஒரு குத்துச்செடியாகும். கொழுக்கட்டைப்புல், மார்வல்புல், ஊசிப்புல் முதலிய மேய்ச்சல் நிலப் புற்களுடன் ஊடுபயிராகப் பயிரிடுவதற்கு ஏற்றது. வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது. மேலும், மணற்பாங்கான அமிலத்தன்மையுள்ள பகுதிகளுக்கும் ஏற்றது.

இதன் விதைகள் விழுந்து தானாக முளைப்பதால் மேய்ச்சல் நிலங்களுக்கு மிகவும் ஏற்றது. இது 15 முதல் 18 விழுக்காடு புரதச்சத்து உள்ள தீவனமாகும். இப்பயிரை வைகாசி, ஆனி மாதங்களில் பயிரிடலாம். தனிப்பயிராக வரிசையில் விதைக்க 10 கிலோ விதையளவும், கலப்புப் பயிராக விதைக்க 2 முதல் 3 கிலோ விதையும் தேவைப்படுகிறது. ஓர் ஆண்டிற்கு 7-8 அறுவடை செய்யலாம்.  ஓர் எக்டருக்கு 80 – 85 டன் மகசூல் கிடைக்கும்.

டெஸ்மோடியம்

நிழல் தாங்கி வளரும் தன்மை கொண்டிருப்பதால் தென்னந்தோப்புகளிலும் வளர்க்கலாம். மானாவாரிப் பயிராக வைகாசி, ஆனி மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பயிரிடலாம். ஓர் எக்டர் நிலப்பரப்பிற்கு 10 கிலோ விதையளவு தேவைப்படுகிறது. ஐம்பது விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். 20 டன் தனிப்பயிராகப் பயிரிடும் போதும் மற்றும் நிழல் பகுதிகளில் பயிரிடும்போது மகசூல் ஓர் எக்டருக்கு 25 டன்கள் கிடைக்கும்.

சவுண்டல் (கோ – 1)

ஆண்டு முழுவதும் பசுந்தீவன விளைச்சலைத் தரும் மரத்தீவனப் பயிர், ஆண்டுக்கு ஓர் எக்டருக்கு 40 டன்கள் தீவனம் கிடைக்கும்.

சிறப்பியல்புகள்

 • வறட்சியைத் தாங்கி விரைவாக வளரும் மரவகைத் தீவனம் பயிராகும்.
 • குறைவான மைமோசின் (2.27 மூ), டானின் (96 மூ), அதிகப் புரதச்சத்து(26 மூ).
 • உலர் தன்மை (25.02மூ), கொழுப்புச் சத்து (7.85 மூ).
 • கால்சியம் (2.4மூ), பாஸ்பரஸ் (0.37மூ) உள்ளது.
 • சில்லிடப் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
 • பசுந்தீவனமாகவும், உரமாகவும், விற்கிற்காகவும் பயன்படுத்தலாம்.

இம்மரம் மிகவும் வேகமாக வளரும் தன்மை வாய்ந்தது. ஓர் மாதத்தில் 1½ அடி வளருகின்றது. இந்த மரம் குறைந்த அளவு மழை 230 மி.மீ./ஆண்டு இருக்கும் இடங்களிலும் வளரும் தன்மை வாய்ந்தது. இதனை விதைத்து சில மாதங்களுக்கு பிறகு மானாவாரியாகப் பயிர் செய்யலாம். இதன் வேர்கள் பரவலாக உள்ளதால் மண் அரிப்பை தடுக்கின்றது.

களர் நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. ஒர் எக்டருக்கு 10 கிலோ விதை தேவை. விதைகளை 1 மீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து 4-5 அடி இடைவெளிவிட்டு விதைக்கலாம். விதைகளை வெந்நீரில் அல்லது குளிர்ந்த நீரில் ஊறவைத்து விதைக்க வேண்டும். நட்ட 6 மாதத்தில் முதல் அறுவடையில் செடிக்கு 3 கிலோ தழையும் பிறகு 45 நாள்களுக்கு ஒருமுறை 3-5 கிலோ வரை பசுந்தழை உற்பத்தி கிடைக்கும். சுபாபுல் மரங்களை 45 நாள்களுக்கு ஒருமுறையும், கோடைக்காலங்களில் 90 நாட்களுக்கு ஒரு முறையும், தழைக்காக வெட்டலாம்.

தீவனப்பயிர் மேலாண்மை

 • வறட்சிக் காலங்களில் பயிர் மேலாண்மைக்குத் தேவையான சில உத்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் மண்ணின் நீர் ஊடுருவும் தன்மை மற்றும் ஈரத்தன்மை சேமிப்பை அதிகப்படுத்துதல் மானாவாரி நிலங்களில் பயிர் உற்பத்தியை அதிகப்படுத்தும்.
 • கோடை உழவு : இரண்டு பயிர்ச் சாகுபடிக்கு இடையே செய்யப்படும் உழவு.  இவ்வாறு செய்வதால் மண்ணில் தண்ணீர் உட்புகும் தன்மை அதிகரிப்பதோடு, களைகளையும் கட்டுப்படுத்த இயலும்.
 • ஆழ உழுதல் : நீர் உட்புகும் தன்மை அதிகப்படுத்தப்பட்டுள்ள களையற்ற மண் படுகை, ஆழ உழுவதால் கிடைக்கப்பெறும்.
 • சட்டிக் கலப்பை உழவு : கட்டி மண் மற்றும் அடி மண்ணிணை உடைத்து, உதிரியாக்குவதால் மண்ணில் வேரூன்றும் தன்மை அதிகரிக்கிறது.
 • அங்கக எரு அளித்தல் : அங்கக எரு மண்ணிற்கு அளிப்பதன் மூலம் நீர் பிடிப்புத்திறன் அதிகரிக்கும். மேலும், மண்ணின் வளம், மண்ணின் பௌதீகப் பண்புகள் மேம்படுத்தப்பட்டு, பயிர் விளைச்சல் அதிகரிக்கும். ஆழ்வேர் கொண்ட பயறு வகைகள் சாகுபடி செய்வதால் மண்ணில் நீர் பரவுதிறன் அதிகரிக்கும்.  மேலும் தண்ணீரில் ஈரத்தன்மை அதிகமாகும்.

மண்ணில் ஈரத்தன்மை இழப்பைக் குறைத்தல்

மண்ணின் மேல் பகுதியில் நீர் ஆவியாதலும் களைகளும் மானாவாரி நிலங்களில் ஈரத்தன்மை குறைவிற்குக் காரணமாகும். இவை மானாவாரி நிலங்களில் மிக முக்கியமானவை. 30 – 40 விழுக்காடு நீர் இழப்பிற்கு நீராவியாதல் மற்றும் 60 - 80 விழுக்காடு நீர் இழப்பிற்குக் களைகள் முக்கியக் காரணமாகும். குர்பி, கொத்து மற்றும் உழவுக் கருவிகள் கொண்டு இடைச்சாகுபடி செய்வதால், களைகளைக் கட்டுப்படுத்தி மண் துகள் போர்வை போன்று செய்யப்படுவதால் நீர் ஆவியாவதைக் கட்டுப்படுத்த முடியும். நிலப்போர்வை (அங்ககம், இராசயனம், பாலிஎத்திலீன்), நீராவிப் போக்குத்தடுப்பான், வேதியியல் முறையில் களை மேலாண்மை போன்றவை நீராவி, மற்றும் களைகள் வளர்ச்சியினால் தண்ணீர் நிலப்பரப்பில் இருந்து வீணாவதைத் தடுக்கின்றது.

நிலப்போர்வை

வைக்கோல், கரும்பு சோகை, மக்காச்சோளத் தட்டு, காய்ந்த புற்கள் போன்ற பயிர்க் கழிவுகளைப் பயிர்களின் வரிசைக்கு நடுவே பரப்புவதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தித் தண்ணீரில் ஈரத்தன்மை குறைவதைத் தடுக்க இயலும். மேலும், இது வெப்ப மாறுபாட்டைக் குறைத்து, மண்ணில் இராசயன பௌதீகப் பண்புகளை மேம்படுத்துவதோடு, மண்வளத்தைப் பாதுகாத்துப் பயிர் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. இராசயனப் போர்வை மற்றும் பாலித்தீன் போர்வையை உபயோகிக்கலாம். ஆனால், இவற்றைப் பயன்படுத்தும் பொழுது அதிகச் செலவு ஏற்படுவதால் குறைவாககே உபயோகிக்கப்படுகிறது.

விதைப்பு

வறட்சிக் காலங்களில் பயிர் செய்யும்பொழுது 25 விழுக்காடு கூடுதலான விதைகளையோ அல்லது கரணைகளையோ விதைக்க வேண்டும்.

களைக்கட்டுப்பாடு

 • தீவனப் பயிர்கள் மற்றும் களைகள் தண்ணீருக்கும் சத்துகளுக்கும் போட்டியிடும்.  எனவே, தீவனப்பயிர்ச் சாகுபடியில் களைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பொழுது களைக்கொல்லிகளைப் பயன்படுத்திக் களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 • எனவே, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பசுந்தீவனங்களைப் பயிரிட்டு முறையான பயிர் மேலாண்மை செய்யும் பொழுது வறட்சிக் காலங்களில் தீவனப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, தீவனப் பற்றாக்குறையினால் ஏற்படும் பொருளாதார இழப்பினைத் தவிர்த்துக் கால்நடைகளின் உற்பத்தியைப் பெருக்கலாம்.

ஆதாரம் : கால்நடைக்கதிர்

2.93292682927
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top