பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / அதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2

அதிக பசுந்தீவன விளைச்சல் தரும் குதிரைமசால் கோ2 பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

குதிரை மசால்

 • தீவனப்பயிர்களின் இராணி என அழைக்கப்படும் குதிரை மசால் புரதச்சத்திற்காகவும், அதிக சுவைக்காகவும் கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது. பயறு வகையைச் சார்ந்த தீவனப்பயிர்களில் மிகவும் முக்கியமான ஒன்று குதிரைமசால். மத்திய, மேற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்ட குதிரைமசால் ஒரு பல்லாண்டு காலப்பயிராகும். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகின்றது.
 • பயறுவகைத் தீவனப்பயிர்களில் அதிக அளவில் புரதச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்களான பாஸ்பரஸ், கால்சியம் ஆகியன காணப்படுவதால் கால்நடைத் தீவனத்தில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. தானிய, புல்வகைத் தீவனப்பயிர்களை விட பயறுவகைத் தீவனப்பயிர்களின் விளைச்சல் குறைவாக இருப்பினும், கால்நடைகளுக்குத் தேவையான சத்துக்கள் குறிப்பாக புரதச்சத்து அதிகமாக பயறுவகைத் தீவனப் பயிர்கள் இயற்கை புரத வங்கி என அழைக்கப்படுகின்றன. மேலும் பயறுவகைத் தீவனப்பயிர்கள் வேர்முடிச்சுகளின் மூலம் தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துகின்றன. இதனால், உலக அளவில் உள்ள மொத்த கால்நடைகளின் எண்ணிக்கையில் 16 சதம் கால்நடைகள் நம் இந்தியாவில் உள்ளன. ஆனால் நமது கால்நடைகளின் பால் உற்பத்தித் திறனோ அதைக் காட்டிலும் மிகக்குறைவு. நல்ல சத்துள்ள, தரமான பசுந்தீவனங்கள் போதிய அளவிலும், சரிவிகிதத்திலும் கால்நடைகளுக்கு கிடைக்காததே இதற்கு காரணம். புல்வகைத் தீவனப்பயிர்களுடன், பயறு வகைத் தீவனப்பயிர்களை முறையே மூன்றுக்கு ஒரு பகுதி என கலந்து கொடுப்பதன் மூலம் தீவனத்தின் சுவை அதிகரிப்பதோடு, கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறனும் அதிகரிக்கின்றது. பயறுவகைத் தீவனப்பயிர்களைத் தனிப்பயிராகவோ அல்லது புல், தானிய வகை பயிர்களோடு பயிரிட்டு அதிக விளைச்சலையும் சத்துள்ள தீவனத்தையும் பெற முடியும்.
 • தமிழ்நாட்டில் மொத்த விளை நிலத்தில் 1,72.726 எக்டரில் மட்டும் தான் தீவனப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் நிரந்தர மேய்ச்சல் புல் நிலம் 1,09,924 எக்டர் மட்டுமே உள்ளதால், பசுந்தீவன தேவையில் 42.6 சதம் குறைபாடு உள்ளது. எனவே பசுந்தீவன குறைபாட்டினை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில், அதிக பசுந்தீவன உற்பத்தி திறன் கொண்ட சத்துள்ள தீவனப்பயிர் இரகங்களை உருவாக்குதல் அவசியம்.
 • தீவனப்பயிர்த் துறையிலிருந்து குதிரை மசால் கோ2 என்ற புதிய இரகம் கடந்த ஆண்டு (2013) வெளியிடப்பட்டது. தற்போது சாகுபடியில் உள்ள கோ 1 என்ற இரகம் 1980-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
 • குதிரை மசால் கோ2 சராசரி பசுந்தீவன விளைச்சலாக ஒரு ஆண்டில் எக்டருக்கு 130.6 டன் கொடுத்துள்ளது. இது கோ 1 (103.8 டன்கள், எக்டர் வருடம்) இரகத்தை விட 25.9 சதம் அதிகமாகும். பண்ணைத்திடல்களின் ஆய்வு முடிவுகளிலும் குதிரை மசால் கோ 2 (126.8 டன்கள்,எக்டர்.வருடம்), கோ 1 (94.4 டன்கள், எக்டர்.வருடம்) இரகத்தை விட 27.6 சதம் அதிகம் பெற்று முன்னிலை வகித்தது.
 • பசுந்தீவன விலைச்சலும் அதன் தரமும் ஒருங்கே ஏற்றமுகத்துடன் இணையப் பெற்றது இப்புதிய இரகத்தின் சிறப்பம்சமாகும். அதிக புரதச்சத்தினை (23.5 சதம்) கொண்டுள்ளதால் அதிக விளைச்சலுக்கு (5.16 டன்கள்,எக்டர் வருடம்) ஏதுவாகின்றது. இதன் உலர் எடை விளைச்சல் ஒரு எக்டருக்கு ஒரு ஆண்டில் 21.94 டன் ஆகும். இது கோ I (20 சதம்) ஐ விட சற்றே குறைந்தளவு நார்ச்சத்தைக் (19.2 சதம்) கொண்டுள்ளதால் அதிக செரிமானத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதன் ஈத்தர் வடிமான அளவு 4.9 சதம் உள்ளதால் உயிர்ச்சத்துக்கள் எளிதில் கிடைக்க வழிகோலுகின்றது. மேலும் இதில் நுண்ணுரட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் கோ 1 -ஐ காட்டிலும் அதிக அளவில் உள்ளன. இதன் பச்சைய அளவும் அதிகமாக உள்ளதால் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஏற்றது.
 • மேலும் குதிரை மசால் கோ 2, கோ 1 -ஐ காட்டிலும் சீரிய பண்புகளை கொண்டதாக உள்ளது. இது கோ 1 -ஐ விட அதிக தண்டுகள் (15-20), மிருதுவான, கரும் பச்சை இலைகள், அதிக இலைக்காம்புகள் (9-11), இலைத்தண்டு விகிதம் (0.47) உடையதாக உள்ளது. இப்பண்புகளால் அதிக சுவையுடன் இருப்பதால் கறவைமாடுகள், செம்மறி ஆடுகள், ஆடுகள், ஈமு கோழிகள் மிகவும் விரும்பி உண்ணுகின்றன. குதிரை மசால் கோ 2-ன் அடர்த்தியான, கொத்துக் கொத்தாக பூக்கும் திறன் கூடுதல் விதை உற்பத்திக்கு (18.2%) வழி வகுக்கின்றது.

சிறப்பியல்புகள்

 • மிருதுவான, கரும் பச்சை இலைகளுடன் கூடிய அதிக தண்டுகளுடன் காணப்படும்
 • அதிக புரதச்சத்து (23.5%), உலர் எடை விளைச்சல் (21.94 டன்கள் / எக்டர் / வருடம்)
 • அடர்த்தியாக பூக்கும் திறனால் கூடுதல் விதை உற்பத்தியாகின்றது.
 • விரைவாக தழைக்கும் திறன், குறுகிய காலத்தன்மையால் கூடுதல் அறுவடைகளை மேற்கொள்ளவேண்டும்.
 • அதிக சுவையுடையதால், அதனால் கால்நடைகள் விரும்பி உண்ணுகின்றன.

இதர பயன்கள்

 • குதிரை மசால் தீவனப்பயிரினை ஒரு 'கற்பகவிருட்சம்' என்று கூறினால் அது மிகையாகாது. கால்நடைகளின் தேவைக்கு மட்டுமின்றி மற்ற பயன்பாடுகளுக்கும் இப்பயிர் உதவுகின்றது.
 • இதன் முளைகட்டிய விதைகளை மேலை நாடுகளில் உணவாக பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
 • அரிய மருத்துவ குணங்கள் கொண்டுள்ளதால் மூலிகைப்பயிராகவும் பயன்படுகின்றன.
 • இப்பயிரில் இருந்து பிரித்தெடுக்கப்படும், புரதம், பச்சையம் போன்ற மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றது.
 • இப்பயிரின் மகத்துவங்களை உணர்ந்து தற்பொழுது நிறைய நிறுவனங்கள் இதிலிருந்து அரிய மூலப்பொருட்களைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
 • ஆகையால் உழவர் பெருமக்கள் தங்கள் கால்நடைகளின் தேவைக்கு போக மீதி உள்ள பசுந்தீவனத்தை இது போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கூடுதல் வருவாய் ஈட்டலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.98214285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top