பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான அணுகுமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதற்கான அணுகுமுறைகள்

இளைஞர்களை விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட செய்வதற்கான அணுகுமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

இந்தியாவில் ஏற்பட்ட பசுமை புரட்சியின் மூலமாக உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டுமென்ற இலக்கையும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மற்றொரு பக்கம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டு இருப்பதுடன், விளைநிலங்களின் சராசரி அளவானது ஒரு எக்டருக்கும் கீழ் குறைந்து கொண்டு வருகிறது. இத்தகைய கால கட்டத்தில், விவசாயமானது அதிக வருமானம் தரவல்ல தொழிலாக இல்லாமலிருக்கின்ற காரணத்தினால், விவசாயத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உற்பத்தித் திறனில் எந்தவித மாற்றமும் இன்றி இருப்பது மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு போன்ற காரணங்களினால் விவசாயத்தை ஒரு தொழிலாக தேர்ந்தெடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கிராமப் புறங்களில் வசிக்கும் 25 சதவீத கிராம இளைஞர்கள் போதிய வருமானம் இல்லாததாலும், சமூகத்தில் உரிய அந்தஸ்து கிடைக்காததாலும், விவசாயத்தில் ஈடுபடுவதில் தயக்கம் காட்டுவதுடன், விவசாயம் சார்ந்திராத பிற தொழில்களிலும் சரியான வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

இம்மாதிரியான காரணங்களினால், சுமார் 60 கோடி கிராமப்புற இளைஞர்களில் பெரும் பகுதியினர் வேலை வாய்ப்புக்காகவும், நல்ல வருமானத்திற்காகவும், நகர்ப்புறங்களை நோக்கி செல்ல தொடங்கிவிட்டனர். மேலே குறிப்பிட்ட காரணங்களினாலும் மற்றும் பல காரணங்களினாலும், பண்ணை இளைஞர்கள் நகர்ப்புறங்களை நோக்கி செல்வதைக் கண்டறிய ஆய்வு ஒன்று மேற் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு பல்லடம், மேட்டுப்பாளையம், திருப்பூர் தாலுக்காக்களில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள், பண்ணை இளைஞர்களை கிராமத்திலேயே தங்க வைத்து, அவர்களை வேளாண் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க துணை நிற்கின்றது.

இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

பருவ நிலைகளில் மாற்றம், காலம் தவறி பெய்யும் மழை, குறைவான மழை அளவு, பெய்யும் மழையை சேமிக்க போதுமான வசதியை ஏற்படுத்தாமலிருப்பது, விளையும் பொருட்களுக்கான நியாயமான விலை கிடைக்காதது, விவசாய விளை பொருட்களின் விலையில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கம் போன்ற காரணங்களினால் நிலையான வருமானத்தைத் தரக்கூடிய நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி நகர்ப் புறங்களுக்கு இடம் பெயர்வதாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

நகர்ப்புறங்களை நோக்கி ஈர்க்கும் காரணிகள்

 • விவசாயத்தில் உள்ள இடர்பாடு, நிச்சயமற்ற தன்மை (83%)
 • விவசாயம் நல்ல வருமானம் தரும் தொழிலாக இல்லாமலிருப்பது (83%)
 • விவசாயக் கூலிகள் தட்டுப்பாடு (78%)
 • இளைஞர்களின் தொழில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாதது (77%)

போன்ற காரணங்கள் வேளாண் இளைஞர்களை விவசாயத்தை தொடரவிடாமல் தடுக்கும் காரணிகளாகும். கிராமங்களில் நிலவும் இத்தகைய சாதகமற்ற சூழ்நிலையில் நகர்ப்புறத்து சூழ்நிலைகள் வேளாண் இளைஞர்களை மிகவும் கவரும் தன்மையுடையதாகவும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலும் உள்ளது எனவும், குழந்தைகளுக்கான நல்ல தரமான கல்வி (67%), சமுதாய அந்தஸ்து (62%), நகர்ப்புறத்து நாகரீகமான வாழ்வுமுறை (53%) மற்றும் படித்த, பட்டம் பெற்ற பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்ளுதல் (23%) போன்ற காரணங்களுக்காக நகர்ப் புறங்களுக்கு செல்வதாக விளக்கினர்.

இளைஞர்களை ஈடுபட செய்வதற்கான வழிமுறைகள்

 • அனைத்து விவசாய விளை பொருட்களுக்கான சந்தைவழி முறைகளை ஏற்படுத்துதல்
 • விளைபொருட்களைப் பதப்படுத்தி, பாதுகாப்பதுடன் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களாக மாற்றுவதற்கான வசதிகள்
 • கிராமங்களில் உள்ள வேளாண் மருத்துவ மையம் மற்றும் பிற வேளாண் சார்ந்த நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்துதல்
 • அடுக்குமாடி குடியிருப்பு, பிற குடியிருப்பு வளாகங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் முதலியவற்றை விவசாயிகள் கூட்டமைப்பின் மூலம் போதுமான அளவில் உற்பத்தி செய்து நேரடியாகவே அவர்களது பகுதிகளில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்தல்
 • வட்டார அளவில் வேளாண் கருவிகளை அரசு/ அரசு சாரா நிறுவனங்கள் வழியாக உழவர்களுக்கு தேவைப்படும் போது வாடகைக்கு கிடைத்திட வழிசெய்தல்
 • விவசாய இயந்திரங்கள் / கருவிகளைப் பழுது பார்ப்பதற்கான மையங்களை கிராமங்களிலேயே ஏற்படுத்தி அவர்களது தேவையினை பூர்த்தி செய்தல்
 • கணினி வழி வேளாண் தொழில்நுட்ப தகவல்களைப் பெறுவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தல்
 • இம் மாதிரியான முயற்சிகளில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் ஏற்கனவே விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தொடர்ந்து விவசாயத்தினை தொழிலாக ஏற்றுக் கொள்வதுடன் மற்றவர்களையும் அம்மாதிரியான செயல்களில் ஈடுபடுத்திட இயலும்.

இதுவரையிலும், எடுத்துக் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதுடன் அவர்களை விவசாயத் தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு ஏதுவாக இருந்தாலும், அரசின் நிலைபாடுகள், திட்டமிடல் மூலமாக மட்டுமே விவசாயத்தை முதன்மை தொழிலாக நிலைநிறுத்த முடியும்.

முயற்சிகள், அணுகுமுறைகள்

 • பள்ளிகளிலேயே, விவசாயக் கல்வியை ஒரு பாடமாக சேர்த்தல் என்பதை கவனத்தில் கொள்ளலாம். இதன் மூலம் மாணவப் பருவத்திலேயே விவசாயத்தின் மூலம் மக்களும், நாடும் பெற்றிடும் வசதிகள், வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு, வெளிநாடுகளில் கிடைக்கும் மரியாதை, விவசாயம் மற்றும் சார்பு தொழில்களின் மூலம் கிடைக்கும் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு முதலியவற்றை, விவசாயக்கல்வியின் வாயிலாக அவர்கள் உணர்வதோடு, அத்தொழிலினை மரியாதையோடு பார்க்கும் தன்மையும் வளர்கிறது. அவர்களது மன நிலையையும் சாதகமாக மாற்றிக் கொள்ள ஏதுவாகும்.
 • நிலையான வருமானம்
 • அனைத்துப் பயிர்களுக்கான பயிர் காப்பீட்டுத்திட்டம், பயிர்க் காப்பீட்டு அலுவலகங்களை அனைத்து மாவட்டங்களிலும் திறப்பது
 • இயற்கை பேரழிவின் போது போதிய ஆலோசனை, வழிநடத்தல்
 • சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துதல்
 • விளைநிலங்களை வேறு பயன்பாடுகளுக்கு மாற்ற தடை செய்தல் போன்றவற்றில் அரசு காட்டும் ஈடுபாடு அக்கறை விவசாயத் தொழிலை விரும்பத்தக்க தொழிலாக மாற்றும் என்பது நிச்சயம்.
 • விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், அதனை முதன்மை தொழிலாக ஏற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் புரிந்துகொள்ளும் வகையில் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் விரிவாக்க பணியாளர்கள், வேளாண் தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து பணியாற்றவேண்டும். அப்படி செய்வதன் மூலம் வேளாண் தொழிலை, அதிக இடர்பாடுகள் இல்லாத, நீடித்த நிலைத்த வருமானம் ஏற்படுத்திதரும் ஒரு தொழிலாக ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும்.

இதனால் விவசாயிகள் தங்களுக்கான வாழ்வாதாரத்தைச் சிறப்பாக ஏற்படுத்திக் கொள்வதுடன், உலகிற்கே உணவளிக்கும் உன்னதமான பணியையும் தடையின்றி தொடர முடியும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.82608695652
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top