பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / கோடை தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மரஇலைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கோடை தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மரஇலைகள்

கோடையில் தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக பயன்படுத்தப்படும் மரஇலைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கால்நடைகளுக்கு, குறிப்பாக கறவையில் உள்ள மாடுகளுக்கு பசுந்தீவனம் மிகமிக இன்றிமையாதது. ஆனால் கோடையில் பசுந்தீவனம் மிகவும் அரிதாகிப்போவதால், கறவைமாடுகளில் உற்பத்திக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க மர இலைகளை மிகச் சிறந்த பசுந்தீவனமாக கோடைக்காலத்தில் பயன்படுத்தலாம். மர இலைகளில் உள்ள ஊட்டச் சத்துக்களின் அளவு வறட்சியினால் பாதிக்கப்படுவதில்லை. கிளைரிசிடியா, அகத்தி, வாகை, வேம்பு, கொடுக்காபுளி, கல்யாண முருங்கை போன்ற மரங்களின் இலைகள் சிறந்த பசுந்தீவனங்கள் ஆகும்.

மர இலைகளில் உள்ள சத்துக்கள்

மற்ற பசுந்தீவனங்களைக் காட்டிலும் மர இலைகள் ஊட்டச்சதது மிகுந்ததாக விளங்குகின்றன. மர இலைகளில் பொதுவாக 10 முதல் 15 சதவிகித புரதச்சத்தும் 40 முதல் 65 சதவிகித மொத்த செரிக்கக்கூடிய ஊட்டச் சத்துக்களும் (உலர் தீவன அடிப்படையில்) உள்ளன. சூபாபுல், அகத்தி போன்ற மர இலைகளில் 20-25 சதவிகித புரதச்சத்தும் உள்ளன.

மர இலைகளின் புரதச்சத்து அசைபோடும் கால்நடைகளின் வயிற்றில் நுண்ணுயிர்களால் அவ்வளவாகச் சிதைக்கப் படுவதில்லை. அப்படிச் சிதைக்கப்படாத மீதமுள்ள புரதம் சிறுகுடலில் செரிக்கப் படுவதால் கால்நடைகளுக்கு சிறந்த பயனை கொடுக்கிறது. மரங்களின் காய்களும் புரதச் சத்து மிகுந்ததாக காணப்படுகின்றன.

இத்துடன் உயிர்ச்சத்து "எ"- வும் மர இலைகளின் மூலம் கிடைக்கின்றது. அகத்தி, முருங்கை, ஆச்சான் போன்ற மரங்களின் நார்ச்சத்து புற்களில் இருப்பதை விட மிகக் குறைவாகவே இருப்பதால் இதன் மூலம் கால்நடைகளுக்கு கிடைக்கும் எரிச்சத்தும் குறைவாகவே இருக்கும். எனவே, மர இலைகளையே முழுமையாக பசுந்தீவனத்திற்கு மாற்றாக, தீவனமாக அளிப்பது நல்லதல்ல.

மர இலைகளை நார்ச்சத்து மிக்க வேளாண் கழிவுகளுடன் சேர்த்து தீவனமாக அளிக்க வேண்டும். இவ்வேளாண் கழிவுகளை 1"- 2" அளவில் சிறுசிறு துண்டுகளாக வெட்டி கீழ்க்காணும் விகிதத்தில் மர இலைகளுடன் சேர்த்து தீவனமாக நிலக் கடலைக்கொடி 75 சதவீதத்துடன் வேம்பு இலை அல்லது சவுண்டால் இலையை 25 சதவிகிதமாகவும், சோளத்தட்டை 50 சதவீதத்துடன் கிளைரிசிடியா, வேம்பு இலைகளை முறையே 25 சதமாகவும், கேழ்வரகுத் தட்டை 75 சதவீதத்துடன் கிளைரிசிடியா, வேம்பு இலைகளை முறையே 12, 13 சதமாகவும் அளிக்க வேண்டும்.

மர இலைகளில் பொதுவாக சுண்ணாம்புச்சத்து மிக அதிகமான அளவிலும், மணிச்சத்து மிக மிக குறைவான அளவிலும் இருப்பதால் இவ்விரு சத்துக்களும் தேவையான அளவில் கால்நடைகளுக்கு கிடைப்பதில்லை. அதனால் மணிச்சத்து அதிகமாக உள்ள பிற தீவனங்களை மர இலைகளுடன் சேர்த்து அளிப்பதால் மணிச்சத்துக் குறைப்பாட்டினைத் தவிர்க்கலாம். உதாரணமாக அரிசி, கோதுமைத் தவிடுகளில் மணிச்சத்து சற்று அதிகமாக உள்ளது. எனவே, மர இலை தீவனங்களுடன் எரிசக்திக்காக புற்களையும், மணிச்சத்துக்காக தவிட்டையும் சேர்த்து அளிப்பதால் ஓரளவு ஊட்டச்சத்து கால்நடைகளுக்கு கோடையில் கிடைக்கும்.

வழிமுறைகள்

ஊட்டச்சத்து மிகுந்த மர இலைகளை சில கால்நடைகள் உண்ணத் தயங்கும். இதைத்தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

  • மர இலைகளைப் பிற புற்களுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து அளித்து கால்நடைகளுக்குப் பழக்கப்படுத்தலாம்.
  • காலையில் வெட்டிய இலைகளை மாலை வரையும், மாலையில் வெட்டிய இலைகளை அடுத்த நாள் காலை வரையும் வாடவைத்து பயன்படுத்தலாம்.
  • மர இலைகளைக் காயவைத்து அவற்றின் ஈரப்பதத்தை சுமார் 15 சதவீதத்திற்கும் கீழே குறைப்பதன் மூலம் அவற்றை நீண்டநாள்கள் சேமிக்க இயலும். அது மட்டுமின்றி இவற்றில் இருக்கும் நச்சுப் பொருட்களின் அளவும் கணிசமாகக் குறையும்.
  • மர இலைகளின் மேல் சுமார் 2 சதவீத சமையல் உப்புக் கரைசலைத் தெளித்து அளிப்பதால் உப்புச் சுவையினால் கவரப்பட்ட கால்நடைகள் இலைகளை விரும்பி உண்ணும்.
  • மர இலைகளின் மீது வெல்லம் கலந்த நீரை ஓரிரு நாள்கள் தெளித்து அவற்றைக் கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
  • மர இலைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளையும் அருகருகே கட்டி மர இலைகளைத் தீவனமாக அளித்தால் இலைகளை உண்ணக் கூடிய கால்நடைகளைப் பார்த்துப் பிற கால்நடைகளும் உண்ண ஆரம்பிக்கும்.

மர இலைகளைத் தீவனமாகக் கால்நடைகளுக்கு அளிக்கும் பொழுது தினமும் சிறிய அளவில் அளித்து அவற்றைப் பழக்கப்படுத்த வேண்டும். கால்நடைகள் ஒரே வகையான மர இலைகளை எப்பொழுதும் விரும்புவது இல்லை. தீவனம் அளிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட இலைக் கலவையை அளிப்பது சிறந்தது. பொதுவாக கால்நடைகளின் நார்த்தீவனத்தில் சுமார் 30 சதவீதம் வரை மர இலைகளைத் தீவனமாக அளிக்கலாம்.

ஒரு கறவை மாட்டிற்கு நாளொன்றுக்கு 8-10 கிலோ மர இலைகளை அளிக்கலாம். ஆடுகளில், குறிப்பாக வெள்ளாடுகளுக்கு மர இலைகலவை இல்லாமல் தீவனம் அளிப்பது தவறு. அவற்றின் நார்த்தீவனத்தில் 50 சதவீதம் புல் கலவையும், 20 சதவீதம் மர இலை கலவையும் இருப்பது மிகமிக அவசியம். செம்மறியாடுகளுக்கு மேய்ச்சலுடன் நாளொன்றுக்கு 0.5 கிலோ முதல் 2 கிலோ வரை அகத்தி இலையையும் சேர்த்து அளிப்பதால் ஆடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும். சுமார் 30 சதவீதம் புற்களுடன் 20 சதவீத மர இலைகளைச் சேர்ப்பதன் மூலம் வளரும் கன்றுகளின் வளர்ச்சி சுமார் 60 சதவீதம் வரை அதிகரிக்கும்.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை

3.13333333333
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top