பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / களர்நிலத்தை வளமாக்கும் மந்திரம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

களர்நிலத்தை வளமாக்கும் மந்திரம்

களர்நிலத்தை வளமாக்கும் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உயிர் தரும் கழிவு

பொதுவாக மண்ணில் உயிர்மக் கரிமம் (organic carbon) அதிகமாகும் போதுதான், மண் வளம் அதிகரிக்கும். வேதி உப்பு உரங்களைத் தொடர்ந்து நிலத்தில் கொட்டும்போது, மண்ணில் உள்ள உயிர்மக் கரிமம் குறைந்துகொண்டே வரும். அதனால் மண்ணில் நீர்ப்பிடிப்புத் தன்மை குறைந்து, நீர் தேங்கத் தொடங்கும். நீர் தேங்குவதன் மூலம் மண்ணில் உப்பின் அளவு அதிகரிக்கும். உப்பைச் சரிசெய்து பயிரை வளர்க்க மேலும் வேதி உரங்களை இட வேண்டும். மீண்டும் உப்பு கூடிக்கொண்டே போகும். இது ஒரு வகை நச்சு வளையம். இதிலிருந்து விடுபடுவது கடினம். விடுபட வேண்டுமானால், வேதி உரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். படிப்படியாகக் குறைக்கலாம் என்று நினைப்பது, நடைமுறைக்கு சரியாக வராது.

மண்ணில் சேர்க்கப்படும் தாவரக் கழிவுகளால் மண்ணில் நுண்ணுயிர் செயல்பாடு அதிகரிக்கும். நுண்ணுயிர் பெருகுவதால் மண்ணின் கெட்டித்தன்மை குறைந்து, பொலபொலவென மாறும். ஏனென்றால் மண்ணில் உள்ள உயிர்கள் மண்ணைத் துளைத்துக்கொண்டே இருக்கும். ஆக, எந்த வகையில் மண்ணை வளப்படுத்த வேண்டுமானாலும், நிலத்தில் கழிவுகளைச் சேர்ப்பதுதான் தீர்வு.

நீர் தேங்கினால் ஆபத்து

பொதுவாக வாய்க்கால், வடிகால் இல்லாத நிலத்தில் சிக்கல் அதிகமாகிவிடும். பெரும்பாலான உழவர்கள் வாய்க்கால் அமைப்பதோடு நிறுத்தி கொள்வார்கள். பலரும் முறையான வடிகால்களை அமைப்பதில்லை. அதனால் நிலத்தில் மழைநீர் தேங்குவதற்கான சாத்தியம் அதிகரிக்கும். நீர் தேங்கும்போது முன்னர்க் கூறியபடியே உப்பின் அளவும் அதிகமாகும். தேவைக்கு அதிகமாக நீரைத் தேங்க வைக்கக் கூடாது, நிலத்துக்குள் அனுப்ப வேண்டும். அல்லது பண்ணைக் குட்டைகளில் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

களர் நிலத்தில் நீர் தேங்கினால் சிக்கல் மேலும் அதிகரிக்கும். அதைச் சரிசெய்ய இயற்கையானது, களைத் தாவரங்களை உருவாக்கும். அங்குப் பறவைகள் மர விதைகளைக் கொண்டுசேர்க்கும். அதன் பின்னர்க் காடு உருவாகும். இதற்கான கால அளவு அதிகமாகும். இயற்கையின் இந்த ரகசியத்தை அறிந்துகொண்டு, அதை விரைவுபடுத்தும் செயலை நாம் செய்ய வேண்டும்.

மண்ணே முதன்மை வளம்

வடிகால்களும் முறையான வரப்புகளும் அமைக்காவிட்டால் மண் அரிப்பும் ஏற்படும். வளமான மேல்மண் அடித்துச் செல்லப்பட்டால், நமது வளம் முற்றிலும் குறைந்துவிடும். எனவே, வளமான மேல்மண்ணைப் பாதுகாக்கும் வேலை பண்ணையத்தில் மிக முதன்மையானது. நல்ல மேல் மண் இயற்கையாக உருவாக நான்கு லட்சம் ஆண்டுகள்கூட ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிலத்தில் மண்ணின் தன்மை மெல்ல மெல்ல மாறி, இப்போது நீரை நன்கு பிடித்து வைக்கும் தன்மை கொண்டதாக, பஞ்சுபோல நிலம் மாறும். எங்கெல்லாம் கழிவை சேர்க்கவில்லையோ, அந்த இடங்கள் இன்னும் கடினமாகவே இருத்தல் என்பது நுட்பத்தைத் தெளிவாகவே உணர்த்துகிறது.

ஆதாரம் : தி இந்து தமிழ் நாளிதழ்

2.9375
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top