பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

களை மேலாண்மை

களை மேலாண்மை (Weed Management) தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

சாகுபடி நிலத்தில் பயிர்களுக்குத் தொந்தரவு தரக்கூடிய தாவர இனங்கள் அனைத்தும் களைகள் எனப்படும். உம். கோரை, அருகு, பார்த்தீனியம். மனிதனுக்கு நன்மை செய்யும் தாவர வகைகள் கூட அது வளரும் இடம், பயிர் ஆகியவற்றைப் பொருத்து களையாக கருதப்படுகிறது. உ.ம். நெல் வயலில் பயறு வகைகள். களையானது பயிருடன் சூரியஒளி, இடம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் ஆகியவற்றிற்காக போட்டியிடுகிறது. இதனால் பயிரில் சுமார் 33 சதம் வரை விளைச்சல் குறைவு ஏற்படுவதாக அறியப்படுகிறது.

களை வரையறை

நாம் பயிர் செய்யும் பயிர்களுக்கு இடையே வளரும் தேவையில்லாத, விரும்பத்தகாத மற்றும் பயிர்களுக்குண்டான நீர், நில ஆதாரங்களுக்கு போட்டியிட்டு பயிர் உற்பத்தியையும், மனித மேம்பாட்டையும் பாதிப்பவையே களைகள் ஆகும்.

வேளாண் விளைபொருள் உற்பத்தியில் மற்ற காரணிகளைவிட களைகளால் அதிக பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. களைகளின் பாதிப்பினால் ஏற்படும் மகசூல் இழப்பு கண்கூடாகத் தெரிவதில்லை. நம் நாட்டில் களைகளால் மட்டும் ஆண்டிற்கு சுமார் 3000 கோடி வரை விளைபொருள் இழப்பு ஏற்படுவதாக அறியப்படுகிறது.

களைகளின் இயல்புகள் (Characteristics of Weeds)

களைகள் எல்லாக் காலங்களிலும் தோன்றி செழிப்பாக வளரும் தன்மை உடையவை. ஒவ்வொரு வருடமும் களைகள் ஏராளமான விதைகளை உற்பத்தி செய்கின்றன. களைகளின் விதைகள், பயிர் விதைகளைவிட மிகவும் சிறியதாக உள்ளன. களைகளின் விதைகளைச் சுற்றி உள்ள உறை, உரோமம் மற்றும் முட்களின் உதவியால் விலங்குகளிடருந்து தப்பித்துக் கொள்கின்றன. களைகளின் விதைகளில் இறகுகள் போன்ற அமைப்பு இருப்பதால் காற்றில் வெகுதூரம் அடித்துச் செல்லப்படுகின்றன. களைகளின் விதைகள் விலங்குகளின் உடலில் ஒட்டிக் கொண்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பயிர் அறுவடையாகும்போது களைகளின் விதைகள் தானியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் சந்ததியைப் பெருக்குகின்றன. பெரும்பாலான களைகள் விதையில்லா இனப்பெருக்கம் மூலம் வேகமாகப் பெருகுகின்றன. களைகளின் விதைகள், பயிர்களின் விதைகளைப் போன்ற அமைப்பும், பருமனும், நிறமும் உடையதாக இருப்பதால் தாவரங்களின் விதைகளிலிருந்து எளிதில் பிரிக்க முடிவதில்லை. களைகள் எல்லா மண்ணிலும் செழிப்பாக வளர்ந்து மண்ணில் உள்ள சத்துக்களை கிரகித்து விடும் தன்மை உடையவை.

களைகளின் வகைப்பாடு (Classification of Weeds)

வித்திலைகளை அடிப்படையாகக் கொண்டு : ஒரு வித்திலைக் களை - அருகு, மயில் கொண்டைப் புல்; இரு வித்திலைக் களை - குப்பைமேனி, கீழாநெல்லி

வளரும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு : நன்செய் நிலக்களைகள் - குதிரை வாலி, வல்லாரை, ஆலாக்கீரை; தோட்ட நிலக்களைகள் - சாரணை, பசலை, குப்பைமேனி; மானாவாரி நிலக்களைகள் - அருகு, துத்தி, சாரணை; நீர் வாழ்க் களைகள் - ஆகாயத்தாமரை, வேலம்பாசி, அல்லி; சாலையோரக்களைகள் - ஊமத்தை, எருக்கு

ஒட்டுண்ணித் தன்மையை அடிப்படையாகக் கொண்டு : தண்டு ஒட்டுண்ணி : முழுத் தண்டு ஒட்டுண்ணி - தங்கக் கொடி பகுதித் தண்டு ஒட்டுண்ணி – லொராந்தஸ் வேர் ஒட்டுண்ணி : முழு வேர் ஒட்டுண்ணி - ஓரபாங்கி பகுதி வேர் ஒட்டுண்ணி – சுடுமல்லி

வாழ்க்கைச் சுழற்சியை அடிப்படையாக கொண்டு : ஓராண்டுக் களைகள், ஈராண்டுக் களைகள், பல்லாண்டுக் களைகள்

ஓராண்டுக் களைகள்

ஒரு களையானது தனது வாழ்நாளை ஒரு பருவம் அல்லது ஒரு வருட காலத்திற்குள் வளர்ச்சி மற்றும் உற்பத்தி நிலைகளை அடைந்து மடிந்து விடுமானால் அதற்கு ஓராண்டுக் களை என்று பெயர். உ.ம். குப்பைமேனி, பார்த்தீனியம், கீழாநெல்லி.

ஈராண்டுக் களைகள்

ஒரு களை தனது வாழ்நாளின் முதல் பருவம் அல்லது வருடத்தில் வளர்ச்சி நிலையையும், இரண்டாவது பருவம் அல்லது வருடத்தில் உற்பத்தி நிலையையும் அடைந்து மடியுமானால் அதற்கு ஈராண்டுக் களை என்று பெயர். உ.ம். காட்டுத்துளசி, தொட்டாச்சுருங்கி, ஊமத்தை, விஷ முள்ளங்கி.

பல்லாண்டுக் களைகள்

சில களைகள் தொடர்ந்து எல்லாத் தட்பவெப்ப நிலையையும் தாங்கி பல வருடங்கள் வரை வாழ்கின்றன. இவற்றிற்கு பல்லாண்டுக் களைகள் என்று பெயர். உ.ம். அருகு, கோரை, துத்தி

நன்மை தரும் களைகள் (Beneficial Weeds)

களைகளை நிலத்தோடு சேர்த்து உழுவதால் நிலத்திற்கு தழைச்சத்து (Nitrogen) கிடைக்கிறது. உம். பயறு வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பசுந்தாள் உரப்பயிர்கள் ஏக்கருக்கு 20 முதல் 30 கிலோ தழைச்சத்தினை மண்ணில் சேமித்து வைக்கின்றன.

சில களைகள் களர் நிலங்களைச் சீர்திருத்தும் குணமுடையவை. களைகளை எரிப்பதால் சாம்பல் சத்து (Potash) கிடைக்கிறது. களைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகப் (Fodder) பயன்படுகின்றன. மருத்துவ குணமுடைய களைகள் (Medicated weeds) மனிதர் மற்றும் கால்நடைகளுக்கு நோய் தீர்க்கும் மருந்துப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. உ.ம். கீழாநெல்லி, பிரண்டை பண்படுத்தாத நிலங்களில் காணப்படும் களைகள் மண் அரிமானத்தைத் (Soil Erosion) தடை செய்கின்றன. உ.ம். அருகு, கோரை சில களைகள் மனிதன் மற்றும் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன. உ.ம். கீரை வகைகள் சில களைகளின் கிழங்குகள் (கோரை) அகர்பத்திகள் தயாரிக்கவும், சில களைகள் (எலுமிச்சை புல்) வாசனை எண்ணெய் தயாரிப்பிலும் உதவுகின்றன.

பல புதிய இரகங்களை உருவாக்குவதில் களைகள் உதவிபுரிகின்றன. உ.ம். ஸ்பான்டேனியம் என்ற நாணல் களையை கரும்புடன் இனக்கலப்பு செய்து கோ. 205 என்னும் பிரபலமான கரும்பு இரகம் வெளியிடப்பட்டது.

சில களைச்செடிகள் அலங்காரத் தாவரங்களாகப் பயன்படுகின்றன. உம். உனிமுள் மூலிகை குணமுடைய களைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அன்னியச் செலவாணியை ஈட்டித் தருகின்றன.

களைகளால் ஏற்படும் பாதிப்புகள் (LOSS Due to Weeds)

பயிர்களோடு போட்டியிட்டு பயிர்களுக்குண்டான ஊட்டச்சத்துக்கள், நீர், சூரிய ஒளி மற்றும் நிலம் போன்றவற்றை அதிக வீரியத்துடன் பகிர்ந்து கொண்டு பயிர் மகசூலைக் குறைக்கிறது. பல்லாண்டுக் களைகள் நிலத்தின் மதிப்பைக் குறைக்கின்றன. களை விதைகள் கலப்பதால் விளைபொருட்களின் தரம் மற்றும் மதிப்பு குறைகிறது. களைகள் பூச்சி மற்றும் நோய்களுக்கு மாற்று ஊன் வழங்கிகளாக இருப்பதால், தொடர்ந்து பயிர் பாதுகாப்பு மேற்கொள்வதால் உற்பத்தி செலவு கூடுகிறது. களைகளால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் நச்சுத்தன்மையால் மனிதன் மற்றும் கால்நடைகளின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நீர் நிலைகளில் வாழும் களைகள் பாசன வழிகளை அடைப்பதுடன் தண்ணீரையும் விரயமாக்குகிறது. களைகள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து கிரகித்துக் கொள்வதால் மண்ணின் ஊட்டத்திறன் குறைகிறது.

களைகள் பரவும் முறைகள் (Dissemination of Weeds)

தரமற்ற விதைகள் மூலம் பரவுதல்

விதைப்பதற்கு வாங்கும் பயிர் விதைகளில் களை விதைகள் கலப்பு இருப்பின் நடவு வயலில் களைகள் தோன்றுகின்றன. எனவே சான்றிதழ் பெற்ற விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.

காலியிடங்களிலிருந்து பரவுதல்

சாலையோரங்கள், வரப்புகளில் உள்ள களைச் செடிகளிலிருந்து களை விதைகள் பரவுகின்றன; மேலும் வளமான மண்ணை ஆற்றுப்படுகைகளிலிருந்து கொண்டு வரும்பொழுதும் களை விதைகள் பரவுகின்றன. மண் அரிமானம் மூலம் சேர்க்கப்படுகின்ற மண்மூலமாகவும் களைவிதைகள் பரவுகின்றன.

உழவு சாதனங்கள் மற்றும் நீர் மூலமாக பரவுதல்

களைகள் இருக்கும் நிலத்தில் பயன்படுத்திய உழவு சாதனங்களை களைகள் இல்லாத நிலத்தில் பயன்படுத்தும்பொழுது களை விதைகள் பரவுகின்றன. மேலும், களைகள் அதிகம் காணப்படும் நிலத்தில் இருந்து களைகள் இல்லாத நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்வதன் மூலமாகவும், மழை நீர் மூலமாகவும் களை விதைகள் பரவுகின்றன.

தொழு உரம் மூலமாக பரவுதல்

நன்கு மட்காத தொழுஉரத்தை நிலத்தில் பயன்படுத்துவதால் களைகள் பரவுகின்றன.

விதை உறக்கம் மூலமாக பரவுதல்

சாகுபடி நிலத்தில் தோன்றும் களைகளை பூக்கும் தருணத்திற்கு முன்பாக கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், களை விதைகள் மண்ணில் சேர்ந்து உறக்க நிலையில் இருந்து பல்லாண்டுகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

விலங்குகள் மற்றும் மனிதர்கள் மூலம் பரவுதல்

ஒட்டும் தன்மையுடைய களை விதைகள் மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது ஒட்டிக்கொண்டு வேறு இடங்களுக்கு பரவுகின்றன.

பறவைகள் மூலம் பரவுதல்

பறவைகள் கனிகளை உண்ணும்போது, அவற்றின் ஜீரண உறுப்புகளால், விதைகள் பாதிக்கப்படுவதில்லை. பறவைகளால் வெளியேற்றப்படும் கழிவுகளிலிருந்து களை விதைகள் பரவுகின்றன.

காற்று மூலம் பரவுதல்

களைகளின் விதைகள் இலேசாகவும், எடைகுறைவாகவும் இருப்பதுடன் விதைகளில் உரோமங்களைக் கொண்டுள்ளதால் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு பரவுகின்றன.

களைக் கட்டுப்பாடு (Weed Management)

நாம் சாகுபடி செய்யும் பயிர்களை விட விரைவாக வளர்வதற்கும், பரவுவதற்கும் களைகள் சிறப்புத் திறன்கள் பெற்றுள்ளன. களைகளை முற்றிலும் அழிப்பது என்பது முடியாத செயலாகும். எனவே பயிர் சாகுபடியில் பயிரின் குறிப்பிட்ட வளர்ச்சிப் பருவம் வரை களைகளின் எண்ணிக்கையைத் தகுந்த முறைகளைக் கையாண்டு குறைப்பதே ஒருங்கிணைந்த களை நிர்வாக முறையின் நோக்கமாகும்.

ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு (Integrated Weed Management - IWM)

சாகுபடி, இயந்திரம், வேதியியல் மற்றும் உயிரியல் முறைகளைக் கையாண்டு பயிர்களை தாக்கும் களைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் முறைக்கு ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு என்று பெயர்.

ஒருங்கிணைந்த களைக்கட்டுப்பாடு முறைகள் (Methods of Integrated Weed Management)

சாகுபடி முறை (Cultivation Method)

கோடை உழவு

கோடை மழை பெய்தவுடன் உழவை மேற்கொண்டு பல்லாண்டுக் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இதனால் களைகளின் வேர்கள் மற்றும் கிழங்குகள் நிலத்தின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு சூரிய ஒளி பட்டு அழிந்துவிடும். மண்ணின் நீர் பிடிப்புத்திறனும் மேம்படுத்தப்படுகிறது.

பயிர் இடைவெளி பராமரித்தல்

சிபாரிசு செய்யப்பட்ட பயிர் இடைவெளியை பராமரிப்பதால், களைகளின் தாக்கம் குறையும் என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

பயிர் சுழற்சி

ஒரு பயிரைத் தொடர்ந்து பயிரிடுவதால் சில களைகள் தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தி விளைச்சலைக் குறைக்கும். எனவே, பயிர் சுழற்சியை பின்பற்றி களைகளின் தொடர் பாதிப்பினை குறைக்கலாம்.

ஊடுபயிர் சாகுபடி

அதிக பயிர் இடைவெளியுள்ள பயிர்களில் வரிசைகளுக்கு இடையே ஊடுபயிர் பயிரிட்டு களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

நிலமூடாக்கு

பயிர்களுக்கு இடையேயுள்ள இடைவெளியில் பயிர்களின் கழிவுகள் அல்லது பிளாஸ்டிக் காகிதங்கள் ஆகியவற்றை கொண்டு நிலமூடாக்கு செய்வதால் சூரிய ஒளி இல்லாமல் களை விதைகள் முளைப்பது தடைபடுகிறது.

இயந்திரமுறை (Mechanical Method)

உழவு முறைகள்

உழவுக் கருவிகளைப் பயன்படுத்தும்பொழுது களை விதைகளின் முளைப்பு மற்றும் வளர்ச்சி தடைபடுகிறது.

கருவிகள் மூலம் அகற்றுதல்

களைகொத்து, மண்வெட்டி, உந்தும் உருளை வடிவக் களைக்கருவி (Rotary weeder) மற்றும் ஜீனியர் கலப்பை ஆகிய ஊடுசாகுபடிக் கருவிகளை பயன்படுத்தி களைகளை அகற்றலாம்.

எரித்தல்

காய்ந்த நிலையில் உள்ள களைகள், களை விதைகள் மற்றும் சாகுபடி செய்யமுடியாத இடங்களில் உள்ள களைகள் ஆகியவற்றை எரித்து அழிக்கலாம்.

நீர் தேக்குதல்

நிலத்தில் நீரினைத் தேக்கி களை மற்றும் களை விதைகளின் சுவாசத்தைத் தடை செய்து களைகளை கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் முறை (Biological Method)

பூச்சிகள்

சப்பாத்திக் கள்ளியை அழிக்க டேக்டிலோபியஸ் டொமண்டோசஸ் என்னும் மாவுப்பூச்சியையும், பார்த்தீனியம் களையை அழிக்க சைகோகிரம்மா பைகலரேட்டா என்னும் வண்டையும் பயன்படுத்தலாம்.

பூஞ்சைகள்

செர்கோஸ்போரா ரோட்மேனி, ரைசக்டோனியம் எனும் பூசணங்கள் நீர்வாழ் களையான ஆகாயத்தாமரையைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் உயிர் களைக்கொல்லிகள் களை கட்டுப்பாட்டில் பயன்படுத்துகின்றன. உ.ம். கொலிடோடிரைகம் சிற்றினம்.

போட்டிப் பயிர்கள்

கேசியா செரிசியா என்னும் தாவரம் பார்த்தீனியம் களையுடன் போட்டியிட்டு வளர்ந்து அதன் வளர்ச்சியைக் குறைக்கிறது.

நீர்வாழ் உயிரிகள்

சைனீஸ் கார்ப் எனும் மீன் இனம், நன்னீர் நத்தைகள் ஆகியவை நீர்வாழ் களைகளை உணவாக உட்கொண்டு கட்டுப்படுத்துகின்றன.

இரசாயன முறை (Chemical Method)

களைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய இரசாயனக் கூட்டுப்பொருள்களுக்கு களைக்கொல்லிகள் என்று பெயர்.

களைக்கொல்லிகளை தெளிக்கும் தருணம் (Time of Application)

  • விதைக்கும் முன்பு தெளித்தல்
  • விதைத்த பிறகு,
  • முளைக்கும் முன்பு தெளித்தல்
  • முளைத்த பிறகு தெளித்தல்

விதைக்கும் முன்பு தெளித்தல் (Pre-sowing Application)

பயிரிடுவதற்கு முன் வயலில் இருக்கும் களைகளைக் கட்டுப்படுத்தவும், களைகளின் விதைகளை முளைக்கும் திறனற்றதாகச் செய்யவும் இக்களைக் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. உ.ம். அட்ரசின், கிரமக்சோன்

விதைத்த பிறகு, முளைக்கும் முன்பு தெளித்தல் (Pre-emergence Application)

நிலத்தைப் பண்படுத்தி அதில் விதைகளை விதைத்த பிறகு, அவ்விதைகள் முளைப்பதற்கு முன்பே களைகளின் விதைகள் முளைத்துவிடும். இவ்வாறு களை விதைகள் முளைப்பதற்கு முன்பு இவ்வகைக் களைக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. உ.ம். அட்ரசின், அலாக்குளோர்

முளைத்த பிறகு தெளித்தல் (Post-emergence Application)

இம்முறையில் பயிர்களும், களைகளும் முளைத்து வளரும் போது களைக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. உ.ம். கிளைபோசேட், பெர்னாக்சோன்,

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
3.11764705882
ஏழுமலை Sep 27, 2019 06:21 PM

கேழ்வரகு பையருக்கு களைக்கொல்லி இருக்க

ராஜா Jun 11, 2019 08:30 AM

வாழைகளுக்கு இடையே உள்ள அதிகப்படியானகளையை என்ன களைக் கொல்லி மூலம் கட்டுப்படுத்தலாம்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top