பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / கால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’

கால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’ பற்றிய குறிப்புகள்

பால் உற்பத்தியில் உலகத்தில் முதலாம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் பால் மற்றும் பால் பொருட்களின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு, தீவனத்தினால் ஏற்படும் செலவே முக்கிய காரணமாகும். பால் உற்பத்தியில் தீவனத் தேவைக்காக 70 சதவீதம் செலவழிக்கப்படுகிறது. இதனால் தீவன செலவை குறைக்க, புதிய தீவனங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு சிறந்த மாற்று உலர்தீவனமாக பயன்படுத்தலாம்.

நிலக்கடலை செடி

 • இந்தியாவில் கடலை சாகுபடி வெகுகாலமாக நடைபெற்று வருகிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், பணப்பயிராக கடலை பயிரிடப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் நிலக்கடலை எண்ணெய் மிகச்சிறந்த ஏற்றுமதி பொருளாக விளங்குகிறது.
 • கடலை புண்ணாக்கு மிகச்சிறந்த புரதச்சத்து மிக்கதாக காணப்படுகிறது. இது அனைத்து கால்நடை மற்றும் கோழித்தீவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் கடலைச்செடியானது வெயிலில் காய வைக்கப்பட்டு, சிறிய அளவில் போராக அடுக்கி வைக்கப்படுகிறது. அவ்வாறு உலர்த்தப்படும் செடி, அதிக புரதம் கொண்டதாகவும், எளிதாக செரிக்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கப்பட்டு வருகின்றன.

நிறைந்துள்ள சத்துக்கள்

 • நன்கு பதப்படுத்தப்பட்ட கடலைச்செடியானது 14 சதவீத புரதத்தையும், உலராத கடலைச்செடியானது 17 சதவீத புரதத்தையும் கொண்டுள்ளன. இதேபோல் கொழுப்புச்சத்து 1 முதல் 2.5 சதவீதம் உள்ளது. இந்த சத்துக்கள் கடலைச்செடியின் ரகங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
 • அதேநேரத்தில் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும், மற்ற உலர் தீவனங்களில், புரதம் மற்றும் செரிமானத்தன்மை குறைவாகவும், செரிமானத் தன்மையற்ற நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், கால்நடைகள் அவற்றை பெரும்பாலும் விரும்புவதில்லை. அவ்வகை உலர் தீவனங்களால் பால் உற்பத்தி குறைவும், உடல் வளர்ச்சி மற்றும் கன்று வளர்ச்சி பாதிக்கப்படும்.

அதிகளவு புரதம்

 • எளிதில் சினைப்பிடிக்காத நிலையும் ஏற்படும். பயறுவகை தீவனமான கடலைச்செடியானது, அதிக அளவு புரதமும், எளிதில் செரிக்கும் தன்மையும் உள்ளதால், கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்கின்றன. தற்போது அதிக விளைச்சல் தரக்கூடிய நீண்ட தண்டு, அதிக இலை வளர்ச்சி கொண்ட ரகங்கள் அதிகம் உள்ளன. இது விவசாயிகளுக்கு வருமானத்தையும், கால்நடைகளுக்கு உலர்த்தீவனமாகவும் பயன்தருகிறது.
 • நிலக்கடலை செடியை நன்கு உலர வைத்து, நிலக்கடலையை பிரித்தெடுத்த பிறகு, மீண்டும் நன்றாக உலர வைக்க வேண்டும். ஈரப்பதம் 14 சதவீதத்திற்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகாலை அல்லது மாலை வேளைகளில் கடலைச்செடியை உலர்த்துவது நல்லது. இதன்மூலம் தேவையற்ற இலை உதிர்வை தடுக்க முடியும்.

பூஞ்சை காளான் பாதிப்பு

 • மழை மற்றும் பனிக்காலங்களில் கடலைச்செடியை தார்பாலின் கொண்டு, மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். நன்றாக காய வைக்காத செடிகள், மழையில் அல்லது பனியில் நனைந்தால், ஈரப்பதம் 14 சதவீதத்திற்கும் அதிகமாகிவிடும். அதை போராக அடுக்கி வைக்கும் போது, பூஞ்சை காளான்களால் பாதிக்கப்பட்டு, நச்சுப்பொருட்கள் உண்டாகின்றன.
 • இதனால் கால்நடைகளில் செரிமானக் கோளாறு, உடல் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டு பாதிக்கப்பை ஏற்படுத்தும். உலர்ந்த கடலைச்செடியை சிறு, சிறு கட்டுகளாகக்கட்டி வைக்கலாம். பரண் அமைத்தோ, நல்ல உயரமான இடங்களில் போர் அமைத்தோ, அதன் மேல் பாயை கொண்டு மூடி மழை மற்றும் பனியில் நனையாமல் பாதுகாக்க வேண்டும்.

உலர்தீவனம்

 • கடலைச்செடிகளை அனைத்து வகையான கால்நடைகளும் விரும்பி உண்ணுவதால், அவற்றின் தேவைக்கேற்ப உலர் தீவனமாக அளிக்கலாம். கன்றுக்குட்டிக்கு ஒரு வயது வரை 4 கிலோ வரையிலும், கறவைமாடுக்கு 8-10 கிலோ வரையிலும், எருமைக்கு 6-7 கிலோ வரையிலும், வெள்ளாட்டுக்கு 4 கிலோ வரையிலும், செம்மறியாடுக்கு 4 கிலோ வரையிலும் உலர்தீவனமாக கொடுக்கலாம்.
 • வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு எந்தவொரு அடர் தீவனமும் கொடுக்காமல் இதனையே கொடுத்து கொட்டில் முறையில் வளர்க்கலாம். கறவை மாடுகளுக்கு கடலைச்செடியை, உலர் தீவனமாக அளிக்கும் போது, தேவையான அளவு பசும்புல் வகைகளையும், சேர்த்துக்கொடுக்க வேண்டும். இது கால்நடைகளுக்கான வைட்டமின் ‘ஏ‘ தேவையை பூர்த்தி செய்யும். இவ்வாறான அளவுகளில் கால்நடைகளுக்கு உலர்தீவனம் அளிக்கும் போது, வேறு எந்த உலர்தீவனமும் அளிக்க தேவையில்லை.

அதிக லாபம்

இதை விவசாயிகள் பயன்படுத்துவதன் மூலம் அடர் தீவனச்செலவை குறைக்க முடியும். நல்ல தரமான புரதச்சத்து மிக்க, எளிதில் செரிக்கும் தன்மையுள்ள உலர்ந்த தீவனம் கால்நடைகளுக்கு கிடைக்கும். இதனால் அவற்றின் உடல் வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிப்பதால், விவசாயிகள் லாபம் பெறலாம்.

ஆதாரம் : கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சரவணம்பட்டி, கோவை.

3.015625
அண்ணாதுரை Jun 02, 2019 07:35 AM

கால்நடைகளுக்கு ஏற்ற நீண்ட தண்டு, அதிக இலை வளர்ச்சி கொண்ட ரகங்கள் எது.

paramasivam Jun 17, 2016 11:10 AM

நல்ல பயனுள்ள பகிர்வு.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top