பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / சீரியசந்தை மேலாண்மை முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சீரியசந்தை மேலாண்மை முறை

சீரியசந்தை மேலாண்மை முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்தியாவில் 70 களில் நடந்த பசுமைய் புரட்சியின் விளைவாக சுமார் 120 கோடி மக்களுக்கு மேல் உணவளித்து, 7 கோடி டன்கள் உணவ தானியங்களை இருப்பாக வைத்துள்ளோம். மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து தன்னிறைவு நிலையை எட்டியுள்ளோம். வேளாண் பொருட்களின் இந்திய ஏற்றுமதி 2010-2011ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இவ்வாறு வேளாண் உற்பத்தியைப் பன் மடங்கு பெருக்கிய உழவர்களுக்கு அனைத்துப் பயிர்களுக்கும் ஒரு இலாபகரமான விலை கிடைக்கிறதா என்றால் "இல்லை" என்ற பதிலே மிஞ்சுகிறது. வேளாண் இடுபொருட்களின் விலை உயர்ந்த அளவிற்கு, வேளாண் தொழிலாளர்களின் கூலி உயர்ந்த அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களின் விலை உயரவில்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு வணிகப்பயிரின் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இதனால் அதிக உற்பத்தி செய்து கடனாளியாக இந்திய உழவர்கள் தவிக்கின்றனர்.

காரணங்கள்

வேளாண் விளைபொருட்களைச் சந்தையிடலில் உள்ள குளறுபடிகள், ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கைகள், திறம்பட செயல்படாத அரசின் வேளாண் சந்தை நிறுவனங்கள் (ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள், கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கங்கள், மத்திய-மாநில சேமிப்புக் கிடங்கு நிறுவனங்கள் போன்றவை) என்று பல்வேறு உள்ளன.

எந்த விளைபொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று திட்டம் இடுகிறோமோ அந்த நிலையிலேயே சந்தையிடல் ஆரம்பம் ஆகின்றது.

ஒரு விளைபொருளுக்கு இலாபகரமான விலை கிடைப்பது அப்பொருளுக்கு எந்த சந்தையில் அதிக விலை கிடைக்கிறது? அதிக விலை கிடைக்கும் சந்தையில் அதன் நுகர்வோர் அப்பொருளின் எந்த எந்தக் குணங்களைப் பெரிதும் விரும்புகின்றனர், ஆண்டின் எந்த எந்த மாதங்களில் அந்த விளைபொருளுக்கு அதிக விலை கிடைக்கும் போன்ற மூன்று காரணிகளையும் தன்னகத்தே வைத்து உள்ளது Market Intelligence எனப்படுகின்றது.

மக்காச்சோளத்திற்கு அதிக விலை கிடைக்கக் கூடிய சந்தை தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை ஆகும். அதிலும் அங்கு உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தின் வழியாக விற்பனை செய்யும் போது, தரகு (Commission), வேறு பிடித்தங்கள் இல்லாமையால் நிகர விலை அதிகமாகக் கிடைக்கின்றது.

மக்காச்சோளம் அதிக விலையைப் பெற நன்றாக உலர்ந்து ஈரத்தன்மை 12% சதவீதத்திற்கும் குறைவாகவும், நல்ல மஞ்சள் நிறத்துடனும், பெருமணிகளாகவும் இருத்தல் அவசியம். அதாவது 100 கிராம் தானியத்தில் 350க்கும் குறைவான மணிகளே இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் நிலையில் அதிக விலை கிடைக்கும்.

அதேபோல் எந்தெந்த மாதங்களில் மக்காச்சோளத்திற்கு அதிக விலை கிடைக்கும்? தைப் பட்டத்தில் விதைத்து சித்திரையில் அறுவடை ஆகி சித்திரை, வைகாசியில் சந்தைக்கு வரும் மக்காச்சோளத்திற்கு அந்த ஆண்டின் உயர்ந்த அளவு என்ன விலை கிடைக்கும்? இவ்வாறு விளைபொருளின் தன்மைகள், சந்தையிட சரியான காலம், உயர் விலை கிடைக்கும் சந்தை என்று அனைத்தையும் தன்னகத்தே கொண்டதுதான் சந்தைத் தகவல் ஆகும்.

இச்சந்தைத் தகவல்களை முறையாகப் பின்பற்றும் போது உழவர்களுக்கு தங்கள் விளைபொருள்களுக்கு உயர்ந்த விலை கிடைக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் முதல் தொடர்ந்து உழவர்களுக்குச் சந்தைத் தகவல்களை அளித்து வருகின்றது. அதற்காகவே "உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக சந்தை தகவல்களை உழவர்கள் பயன்பெறும் வண்ணம் பல்வேறு ஊடகங்களின் வாயிலாக வெளியிட்டு வருகின்றது.

இம் மையம் இரண்டு விதமான சந்தைத் தகவல்களை வெளியிட்டு வருகின்றது. முதலாவது விதைப்பிற்கு முந்தைய தகவல் எனப்படுவது. அதாவது ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு பயிரின் விதைப்பிற்கும் ஒரு மாதத்திற்கு முன்னரே அய்பயிரை விதைத்து, பயிரிட்டு, அறுவடை செய்யும் போது என்ன விலை கிடைக்கும் என்று விலை முன்னறிவிப்பு செய்தல், இதனுடன் விலை அதிகம் பெறத் தேவையான விளைபொருளின் தன்மைகள், அதனை அடைய பயிரிடும் போதும், அறுவடைக்கு முன்னர், அறுவடைக்குப் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் ஆகியனவும் வெளியிடப்படுகின்றன.

இதன் காரணமாக உழவர்கள், குறிப்பிட்ட அப்பருவத்தில் அந்த விளைபொருளை உற்பத்தி செய்யலாமா, வேண்டாமா என்று அறிவியல் பூர்வமாக முடிவுகள் எடுக்க வழிவகை செய்யப்படுகின்றது.

விலை குறையும் போது சேர்த்து வைத்திருந்து விற்க முடியாத (கடன் வாங்கி வேளாண்மை செய்பவர்கள்) உழவர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தரக் கூடிய பொருள் பயனீட்டுக் கடன் அல்லது பாரத வங்கி கிடங்கு வைப்பு ரசீது முறையைப் பின்பற்றி கடனைப் பெற்று பின்னர் விலை ஏறும் போது விற்பனை செய்து இலாபம் பெறலாம்.

இரண்டாவது வகை சந்தைத் தகவல், அறுவடைக்கு முந்தைய தகவல் ஆகும். ஒரு விளைபொருளை உழவர்கள் அறுவடை செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, இந்த விளைபொருளை அறுவடை செய்து உடனே விற்கலாமா அல்லது சேமித்து வைத்து விற்றால் அதிக விலை கிடைக்குமா என்ற தகவல் தரப்படுகின்றது. அவ்வாறு சேமித்து வைத்து விற்கும் பொழுது, எந்த முறைகளில் சேமித்தால் நன்மை தரும், அதற்கான கிடங்கு வசதிகள், அதற்கான செலவுகள் ஆகிய செய்திகளும் கூடவே தரப்படுகின்றன. இதன் காரணமாக உழவர்கள் விளைபொருட்களின் விதைப்பு, விற்பனை முடிவுகளைச் சரியான முறையில் எடுத்து அதிக விலை பெற்று உயர்ந்த இலாபத்தை அடைந்து வருகின்றனர்.

சந்தைத் தகவல்களுக்கான அட்டவணைகள்

ஆண்டு முழுவதும் என்னென்ன விளைபொருளுக்கு சந்தைத் தகவல்கள் அளிக்கப்படுகின்றன என்பதைக் கீழ்க்காணும் அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

 1. நிலக்கடலை - ஜனவரி, ஜூலை, ஏப்ரல்,
 2. சின்ன வெங்காயம் - ஜூண், ஆகஸ்டு
 3. மிளகாய் - பிப்ரவரி, அக்டோபர்
 4. உளுந்து - மே, டிசம்பர் - ஏப்ரல்,
 5. மஞ்சல் - ஜூலை, நவம்பர்
 6. சூரியகாந்தி - மார்ச், ஆகஸ்டு,  ஏப்ரல், ஜூலை,
 7. மக்காச்சோளம் - நவம்பர்
 8. எள் - ஏபரல், ஜூலை
 9. பருத்தி - பிப்ரவரி, ஜூலை - ஜனவரி, ஏப்ரல்,
 10. உருளைக்கிழங்கு - ஜனவரி, ஏப்ரல், செப்டம்பர்
 11. கம்பு - அக்டோபர்
 12. கொத்தமல்லி - அக்டோபர்
 13. கொண்டைக்கடலை - அக்டோபர்
 14. தேங்காய் - ஜனவரி, ஏப்ரல், அக்டோபர்

இச்சந்தைத் தகவல்கள் அனைத்தும், ஏராளமான உழவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ், ஆங்கிலச் செய்தித்தாள்கள், வேளாண்மை இதழ்கள், அகில இந்திய வானொலி நிலையங்கள், தமிழ்நாடு வேளாண்மைய் பல்கலைக்கழகத்தின் பண்பலை வானொலி, தனியார் பண்பலை வானொலிகள், அரசு, பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், வேளாண் பொருள்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் அதிக எண்ணிக்கையிலான உழவர்களை சந்தைத் தகவல்கள் சென்றடைகின்றன. இது தவிர "இப்கோ' நிறுவனத்துடன் இணைந்து, ஒவ்வொரு சந்தைத் தகவலும் உடனுக்குடன் குரல் வழிச்செய்தியாக சுமார் 2 இலட்சம் உழவர்களைச் சென்றடைகின்றது.

குறுஞ்செய்தியாக 1,29,000 உழவர்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றது. இக் குறுஞ்செய்தி 3000 வேளாண் துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அச்சந்தைத் தகவல்களை உழவர்களுக்குத் தெரிவிக்கின்றனர். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண் இணை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் துணை இயக்குநர், மாவட்ட வேளாண் விற்பனைக்குழுக்களின் செயலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் இச் சந்தைத் தகவல்கள் ஏராளமான உழவர்களைச் சென்றடைகின்றன. இச்சந்தைத் தகவல்களின் நம்பகத் தன்மை 90 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதால் ஏராளமான உழவர்கள் இத்தகவல்களை வழி காட்டியாக வைத்து தங்களுடைய விதைப்பு, விற்பனை முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

மஞ்சள், சின்ன வெங்காயம், எள், மக்காச்சோளம், சூரியகாந்தி ஆகிய பயிர்களில் நடத்திய ஆய்வுகளில் இச் சந்தைத் தகவல்களைக் கடைப்பிடித்ததால் தங்களுக்கு அதிக இலாபம் கிடைத்தாக உழவர்கள் கூறியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர பயிர்களுக்கான சந்தைத் தகவல் கடைப்பிடிப்பு பற்றிய ஆய்வுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. வேளாண் விளைபொருட்கள் சந்தையிடலில் உள்ள இடர்பாடுகளைக் களைய ஒப்பந்தப் பண்ணையம், குறிப்பிட்ட பயிர்களுக்கான வளர்ப்போர் சங்கங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

ஒப்பந்த பண்ணையம்

 • ஒப்பந்தப்பண்ணையம் என்பது ஏதோ புதிதாக வந்தது போல் சிலர் எண்ணுவர். அது தவறானதாகும். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு பயிரிடுவோர், சர்க்கரை ஆலைகளிடையே ஒப்பந்தப்பண்ணையம் சிறப்பாக செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
 • ஆகையால் சில வரத்துக்கள் இதில் தெளிவாகக் குறிப்பிட்டால் மட்டுமே இந்த ஒப்பந்தப் பணி பண்ணையம் முழுவெற்றி பெறும்.
 • முக்கியமாக விலையைக் குறிக்கும் போது ஒப்பந்தம் செய்யும் போது குறிப்பிடுவது ஒரு வகை. கரும்பில் இதுகுறிப்பிடப்படுகிறது. அரசாங்கம் சட்ட பூர்வமான குறைந்த விலையை நிர்ணயம் செய்து விடுவதால் கரும்பைப் பொறுத்த வரையில் யாரும் ஏதும் செய்ய முடியாது.
 • அரசு நிர்ணயித்த விலையை விட அதிகம் கொடுக்கலாம். ஆனால், கரும்பைப் பொறுத்த வரை, சர்க்கரை (சீனி) விலை வெளிச்சந்தையில் குறையும் போது என்ன ஏற்படுகிறது.
 • கரும்பு நடவு செய்து 12 மாதத்திற்குள் தர வேண்டிய வெட்டு உத்தரவை சர்க்கரை ஆலைகள் அந்தக் காலகட்டத்தில் தருவதில்லை. 14 முதல் 16 மாதம் என்று இழுத்தடிக்கும் போது கரும்பின் எடை குறைந்து உழவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.
 • அதேபோல வெட்டிய கரும்பிற்கான முழுப்பணமும் உழவர்களுக்கு உடனே தரப்படுவது இல்லை. இதன் காரணமாக உழவர்கள் சொல்லொணாதுயருக்கு ஆளாகின்றனர்.
 • ஒப்பந்தம் போடும் போதே இதற்கான வரத்துக்களைச் சேர்த்துக் கொண்டால் இப்பிரச்சனைகளைத் தீர்க்க இயலும். கரும்பு தவிர, பருத்தி, மருத்துவப் பயிர்கள் போன்றவைகளுக்கும் சமீப காலங்களில் ஒப்பந்தப் பண்ணைய முறை பல்வேறு இடங்களில் கடைப் பிடிக்கப்படுகின்றது.
 • விலையை முன்னரே குறிப்பிடாமல், விற்பனை செய்யும் போது இருக்கும் சந்தை நிலவரம், குறைந்த பட்ச விலை, விளைபொருளைக் களத்திலேயே கொடுப்பதா அல்லது எங்கே, யார் கொண்டு போய் சேர்ப்பது, அறுவடைக்குப் பிந்தையச் சந்தை ஆகியனவற்றை ஒப்பந்தத்திலேயே எழுதிக் கொள்ளும் போது பல்வேறு பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரலாம்.

செயல்பாடுகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் துல்லியப் பண்ணைத் திட்டத்தை கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியது என்பதை அனைத்து உழவர்களும் அறிவர். அதன் ஒரு பகுதியாக விளைபொருள் உற்பத்தியாளர் சங்கங்கள் தொடங்கப்பட்டன.

அந்த விளைபொருளை உற்பத்தி செய்ய நன்நெறி வேளாண் வழி முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. கூடவே நன்னெறி சந்தை வழிகளும் கடைப்பிடிக்கப்பட்டன.

ஒவ்வொரு காய்கறிக்கும் அதிக விலை எங்கே கிடைக்கும் என்பதை ஆய்வுகள் மூலம் அறிந்து, அச் சந்தைக்க்கு விளைந்த அனைத்துக் காய்கறிகளும் தரம் பிரிக்கப்பட்டு, கெட்டியான பிளாஸ்டிக் சிப்பங்களில் இடப்பட்டு, லாரிகள் மூலம் அதிக விலைக்காக அனுப்பப்பட்டன.  சந்தைத் தகவல்கள் இதில் முக்கியப் பங்காற்றின. உற்பத்திக்கு மட்டும் அல்லாது விற்பனைக்கும் சேர்த்தே சங்கம் பணிபுரிந்ததால் உயர் பெறமுடிந்தது.

தற்போது மேற்கூறிய அடிப்படையில் ஏனைய மாவட்டங்களில் துல்லியப் பண்ணையம் நடைபெற்றுவருகின்றது. ஆக உழவர்கள் தங்கள் விளை பொருட்களுக்கு இலாபகரமான விலைகளைப் பெற, சந்தைத் தகவல்களைக் கடைப்பிடித்தல், குறிப்பிட்ட பயிர்களுக்கு ஒப்பந்தப் பண்ணையம், விளைபொருள் உற்பத்தியாளர் விற்பனைச் சங்கங்கள் அமைத்தல் ஆகியன உறுதுணையாக இருந்து வருகின்றன என்பதில் ஐயமில்லை.

உழவர்களுக்குச் சாதகமான ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகள், சிறப்பான கிடங்கு வசதிகள், சரியான சந்தைக் கடன் வசதிகள், அரசு சார்ந்த வேளாண் சந்தை நிறுவனங்கள் சீரிய முறையில் பணிபுரிதல் ஆகியன ஏற்படும் போது வேளாண் விளைபொருட்கள் மேலும், இலாபகரமாக அமையும் என்பது உறுதி.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.28571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top