பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு (Plant Protection) தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நாம் பயிரிடப்படும் பயிர்களை பூச்சிகள், நோய்கள், களைகள், விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றிடமிருந்து பாதுகாத்து நல்ல மகசூல் பெறுவதே பயிர் பாதுகாப்பு எனப்படும். மேலும் பயிர் பாதுகாப்பிற்கு உதவும் முறைகள் எளிதில் மேற்கொள்ளத்தக்கதாகவும், செலவு குறைவானதாகவும், சிறப்பாகக் கட்டுப்படுத்தக்கூடியதாகவும், மகசூலை அதிகரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் தரமானதாகவும், உற்பத்திச் செலவு குறைவானதாகவும் இருக்கும்.

பயிர் பாதுகாப்பின் அடிப்படை கொள்கைகள் (Basic Principles of Plant Protection)

 • தவிர்த்தல் (Exclusion)
 • அழித்தல் (Eradication)
 • பாதுகாத்தல் (Protection)
 • எதிர்ப்பு சக்தி ஊட்டல் (Immunization)

பயிர் பாதுகாப்பு முறைகள் (Plant Protection Methods)

பயிர் பாதுகாப்பு முறைகளை பொதுவாக கீழ்க்கண்டவாறு பகுத்து அறியலாம் :

இயற்கைக் கட்டுப்பாடு

வான் சூழல் காரணிகளான வெப்பம், மழைப்பொழிவு, காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம் ஆகியவை பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் இயற்கையிலேயே மனிதனைப் போலவே பயிர் பூச்சி மற்றும் நோய்கள் எதிரிகளால் தாக்குதலுக்குள்ளாகி இறக்கின்றன. இயற்கையான நில அமைப்புக்களான மலைகள், ஆறுகள், பாலைவனங்கள், கடல்கள் போன்றவைகளும் பூச்சி மற்றும் நோய்கள் பரவுவதை தடுக்கின்றன. உ.ம். 1. பெருமழை, அசுவினி, இலைப்பேன் போன்ற மிருதுவான பூச்சிகளை அடித்துச்செல்கின்றன. மழை குறைந்து, மண் கடினமாவதால் நிலத்தினடியில் கூட்டுப்புழு நிலையில் உள்ள பூச்சிகள் வெளிவர இயலாமல் போகின்றன. மண்ணிலிருந்து தாக்கும் பூசண நோய்களின் வித்துக்கள் மழைநீரால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துசெல்லப்படுகிறது. மழையின்மையால் மண்ணின் வெப்பம் அதிகரிப்பதால் மேக்ரோஃபோமினா என்கின்ற பூஞ்சையால் ஒருவித உலர் வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது.

எதிர்ப்புப் பயிர் வகைகள் (Resistant Varieties)

பயிர் பாதுகாப்பில் செலவில்லாத மிக சிக்கனமுறை, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் இரகங்களைப் பயிரிடுவதாகும். எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களை தேர்வு செய்வதால் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. மற்ற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எளிது.

விதை நேர்த்தி (Seed Treatment)

பயிர்களைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள் மற்றும் நூற்புழுக்கள் பரவுவதற்கு விதைகளும், விதையில்லா இனப்பெருக்கப் பகுதிகளும் காரணமாக அமைகின்றன. விதை மூலம் பரவும் பயிர் நோய் காரணிகளைக் கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. விதைநேர்த்தி, மற்றும் நோய்க் காரணிகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த உதவுவது வரும் முன் காப்பு முறை ஆகும். உம். 1. ஒரு கிலோ விதையுடன் (பொதுவாக எல்லா விதைப்பயிர்கள்) 2 கிராம் திரம் அல்லது 2 கிராம் கார்பென்டசிம் அல்லது கார்பாக்சின் கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து விதைப்பதால் மண் மூலம் (Soil borne) பரவும் பயிர் நோய்களை தடுக்கலாம்.

ஒரு கிலோ பருத்தி விதையுடன் 2 கிராம் கார்பன்டசிம் மற்றும் 7 கிராம் இமிடாகுளோப்ரிட் 70% WSD (Wet Seed Dressing) கலந்து விதைநேர்த்தி செய்து விதைப்பதால் நோய் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை வரும் முன் காக்கலாம்.

பூச்சி நோய்க் கண்காணிப்பு (Monitoring of Insect Pests and Diseases)

பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த முதலில் செய்ய வேண்டியது அவற்றின் நடமாட்டத்தை அறிவதாகும் (Pest surveillance)

குறிக்கோள்கள் :

 • பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கண்டறிதல்
 • அவற்றின் பாதிப்பினை மதிப்பிடுதல்
 • வானிலையுடன் பூச்சி மற்றும் நோய்களுக்கு உள்ள தொடர்பைக் கண்டறிதல்
 • நன்மை செய்யும் பூச்சிகளை அறிதல்
 • மாறிவரும் பயிர் திட்டங்களால் ஏற்படும் விளைவுகளைக் கண்டறிதல்
 • தேவைக்கேற்ப பயிர்பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தல்
 • பூச்சி நோய்கள் பரவியிருப்பதை முன்னறிவிப்பு செய்தல்.

இந்த கண்காணிப்பை நிரந்தர வயல் ஆய்வு (Fixed plot survey), சுற்றித்திரி ஆய்வு (Roving survey) என இரு முறைகளில் மேற்கொள்ளலாம்.

இந்த கண்காணிப்பை செய்வதற்கு உதவும் சாதனங்கள் :

உருப்பெருக்கிக் கண்ணாடி, பாலித்தீன் பைகள், மெல்லியதுணி, நாப்தலின் உருண்டைகள், பூச்சிகளை பிடிக்கும் வலை (Insect net), விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறி, மஞ்சள் வண்ண ஒட்டு பொறி போன்றவை ஆகும்.

நீக்கும் முறைகள்

இயற்பியல் முறை (Physical Method)

 • வெப்பம், ஈரப்பதம், கதிர்வீச்சு, ஒலி, இடவசதி போன்ற பெளதிக அமைப்புக்களைப் பயன்படுத்தி பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்துவது இயற்பியல் முறை பூச்சிக்கட்டுப்பாடு எனப்படும். வீட்டுத் தோட்டங்கள், கண்ணாடி இல்லங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இம்முறை உதவிகரமாக இருக்கும்.
 • பூச்சிகள் 60-66°C வெப்பநிலையில் கொல்லப்படுகின்றன. இம்முறையைப் பயன்படுத்தி சேமிப்பு தானியப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 • வெப்பநீரில் (52°C) நெல் விதைகளை 10 நிமிடங்கள் வரை ஊறவைப்பதன் மூலம் விதை மூலம் பரவும் இலைப்புள்ளி நோயின் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 • நெல் விதைகளை 50 முதல் 55°C வெப்பநிலையில் 15 நிமிடம் வரை சிகிச்சைக்கு உட்படுத்துவதால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
 • அதிக சூரிய வெப்பத்தில் கோதுமை விதைகளை காயவைப்பதன் மூலம் கரிப்பூட்டை நோயின் பூசணத்தைக் கட்டுப்படுத்தலாம்.
 • எறும்புகள் ஏறுவதைத் தடை செய்ய தண்ணீர்த் தடை ஏற்படுத்தலாம். பயிர் செய்யப்பட்ட வயலைச் சுற்றிலும் கம்பிவேலிகள் அமைத்து அதில் குறைந்த மின் அழுத்தமுள்ள மின்சாரத்தைச் செலுத்தி எலி மற்றும் பிற விலங்குகளின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
 • பயறு விதைகளில் ஏதாவது ஒரு தாவர எண்ணெய்பூச்சுக் கொடுத்து சேமித்து வைத்தால், பயறு வண்டுகள் விதைகளின் மீது முட்டையிடுவதைத் தடை செய்யலாம்.
 • வெப்ப காற்றினை விதைப்பொருட்கள் மீது செலுத்துதன் மூலம் கரும்பு பயிரினைத் தாக்கும் நச்சுயிரி நோய்களை கட்டுப்படுத்தலாம்.
 • துவரை விதைகளை செம்மண் பூச்சுக் கொடுத்து சேமித்து வைப்பதன் மூலம் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
 • சில பூச்சிகளை கதிர் வீச்சு கொடுப்பதன் மூலம் மலடு ஆக்கலாம். உ.ம். பழ ஈக்கள் மிகச்சிறிய தானியமான கேழ்வரகு உடன் அளவில் பெரிய தட்டைப்பயிறு விதைகளை கலந்து வைப்பதன் மூலம் ஊர்ந்து செல்லும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 • ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து சேமித்து வைப்பதன் மூலம் பூச்சித்தாக்குதலை தவிர்க்கலாம்.

உழவியல் முறை (Cultural Method)

சாதாரணமாக நாம் பயிரிடும் போது மேற்கொள்ளும் சாகுபடி முறைகளை அப்படியே கையாண்டு அல்லது சிறு சிறு மாறுதல்கள் செய்து பூச்சிகளையும், நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கு உழவியல் முறை (Cultural Method) என்று பெயர்.

ஆழ உழும்போது மண்ணில் வாழும் சில பூச்சிகளும், நோய்க்காரணிகளும், புதைக்கப்படுகின்றன. அல்லது மண்ணிற்கு மேலே கொண்டு வரப்பட்டு பறவைகளால் உண்ணப்படுகிறது. உம். புரோடினியா, சிவப்புக்கம்பளி புழு, கரையான், வேர்ப்புழு. பரிந்துரைக்கப்படும் அளவிற்கு அதிகமாகத் தழைச்சத்து உரமிடும்போது அது பூச்சி நோய் காரணிகளின் பெருக்கத்திற்குக் காரணமாகிறது.

அதனால், பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை ஒரே தடவை இடாமல் இரண்டு மூன்று முறைகள் பிரித்து இடுவதன் மூலம் பூச்சி நோய் தாக்குதலைக் குறைக்கலாம். உம். நெல் குலைநோய், நெல் புகையான், மிளகாய் அசுவினி நல்ல தரமுள்ள, பூச்சி மற்றும் நோய் தாக்காத விதைகளை விதைப்பதன் மூலம், பல பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

எதிர்ப்புத்திறனுடைய இரகங்களைத் தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். உம். நெல்லில் புகையானைத் தடுக்க பி.ஒய்.3, கோ. 42, கோ. 45 மற்றும் ஏ.டி.டீ. 36 இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஏ.டி.டீ. 25, ஏ.டி.டீ. 30 போன்ற இரகங்கள் நெல் குலை நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டவை.

நாற்றுகளின் நுனிகளைக் கிள்ளிவிட்டு நடவு செய்வதால் நெல் தண்டு துளைப்பானின் தாக்குதலை தவிர்க்கலாம். நீர் பாய்ச்சுவதையும், நீர்வடிப்பதையும் ஒரு நாள் இடைவெளிவிட்டு மாற்றி மாற்றி செய்து நெல்லில் புகையானைக் கட்டுப்படுத்தலாம்.

வயலை எப்போதும் களையில்லாமல் சுத்தமாக வைத்திருப்பது பூச்சி நோய்களைத் தவிர்க்கும். ஏனெனில் களைச்செடிகள் பூச்சி மற்றும் நோய்க்காரணிகளுக்கு உறைவிடமாகவும், மாற்று உணவாகவும் திகழ்கின்றன. கரும்பில் களை எடுத்து, மண் அணைத்து விடுவது கரும்புத் தண்டுப்புழுக்களைத் தடுக்கிறது.

ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடாமல், பயிர் சுழற்சி செய்து தொடர் உணவூட்டத்தை தடுத்து பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம். உம். நெல்- கரும்பு -பயறு வகைகள், சோளம் - பயிறு வகைகள் - பருத்தி. குறிப்பிட்ட பூச்சியால் விரும்பி உண்ணப்படும் பயிரை வரப்பு ஓரங்களில் கவர்ச்சி பயிராக பயிரிட்டு பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். உம். பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவிற்கு வெண்டை, துவரை போன்றவற்றைக் கவர்ச்சிப் பயிராகப் பயிரிடலாம். நிலக்கடலைப் பயிரில் தட்டைப் பயிரை ஊடுபயிராக பயிரிட்டால் சிவப்புக் கம்பளிப்புழு தாக்குதலைத் தவிர்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களை கலப்பு பயிராக (Mixed crop) பயிரிடும் போது, பூச்சிகள் அல்லது நோய்கள் அதிகம் தோன்றி குறிப்பிட்ட பயிர் தாக்கப்பட்டாலும், பிற பயிர்கள் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ளும். உம். சோளம், ஆமணக்கு, துவரை போன்ற பயிர்களைக் கலப்புப் பயிராக பயிரிடலாம்.

இயந்திரமுறை / சாதனமுறை (Mechanical Method)

 • மனித சக்தி மற்றும் சில சாதனங்களைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறை, இயந்திரமுறை அல்லது சாதனமுறை எனப்படும்.
 • சோளம் குருத்து ஈயைக் கட்டுப்படுத்த கருவாட்டுப் பொறியைப் பயன்படுத்தலாம். பச்சைக்காய்ப்புழு, புரோடீனியா புழு ஆகியவற்றைக் கவர்ந்து அழிக்க இனக்கவர்ச்சிப் பொறியைப் பயன்படுத்தலாம்.
 • விளக்குப் பொறியைப் பயன்படுத்தி எல்லா அந்துப்பூச்சிகள், வண்டுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
 • ஒட்டுப்பசைப்பொறிகளைப் பயன்படுத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 • நெல் வயல் வரப்புகளில் எதிர் எதிராக நின்று கயிற்றை பயிரின் மீது படுமாறு இழுத்து அசைத்தால் கூண்டுப் புழுக்கள் நீரில் விழும். அவற்றைச் சேகரித்து அழிக்கலாம்.
 • வீட்டுத்தோட்டங்களில் மாதுளை போன்ற பழவகைகளை துளைகள் இடப்பட்ட பாலித்தீன் பைக் கொண்டு மூடி வைப்பதன் மூலம் காய்ப்புழுக்கள் மற்றும் மாவுப் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றலாம்.
 • தென்னை மரங்களில் கை எட்டும் தூரத்தில் அலுமினிய தகரங்களை குறுக்காக கட்டி வைப்பதால் எலிகள் மரத்தில் ஏறுவதைத் தவிர்க்கலாம்.
 • பயிர் செய்யப்பட்ட வயலைச் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைத்து அதில் குறைந்த மின் அழுத்தமுள்ள மின்சாரத்தைச் செலுத்தி எலி மற்றும் பிற விலங்குகளின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
 • தென்னைக் காண்டாமிருக வண்டுகளை, மரத்தின் மீது ஏறி நீண்ட இரும்பு கொக்கியை மரத்தின் நடுக்குருத்துப் பகுதியில் விட்டுக் குத்தி வெளியே எடுத்து அழிக்கலாம்.
 • வெடி வெடிப்பதன் மூலம் சில பூச்சிகளையும், பறவைகளையும் விரட்டலாம்.
 • கூலி ஆட்கள் எளிதாகக் கிடைக்குமிடங்களில் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்கள், பூச்சி நோய் தாக்கிய பாகங்களை கையால் சேகரித்து அழிக்கலாம்.

சட்டமுறை (Legal method)

சில காலங்களில் பூச்சிகள், நோய்கள் திடீரென தாக்குவதால் பயிர்கள் அழிந்து விடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த அரசு பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசால் 1914-ம் ஆண்டில் பூச்சி தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் அயல் நாடுகளிலிருந்து பூச்சி மற்றும் நோய்கள் பரவுவது தடை செய்யப்பட்டது.

குவாரன்டைன்சட்டம் (Quarantine Law)

விவசாயம் சம்பந்தப்பட்ட விளைபொருட்களை ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலமும் அல்லது ஒரு சில காலம் பிரித்து வைப்பதன் மூலமும், பூச்சிகள், நோய்கள், களைகள் முன்பு இல்லாத இடங்களில் புகுத்துவது தடைச்செய்யப்படுகிறது. இதற்கு குவாரன்டைன் சட்டம் என்று பெயர். குவாரன்டைன் சட்டமானது மத்திய மாநில அரசாங்கங்களின் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

இத்தடுப்புச் சட்டமானது ஆகாய மார்க்கம், நிலமார்க்கம், கடல் மார்க்க நுழைவாயில்களில் செயல்பட்டு வருகிறது. விமான நுழைவாயில்கள் அமிர்தசரஸ், மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் உள்ளன. துறைமுக நுழைவாயில்கள் கொல்கத்தா, மும்பை, கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் செயல்படுகின்றன. நிலமார்க்க நுழைவாயில்கள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ளன.

அயல் நாட்டிலிருந்து பரவிய பூச்சிகள், நோய்கள், களைகள்

 • பூச்சிகள் - பஞ்சுத்திண்டு செதில் பூச்சி, கம்பளி அசுவினி, அமெரிக்கன் காய்ப்புழு, பப்பாளி மாவுப்பூச்சி
 • நோய்கள் - காப்பிதுரு நோய், திராட்சை அடிச்சாம்பல் நோய், வாழைமுடிக்கொத்து நோய்
 • களைகள் ஆகாயத்தாமரை, பார்த்தீனியம், பார்பரி, சுடுமல்லி, நெய்வேலி காட்டாமணக்கு.

உயிரியல் முறை (Biological Method)

 • இக்கட்டுப்பாட்டு முறையில் ஒட்டுண்ணிகள், இரைவிழுங்கிகள் மற்றும் நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 • வாழும் உயிரிகளை ஊக்குவித்து தீங்கு செய்யும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் முறை உயிரியல் முறை எனப்படும். எதிரிப் பூச்சிகளை இருவகைகளாகப் பிரித்து அறியலாம்.
 • பூச்சியின் உடலிலே சில நாட்கள் வாழ்ந்து அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்பவை ஒட்டுண்ணிகள் ஆகும்.
 • தன்னைவிடச்சிறிய பூச்சிகளைத் தாக்கி உடனே கொன்று தின்னும் பூச்சிகள் இரை விழுங்கிகள் எனப்படும். இதை தவிர நுண்ணுயிரிகளான பூசணங்கள், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகளும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.

தாவரப்பூச்சிக் கொல்லிகள் (Botanical Insecticides)

தாவரங்களின் பல்வேறு பாகங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் பூச்சிகளை அழிக்க பயன்படுகின்றன. இவற்றிற்கு தாவர பூச்சிக்கொல்லிகள் என்று பெயர். உம். வேம்பு, நொச்சி, வசம்பு, புகையிலை.

இரசாயன முறை (Chemical Method)

இரசாயனக் கூட்டுப்பொருட்களின் உதவியினால் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், பூசணங்கள், களைகள், எலிகள், நூற்புழுக்கள், சிலந்திகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் முறை இரசாயன முறை எனப்படும். இந்த இரசாயனக் கூட்டுப் பொருட்களுக்கு பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள் (Pesticides) என்று பெயர். உம். எண்டோசல்ஃபான், ஃபைட்டலான், கிரமாக்சோன்.

இரசாயனக் கூட்டுப்பொருள் பூச்சிக்கொல்லிகள் (Insecticides)

 • பேன்கொல்லிகள் (Acaricides or Miticides)
 • எலிக்கொல்லிகள் (Rodenticides)
 • நூற்புழுக்கொல்லிகள் (Nematicides)
 • பூசணக்கொல்லிகள் (Fungicides)
 • களைக்கொல்லிகள் (Herbicides or Weedicides)
 • பேக்டீரியா கொல்லிகள் (Bactericides)

கட்டுப்படுத்தும் தீங்குயிரிகள் பூச்சிகள் (Insects)

 • சிலந்திகள் (Mites)
 • எலிகள் (Rodents)
 • நூற்புழுக்கள் (Nematodes)
 • பூசணங்கள் (Fung)
 • களைகள் (Weeds)
 • பேக்டீரியா (Bacteria)

தரமான பயிர் பாதுகாப்பு இராசயனத்திற்கு அமைய வேண்டிய நற்பண்புகள் (Quality of an Ideal Pesticide)

பயிர் பாதுகாப்பு இராசயனத்தில் குறிப்பிட்ட அளவு நச்சுத்தன்மை இருப்பதோடு பூச்சி மற்றும் நோய்க்காரணிகளை உடனடியாகக் கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். இரசாயன மருந்துகளின் நச்சு குறிப்பிட்ட நாள் வரை பயிரில் தங்கி இருந்து பூச்சி, பூசணங்களைக் கட்டுப்படுத்தும் தன்மை பெற்றிருக்க வேண்டும். சேமிப்பில் இருக்கும் போது குறிப்பிட்ட காலம் வரை அதனுடைய வீரியம் குறையக்கூடாது.

இராசயன மருந்துகள் குறிப்பிட்ட பூச்சி மற்றும் நோய்க்காரணிகளை மட்டுமே அழிக்க வேண்டும். மாறாக பயிருக்கு நச்சுத்தன்மையை (Phytotoxic) ஏற்படுத்தக்கூடாது. இராசயன மருந்துகளைக் கையாளும் மனிதர்களுக்கு எந்த விதமான கெடுதலும், பின்விளைவுகளும் ஏற்படுத்தக்கூடாது. இரு வகையான பூச்சிக்கொல்லி மற்றும் பூசணக்கொல்லி மருந்துகளை ஒன்றோடொன்று சேர்க்கும் போது அவை இணைந்து செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும். இராசயன மருந்துகள் சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் கால்நடைகளுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படுத்தக்கூடாது. இராசயன மருந்துகள் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடாது. இராசயனங்களை உபயோகப்படுத்தும் பயிர் பாதுகாப்பு சாதனங்களில் படியவோ, அரிக்கவோ கூடாது.

பயிர் பாதுகாப்பு இராசயனங்களின் வடிவங்கள் (Formulation of Pesticides)

பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக கீழ்வரும் வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

 • தெளிக்கும் வகை மருந்துகள் (Sprayable Solutions)
 • திரவ மாற்றுத் திரட்டு (Emulsifiable Concentrate - E.C)

இவ்வகை மருந்துகள் திரவமாகத் தெளிக்கும் வடிவத்தில் கிடைக்கின்றன. திரவமாற்றுத்திரட்டு என்பது வீரிய மருந்துடன் கரைப்பான் மற்றும் பால் போன்று மாற்றக்கூடிய ஊக்கிகளும் சேர்ந்த கலவை ஆகும். உம். எண்டோசல்பான் - 35சதம் EC, மாலத்தியான் - 50சதம் EC, ஹினோசான் - 50சதம் EC.

நீரில் நனையும் பொடி (Wettable Powder - WP)

நனையும் தூள் மருந்துகள், வீரிய மருந்துடன் நீரில் கலந்து தெளிப்பதற்கு ஏற்ற வகையில் நனையும் பொருட்கள் (Wetting agent) சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. உம். நனையும் கந்தகம், நனையும் செரசான், செவின் 50சதம் WP.

நீரில் கரையும் பொடி (Water Soluble Powder - wSP)

இவ்வகை மருந்துகள் நன்றாகப் பொடி செய்த நுண்ணிய துகள் மருந்தாகவும், நீரில் உடனடியாகக் கரையும் தன்மை உடையவையாகவும் தயாரிக்கப்படுகின்றன. உம். திராம் 80சதம் WSP, அசிபேட் 75சதம் SP.

நீரில் கரையும் திரவம் (Water Soluble Liquid - WSL)

இவ்வகை மருந்துகள் நீரில் கரையும் வடிவில் கரைப்பான்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. உ.ம். மானோகுரோட்டோபாஸ் 36சதம் SL, பாஸ்போமிடான் 85WSC.

எண்ணெய்க் கலவைகள் (Oil Solutions)

இவ்வகைக் கூட்டுப் பொருட்கள் அடர்வு கூடிய எண்ணெய் கலந்த இரசாயன மருந்துகளாகத் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய் கலவைகள் பெரும்பாலும் வீடுகளில் காணப்படும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், களைகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.

மிகக் குறைவழுத்தக் கலவை (Ultra Low Volume Concentrate)

இவ்வகை மருந்துகள் அடர்வு கூடிய வீரிய மருந்துடன் மிகக் குறைந்த அளவு கரைப்பான் சேர்த்து தெளிப்பதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படுகின்றன. ஆகாய விமானம் மூலமும், சக்தி வாய்ந்த விசைத் தெளிப்பான் மூலமும் அதிக பரப்பளவில் தெளிக்க இவ்வகை மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. உ.ம். லெபாசிட் 80சதம் SL, டைமெக்ரான் 85சதம் SL, ஹீலியோடாக்ஸ் 80சதம் SL.

தூள் மருந்து (Dust)

தூள் மருந்துகள் அடர்த்தி கூடிய நச்சுத் தன்மை வாய்ந்த வீரிய மருந்து துகள்களுடன் தூவுவதற்கு ஏற்ற நிரப்பிகளும் (Filer) சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. உ.ம். கார்பரில் 10சதம் D லிண்டேன் 6.5சதம் D, கந்தகம் 90சதம் D. நிரப்பிகளாக சுண்ணாம்பு, ஜிப்சம், கயோலின், களிமண், சலவைக்கல், சாக் பவுடர், பைரோபைரட்ஸ், எரிமலையிலிருந்து கிடைக்கக்கூடிய சில வகைச் சாம்பல்கள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.

குறுணை மருந்து (Granules)

குறுணை மருந்துகள் சிறுசிறு உருண்டை வடிவத்தில் (Pellets) வீரிய மருந்துடன் செயலற்ற களிமண் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. குறுணை மருந்துகள் பொதுவாக பூச்சிக்கொல்லியாகவும் (Insecticide), நூற்புழுக் கொல்லியாகவும் (Nematicide) பூசணக்கொல்லியாகவும் (Fungicide), களைக்கொல்லியாகவும் (Weedicide) பயன்படுகின்றன. குறுணை மருந்துகள் ஊடுருவும் தன்மை உடையவை. உம் ப்யூரடான் 3 சதம் G, பியூட்டாகுளோர் 5G.

ஆவி விஷம் (Fumigants)

வீரிய மருந்துடன் காற்றில் உடனடியாக ஆவியாகும் சில வேதிப்பொருட்களுடன் சேர்த்து ஆவி விஷம் தயாரிக்கப்படுகிறது. இம்மருந்து மறைந்து வாழும் பூச்சி மற்றும் நோய்க்காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. உ.ம். செல்பாஸ், நாப்தலின், பார்மால்டிஹைட், குளோரோபிக்ரின்.

வசிய மருந்து (Baits)

வசிய மருந்து தீங்குயிரிகளைக் கவரக் கூடிய சில அடிப்படை பொருட்களும் பூச்சிக்கொல்லி மருந்தும் கலந்த கலவையாகும். தீங்குயிரிகள் உணவு பொருட்களால் கவரப்பட்டு அதை உண்டு இறந்துவிடுகின்றன. வசிய மருந்தைத் தயார் செய்து எலிகள் மற்றும் புரோடீனியா போன்ற பூச்சிகளை அழிக்கலாம். சில வகை வசிய மருந்துகள் வீடுகளில் காணப்படும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. இதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வசிய மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. உம். பெய்கான் பெய்ட்ஸ், ரேட் கில் (Rat Kill).

பயிர் பாதுகாப்பு இராசயனங்கள் செயல்படும் முறைகள்

வயிற்று விஷம் (Stomach Poison)

இவ்வகைப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயிரின் மீது தெளிக்கும் போதோ அல்லது தூவும் போதோ பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் தாவரத்தின் பாகங்களுடன் சேர்த்து உட்கொள்கின்றன. அப்போது மருந்தும் உட்சென்று பூச்சியின் உணவு மண்டலத்தைத் தாக்குகின்றன. உறிஞ்சும் (Sucking insects), கடித்தும் (Biting insects) வாழும் பூச்சிகள் இதனால் கட்டுப்படுத்தப்படுகின்றன. உ.ம். எண்டோசல்பான் 35 EC, பாஸ்பாமிடான் 85 WSC.

ஆவி விஷம் (Fumigants)

இவ்வகை மருந்துகள் காற்றில் ஆவியாகும் தன்மை உடையவை. இவ்வகை மருந்துகளை பூச்சிகள் சுவாசிக்கும் போது அதன் விஷத்தன்மை தீங்குயிரிகளின் சுவாச மண்டலத்தைக் தாக்கி கட்டுப்படுத்துகின்றன. உ.ம். செல்பாஸ் மாத்திரை, டைகுளோர்வாஸ் 76 WSC.

உடல் நச்சு அல்லது இயற்பியல் நச்சு (Physical Poison) அல்லது தொடுநச்சு (Contact Poison)

தீங்குயிரிகளின் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைத் தாக்கி அவற்றைக் கொல்லக்கூடிய பூச்சிக்கொல்லிகள் உடல் நச்சு அல்லது இயற்பியல் நச்சு எனப்படுகின்றன. உலோக எண்ணெய்கள், தார் போன்ற பொருட்கள் தண்டுகளில் உருவாக்கப்பட்ட சுவாசத் துளைகளை அடைத்து, தண்டினுள் இருக்கும் பூச்சிகளை சுவாசமுட்டச் செய்து அழிக்கின்றன, பூசணக் கொல்லிகள் பூசணத் தடுப்பான், முழு பூசண விஷம், பூசண விதை அழிப்பான் போன்ற முறைகளில் செயல்பட்டு பூசணங்களை அழிக்கின்றன.

இரசாயன மருந்துகள் பூச்சி அல்லது பூசணங்களின் மேல்படும்போது அவை அழிகின்றன. இது தொடுநச்சு எனப்படும். உ.ம். குயினால்பாஸ் 25 EC, கார்பரில் 50சதம் WP.

ஊடுருவு நச்சு (Systemic Poison)

ஊடுருவும் பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள் தாவரங்களின் அனைத்து பாகங்களாலும் உறிஞ்சப்பட்டு செடியின் சாற்றை நச்சுத் தன்மை உடையதாக மாற்றி பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன. பயிர் பாதுகாப்பு இரசாயனக் கூட்டுப்பொருட்களின் அனைத்து பிரிவுகளிலும் இம்மாதிரியான ஊடுருவும் கொல்லிகள் உள்ளன.

நரம்பு நச்சு (Nerve Poison)

இவ்வகைப் பூச்சிக்கொல்லி மருந்துகள் தீங்குயிரிகளின் கொழுப்புப் பொருட்களுடன் கலந்து நரம்பு மண்டலத்தின் பல்வேறு இயக்கங்களைத் தடைசெய்து பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. உ.ம். பாஸ்போமிடான், டைமெக்ரான்.

பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கெடுதல்கள்

வேளாண் சாகுபடியில் அனைத்துப் பயிர்களையும் பூச்சிகளும், நோய்களும் தாக்குகின்றன. இந்நிலையில் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் கீழ்வரும் கெடுதல்கள் ஏற்படுகின்றன.

சில பூச்சிகள் பூச்சிக்கொல்லி மருந்திற்கு எதிர்ப்பு சக்தி பெறுகின்றன. முக்கியமில்லாத பூச்சிகள் அதிகம் தோன்றி அதிக அளவு சேதம் உண்டு பண்ணுகின்றன. பூச்சிகளின் இயற்கை எதிரிகள் கொல்லப்படுகின்றன. பூச்சி மருந்தின் நச்சு தன்மை பயிர்களில் தங்கி மனித இனத்திற்கும் கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. நன்மை தரும் பூச்சிகள் கொல்லப்படுகின்றன. சுற்றுப்புற சூழ்நிலைக்குக் கெடுதல் ஏற்படுகிறது. பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகமாகின்றது.

மேற்கூறிய கெடுதல்களை தவிர்க்கும் பொருட்டு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முக்கியத்துவம் வகிக்கிறது.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்பது பூச்சிகள், நோய்கள் மற்றும் களைகளை என்னென்ன வழிமுறைகளில் கட்டுப்படுத்த முடியுமோ, அத்தனை வழிமுறைகளையும் உபயோகித்து கட்டுப்படுத்தியும், அதே சமயம் சுற்றுச்சூழல் பாதிக்காமல், தீங்குயிரிகளின் சேதத்தை பொருளாதார சேதநிலைக்கு கீழ் கொண்டு வருவதே ஆகும்.

பொருளாதார சேதநிலை

பொருளாதார ஆரம்ப சேதநிலை (ETL)

பூச்சிகளின் எண்ணிக்கையும், அதனால் பயிர்களுக்கு ஏற்படும் சேதமும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போகாத போது பொருளாதார ரீதியாக இழப்பும் நஷ்டமும் ஏற்படுவதில்லை. இந்நிலையை கடக்கும்போது பயிர்களுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட ஆரம்பிக்கிறது. இந்நிலை பொருளாதார ஆரம்ப சேதநிலை எனப்படுகிறது. இந்த நிலையை கடக்கும் போது பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார சேதநிலை (EIL)

பூச்சிகளின் எண்ணிக்கையும் அதனால் பயிர்களுக்கு ஏற்படும் சேதமும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகப் போகும் போது பொருளாதார ரீதியாக இழப்பும் நஷ்டமும் ஏற்படும். இது பொருளாதார சேதநிலை எனப்படுகிறது.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பின் அவசியம்

பூச்சி, நோய், களைகள் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்த்திட அல்லது குறைத்திட பயிர் பாதுகாப்பு அவசியம். பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகளை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதால் விரும்பத்தகாத பின்விளைவுகள் ஏற்படுகின்றன. பயிர் பாதுகாப்பு மருந்துகள் காற்று, நீர் மண்ணில் கலந்து இயற்கைச் சூழ்நிலையைப் பெரிதும் பாதிக்கின்றன. பயிர் பாதுகாப்பு மருந்துகளின் நச்சுத்தன்மை விளைப்பொருட்களில் தங்கி மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு ஏற்படுத்துகிறது. பயிர் பாதுகாப்பு மருந்துகளின் நச்சு தன்மையால் நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. சில சமயங்களில் பயிர் பாதுகாப்பு மருந்துகளினால் வேறுவகைப் பூச்சியினங்கள் பெருகிவிடுகின்றன.

மேற்காண் தீங்குகளை தவிர்க்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் அவசியமாகும்.

பயிர் பாதுகாப்புக் கருவிகள்

பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயிர்களின் மீது துகள்களாகவோ, துளிகளாகவோ தூவுவதற்கு அல்லது தெளிப்பதற்கு பயன்படும் கருவிகள் பயிர் பாதுகாப்புக் கருவிகள் எனப்படும். பயிர் பாதுகாப்புக் கருவிகளை தூவுவான்கள் மற்றும் தெளிப்பான்கள் என இருபிரிவுகளாகப் பிரிக்கலாம்.

தூவுவான்கள் (Dusters)

தூள் வடிவ மருந்துகளை பயிர்களின் மீது சிறு சிறு துகள்களாக தூவுவதற்குப் பயன்படும் கருவிகள் தூவுவான்கள் எனப்படும். இது கையால் இயக்கப்படுபவை, விசையால் இயக்கப்படுபவை என இருவகைப்படும்.

கைத்தூவுவான்கள் :

பேக்கேஜ் தூவுவான், பிளஞ்சர் தூவுவான், துருத்தித் தூவுவான், நேப்சாக் தூவுவான், கைச்சூழல் தூவுவான், விசையால் இயக்கும் விசைத்தூவுவான்

தூவுதலின் நன்மைகள்

மானாவாரி பயிர் மற்றும் மலைப்பிரதேசப் பயிர்களுக்கு தெளிப்பதை விட தூவுதலே சிறந்தது. நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் தூவுதல் ஏற்றது கதிர்களைத் தாக்கும் தீங்குயிரிகளைக் கட்டுப்படுத்த தூவும் மருந்துகளை பயன்படுத்தும் போது எஞ்சிய நச்சு குறையும். தூவும் மருந்துகள் கருவிகளை சேதப்படுத்துவது இல்லை.

தெளிப்பான்கள் (Sprayers)

திரவ நிலையில் உள்ள மருந்துகளை பயிர்களின் மேல் சிறு சிறு துளிகளாகத் தெளிப்பதற்குப் பயன்படும் கருவிகள் தெளிப்பான்கள் எனப்படும். இவைகையால் இயக்கப்படுபவை, காலால் இயக்கப்படுபவை மற்றும் விசையால் இயக்கப்படுபவை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

 • கையால் இயக்கப்படுபவை : கைத்தெளிப்பான், வாளித் தெளிப்பான், நேப்சாக் தெளிப்பான், காற்றழுத்த கைத்தெளிப்பான், அசையும் தெளிப்பான்.
 • காலால் இயக்கப்படுபவை : கால் மிதித் தெளிப்பான்
 • விசையால் இயக்கப்படுபவை : விசையால் இயக்கப்படும் நேப்சாக் விசைத்தெளிப்பான்

தெளித்தலின் வகைகள் :

 • அதிக அளவு தெளிப்பு: இவ்வகைத் தெளிப்பில் மருந்துத் துளிகள் ஒன்று திரண்டு பெரிய துளிகளாக விழுந்து விடுவதால், அதிக தெளிதிரவம் தேவைப்படுகிறது. (250 லிட்டர் - 350 லிட்டர் தெளி திரவம் தேவைப்படும்)
 • குறைந்த அளவு தெளிப்பு : இவ்வகைத் தெளிப்பில் மருந்துக்கலவை மிகச் சிறிய துளிகளாக வெளியேறுவதால் குறைந்த அளவு தெளி திரவம் தேவைப்படுகிறது. (150 முதல் 200 லிட்டர்)
 • மிகக்குறைந்த அளவு தெளிப்பு : இவ்வகைத் தெளிப்பில் மருந்து கலவை தெளிதிரவம் சேர்க்காமல் அப்படியே தெளிக்கப்படுகிறது.

தெளித்தலின் நன்மைகள்

தெளிக்கப்படும் இரசாயனம் காற்றில் அடித்துச் செல்வது குறைவு என்பதால் மருந்து வீணாவதும், சுற்றுச்சூழல் கேடும் தவிர்க்கப்படும். மருந்து ஒரே சீராக பயிர் பாகங்களில் படிந்து பூச்சி, நோய்க்காரணிகளை கட்டுப்படுத்தும். மருந்து நீருடன் இரண்டறக் கலந்து விடுவதால் மருந்து வீணாகாது.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
3.19047619048
Rathysvaran Aug 21, 2019 03:33 PM

மிளகாய் செடியின் வாடலை கட்டு படுத்த ஏதாவது வழிமுறை இருக்குதா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top