பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / மண் வகைகளைக் கண்டறியும் முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மண் வகைகளைக் கண்டறியும் முறைகள்

மண் வகைகளைக் கண்டறியும் முறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள்

மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம், மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல் பல பகுதிகளாகப் பிரித்து தனித்தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும், மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சாண மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளிலும் மண் மாதிரிகள் எடுக்கக்கூடாது.

மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டிய காலம்

நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். உரமிட்டு குறைந்தது 3 மாத இடைவெளியில் மாதிரிகள் எடுக்கலாம். பயிர் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக்கூடாது.

மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை

 • மண் மாதிரிகள் எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை மேல் மண்ணை நீக்காமல் கையினால் அப்புறப்படுத்த வேண்டும்.
 • மாதிரி எடுக்கும் பொழுது ஆங்கில எழுத்து "V" போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கி விடவேண்டும். பிறகு நிலத்தின் மேல்மட்ட பகுதியிலிருந்து கொழு ஆழம் வரை (0-15 செ.மீ) ஒரு இஞ்ச் பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும்.
 • இவ்வாறாக குறைந்த பட்சம் ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரிகள் ஈரமாக இருந்தால் முதலில் அதனை நிழலில் உலர்த்தவேண்டும்.
 • பின்பு சேகரித்த மாதிரிகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு நன்றாக கலக்கி அதிலிருந்து ஆய்வுக்கு அரை கிலோ மண் மாதிரியை கால் குறைப்பு முறையில் எடுக்க வேண்டும்.

கால் குறைப்பு முறை (Quartering)

வாளியில் சேகரித்த மண் மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலித்தீன் தாள் மீது பரப்பி, அதனை நான்காகப் பிரித்து, எதிர் முனைகளில் காணப்படும் இரண்டு பகுதிகளை கழித்து விடவேண்டும். தேவைப்படும் அரை கிலோ அளவு வரை இம்முறையினை திரும்பத் திரும்ப கையாள வேண்டும்.

மண்ணின் கார் - அமில நிலையைக் கண்டறிய பல வழிகளுண்டு. அவையாவன pH மீட்டர், pH பேப்பர்.

pH பேப்பர் கொண்டு மண்ணில் கார் அமிலநிலை கண்டறிதல்

2.0 மி.மீ. சல்லடையில் சலித்த மண்ணில் 20 கிராம் எடுக்கவும். 20 கிராம் மண்ணை 100 மி.லி. கண்ணாடி பீக்கரில் இட்டு 50 மி.லி. தண்ணீர் விடவும். மண்ணை கண்ணாடிக்குச்சி கொண்டு அரைமணி நேரம் இடை இடையே கலக்கி வைக்கவும். அரைமணிக்குப் பின், pH Paper உள்ள தாளில் ஒன்றை கிழித்து நீர்க்கலவையை கலக்கிய பின் முக்கி எடுக்கவும். முக்கி எடுத்த சீட்டை pH பேப்பர் புத்தகத்தின் மேல் கொடுக்கப்பட்டுள்ள நிறத்துடன் ஒப்பிட்டு கார், அமில நிலையைக் கண்டறியவும்.

கால்சியம் கார்பனேட் (CaCO3) நிலை

ஒரு மண்ணில் கால்சியம் கார்பனேட் உள்ளதா/ இல்லையா என்பதைக் கீழ்க்கண்ட எளிய முறையில் அறியலாம். பரிசோதிக்க வேண்டிய மண்ணில் ஒரு குறிப்பிட்ட அளவினை கண்ணாடி பேசினில் எடுக்கவும். அம் மண்ணின் மேல் நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை (dil.HC) ஊற்ற வேண்டும். கால்சியம் கார்பனேட் இருந்தால் மண்ணில் நுரை வரும். கால்சியம் கார்பனேட் இல்லையெனில் நுரை வராது.

பிரச்சனையுள்ள மண்ணைக் கண்டறிதல் மற்றும் நிவர்த்தி செய்தல்

அமில மண்

ஒரு மண்ணின் கார அமில நிலையை முந்தைய பயிற்சியில் கூறியுள்ளவாறு pHபேப்பர் மூலம் கண்டறிதல் வேண்டும். மண்ணின் கார அமில நிலை 6.5க்கு குறைவாக இருப்பின் அம்மண் அமிலமண் எனப்படும்.

அமிலமண் நிவர்த்தி

சுண்ணாம்பு அளவு கணக்கீடு செய்தல் (Lime Requirement of Acid Soils)

குறிப்பிட்ட அளவு மண்ணை தாங்கல் கரைசலுடன் (Buffer) சேர்த்து, மண்-தாங்கல் கரைசலின் pH குறைவதைக் கொண்டு கணக்கீடு செய்தல்.

தேவைப்படும் இரசாயனங்கள்

 • 1.8 மி.லி. பேராநைட்ரோபீனால்,
 • 2.5 மி.லி. டிரைஎத்தனால் அமைன்,
 • 3 கிராம் பொட்டாசியம் குரோமேட்,
 • 2 கிராம் கால்சியம் அசிட்டேட் மற்றும் 53.1 கிராம் கால்சியம் குளோரைடை.

உவர் மண்

உவர் மண்ணின் மேற்பரப்பில் வெண்ணிற உப்பு படிந்திருக்கும். இதனை மண்ணில் உள்ள மொத்த கரையும் உப்புக்களின் அளவு, மண்ணின் கார அமில நிலை ஆகியவற்றை கொண்டு அறியலாம்.

மண்ணின் கார அமில நிலை < 8.5 உப்புகளின் அளவு > 4.0 dsm1

உப்புகளின் அளவை கண்டறிதல்

முன்னர் கூறியது போல் pH தாள் கொண்டு மண்ணின் கார அமில நிலையை கண்டறியவும். E.C. மீட்டர் உதவியுடன் கரையும் உப்புகளின் அளவை கண்டறியவும்.

உவர்மண் நிவர்த்தி

ஒரு வாளியில் உவர் மண்ணை எடுத்துக் கொள்ளவும். நல்ல பாசன நீரை நிரப்பி மண்ணை ஊறவிடவும். பின் நீரை வடித்துவிடவும். இம்மாதிரி 4 அல்லது 5 முறை செய்யவும். பின் இம்மண்ணை எடுத்து மேற்சொன்ன முறையில் கரையும் உப்புக்களின் அளவை பரிசோதிக்கும்போது அதன் அளவு குறைந்துள்ளதை அறியலாம்.

 • களர்மண் கார அமில நிலை > 8.5
 • கரையும் உப்புக்களின் அளவு <4.0 dsm1
 • பரிமாற்றம் பெற்ற சோடியம் அயனிகளின் அளவு > 15%

கண்டறியும் முறை

மண் பரிசோதிக்கப்பட வேண்டிய வயலில் இருந்து ஒரு சுத்தமான வாளியில், மண் மாதிரிகள் 15 செ.மீ ஆழத்தில் 5 அல்லது 6 இடங்களில் எடுக்கவும். அவ்வாறு எடுத்த மண்ணை, பிளாஸ்டிக் தாளின் மீது பரப்பி நிழலில் உலர விடவும். மூடியுள்ள கண்ணாடி பாட்டிலில் 2 செ.மீ அளவிற்கு இம்மண்ணை நிரப்பவும்.

அதில் 10 செ.மீ அளவிற்கு (15 விகிதத்தில்) வாலை வடிநீரை விடவும். நீரை விடும் போது பக்கவாட்டில் மண்ணை தொந்தரவு செய்யாமல் விடவும். மூடியை மூடி பாட்டிலை தலைகீழாகப் பிடித்து மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரவும். அதிர்வு இல்லாமல் 4 மணி நேரம் வைக்கவும். மண் கலங்கலைக் கொண்டு மண் தன்மையை அறியலாம். இந்த கலங்கலை ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை கரைசலின் நடுவே வைத்து கண்டறியலாம்.

 • பிளாஸ்டிக் குச்சி தெளிவாக தெரியும் - களர் இல்லை.
 • ஓரளவு தெரியும் - மிதமான களர்.
 • பிளாஸ்டிக்குச்சி தெரியாது - அதிக களர்.

களர்மண் நிவர்த்தி (ஜிப்சத்தின் தேவையை கணக்கீடு செய்தல்)

ஒரு குறிப்பிட்ட அளவு மண்ணுடன் அதிக அளவு ஜிப்சம் இடும்போது ஜிப்சத்திலுள்ள கால்சியம் அயனிகள் மண்ணிலுள்ள சோடியம் அயனிகளை நீக்கிவிட்டு, மண்ணினுள் உட்புகுகின்றது. இந்த கரைசலில் குறைபடும் கால்சியம் அயனிகளைக் கொண்டு ஜிப்சத்தின் தேவை நிர்ணயிக்கப்படுகின்றது.

தேவைப்படும் இராசாயனங்கள்

 • கால்சியம் சல்பேட் கரைசல் (5 கி கால்சியம் சல்பேட் உடன் 1லிட்டர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் குலுக்கிய பின் வடிகட்டவும்).
 • அம்மோனியம் குளோரைடு + அமோனியம் ஹைட்ராக்ஸைடு –  தாங்கல் கரைசல் (67.5 கி அம்மோனியம் குளோரைடு உடன் 570 மி.லி. அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு ஆகியவற்றை ஒரு லிட்டர் அளவுக்கு நீர் சேர்த்து கொண்டு வரவும்).
 • எரியோகுரோம் – பிளாக்டி நிறங்காட்டி : (0.5கி எரியோகுரோம் உடன் 4.5 கிஹைடிராக்சில் அமைன் ஹைடிரோகுளோரைடை 100 மி.லி. எத்தனாலில் கரைக்கவும்).
 • ௦.1N கால்சியம் குளோரைடு : (0.5 கி கால்சியம் கார்பனேட் + 10 மி.லி. நீர்த்த ஹைடிரோகுளோரிக் அமிலம் சேர்த்து ஒரு லிட்டர் அளவிற்கு வாலை வடிநீர் சேர்த்து கொண்டு வரவும்).
 • ௦.1N இ.டீ.டி.ஏ (EDTA) (2 கி  இ.டீ.டி.ஏ.வை ஒரு லிட்டர் வாலை வடிநீருடன் சேர்க்கவும். இதை0.01 N கால்சியம் குளோரைடுடன் சமன் செய்யவும்.)

செய்முறை

 • 2 மி.மீ. சல்லடையில் சலித்த உலர்ந்த மண்ணில் 5 கிராம் எடுத்து 250 மி.லி. கூம்பு குடுவையில் 100 மி.லி. கால்சியம் சல்பேட் கரைசலுடன் இட்டு 5 நிமிடம் குலுக்கவும். கரைசலை வாட்மேன் நெம்பர் 3 வடிதாளில் வடிகட்டவும்.
 • வடிகரைசலிருந்து 5 மி.லி. எடுத்து போர்சலீன் பேசினில் விட்டு அதனுடன் 5 மிலி நடுநிலை கரைசல் மற்றும் 1 மிலி எரியோகுரோம் பிளாக் டி நிறங்காட்டி இடவும்.
 • இக்கரைசலை 0.01 N இ.டீ.டி.ஏ கரைசலுடன் சிவப்பு நிறத்திலிருந்து நீலம் நிறம் வரும் வரை தரம் பார்க்கவும் (Titrate).
 • மண் கரைசல் இல்லாமல் வெறும் கால்சியம் (blank) சல்பேட் கரைசலுடன் மேற்சொன்ன முறையில் தரம் பார்க்கவும்.

மேற்கண்ட அளவுகளிலிருந்து கால்சியம் சல்பேட் தேவையைக் கணக்கீடு செய்யலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.77777777778
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top