பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / விளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு

விளைநிலங்கள் பற்றாக்குறை பற்றிய ஒரு பார்வை

முன்னுரை

நாட்டின் எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்படும்போது காடுகளும் தோட்டங்களும் விவசாய விளைநிலங்களுமே ஆக்கிரமிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாட்டமுள்ள சிலரின் ஆட்சேபங்கள் பொருட்படுத்தப் படுவதில்லை. ஏதோ பெயருக்குச் சில மரங்களை நட்டுவிட்டுச் சமாதானமாகிவிடுகிறார்கள்.

நதிகளின் டெல்டாப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகத் தீவிரமான விவசாயத்தை மேற்கொண்டதால் அங்குள்ள மண் வளம் குறைந்து, விளைச்சலும் குறைந்திருக்கிறது. அணைகள் கட்டப்பட்டதால் விவசாய நிலங்களில் புதிய வண்டல் படிவதும் தடுக்கப்பட்டுவிட்டது. மண் வளமிழந்து போவது பல நாடுகளிலும் நடைபெறுகிற நிகழ்வு. விவசாய விஞ்ஞானிகள் அவ்வாறான நிலங்களுக்குப் புத்துயிரூட்டி அவற்றுக்கு வளத்தை மீட்டுத்தரப் பலவித உத்திகளைக் கையாளுகிறார்கள்.

அளவுக்கு மீறிச் சாகுபடி செய்யப்பட்டுச் சக்தியிழந்து போன மண்ணுக்குத் திரும்பவும் விளைச்சல் திறனை உண்டாக்கப் பழுப்பு நிலக்கரியையும் மரபு மாற்றம் செய்யப்பட்ட நுண்ணுயிரிகளையும் மண்ணில் கலக்கும் ஓர் உத்தியை ரஷ்ய விவசாய விஞ்ஞானி கள் உருவாக்கியிருக்கிறார்கள். அந்த உத்தி வியப் பூட்டும் வகையில் எளிமையானதாகவும் மிகுந்த பலனளிப் பதாகவும் உள்ளது.

பழுப்பு நிலக்கரித் தூள்

இந்த உத்தி தற்செயலாகக் கண்டறியப்பட்டதுதான். வளமிழந்த தோட்டங்களில் சுற்றுவட்டாரத்தில் கிடைத்த பழுப்பு நிலக்கரித் தூள் கலந்த மண்ணைப் பயன்படுத்தி ஆய்வுப் பாத்திகளை உருவாக்கி ஆராய்ச்சி செய்தபோது எதிர்பாராத விதமாக, அந்தப் பாத்திகளில் பயிரிடப்பட்ட தாவரங்கள் கூடுதலான பலன்களை அளித்தன.

பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துகளை உட்கவர்ந்து வளர்கின்றன. அவை மடியும்போது அந்தச் சத்துகள் மீண்டும் மண்ணுக்கே போய்ச் சேர்ந்து விடுகின்றன. இது இயற்கையின் இயல்பான செயல் சுழல். தாவரங்கள் மண்ணில் புதைந்து மக்குகிறபோது பல வகையான நுண்ணுயிரிகள் அதில் உருவாகிப் பெருகிப் பழைய தாவரங்களைச் சிதைத்து அடுத்த தலைமுறைப் பயிர்களுக்கு ஊட்டச்சத்துகளாக விளங் கக்கூடிய சேர்மங்களாக மாற்றுகின்றன. ஆனால், தீவிரமான விவசாய நடவடிக்கைகளின்போது மண்ணுக்குத் திருப்பியளிக்கப்படுவதைவிட அதிகமான ஊட்டச்சத்துகளை அதிலிருந்து வெளியேற்றிக்கொண்டே யிருந்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகு மண் வளமற்றுப்போகும்.

அதன் பிறகு பெரும் பொருட்செலவில் செயற்கையான ரசாயன உரங்களைச் சரியான அளவிலும் சரியான காலங் களிலும் இட்டுத்தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும். அந்த ரசாயன உரங்கள் ஓரளவுக்கு மேல் பலனளிப்ப தில்லை. அவை சுற்றுச்சூழலையும் நீர் நிலைகளையும் மாசுபடுத்திவிடும். பாரம்பரியமான தானியங்களின் சுவையையும் மணத்தையும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட தானியங்களில் காண முடிவதில்லை. தொழு உரங்கள் ரசாயன உரங்களைவிடச் சிறந்தவை என்றாலும், அவற்றைச் சேகரிப்பது, மக்க வைப்பது போன்ற செயல்பாடுகள் காலம் பிடிப்பதுடன் கூடுதலான உழைப்பும் தேவைப்படுகிறவை.

பழுப்பு நிலக்கரி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்துபோன தாவரங்களிலிருந்து உருவானது. விவசாயப் பயிர்களையும் தோட்டப் பயிர் களையும் வளர்க்கத் தேவையான இன்றியமையாத எல்லாச் சத்துகளும் அதில் உள்ளன. அதில் நைட்ரஜன், கார்பன் போன்ற இயற்கையான ரசாயனங்கள் மிகுதியாக இருந்தாலும் உயிரிச் சேர்மங்கள் மட்டும் இல்லை. பழுப்பு நிலக்கரியை உண்டு ஜீரணித்து வளரக்கூடிய நுண்ணுயிரிகளைப் பழுப்பு நிலக்கரித் துகள்களில் வளரவிட்டு அவற்றில் உயிரியல் சத்துகளை உண்டாக்க முடியுமென ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பன்மடங்கு செயல்வேகம்

ஓர் எஃகுத் தொட்டியில் பழுப்பு நிலக்கரித் தூள்களை நீரில் கலந்து அதனுடன் சில வகை நுண்ணியிரிகளையும் சேர்த்தபோது ஆறு மணி நேரம் கழித்து அந்தக் கலவை கருப்பான ஒரு கூழாக மாறிவிட்டது. அது இயற்கையான மண்ணுக்குச் சமானமாக எல்லாப் பண்புகளையும் பெற்று வளமான விவசாய நிலங்களில் காணப்படும் கரிசல் மண்ணை ஒத்திருக்கும்.

அந்த மண்ணில் பூச்செடிகளும் காய்கறிச் செடிகளும் வேகமாக வளர்ந்து கூடுதலான விளைச்சலையும் தருகின்றன. பூச்செடிகள் ஒரு மாதம் முன்னதாகவே பூக்கத் தொடங்குகின்றன. வெள்ளரிச் செடிகளில் இரு மடங்கு அதிகமான காய்கள் காய்க்கின்றன. இயற்கையில் காணப்படும் நுண்ணுயிரிகளைப் போலவே செயற் கையாகச் சேர்க்கப்பட்ட நுண்ணுயிரிகளும் மண்ணைப் பதப்படுத்துகின்றன. ஆனால், அவற்றின் செயல்வேகம் பன்மடங்கு அதிகமாயிருக்கிறது. நம் நாட்டில் பழுப்பு நிலக்கரித் துகள்கள் கலந்த மண்ணுள்ள நிலங்களில் அத்தகைய நுண்ணுயிரிகளைக் கலந்து வளப்படுத்தலாம்.

விண்வெளி மண்

ரஷ்ய விஞ்ஞானிகள் அயோனைட் தாதுக்களிலிருந்து மஞ்சள் நிறமுள்ள மணலை உருவாக்கி, அதில் பயிர் களுக்குத் தேவையான பதினைந்து ஊட்டச் சத்துகளைக் கலந்து செயற்கை மண்ணைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த மண்ணை விண்வெளிக் கலங்களில் உணவுப் பயிர்களை வளர்க்கப் பயன்படுத்த முடியுமென நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

இந்த மண்ணில் தாவரங்கள் மிக விரைவாக முதிர்ந்து, குறுகிய காலத்தில் பலன் தருகின்றன. சாதாரண மண்ணிலுள்ள மாசுகள் அதில் இல்லாததால் கலப்படமில்லாத தாவரங்களை வளர்க்க முடிகிறது. அந்த மண்ணை முடிவேயில்லாமல் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம். மண்ணை உருவாக்கும்போதே ஊட்டச் சத்துகளையும் நோயெதிர்ப்பு ரசாயனங்களையும் கலந்து விடுவதால் அவ்வப்போது தண்ணீர் மட்டும் விட்டால் போதும். லெட்டூஸ், பார்லி, தண்டுக்கீரை, முள்ளங்கி போன்ற 30 வகைத் தாவரங்களை வெற்றிகரமாகப் பயிரிட்டுச் சாதனை படைத்திருக்கிறார்கள். விண்வெளி மண் பரப்பப்பட்ட ஒரு சதுர மீட்டர் பரப்புள்ள பாத்தியில் முள்ளங்கி பயிரிட்டபோது 21 நாட்களில் 10 கிலோ முள்ளங்கி விளைந்தது. சாதாரண மண் பாத்தியில் 70 நாட்களுக்குப் பிறகு ஒரு கிலோ மட்டுமே கிடைத்தது.

விண்வெளிப் பயணங்களின்போதும், நீண்ட கடற்பயணங்களின்போதும் புதிய காய்கறிகளை அளிக்கும் செடிகளை வளர்க்க இத்தகைய செயற்கை மண் உதவும். ஒரு தாவரத்துக்கு 20 சென்டிமீட்டர் ஆழமுள்ள தொட்டியில் செயற்கை மண்ணை நிரப்பி, உயர்ந்து வளர 70 சென்டிமீட்டர் உயரமுள்ள இடமும் தந்தால் போதும். இவ்வாறான தாவரக் கூண்டுகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கித் தாவரங்களைப் பயிரிட்டு வளர்ப்பதன் மூலமாகத் தேவையான காய்கறி மற்றும் கீரை வகைகளைத் தினமும் பசுமை மாறாமல் பறித்து உண்ணும் வகையில் காய்கறித் தொழிற்சாலைகளாக உருவாக்கலாம். அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு இது மிகவும் ஏற்றது. வெயில் குறைவாக அடிக்கிற துருவப் பிரதேசங்களில் கூடச் செயற்கை ஒளியைப் பயன்படுத்தித் தாவரங்களை வளர்க்க முடியும்.

பயிர் ஆய்வாளர்களுக்கு இந்தச் செயற்கை மண் பெரிதும் உதவுகிறது. குறிப்பிட்ட பண்புகளைக் கொண்ட ஓர் இனத் தாவரத்தை வளர்த்து ஆராய்வதற்கு சுத்தமான, சுயம் மாறாத மண் அவசியம். அதன் மூலம் தாவரத்தின் செயல்களைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்த இயலும். வேறு எந்தத் தாவரமும் வளர்ந்திருக்காத கன்னித்தன்மையுள்ள மண்ணாகச் செயற்கை மண் அமைகிறது.

ஆதாரம் : கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு)

3.02380952381
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top