অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அங்கக முறையில் நூற்புழு மேலாண்மை முறைகள்

அங்கக முறையில் நூற்புழு மேலாண்மை முறைகள்

முன்னுரை

நூற்புழுக்கள் கணுக்களற்ற உருளை வடிவ புழுக்களாகும். இவற்றை நுண்ணோக்கியால் மட்டுமே காணமுடியும். இவை மண், தண்ணீர் போன்றவற்றில் உயிர் வாழ்கின்றன. இவற்றுள் சில வகை நூற்புழுக்கள் பயிர்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து அவற்றினை சேதப்படுத்தி மகசூல் இழப்பினை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக நூற்புழுக்களால் தாக்கப்படாத பயிர்களே இல்லை எனலாம். இந்நூற்புழுக்களின் தாக்குதலால் பயிர்களின் வளர்ச்சி குன்றி, வெளிர் நிறமடைந்து, இலைகள் மற்றும் காய்கள் சிறுத்து விளைச்சல் வெகுவாகக் குறைகிறது. நம் மாநிலத்தில், இதுவரை 90 க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் பயிர்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பயிர்களைத் தாக்கக்கூடிய நூற்புழுக்களில் பெரும்பாலானவை நீண்ட மற்றும் உருளை போன்ற இளநிலை நூற்புழுக்களாகும். சில இனத்தின் மூன்றாம், நான்காம் நிலை அடைந்த முதிர்ச்சியான புழுக்கள் மொச்சை அல்லது அவரை வடிவம் போல இருக்கும். நூற்புழுக்களின் சராசரி நீளம் 0.3மி.மீ. முதல் 4 மி.மீ. வரை இருக்கும். நிலத்தில் ஒரே மாதிரியான பயிரை காலம் காலமாகப் பயிரிட்டுக் கொண்டே வருகையில், அந்தப் பயிரினைச் சார்ந்து வாழ்கின்ற நூற்புழுக்கள் எண்ணிக்கையில் மிகுந்து மண்ணிலேயே தங்கி விடுகின்றன. இதனால் பயிரின் வளர்ச்சி நாளடைவில் குறைந்து, விளைச்சலும் குறைகிறது.

நூற்புழுக்களின் தாக்குதலால் பயிர்களின் விளைச்சல் குறைந்து, விளைபொருள் தரமும் குறைந்து வேளாண் பெருமக்களுக்கு நட்டம் ஏற்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட் போன்ற பயிர்களில் கிழங்குகளின் தோற்றம் உருமாறி காணப்படும். பொதுவாக நூற்புழுக்களால் தாக்கப்பட்ட பயிர்கள் சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது போல் தோன்றும்.

நூற்புழுக்களுக்கு தலை பாகத்தில் போர்வை போர்த்திய குத்தூசி போன்ற அலகு அமைப்பு உள்ளது. இதனைப்பயன்படுத்தி வேரிலிருந்து சாறை உறிஞ்சி வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்களைச் செடிக்குச் செல்ல விடாமல் தடுத்து விடுகின்றன.

நூற்புழுக்களை அவை உணவு உட்கொள்ள தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்து நான்கு வகைகளாகப்பிரிக்கலாம். அவையாவன.

 • முழுமையான அகவேர் நூற்புழுக்கள்
 • வேரில் முழுமையாக உட்புகாத நூற்புழுக்கள்
 • புறவேர் நூற்புழுக்கள்
 • இலை, மொக்கு மற்றும் பூக்களை உண்ணும் நூற்புழுக்கள்

நூற்புழு தாக்குதலினால் தோட்டத்தின் தோற்றத்தில் காணப்படும் வேறுபாட்டினையும், செடியில் காணப்படும் அறிகுறிகளையும் தெரிந்து, அதற்கேற்ப மேலாண்மை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். தோட்டத்தில் ஆங்காங்கே திட்டுத்திட்டாகப் பயிர் வளர்ச்சியின்றி காணப்படும். நண்பகல் நேரத்தில் மண்ணில் ஈரம் இருக்கும் பட்சத்தில் அவை வாடியது போல் காணப்படும். மேலும், பயிர் உரிய காலத்திற்கு முன்பே முதிர்ச்சி நிலையை அடைந்து விடும்.

நூற்புழுவினால் தாக்கப்பட்ட பயிர்களின் அறிகுறிகள்

 • உயரத்திலும் பருமனிலும் குறைந்த வளர்ச்சி
 • செடியில் குறைந்த பக்கக் கிளைகளின் எண்ணிக்கை
 • இணைக்கணுவின் நீளம் குறைதல்
 • இலைகள் பச்சையம் இழந்து பழுப்பு நிறமாக மாறுதல்
 • இலை ஓரங்கள் சிவப்பாகி மேற்புறமாக மடிதல்
 • கிளைகளெல்லாம் ஒன்று கூடி “காலிபிளவர்” போன்ற அமைப்பு உருவாதல்
 • இலை நுனி வெண்மை நிறமாகி கீழ் நோக்கித் தொங்குதல்
 • உரு சிதைந்த மொக்குகள் அல்லது பூக்கள்

நூற்புழுக்களின் பாதிப்புகளை செடியைப் பார்த்து அறிந்து கொண்ட போதிலும் செடியின் வேரையும் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியமானதொன்றாகும். அவற்றில் தென்படும் அறிகுறிகளாவன.

சல்லி வேர்களற்ற கட்டை வேர்கள் – எலுமிச்சை அல்லது நாரத்தை நூற்புழுவினால் தாக்கப்பட்ட கமலா ஆரஞ்சு மரத்தின் வேர்கள்.

பாசிமணி போன்ற வேர் முடிச்சுகள் -வேர் முடிச்சு நூற்புழுவினால் தாக்கப்பட்ட கேரட், மிளகு, இஞ்சி வேர்கள்

இளம் சிவப்பு அல்லது கருமை நிறத்துடன் கீறியது போல உள்ள காயங்கள் அல்லது தழும்புகள் –நூற்புழுவால் தாக்கப்பட்ட பீன்ஸ் மற்றும் பட்டாணி வேர்கள்

வேர் முனைகளின் வளர்ச்சி தடைபட்டு பருமனாகி அவற்றில் பக்க வேர்கள் உருவாகி நாளடைவில் ஹாக்கி மட்டை போல் வளைந்து காணப்படுதல் –புறவேர் நூற்புழுக்களினால் தாக்கப்பட்ட வெள்ளைப்பூண்டின் வேர்கள்

வேரில் மணி போல் வெண்மை நிறமாகவோ மஞ்சள் நிறமாகவோ மாறி அவற்றில் பெண் நூற்புழுக்கள் ஒட்டியிருத்தல் – முட்டைக்கூட்டு நூற்புழுவினால் தாக்கப்பட்ட பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றின் வேர்கள்.

பயிர்களைத்தாக்கும் முக்கிய நூற்புழுக்கள்

பயிர்

நூற்புழு

அறிகுறிகள்

நெல்

வேர் முடிச்சு நூற்புழு

வேர்களின் மேல் தனிச்சிறப்பு கொண்ட கொக்கி போன்ற முடிச்சுகள் காணப்படும். புதிதாக வெளிவந்த இலைகளின் வடிவம் சிதைந்து அவற்றின் ஓரங்கள் சுருங்கிக் காணப்படும்.

 

வேர் நூற்புழு

பாதிக்கப்பட்ட வேர்கள் வெற்றிட பகுதியுடனும், நிறமாற்றத்துடனும் காணப்படும். பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்.

 

வெண் இலை நுனி நூற்புழு

நெற்பயிரின் இலை நுனிகளைத் தாக்கி 3-5 செ.மீ. வரை வெள்ளை நிறமாக மாறி பின் காய்ந்து விடுகிறது. இலைகளின் நுனிகள் முறுக்கி சுருண்டு காணப்படும்

துவரை, தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, சோயாபீன்ஸ்

நீர் உறை நூற்புழு

பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாகி வளர்ச்சி குன்றி காணப்படும். நாற்று பருவத்தில் முத்து போன்ற பெண் நூற்புழுக்கள் வேருடன் ஒட்டிக்கொண்டிருக்கும்.

உளுந்து, எள், பருத்தி

மொச்சை வடிவ நூற்புழு

இலைகள் வெளிர்வடைந்து, சல்லி வர்கள் குறைந்து காணப்படும்.

கரும்பு

வேர்க்கருகல் நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு

வேர்கள் ஆங்காங்கே கருமை நிறத்தில் காணப்படும். இலை மஞ்சள் நிறமடைந்து நுனி மற்றும் விளிம்பு காய்ந்து காணப்படும்.

மஞ்சள்

வேரழுகல் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு

இலைகள் மஞ்சள் நிறமடைந்து நுனி மற்றும் விளிம்பு காய்ந்து உரிய காலத்திற்கு முன்பாகவே பயிர்கள் முதிர்ச்சியடைந்து காய்ந்து பட்டுப்போகும்

வாழை

வேரழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு

வேர்களிலும், கிழங்குகளிலும் கருமை நிறங்கள் காணப்படும். தாக்கப்பட்ட வாழைகள் வாடி காணப்படும்.

திராட்சை

மிலாய்டோகைனி, இன்காக்னிட்டா

இலைகள் சுருண்டு வெளிறிய மஞ்சள் நிறமாகக்காணப்படும். பாதிக்கப்பட்ட வேர்களின் கொடிகளில் உருண்டை யான முடிச்சுகள் காணப்படும்.

எலுமிச்சை

டைலங்குலஸ், செமிபெனிட்ரன்ஸ்

இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து போகும். நுனிக்குருத்து வளர்ச்சி குன்றியிருக்கும்.

ஆரஞ்சு

நாரத்தை நூற்புழு

இலைகள் மஞ்சளாகி வெளுத்து கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்தும், கிளைகளின் நுனி காய்ந்தும் காணப்படும்.

சோளம்

ஸ்டிங் நூற்புழு, குட்டைவேர் நூற்புழு, லீசன் நூற்புழு

தண்டுகள் மெலிதாகுதல், முதிர்வதற்கு முன்பே வாடுதல்

எள்

முட்டைக்கூடு நூற்புழு

செடிகள் வெளிறிய நிறத்துடன் திட்டுத்திட்டாக ஆங்காங்கே காணப்படும்.

கேரட்

வேர் முடிச்சு நூற்புழு

பக்கக் கிளைகள் கை, கால் முளைத்தது போல் காணப்படும்.

உருளைக்கிழங்கு

முட்டைக்கூடு நூற்புழு

கிழங்குகளின் தோற்றம் சிதைந்து அவற்றின் சந்தை மதிப்பைக் குறைக்கின்றன.

கனகாம்பரம்

பிராட்டிலிங்கஸ் நூற்புழு

செடி வளர்ச்சி குன்றி வாடிப்போகும். வேர்ப்பாகம் அழுகி கரும்புள்ளிகளுடன் காணப்படும்.

சம்பங்கி

மிலாய்டோகைனி நூற்புழு

செடி வளர்ச்சி குன்றி, மலர் மகசூல் குறையும். வேர்களில் உருண்டையான முடிச்சுகள் காணப்படும்.

மேலாண்மை முறைகள்

பயிர்களை சேதப்படுத்தும் நூற்புழுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாது. நமது முக்கிய நோக்கமே முடிந்தவரை அவைகளின் அடர்த்தியைக் குறைப்பதற்கும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்கள் அவசியமாகின்றது. அவைகள் முறையே

 • அங்கக இடுபொருட்களை அதிக அளவில் பயன்படுத்துதல்
 • பயிர் சுழற்சி, ஊடுபயிர் முறைகளைக் கடைப்பிடித்தல்
 • நூற்புழுவிற்கு எதிர்ப்புத்திறன் பெற்ற பயிர் ரகங்களைத் தேர்ந்தெடுத்துப் பயிரிடுதல்
 • கவர்ச்சிப்பயிர்கள் மூலமாக நூற்புழுக்களைக் கவர்ந்து அழித்தல்
 • பசுந்தாளுரப் பயிர்களைப் பயன்படுத்துதல்
 • உயிரியல் நூற்புழு மேலாண்மை முறைகளைக் கடைப்பிடித்தல்

அங்கக இடுபொருட்கள்

அங்கக இடுபொருட்களான தொழு உரம், சாண எரிவாயுக்கழிவு, மக்கிய குப்பை, புண்ணாக்கு வகைகள், மண்புழு உரம், மக்கிய தாவரக் கழிவுகள் போன்றவற்றைத் தேவையான அளவில் மண்ணிற்கு இட வேண்டும். அவ்வாறு அங்கக இடுபொருட்களை மண்ணிற்கு இடும்போது அவை மண்ணின் இயற்-வேதியியல் பண்பில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்துவதால் அவை நூற்புழுக்களின் பெருக்கத்தைக் குறைத்திட வழிவகை செய்கின்றது. அங்கக இடுபொருட்களிலிருந்து வெளிப்படும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயிர்களின் ஊட்டத்தினை அதிகரித்திடச் செய்வதாலும் நூற்புழுக்களின் தாக்கம் குறைந்து விடுகிறது. அங்கக இடுபொருட்கள் நூற்புழுக்களின் எதிர் நுண்கிருமிகளின் பெருக்கத்தைத் தூண்டி நூற்புழுக்களின் அடர்த்தியைக் குறைத்திட வழிவகை செய்கின்றது. மேலும், அங்கக இடுபொருட்கள் தண்ணீரில் கரையும் போது பீனால், அங்கக அமிலம் போன்ற திரவங்களை வெளியிட்டுத் தீமை செய்யும் நூற்புழுக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

நூற்புழு மேலாண்மையில் அங்கக இடுபொருட்கள்

இடுபொருட்கள்

பயிர்

அளவு(ஹெக்டர்)

கட்டுப்படுத்தப்படும் நூற்புழு

புண்ணாக்கு வகைகள்

எல்லா வகைப் பயிர்களுக்கும்

2.5 டன்

வேர் முடிச்சு நூற்புழு

வேப்பம் புண்ணாக்கு

வெற்றிலை

1 டன்

வேர் முடிச்சு மற்றும் ரெனிபார்ம் நூற்புழு

வேப்பம் புண்ணாக்கு

வாழை

2 டன்

வேரழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு

கரும்பாலைக்கழிவு

வாழை

15 டன்

வாழையைத் தாக்கும் அனைத்து நூற்புழுக்கள்

வேப்பம் புண்ணாக்கு

கரும்பு

750 கிலோ

வேர்க்கருகல் நூற்புழு, குட்டை நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு

ஆமணக்கு, புண்ணாக்கு

ஆரஞ்சு

400 கிராம்/ மரம்

ஆரஞ்சு நூற்புழு

யூகலிப்டஸ் தழைகள்

உருளைக்கிழங்கு

2.5 டன்

முட்டைக்கூடு நூற்புழு

பயிர் சுழற்சி மற்றும் ஊடுபயிர்

ஒரு பயிரில் தொன்று தொட்டுத் தோன்றும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திட அந்தப்பயிரினைத் தொடர்ந்து நூற்புழுக்களால் விரும்பத்தகாத பயிர்களைத் தேர்ந்தெடுத்து சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். அவ்வாறு மூன்று முதல் நான்கு வருடங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் நூற்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும்.

நூற்புழு கட்டுப்பாட்டில் சுழற்சி பயிர்கள்

பயிர்

சுழற்சிப் பயிர்

நூற்புழு

நிலக்கடலை

மக்காச்சோளம், பருத்தி

வேர் முடிச்சு நூற்புழு

நெல்

வாழை

வேர் முடிச்சு மற்றும் வேர் நூற்புழு

வாழை

உளுந்து, நெல், சணப்பை, கரும்பு

வேரழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு

சோயாமொச்சை

மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை, புகையிலை

சோயாமொச்சை முடிச்சு நூற்புழு

உருளைக்கிழங்கு

முட்டைக்கோசு, பூகோசு, முள்ளங்கி, பூண்டு

முட்டைக்கூடு நூற்புழு

முக்கிய பயிர்களுக்கு இடையில் ஓரிரு வரிசையில் விரும்பத்தகாத பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திடலாம்.

நூற்புழு கட்டுப்பாட்டில் ஊடுபயிர்கள்

பயிர்

ஊடு பயிர்

நூற்புழு

கரும்பு

செண்டுமல்லி, தக்கைப்பூண்டு

வேர்க்கருகல் நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு

வாழை

செண்டுமல்லி, சாமந்தி, கொத்தமல்லி, தட்டைப்பயறு, பச்சைப்பயறு, சேனை

லீசன் நூற்புழு

உருளைக்கிழங்கு

கடுகு

முட்டைக்கூடு நூற்புழு

எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் இரகங்கள்

பொதுவாக நூற்புழு எதிர்ப்புத்திறன் அல்லது தாங்கு திறன் கொண்ட இரகங்கள் என்பது அவற்றில் இயற்கையாகவே காணப்படும் மரபணு சார்ந்த குணாதிசயமாகும். அவ்வாறு எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் ரகங்களை நூற்புழுக்கள் அண்டுவதில்லை. மேலும், அவ்வாறான ரகங்களைப் பயிரிட்டுள்ள மண்ணில் நூற்புழுக்கள் தங்குவதில்லை. அவ்வாறு தங்கினாலும் அவைகளின் பரவுத்திறன் மிகவும் குறைவே. எனவே, நூற்புழுக்களுக்கு எதிர்ப்புத்திறன் அல்லது தாங்குதிறன் பெற்றுள்ள பயிர் ரகங்களைத் தேர்வு செய்து பயிரிட வேண்டும்.

நூற்புழுவிற்கு எதிர்ப்புத்திறன் பெற்றுள்ள பயிர் இரகங்கள்

பயிர்

எதிர்ப்புத்திறன் கொண்ட இரகம்

நூற்புழு

உருளைக்கிழங்கு

குப்ரி ஸ்வர்ணா, குப்ரி தென்மலை

முட்டைக்கூடு நூற்புழு

தக்காளி

பி.என்.ஆர்.7

வேர் முடிச்சு நூற்புழு

மிளகாய்

பூசா ஜவலா

வேர் முடிச்சு நூற்புழு

வாழை

கற்பூரவள்ளி, மொந்தன், நாட்டுப் பூவன், குன்னம், பேய்குன்னம், பிடிமொந்தன்

வேரழுகல் நூற்புழு, வேர் குடையும் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு

பொறிப் பயிர்கள் மற்றும் பாதகமான பயிர்கள்

நூற்புழுக்களால் மிகவும் விரும்பத்தக்க பயிரினை முக்கிய பயிர்களினூடே ஊடுபயிராகவோ, வரப்பு ஓரங்களிலோ, பொறிப் பயிராக பயிரிட்டு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திடலாம். நூற்புழுக்கள் பொறிப் பயிரினை முதலில் தேர்ந்தெடுத்து உண்ணும். அவ்வாறான பயிர்களை தாய் நூற்புழுக்கள் முட்டையிடும் முன்பே அழித்து விட வேண்டும். இதனால் நூற்புழுக்களின் பெருக்கத்தினையும், தாக்குத்திறனையும் குறைத்திடலாம். இதற்கு நூற்புழுக்களையும் அவற்றின் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். பொறிப்பயிர்கள் பசுந்தாளுரப்பயிராகவோ, தீவனப்பயிராகவோ இருந்தால் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. உதாரணமாக மல்பரியில் செண்டுமல்லியை பொறிப்பயிராகப் பயிரிட்டு மல்பரி வேர் முடிச்சு நூற்புழுவைக் கட்டுப்படுத்திடலாம்.

சிலவகை பயிர்கள் நூற்புழுக் கொல்லிகளைச் சுரக்கும் தன்மை கொண்டவை. உதாரணமாக காய்கறி தோட்டங்களில் தோன்றும் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திட வெங்காயம், பூண்டு போன்ற நூற்புழுவிற்கு பாதகமான பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடலாம். இவற்றின் வேர்களால் சுரக்கப்படும் திரவம் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திட வகை செய்கின்றது.

உயிரியல் முறைகள்

நாம் நிலங்களில் அங்கக இடுபொருட்களை இடும்போது அவை நன்மை செய்யும் இரைவிழுங்கி நூற்புழுக்களான மோனோன்கஸ், டிப்லோகாஸ்டர், டிரைபைலா போன்றவற்றை ஊக்குவிக்கின்றன. இரைவிழுங்கு நூற்புழுக்கள் தீமை செய்யும் நூற்புழுக்களை அப்படியே விழுங்கி விடும் வகையில் சிறப்பான வாய் அமைப்பினைப் பெற்றுள்ளன.

பூஞ்சாணங்கள்

சிலவகைப் பூஞ்சையினங்கள் நூற்புழுக்களில் புகுந்து உடலிலுள்ள சத்துகளை உறிஞ்சி அவற்றினை கொன்றுவிடும். கரும்பு நூற்புழுவைத் தாக்கும் கேடிமேரியா வெர்மிகோலாவை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

சிலவகைப் பூஞ்சைகள் நூற்புழுக்களில் ஒட்டுண்ணி போல் செயல்பட்டு அவற்றினை அழித்திடும். பேசிலோமைசிஸ், லின்னேசிடஸ் என்ற பூஞ்சை தக்காளி, கத்தரி, வெற்றிலை மற்றும் வாழையைத் தாக்கும் நூற்புழுக்களின் முட்டைகளில் ஒட்டுண்ணியாக செயல்படுகிறது.

டிரைக்கோடெர்மா வகையைச் சார்ந்த பூஞ்சாணங்கள் நூற்புழுக்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி அவற்றினை அழிக்கின்றன. இவை எல்லாவகை மண்களில் இருந்து கொண்டு வேரினைத் தாக்கி சேதப்படுத்தும் நூற்புழுக்களுக்கு எதிர்மறை விளைவுகளை தோற்றுவிக்கின்றன. டிரைக்கோடெர்மா விரிடி, டிரைக்கோடெர்மா ஹார்சியானம், டிரைக்கோடெர்மா கோனிங்கி, டிரைக்கோடெர்மா லாங்கி பிராக்கியேட்டம் போன்றவை தக்காளி, வெற்றிலை, வாழை போன்ற பயிர்களில் தோன்றும் வேர் முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திட பயன்படுத்தப்படுகிறது.

இவற்றுள் டிரைக்கோடெர்மா விரிடி என்ற பூஞ்சாணம் எளிதில் கிடைக்கக்கூடியது. மேலும் அவை சிறந்த முறையில் செயலாற்றி நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த வல்லன.

ரைசோபாக்டீரியா

பயிர்களின் வேர்களால் சுரக்கப்படும் வேதியியல் பொருட்களினால் கவரப்பட்டு வேரினைச் சுற்றியுள்ள மண்ணில் குவிக்கப்படும் பாக்டீரியாக்களை ரைசோபாக்டீரியா என்று அழைப்பர்.

அவ்வாறான பாக்டீரியாக்களில் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் ஒன்றாகும். இவை பெரும்பாலான பயிர்களில் காணப்படும் வேர் முடிச்சு மற்றும் முட்டைக்கூடு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த வல்லது. இதைப்போலவே, பேசில்லஸ் சப்டில்லிஸ் என்ற பாக்டீரியாவும் நூற்புழு கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

நூற்புழு மேலாண்மையில் உயிர்க்காரணிகள்

பயிர்

நூற்புழுக்கள்

பரிந்துரைக்கப்படும் உயிரியல் முறை

நெல்

நெல் வேர் நூற்புழு, நெல் வெண் நுனி நூற்புழு, இலை நூற்புழு

சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் விதை நேர்த்தி (10கி/ கிகி விதை) மற்றும் நட்ட 45, 55 மற்றும் 65ம் நாள் தெளிப்பு(1 கிகி/ ஹெ)

பருத்தி

மொச்சை வடிவ நூற்புழு

சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் விதை நேர்த்தி (20கி/கிகி விதை) மற்றும் விதைத்த 30ம் நாள் வயலில் 1 கி.கி./ ஹெ. என்ற அளவில் இடுதல்

பயறு வகைகள்

முட்டைக்கூடு நூற்புழு

விதை நேர்த்தி சூடோ மோனாஸ் ப்ளுரசன்ஸ் (10கி/கிகி விதை) அல்லது டிரைக்கோ டெர்மா விரிடி (4கி/கிகி விதை) அல்லது 2.5 கிகி/ஹெ வயலில் இடுதல்

காய்கறிகள்

வேர் முடிச்சு நூற்புழு

சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் –நாற்றங்கால் (10கி/கிகி விதை) மற்றும் நடவு வயலில் (2.5கிகி/ஹெ) இடுதல்

எலுமிச்சை

எலுமிச்சை நூற்புழு

சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் (20கி/மரம்) 4 மாதத்திற்கு ஒரு முறை இடவும்.

திராட்சை

வேர் முடிச்சு நூற்புழு

சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் (100கி/கொடி) கவாத்து செய்த பிறகு இடவும்.

வாழை

வேர் துளைக்கும் நூற்புழு, சுருள் நூற்புழு, வேர் முடிச்சு நூற்புழு

சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மரம் ஒன்றுக்கு 10 கிராம் வீதம் இட வேண்டும்.

இவ்வாறு ஒருங்கிணைந்த முறைகளைக் கடைப்பிடித்து நூற்புழுக்களின் தாக்கத்தைக் குறைத்து பயிர்களில் நூற்புழுக்களினால் ஏற்படும் மகசூல் இழப்பினைத் தவிர்த்திடலாம் என்பதில் ஐயமேதுமில்லை.

ஆதாரம் : வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate