பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள்

அறுவடைக்குப் பிந்தைய செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறுவடை வரையில் மட்டுமல்லாது, அறுவடைக்குப் பின்னரும் தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உற்பத்தியைப் பாதுகாத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.

நெல்

நெல்லுக்கு கூடுதல் விலை கிடைப்பது அதில் உள்ள முழு அரிசியின் அடிப்படையில்தான் உள்ளது. நெல் மணிகள் அளவையில் 62 சதவீதம் முழு அரிசி கிடைத்திட, அறுவடைக்குப் பின்னர் செய் நேர்த்தி தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது.

நெல் ரகங்களுக்கு ஏற்ற வகையில் பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். நெல் கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தால் அறுவடையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மணிகள் உதிர்வதைத் தவிர்க்கலாம்.

அறுவடையின்போது 19 முதல் 23 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். முதிர்ந்த நெல் மணிகளின் அரிசி கடுமையானதாகவும், உறுதியாகவும் இருக்கும். அறுவடை செய்த நெல்லை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். அதிக சூரிய வெப்பத்தில் நெல்லை காய வைக்கக் கூடாது. காயவைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.

அதிக ஈரப்பதமுள்ள நெல் மணிகளைச் சேமித்து வைத்தால் பூஞ்சாண வித்துகள் பரவி நெல்லின் தரம் பாதிக்கப்படும்.

நல்லை சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி, தரையின் மீது மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி அதன் மேல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். மூட்டைகளை சுவரிலிருந்து ஓர் அடி இடைவெளி விட்டு அடுக்கி வைத்தால் ஈரப்பதம் வராது. சேமித்து வைத்துள்ள நெல்லில் அத்துப்பூச்சி தாக்காமலிருக்க மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி மருந்து அளவில் கலந்து தரைப்பகுதி, மூட்டைகள் மீது தெளிக்க வேண்டும்.

விற்பனைக்கு நெல்லைக் கொண்டு வரும்போது ரகங்கள் வாரியாகக் கொண்டுவர வேண்டும். பூச்சிகள், பூஞ்சாணங்கள் தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட்டுப்போன நெல்லை தனியாகப் பிரித்து விட வேண்டும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், கிராமங்களிலும் வேளாண் அலுவலரால் நெல் மணிகள் 4 தரங்களாகப் பிரிக்கப்படும். இங்கு ஈரப்பதம் மற்றும் தரங்களை இலவசமாக அறிந்து கொள்ளலாம்.

சிறு தானியங்கள்

சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, மக்காச் சோளம் ஆகியவற்றுக்கு மாவுச்சத்து, புரதச்சத்து அளவுகளுக்கேற்ப கூடுதல் விலை கிடைக்கும். எனவே, அறுவடைக்குப் பின்னர் செய் நேர்த்தி தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கதிர்கள் முதிர்ந்து இலைகள் பழுப்பு நிறமாக மாறியவுடன் கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்ய வேண்டும். மழை நேரங்களில் அறுவடை செய்தால் பூஞ்சாணம் தாக்கிய கதிர்களை தனியே பிரித்து காய வைக்க வேண்டும். காய வைத்த கதிர்களில் இருந்து மணிகளைப் பிரித்து எடுக்க கதிர் அடிக்கும் கருவிகள் அல்லது கல் உருளைகளைப் பயன்படுத்தி தானியத்தைப் பிரிக்க வேண்டும்.

பிரித்து எடுக்கப்பட்ட மணிகளை காற்றில் தூற்றிவிட்டு இலைகள், கருகுகளை நீக்க வேண்டும். விதைகளில் கல், மண், இதர தானியங்கள் மற்றும் உடைந்த தானியங்களைத் தனியாகப் பிரித்து நீக்கிவிட வேண்டும்.

சிறு தானியங்களை நன்கு காயவைத்து நிழலில் உலர்த்தி பின்னர் சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி மூடி சேமிக்க வேண்டும்.

உள்புறம் சவ்வுத்தாள் பொருத்திய சாக்குப்பையில் தானியங்களைச் சேமித்தால் மழைக் காலங்களில் ஈரக் காற்றினால் பாதிப்பு ஏற்படாது. அதிக காலம் சேமிக்க வேண்டியிருந்தால் தானியங்களை கலன்களில் இட்டு மூடி சேமிக்க வேண்டும்.

மக்காச் சோளத்தை கதிர் அடிக்கும் இயந்திரம் மூலமாக எளிதில் பிரிக்கலாம். மக்காச் சோளத்தை நன்கு காய வைக்காவிடில் விரைவில் வண்டுகள் தாக்கி, தரம் பாதிக்கப்படும். காய வைத்த தானியங்களை சேமித்து வைக்கும்போது மாதம் ஒருமுறை வெயிலில் உலர்த்தி சேமிக்க வேண்டும். இல்லையெனில், தரம் பாதித்து நல்ல விலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும்.

பயறு வகைகள்

உளுந்து, பாசிப்பயறு, துவரை, தட்டைப்பயறு ஆகிய பயறு வகைகளின் கூடுதல் வருமானம் என்பது பருப்பு சதவீதத்தைப் பொருத்து அமையும். பயறு வகைகள் 85 சதவீதம் பருப்பு அளவும், கூடுதல் விலையும் கிடைத்திட அறுவடைக்குப் பிந்தைய செய் நேர்த்தி தொழில்நுட்பம் அவசியம்.

பயறு வகை காய்கள் நெற்றுகளாக மாறியும், இலைகள் பழுத்து உதிர ஆரம்பிக்கும்போது அறுவடை செய்ய வேண்டும். நெற்றுக்கள் காப்பிக்கொட்டி நிறமாகி இருந்தால் நெற்றுகளைப் பிரித்து எடுக்க வேண்டும். செடியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட நெற்றுக்களை காயவைத்து விதைகளைப் பிரித்து எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.

பிரித்து எடுத்த விதைகளில் கலந்துள்ள கல், மண், தூசி மற்றும் சருகுகள், முதிராத விதைகள், பூச்சி நோய் தாக்கிய விதைகளை தனியாக நீக்க வேண்டும்.

விதைகளில் ஈரப்பதம் 12 சதவீதத்துக்குள் இருக்குமாறு நன்கு காய வைக்க வேண்டும். உணவுக்காக நீண்ட நாள்கள் சேமிக்க விதைகளை வெயிலில் காய வைத்து, பின்னர் ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி நல்லெண்ணெய் தடவி நிழலில் உலர விட்டு சேமிக்கலாம்.

துவரை விதைக்கு செம்மண் தடவி காய வைத்து சேமிக்கலாம். பயறு வகை விதைகள் சிறப்பு, நல்லது, சுமார், சாதாரணம் என 4 தரமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பிரிக்கப்படும்.

கேள்வி பதில்

1. அறுவடை பின்சார் தொழில்நுட்பம் என்றால் என்ன ?
அறுவடைக்குப் பின்னர் தொழில்நுட்பமானது, அறுவடை செய்த வேளாண் உற்பத்திகளை, கதிரடித்தல், சுத்தம்  செய்தல், தரம் பிரித்தல், உலர வைத்தல், சேமித்தல், அரைத்தல், போக்குவரத்து, கையாளுதல், அடைத்தல் என உற்பத்திகளை நுகர்வோருக்கு ஏற்றவாறு பதன் செய்து கொடுத்தலாகும். இவ்வாறு பதன் செய்வதற்கு உண்டான அனைத்துச் செயல்பாடுகளும் அறுவடை பின் சார் பொறியியல் துறையில் அடங்கும்.

2. அறுவடைக்குப்பின் உண்டாகும் சேதம் என்றால் என்ன ?
அறுவடை செய்த வேளாண் உற்பத்திகளை உடனே பயன்படுத்த வேண்டும் அல்லது, அவற்றை பதன்படுத்தி பாதுகாப்பாகச் சேமித்து வைத்தல் வேண்டும். உடனடியாக பதன்படுத்தாமல் இருந்தாலோ அல்லது வேளாண் உற்பத்திகளை முறையாக கையாளாமல் இருந்தாலோ அதிக அளவில் சேதம் ஏற்படும். இதனையே, அறுவடைக்குப் பனி் உண்டாகும் சேதம் என்கிறோம். ஆண்டுக்கு மற்றும் பருப்பு, தானிய வகைகளுக்க 10-20 சதவிகிதம் சேதமும், பழம் மற்றும் காய்கறிகளுக்கு 20-40 சதவிகிதம் சேதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

3. வேளாண் உற்பத்திகளை சுத்தம் செய்தல் மற்றும் தரம் பிரித்தலின் முக்கியத்துவம் என்ன ?
சுத்தம் செய்து தரம் பிரித்த வேளாண் உற்பத்திகளுக்க சந்தையில் அதிக விலைக் கிடைக்கும். ஆதலால், வேளாண் உற்பத்திகளைச் சுத்தம் செய்து தரம் பிரித்தல் மிகவும் இன்றியமையாததாகும்.

4. சூரிய வெப்பத்தில் உலறவைத்தல் உகந்ததா ?
சூரிய வெப்பத்தில் உலர்த்தும் போது தட்பவெப்ப மாறுபாடு அதிகமாக இருப்பதால் பொருளின் தரம் பாதிக்கப்படுகிறது. ஆதலால், நல்ல தரத்தில் பொருட்களை  உலர்த்துவதற்கு இயந்திர உலர்த்தியை உபயோகிப்பது சிறந்தது.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மைத்துறை

2.82692307692
mari yappan Dec 02, 2014 01:22 PM

மிகவும் நல்ல தொழிற்நுட்பம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top