பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சாகுபடி தொழில்நுட்பங்கள் / ஆடிப்பட்டத்தில் மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆடிப்பட்டத்தில் மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்பங்கள்

ஆடிப்பட்டத்தில் மக்காச்சோள சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மக்காச்சோளம் ஒரு முக்கியமான தானியப்பயிர். தானியப்பயிர்களின் அரசி என்று இது அழைக்கப்படுகிறது. மற்ற பயிர்களுடன் ஒப்பிடுகையில் மக்காச்சோள சாகுபடிக்கான வேலையாள்களின் தேவை குறைவு, சாகுபடி செலவு, பூச்சி, நோய் தாக்குதல் மிகவும் குறைவு. இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தியாவில், குறிப்பாக மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் விளைவிக்கப்பட்டு முக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது.

மக்காச்சோள சாகுபடியில் அதிக விளைச்சல் காண சாகுபடி தொழில்நுட்பம் அவசியம். ஒரு ஏக்கருக்கு எந்தெந்த அளவுகளில் எந்த உரத்தை எந்த நேரத்தில் இடுவது என்பதை கவனித்து செய்தால் அதிக விளைச்சலை பார்க்கலாம்.

தொழு உரம் இடுதல்

ஒரு ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழு உரத்தை கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 4 பாக்கெட் (800 கிராம்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.

நிலம் தயாரித்தல்

முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் சட்டிக் கலப்பையால் ஒருமுறை உழவு செய்யவும். பின்பு தொழு உரத்தை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பைக் கொண்டு இருமுறை நன்கு உழவு செய்யவும். 60 செ.மீ இடைவெளியில் 6 மீட்டர் நீளத்தில் பார்கள் அமைக்கவும். பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால் அமைக்கவும். செலவினைக் குறைக்க டிராக்டர் மூலம் பார் அமைக்கும் கருவிகளை பயன்படுத்தலாம்.

பருவம்

மக்காச்சோளமானது, தமிழகத்தில் மானாவாரியாக ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்திலும், இறைவைப் பயிராக தை மற்றும் சித்திரைப் பட்டத்திலும் சாகுபடி செய்யப்படுகிறது.

விதையளவு மற்றும் இடைவெளி

நல்ல தரமான சான்று பெற்ற விதைகளை விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். விதையளவு ஏக்கருக்கு 8 கிலோ (ரகம்) மற்றும் 6 கிலோ (வீரிய ஒட்டு ரகம்) என்ற அளவில் பின்பற்றவும். ஒரு செடிக்கும், மற்றொரு செடிக்கும் இடையே 20 செ.மீ (ரகம்) 25 செ.மீ (வீரிய ஒட்டு ரகம்) இடைவெளியும், வரிசைக்கு வரிசை 60 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.

விதைத்தல்

கரிசல் மண்ணில் விதையை ஆழமாக விதைக்கக் கூடாது. குறைந்த ஆழத்தில் அதாவது 2 செ.மீட்டரில் விதைக்க வேண்டும். ஏனெனில், கரிசல் மண்ணில் நீர் அதிக நேரம் தேங்கி நிற்கும். மேலே நடவு செய்த விதைகள் முழுமையாக ஊறிவிடும். விதை உறிஞ்சுவதற்குத் தேவையான நீர் கிடைத்து முளைக்க ஏதுவாக இருக்கும்.

கரிசல் மண்ணில் ஆழமாக விதையை விதைப்பு செய்தால், விதைகள் விரைந்து முளைப்பதில் இடர்பாடு ஏற்படும். செம்மண் பாங்கான பூமியில் விதையை சற்று ஆழமாக விதைப்பு செய்ய வேண்டும். அதாவது 3 செ.மீட்டரிலிருந்து 4 செ.மீட்டரில் விதைக்க வேண்டும். ஏனெனில், செம்மண் பூமியில் நீர் விரைவாக கீழே சென்று விடும். ஆழமாக நடவு செய்யப்பட்ட விதைகள் தேவையான நீரை உறிஞ்சி விரைந்து முளைக்கும். மேலாக விதைப்பு செய்யப்பட்ட விதைகளுக்கு சரியான நீர் கிடைக்காமல் முளைப்பு இல்லாமல் போய்விடும். எனவே, செம்மண் பூமியில் மழையில்லா சூழ்நிலையில் தண்ணீர் கட்டுவது அவசியம்

பயிர் எண்ணிக்கை பராமரித்தல்

மக்காச்சோள பயிரின் விளைச்சலை நிர்ணயிப்பதில் செடிகளின் எண்ணிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. விதைப்பு செய்த 7- 8 ஆம் நாளில் நல்ல, தரமான நாற்றுகளை விட்டு, விட்டு தேவையற்ற மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும். வெதுவெதுப்பான சுடுநீரில் மக்காச்சோள விதைகளை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி பின்னர் விடுபட்ட இடத்தில் விதைப்பு செய்தால் விதைகள் நன்கு முளைப்பதோடு மட்டுமல்லாமல் குருத்துப்பூச்சி தாக்குதலும் குறையும்.

உரமிடுதல்

மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில், பொதுப் பரிந்துரையான 54:24:20 கிலோ ஏக்கர் (117:150:33 கிலோ ஏக்கர் யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்) அளவில் ரகங்களுக்கும், 100:30:30 கிலோ ஏக்கர் (217:188:50 கிலோ ஏக்கர் யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்) அளவில் வீரிய ஒட்டு ரகங்களுக்கும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களைப் பொதுவாக அளிக்க வேண்டும். அடியுரமாக பாதியளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் பாதியளவு சாம்பல் சத்துக்களை இட வேண்டும். மீதமுள்ள தழை மற்றும் சாம்பல் சத்துக்களை இரண்டு முறையே, அதாவது ஆறாவது கணுநிலை மற்றும் ஒன்பதாவது கணு நிலையில் இட வேண்டும். ஏக்கருக்கு 3 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நுண்ணூட்டக் கலவையை 30 கிலோ தொழு உரத்துடன் தகுந்த ஈரப்பதத்தில் கலந்து ஒரு மாதம் நிழலில் வைத்து வயலில் இட வேண்டும்.

களைக்கட்டுப்பாடு

களைகள் பயிருடன் நீர், நிலம் மற்றும் சத்துக்கள் போன்வற்றிற்கு போட்டியிட்டுக் கொண்டு விளைச்சலை வெகுவாக குறைக்கிறது. களை முளைக்கும் முன் பயன்படுத்தப்படும் அட்ரசின் (அட்ராப்) என்னும் களைக் கொல்லியை ஏக்கருக்கு 500 கிராமை, 200 லிட்டர் தண்ணீர் கலந்து விசிறி நாசில்லினைப் பயன்படுத்தி விதைப்பு செய்த மூன்றாம் நாளில் தெளிக்க வேண்டும். அல்லது ஊடுபயிராக பயிறுவகை பயிர்களை பயிர் செய்தால் பெண்டிமெத்தலின் என்ற களைக் கொல்லியை 1.2 லிட்டருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து விதைப்பு செய்த மூன்றாவது நாள் தெளிக்க வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும்போதே களைக் கொல்லியைப் பயன்படுத்தவும். பின்னர் 30-லிருந்து 35 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

மக்காச்சோளப் பயிர் அதிக வறட்சியையும், அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.

இலைவழி ஊட்டம்

மக்காச்சோள மேக்சிம் ஏக்கருக்கு 3 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் பருவத்தில் இலை வழியாக தெளிக்க வேண்டும். இதனால் மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கும். விளைச்சல் 20 சதம் கூடும்.

அறுவடை

முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதலும், மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்து விடும். விதைகள் கடினமாகவும், காய்ந்தும் காணப்படும் இப்பருவம் அறுவடைக்கேற்றது.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

Filed under:
3.01526717557
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top