நாம் சாகுபடி செய்யும் பயிர்களில் பல்வேறு விதமான பூச்சிகளும், நோய்களும் தோன்றி சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பயிர்களின் வளர்ச்சி குன்றுவதோடு உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.
பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைப் பற்றி படிக்கும் அறிவியலுக்கு “என்டோமாலாஜி" என்று பெயர். பயிரிடுகின்ற பயிர்களைத் தாக்கி பொருளாதார ரீதியாக சேதம் விளைவிக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் "தீங்குயிரிகள்" (Pest) என்று பெயர். “பெஸ்ட்” என்னும் ஆங்கிலச் சொல் “பெஸ்டிஸ்”, என்னும் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது. இதன் பொருள், 'அழிவை ஏற்படுத்தக் கூடியது' என்பதாகும்.
பூச்சியின் உடலமைப்பை வளர்ச்சியடைந்த பூச்சிகளில் காணமுடியும். பூச்சியின் உடல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
தலை
பூச்சியின் தலைப்பகுதி சிறியதும் முக்கியமான பகுதியும் ஆகும். இதில் கண்கள், உணர் இழைகள், வாய்ப்பகுதி போன்ற உறுப்புகள் காணப்படும்.
மார்பு
இப்பகுதி தலையைவிட சற்று பெரியதாக இருக்கும். இதில் மூன்று ஜோடி கால்கள், ஒன்று அல்லது இரண்டு ஜோடி இறக்கைகள் காணப்படும். சில பூச்சிகள் இறக்கைகள் இல்லாமலும் காணப்படும்.
வயிறு
இப்பகுதி பெரியதாக காணப்படும். இதனுள் குடல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும்.
பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியில் இருவிதமான உருமாற்றங்கள் காணப்படுகின்றன.
முழு உருமாற்றம் (Complete Metamorphosis)
ஒரு தாய்ப்பூச்சி இடும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட முறை தன்னுடைய தோலை உறித்து வளர்ச்சி அடைந்த புழுவாக மாறும். பின்னர் கூட்டுப்புழு பருவத்தில் பல்வேறு மாறுதல்களை அடைந்து தன் தாயை போன்ற தோற்றத்தில் வெளிவரும். இதன் வாழ்க்கை பருவத்தில் அதிக மாறுதல்கள் இருப்பதால் இதற்கு முழுஉருமாற்றம் என்று பெயர்.
உ.ம். வண்ணத்துப்பூச்சி வகுப்பு, வண்டு வகுப்பு, ஈவகுப்பு, குளவி மற்றும் தேனீவகுப்பு.
குறை உருமாற்றம் (Incomplete Metamorphosis)
ஒரு தாய்ப்பூச்சி இடும் முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் தாயைப் போன்ற வடிவத்தில் இறக்கைகள் இல்லாமல் இருக்கும். இறக்கைகளும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் வளர்ந்து வளர்ச்சி அடைந்த பூச்சியாக மாறிவிடும். இதனுடைய வாழ்க்கையில் குறைந்த மாறுதல்களே இருப்பதால் இதற்கு குறை உருமாற்றம் என்று பெயர். உ.ம். வெட்டுக்கிளி வகுப்பு, கரையான் வகுப்பு, நாவாய்ப்பூச்சி வகுப்பு, செதில்கள் வகுப்பு.
பூச்சிகள் பயிர்களில் தோன்றுவதை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
எபிடெமிக் (Epidemic)
சாகுபடி செய்யப்படும் பயிர்களில் ஏதாவது ஒரு பருவத்தில் திடீரென்று மிக அதிக எண்ணிக்கையில் தோன்றி, மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகள் எபிடெமிக் வகைப் பூச்சிகள் எனப்படும். உ.ம். நெல் புகையான், நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழு.
எண்டெமிக் (Endemic) :
ஒரு பயிரில் எல்லா காலங்களிலும் தொடர்ந்து இருந்து குறைந்த அளவு சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளுக்கு எண்டெமிக் வகைப் பூச்சிகள் என்று பெயர். உ.ம். நெல் இலை சுருட்டுப்புழு, நிலக்கடலை சுருள் பூச்சி.
நன்மை தரும் பூச்சிகள் - மனிதனுக்கு உபயோகப்படும் பொருட்களை உற்பத்தி செய்பவை
தீமை தரும் பூச்சிகள் - பயிர்களை தாக்கி சேதம் விளைவிப்பவை
பூச்சிகள் தாவரங்களின் பல்வேறு பாகங்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகள் ஏற்படுத்தும் சேத அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு கீழ்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
கடித்து மென்று உண்ணும் பூச்சிகளால் ஏற்படும் சேதங்கள்
இவ்வகை பூச்சி தாவரத்தின் பாகங்களை கடித்து, மென்று உண்டு சேதம் விளைவிக்கின்றன. இவை தாக்கும் போது இலைகளை சுருட்டியும், பச்சையத்தை சுரண்டியும், துவாரம் ஏற்படுத்தியும், பூ மொட்டுக்கள் மற்றும் செடியின் நுனிபாகங்களைக் கடித்தும் சேதம் விளைவிக்கின்றன. உ.ம். நெல் இலை சுருட்டுப்புழு, கத்தரி புள்ளி வண்டு, நிலக்கடலை சிவப்புக் கம்பளிப் புழு, ஆமணக்கு காவடிப்புழு.
குத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகளால் ஏற்படும் சேதங்கள்
குத்தூசி வாய்ப்பாகம் கொண்ட இவ்வகை பூச்சிகள் இலைகளில் கூட்டமாக அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் விளிம்புப் பகுதி சுருண்டு பச்சையம் இழந்து மஞ்சள் நிறமாக மாறுகின்றன. உ.ம். அசுவினி, புகையான், வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள்.
உட்திசுக்களை உண்ணும் பூச்சிகளால் ஏற்படும் சேதங்கள்
இப்பூச்சிகள் பயிரின் பாகங்களை துளைத்து சதைப்பகுதியினை உண்டு சேதப்படுத்துகின்றன. உ.ம். நெல் தண்டுத்துளைப்பான், தக்காளி இலை நுண்துளைப்பான், பயறு வகைகளில் காய்துளைப்பான்.
கொப்புளங்கள் மற்றும் கழலைகளை உண்டு பண்ணும் பூச்சிகள்
இவை செடிகளின் வெவ்வேறு பாகங்களை தாக்கும்போது கழலைகள் தோன்றுகின்றன. உ.ம். நெல் ஆனைக் கொம்பன் ஈ, மா தேயிலைக்கொசு.
மண்ணுக்கடியில் வேர்ப்பகுதியில் இருந்து தாக்குவதால் தாக்கப்பட்ட பயிர்கள் மஞ்சள் நிறமடைந்து வாடி விடுகின்றன. உம். ராகி வேர் அசுவினி, கிழங்கு கூன் வண்டுகள்.
சேமிப்பு தானியங்கள் மற்றும் விளைபொருட்களுக்கு ஏற்படும் சேதங்கள்
பூச்சிகள் சேமிப்பு தானியங்களை குடைந்து மாவுப்பொருளை உண்டு சேதப்படுத்துகின்றன.
உ.ம். அரிசிக் கூன் வண்டு, பயறு வண்டுகள், நெல் அந்துப் பூச்சி.
மறைமுகமாக தீங்கு விளைவித்தல்
பூச்சிகள் மனிதன், கால்நடைகள், பறவைகள் போன்றவற்றை தாக்கி அல்லது நோய்களைப் பரப்பி, தீங்கு விளைவிக்கின்றன. உம். ஈ, கொசு.
வேறு வழியில் தீங்கு விளைவித்தல்
முட்டையிடும் போது காயங்களை ஏற்படுத்துதல், பயிரின் பாகங்களை கூடுகட்ட உபயோகப்படுத்துதல், தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிரிகளை ஒரு செடியிலிருந்து வேறு செடிக்குப் பரப்புதல். உ.ம். வெள்ளை ஈ, சிவப்பு எறும்புகள்.
காலநிலைகளில் ஏற்படும் மாறுதல்கள் : ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலையில் திடீரென சில மாறுதல்கள் தோன்றும் போது அது சில பூச்சிகள் பெருகுவதற்குக் காரணமாக அமைகின்றது.
காடுகளை அழித்து பயிர் சாகுபடிக்குக் கொண்டு வருதல்
காடுகளை அழிப்பதால் மழையின் அளவு குறைந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. இந்த மாறுபட்ட சூழ்நிலை பூச்சிகளுக்கு சாதகமாக அமைவதால் காட்டுச் செடிகளை உணவாக உட்கொண்ட பூச்சிகள் பயிர்களை உணவாக உட்கொண்டு அதிக அளவில் பெருகுகின்றன.
பூச்சிகளின் இயற்கை எதிரிகள் அழிதல்
பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தும் போது இயற்கை எதிரிகள் அழிக்கப்படுகின்றன. அப்பொழுது பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் அதிக அளவு பெருகுகின்றன.
தீவிர சாகுபடி முறையைக் கடைபிடித்தல்
புதிய இரகங்கள் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் அற்றவைகளாகக் காணப்படுவதால் பூச்சிகள் அதிக அளவு பெருகுகின்றன. அதிக தழைச்சத்து உரமிடுதல், நெருக்கமாக நடவு செய்தல், ஒரே இரகத்தை அதிக பரப்பளவில் சாகுபடி செய்தல், ஒரே பயிரைத் தொடர்ந்து பயிர் செய்தல் ஆகியவற்றால் பூச்சிகள் அதிக அளவு பெருகுகின்றன.
புதிய பயிர்களை ஓர் இடத்தில் சாகுபடி செய்தல்
புதிய பயிரை முன்பு பயிரிடப்படாத இடத்தில் அறிமுகப்படுத்தும் போது அச்சூழ்நிலையில் அந்த பயிரைத் தாக்கி பூச்சிகள் பெருகுகின்றன.
அயல் நாடுகளிலிருந்து புதிதாகப் பூச்சிகளை புகுத்துதல்
ஒரு நாட்டிலிருந்து கடல், தரை, ஆகாயமார்க்கம் மூலம் விதைகள், விதைப் பொருட்கள், செடிகள், செடியின் பாகங்கள் வேறு இடங்களுக்குச் செல்லும் போது பூச்சிகள் பெருகுகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறன் வாய்ந்த பூச்சிகள் தோன்றுதல்
பூச்சிக்கொல்லி மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் உருவாகி பெருகுகின்றன. பைரித்ராய்டு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தினால் பூச்சிகள் எதிர்ப்புத்திறன் பெற்றுவிடும்.
பூச்சிகளைத் தவிர முதுகெலும்புள்ள, முதுகெலும்பற்ற பிற உயிரினங்கள் பயிர்களைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. இவை பூச்சிகள் அல்லாத தீங்குயிரிகள் எனப்படுகின்றன. அவற்றில் பயிர்ச்சிலந்திகள், எலிகள், பறவைகள், நூற்புழுக்கள், நண்டுகள், நத்தைகள் மற்றும் சில விலங்கினங்கள் முக்கியமானவையாகும்.
பயிர்ச் சிலந்திகள் எல்லா விதமான சூழ்நிலைகளிலும் காணப்படுகின்றன. அவை பயிர்களைத் தாக்கி சேதம் விளைவிப்பதோடு மனிதன் மற்றும் கால்நடைகளின் மேல் புற ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து நேரடியாகத் தீங்கு விளைவிப்பதுடன் சில நோய்களையும் பரப்புகின்றன.
சிலந்திகள் கூர்மையான அலகு போன்ற வாய்ப்பாகங்களைக் கொண்டு திசுவறைகளைக் குத்தி, சாற்றை உறிந்து சேதம் விளைவிக்கின்றன. தாக்கப்பட்ட பாகங்களில் வெண்மை அல்லது சிவப்பு நிறப் புள்ளிகள் அல்லது படைகள் தோன்றுவதோடு, செடிகள் நலிந்து, வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது.
கட்டுப்படுத்தும் முறை
சிலந்திகளைக் கட்டுப்படுத்த டைக்கோபால் 500-600 மி.லி. 7 ஏக்கர் அல்லது நனையும் கந்தகத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 4-6 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
வயல்களில் நெல் பயிருக்கு மிக அதிக சேதம் விளைவிக்கக் கூடிய தீங்குயிரிகளில் எலிகளும், சுண்டெலிகளும் மிகவும் முக்கியமானவை. நெல் பயிரில் அவை 5 முதல் 10 சதம் வரையில் சேதம் விளைவிக்கின்றன.
எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
பூனைகள், கீரிப்பிள்ளைகள், பாம்புகள், ஆந்தைகள் போன்ற இயற்கை எதிரிகளால் அழிக்கப்படுகின்றன. கூண்டுப் பொறிகள், மூங்கில் வில் பொறிகள் போன்றவற்றை பயன்படுத்தி வீடு மற்றும் சேமிப்பு கிடங்குகளில் உள்ள எலிகளை கட்டுப்படுத்தலாம். இரசாயனக் கொல்லிகளை பயன்படுத்தி விஷ உணவு தயார் செய்து எலிகளை கட்டுப்படுத்தலாம். துத்தநாக பாஸ்பைடு 25 கிராம், எலிகள் விரும்பி உண்ணக்கூடிய உணவு 450 கிராம், 15 கிராம் வெல்லம், 10 கிராம் சமையல் எண்ணெய் ஆகியவற்றை கலந்து வசிய மருந்து தயாரிக்கலாம்.
"ரோபான்" என்ற ஆண்டிகோயாகுலண்ட் (கேக் வடிவம்) வசிய மருந்தினை பயன்படுத்தலாம். இதில் துத்தநாக பாஸ்பைடு போன்ற அருவருக்கத்தக்க நெடி இல்லாததால் நல்ல பலனை அளிக்கும். சுவாச நச்சாக வேலை செய்யக்கூடிய அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகளை எலி வளைகளில் வைத்து எலிகளை அழிக்கலாம்.
சில பறவைகள் வயல்களில் நிற்கும் பயிர்கள், பழச் செடிகள், காய்கறிகள் போன்றவற்றைத் தாக்கி அதிக சேதம் விளைவிக்கின்றன. வேறு சில பறவைகள் அறுவடை சமயங்களில் களங்களிலும், வீடுகளிலும் தானியங்களை உண்டு சேதப்படுத்துகின்றன. பறவைகள் அவை உண்பதைக் காட்டிலும் அதிக அளவில் கடித்து சேதம் விளைவிக்கின்றன.
கட்டுப்படுத்தும் முறை
வேட்டு சப்தம் எழுப்பக்கூடிய பறவை விரட்டும் கருவியைப் பயன்படுத்தி பறவைகளை விரட்டலாம்.
இவை நாற்றங்கால்களிலும், நடவு மேற்கொண்ட வயல்களிலும் நாற்றுக்களைக் கடித்து, துண்டித்து சேதம் விளைவிக்கின்றன. வயல்களில் அதிக அளவு நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் போது நண்டுகள் அதிக சேதம் விளைவிக்கின்றன.
கட்டுப்படுத்தும் முறைகள்
நண்டுகளை கைகளால் பிடித்து அழிக்கலாம். அரிசி சாதத்துடன் கார்பரில் மருந்து கலந்த நச்சு கவர்ச்சி உணவை வைத்து நண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். வளைகளுக்குள் தாமிர சல்பேட் படிகங்களைப் போட்டும் நண்டுகளை அழிக்கலாம்.
சில வகை நத்தைகள் காய்கறிப்பயிர்கள் மற்றும் நெல் நாற்றுகள் போன்றவற்றின் இலைகளை உண்டு சேதம் விளைவிக்கக்கூடியவை.
கட்டுப்படுத்தும் முறைகள்
கைகளால் பிடித்து அழிக்கலாம். மெடால்-டி-ஹைடு (Metal-dehyde) 5 சத குருணைகளை கவர்ச்சி பொருளாக (Bait) பயன்படுத்தி நத்தைகளை அழிக்கலாம். வயலை சுற்றி உப்பினையிட்டு நத்தைகள் நடமாட்டத்தை தடுக்கலாம்.
பல வகையான நூற்புழுக்கள் பயிர்களின் வெவ்வேறு பாகங்களைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் எல்லா விதமான சூழ்நிலைகளிலும் காணப்பட்டாலும், அவற்றைச் சுற்றி நீர் இல்லாத நிலையில் அவை செயலற்று காணப்படும். நூற்புழுக்கள் உயிருள்ள செடிகளிலிருந்து மட்டுமே உணவுப் பொருட்களை கிரகிக்கக் கூடியவையாகையால், அவை முழு ஒட்டுண்ணிகள் எனப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
ஏக்கருக்கு ஆல்டிகார்ப் 10 சதக் குறுணை - 4 கிலோ அல்லது கார்போஃபியூரான் 3 சதக் குறுணை 12 கிலோ என்ற அளவில் 10 கிலோ மணலுடன் கலந்து வயலில் சீராகத் தூவி பின்னர் நீர்பாய்ச்ச வேண்டும்.
மான்கள், குரங்குகள், நரிகள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள், முயல்கள், அணில்கள் போன்ற பல விலங்கினங்களும் பல்வேறு பயிர்களுக்கும், பழச்செடிகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன.
கட்டுப்படுத்தும் முறைகள் :
வயலை சுற்றி கம்பி வேலி அமைத்தல், காவலுக்கு வேலையாட்கள் வைத்தல், நச்சு கவர்ச்சி உணவு வைத்தல் போன்ற முறைகளில் கட்டுப்படுத்தலாம்.
தாவரங்களில் தோன்றும் நோய்களை பற்றிய அறிவியலுக்கு பைட்டோ பேதாலஜி என்று பெயர். இது இலத்தீன் மொழியை தழுவியது. “ஃபைட்டான்” என்பது தாவரங்களையும், “பேதோஸ்” என்பது நோய்களையும், “லோகோஸ்” என்பது அறிவியல் என்றும் பொருள்படும்.
மனிதனின் அடிப்படைத் தேவைகளைத் தாவரங்களே பூர்த்தி செய்கின்றன. அதே தாவரங்களை பல்லாயிரக்கணக்கான நோய்க்காரணிகள் தாக்கி பொருளாதார ரீதியாக இழப்பை ஏற்படுத்துகின்றன.
நோய் வரையறை : 'ஹீல்டு' என்ற விஞ்ஞானியின் வரையறைப்படி, ஒரு பயிரானது தன் இயல்பான தோற்றத்திலிருந்து அதன் அமைப்பிலோ அல்லது செயலிலோ மாற்றம் அடைந்து, செடியின் சில பாகங்கள் அல்லது முழுசெடியும் முதிர்ச்சியடைவதற்கு முன் மடியுமானால் அது நோய் எனப்படுகிறது.
பயிர்களை தாக்கும் நோய்களால் ஆண்டுதோறும் அதிக அளவு பொருளாதார சேதம் ஏற்படுகிறது. பல்வேறு நாடுகளில் இதுவரை 30,000க்கும் அதிகமான நோய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 5000க்கும் அதிகமான நோய்கள் பதிவு செய்யப்பட்டு, சராசரியாக 10 சதம் வரை மகசூல் இழப்பினை ஏற்படுத்துகின்றன. உம். கோதுமை துரு நோயினால் ஒவ்வொரு ஆண்டும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகின்றது.
இந்தியாவில் கரும்பில் ஏற்படும் செவ்வழுகல் நோய் பல டன் சர்க்கரை உற்பத்தியை குறைக்கிறது.
நுண்ணுயிரிகள் அவை வாழுமிடம், வாழ்க்கை முறை ஆகியவற்றை பொருத்து மனிதன், கால்நடைகள் மற்றும் தாவரங்களில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. அவை செயல்படும் முறை, பொருளாதார ரீதியாக ஏற்படுத்தும் மாறுதல்கள் ஆகியவற்றை பொருத்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் நன்மை தரும் நுண்ணுயிரிகள் என இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
மனிதன், கால்நடைகள் மற்றும் பயிர்களுக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் என்று பெயர். இதில் பூசணம், பாக்டீரியா, நச்சுயிரி, மைக்கோபிளாஸ்மா, பூக்கும் தாவர ஒட்டுண்ணிகள், நூற்புழுக்கள், பாசிகள் போன்றவை அடங்கும்.
பூசணம் (Fungus)
பூசணங்கள் தாவர இனத்தைச் சார்ந்தவை. நோய் உண்டு பண்ணும் பூசணங்களுக்கு பச்சையம் கிடையாது. அதனால் தாவரங்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து நோயை உண்டு பண்ணுகின்றன. இலையில் புள்ளிகள், துளைகள், கருகல், சாம்பல் நிற படிவம், துரு படிவம், செடி வாடுதல், நாற்றழுகல் மற்றும் வேர் அழுகல் முதலிய அறிகுறிகள் பூசணங்களால் தோன்றுகிறது. உம். நெல் இலைப்புள்ளி நோய்
பாக்டீரியா (Bacteria)
பாக்டீரியாக்கள் பச்சையம் அடங்கப்பெறாத, ஒற்றைத் திசுவறையைக் கொண்ட மிகச்சிறிய நுண்ணுயிரி ஆகும். இவை பயிர்களில் தங்கி நோய் உண்டு பண்ணுகின்றன. பாக்டீரியாக்கள் இலைப்புள்ளிகள், மென்மை அழுகல், பிளவை, வாடல் மற்றும் கழலைகள் கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கின்றன. உம். நெல் பாக்டீரியா இலைக்கருகல் - சேந்தோமோனாஸ் ஒரைசே. எலுமிச்சை பிளவை - சேந்தோமோனாஸ் சிட்ரை பருத்தி - கருங்கிளை நோய் - சேந்தாமோனாஸ் மால்வேசியாரம்
மைக்கோபிளாஸ்மா (Mycoplasma)
இது ஒரு தனிவகை நுண்ணுயிர் கூட்டத்தைச் சேர்ந்தது. பாக்டீரியாவின் அமைப்பையும், வைரஸின் தன்மையையும் கொண்டது. பூச்சிகள் மைக்கோபிளாஸ்மாவைப் பரப்பி பயிர் நோய்கள் தோன்றக் காரணமாகின்றன. மைக்கோபிளாஸ்மா பயிர்களில் வளர்ச்சி குன்றுதல், புல்தண்டு, சிற்றிலை மற்றும் பச்சைப்பூ ஆகிய நோய்களைத் தோற்றுவிக்கின்றன. உ.ம். எள் பச்சைப்பூ நோய், கத்தரி சிற்றிலை நோய்
வைரஸ் (Virus)
இவை உருவத்தில் மிகச்சிறியவை. எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். இதில் உட்கரு அமிலமும் அதைச்சுற்றி புரத உறை மட்டுமே காணப்படும். வைரஸ்களும் பூச்சிகளால் பயிர்களில் பரப்பப்பட்டு நோய் உண்டு பண்ணுகின்றன. வைரஸ் பயிர்களில் தேமல், இலைச்சுருள், இலைச்சுருக்கம், இலை நெளிவு, இலை வடிவ மாற்றம், வளர்ச்சி குன்றுதல் மற்றும் மலட்டுத்தன்மை ஆகிய நோய்களை ஏற்படுத்துகின்றன. உ.ம். வெண்டை நரம்பு வெளுத்தல், துவரை தேமல் நோய்
பாசிகள்
இவை தாவர இனத்தைச் சார்ந்தவை. ஆனால் நோய் உண்டு பண்ணும் பாசிகளுக்கு பச்சையம் கிடையாது. உ.ம். கமுகு- கொலார்க்காநோய்
பூக்கும் தாவர ஒட்டுண்ணிகள் (Phanerogamic Parasites)
சில பூக்கும் தாவரங்கள் வேர்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து பயிர்களை தாக்கி சேதம் விளைவிக்கின்றன. இதற்கு வேர்ப்புல்லுருவி என்று பெயர். உ.ம். சுடுமல்லி, ஒரபாங்கி. இவை தண்டுப் பகுதியில் காணப்பட்டால் தண்டுப்புல்லுருவி என்று அழைக்கப்படுகிறது. உ.ம். கஸ்கியூடா, லொரான்தஸ்.
நூற்புழுக்கள் (Nematodes)
கண்களுக்குத் தெரியாத நூல் போன்ற தோற்றத்தைக் கொண்ட இவை மண்ணுக்கடியில் வாழ்ந்து தாவரங்களைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. உம். உருளைக்கிழங்கு பொன்னிற நூற்புழு, நெல் வேர்முடிச்சு நூற்புழுக்கள்
நாற்றழுகல் அல்லது இளஞ்செடியழுகல் (Damping off)
நாற்றுகள் அல்லது இளஞ்செடிகளின் கழுத்துப் பகுதியை நோய்க்காரணிகள் தாக்கி திசுக்களை அழித்து விடுவதால் கழுத்துப் பகுதி அழுகி நாற்றுக்கள் அழிந்து விடுகின்றன. பொதுவாக இந்நோய் பூசணங்கள் மூலம் தோன்றுகிறது. உ. ம். மிளகாய், கத்தரி, புகையிலை நாற்றழுகல்.
அழுகல் (Rot)
பயிர் பாகங்களான பூ மொட்டுக்கள், பழங்கள், கிழங்குகள், வேர்கள் போன்றவை பூசணங்கள் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதலால் அழுகிவிடுகின்றன. உ.ம். மிளகாய் பழம் அழுகல், மஞ்சள் கிழங்கழுகல்.
துருநோய் (Rust)
இவ்வறிகுறி பூஞ்சைகள் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன. இலைகளின் மேற்பரப்பிலோ அல்லது அடிப்பரப்பிலோ துருப்பிடித்தாற் போன்ற சொரசொரப்பான சிறிய பழுப்பு, கரும்பழுப்பு, சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுகின்றன. உம். சோளம் துருநோய், நிலக்கடலை துருநோய்
வாடல் (Wilt)
பூசணம் மற்றும் பாக்டீரியாவின் தாக்குதலால் செடிகள் திடீரென்று வாடத்தொடங்கி சில தினங்களில் முழுவதும் காய்ந்து மடிந்து விடும். உ.ம். வாழை பனாமா வாடல் நோய், பருத்தி வாடல் நோய்.
இலைப்புள்ளிகள் மற்றும் இலைக்கருகல் (Leaf spots and Leaf blights)
இலைகள் மற்றும் தண்டுகளில் பூசணம் மற்றும் பாக்டீரியாக்கள் தாக்குவதால் புள்ளிகள் தோன்றுகின்றன. இவை ஒன்று சேர்ந்து இலைகள் கருகிவிடுகின்றன. உ.ம். நெல் இலை கருகல், நிலக்கடலை டிக்கா இலைப்புள்ளி.
சாம்பல் நோய் (Mildew)
இலைகளின் அடி மற்றும் மேல்பரப்பில் வெண்மை அல்லது சாம்பல் நிற பூசண வளர்ச்சி தோன்றி பயிர்களை பாதிக்கின்றன. உ.ம். திராட்சை அடிச்சாம்பல், வெண்டை சாம்பல் நோய்.
இலைச்சுருள் (leaf Roll)
பூசணம், பாக்டீரியா மற்றும் நச்சுயிரிகள் தாக்குவதால் செடியின் இலைகள் மேல் நோக்கி வளைந்து சுருண்டு காணப்படும். உ.ம். புகையிலை இலைச்சுருட்டை, தக்காளி இலைச்சுருள்.
தேமல் (Mosaic)
வைரஸ் தாக்குவதால் பசுமையான இலைப்பரப்பில் ஆங்காங்கே இளம் பச்சை அல்லது வெளிர்பச்சை நிற ஒழுங்கற்ற திட்டுகள் தோன்றுகின்றன. உ.ம். நிலக்கடலை தேமல், அவரை மலட்டுத் தேமல்
சிற்றிலை மற்றும் புல்தண்டு (Little Leaf and Grassy Shoot)
மைகோபிளாஸ்மா நுண்ணுயிரிகள் தாக்குவதால் கணுவிடை தூரம் குறைந்து இலைகள் மற்றும் தண்டுகள் சிறுத்து விடுகின்றன. மேலும் கரும்பு பயிரில் புற்கள் போன்ற வளர்ச்சி தோன்றுகின்றன. உம். கத்தரி சிற்றிலை நோய், கரும்பு புல் தண்டு நோய்.
மனிதன், கால்நடைகள் மற்றும் தாவரங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உபயோகம் தந்து, பயிர்களில் தீங்கு விளைவிக்கும் உயிரிகளை அழிக்க உதவும் உயிரிகளுக்கு நன்மை தரும் நுண்ணுயிர்கள் என்று பெயர். உ.ம். பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஈஸ்ட், வைரஸ், ஆக்டினோமைசீட்ஸ்.
நன்மைகள்
ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை