অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பயறு வகைப் பயிர்களை தாக்கும் பூச்சிகள்

பயறு வகைப் பயிர்களை தாக்கும் பூச்சிகள்

அறிமுகம்

தமிழ்நாட்டில் பயறுவகைப் பயிர்கள் சுமார் 8.84 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு ஆண்டிற்கு சுமார் 7.67 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகின்றது. இது நம்முடைய தேவையைவிட குறைவாகும். இதனால், நாம் இறக்குமதி செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். பயறு வகைப் பயிர்களின் விளைச்சல் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டாலும் பூச்சிகளின் தாக்குதலால் மட்டும் 40-60 சதவிகிதம் இழப்பு ஏற்படுகின்றது. எனவே, விவசாயிகள் இப்பூச்சிகளின் தாக்குதலை அறிந்து அதற்கு தகுந்த கட்டுப்பாட்டு முறைகளை கொண்டு இழப்பை தவிர்த்து உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

பூச்சிகளின் வகைகள்

துவரையில் வெள்ளை ஈ, சாம்பல் கூன் வண்டு, மாவுப்பூச்சி, அசுவினி, தத்துப்பூச்சி, சிலந்தி வளர்ச்சிப் ஈரியோ பைட் போன்றவை பயிர்களின் வளர்ச்சி பருவத்திலும், காய்த் துளைப்பான்கள் போன்றவை பூத்து காய்க்கும் பருவத்திலும் சேதத்தை உருவாக்குகின்றன

உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை, சோயாமொச்சை போன்ற பயிர்களின் வளர்ச்சிப் பருவத்தில் தண்டு ஈ, இலைப்பேன், வெள்ளை ஈ, அசுவினி, பச்சைத் தத்துப்பூச்சிகளும், பூத்து காய்க்கும் தருணத்தில் புள்ளிக்காய்புழு, பச்சைக் காய்ப்புழு, மொச்சைக் காய்ப்புழு மற்றும் நாவாய்ப் பூச்சிகள் பெருமளவில் சேதத்தை உருவாக்குகின்றன.

சாம்பல் கூன் வண்டு

இவை துவரையின் ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் தாக்குகின்றது. கரும் புள்ளிகளுடைய சாம்பல் நிற கூன் வண்டுகள் இலைகளின் ஒரத்தை உண்டிருக்கும். இதனால் இலைகளின் ஒரம் கிழிந்து காணப்படும். மேலும், சாம்பல் கூன் வண்டு புழுக்கள் மண்ணில் வாழ்ந்து கொண்டு வேரை சாப்பிடும். இவற்றை கட்டுப்படுத்த சேதம் அதிகமாக காணப்படும்போது மட்டும் ஏக்கருக்கு 500 மி.லி. மானோகுரோட்டோபாஸ் (36 WSC ) மருந்தை தெளிக்கலாம்.

மாவுப்பூச்சி

இவை மிருதுவான இளஞ்சிவப்பு மஞ்சள் நிற பூச்சிகள். இப்பூச்சிகள் இலை, தண்டு மற்றும் நுனிப்பகுதியில் அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட செடிகளின் வளர்ச்சி பாதிக்கும், மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் கரும்பூசன நோய் காணப்படும்.

காய் துளைப்பான்கள்

இவை துவரை, மொச்சை, கொண்டைக் கடலையை அதிகம் தாக்குகின்றன. புழுக்கள் காய்களைத் துளைத்து (முழுவதுமாய் உட்செல்லாமல் உடலின் பாதி பின் பகுதியை வெளியிலேயே வைத்துக் கொண்டு) உட்பகுதியை குடைந்து தின்று அதிக சேதம் உண்டாக்கும். முட்டைகளை மொட்டுக்களிலோ அல்லது இளம் காய்களிலோ தனித் தனியே இடும்.

அந்திப்பூச்சி

இளம்பழுப்பு நிறத்தில், முன் இறக்கை இரண்டு பகுதியாகவும், பின்னிறக்கை மூன்று பகுதியாகவும் பிளவுபட்டிருக்கும். புழுக்கள், மொக்குகளையும் விதைகளையும் வெளியிலிருந்து கொண்டே சாப்பிட்டு அழிக்கும். தாக்கப்பட்ட மொக்கு மற்றும் காய்களில் சிறிய துவாரம் காணப்படும்.

வெள்ளை ஈ

வெள்ளை ஈக்களின் தாய்ப்பூச்சிகள் மிகவும் சிறியவை. இவைகள் முதிர்ச்சியடையக்கூடிய விதைகளை தாக்குகின்றன. காய்களின் ஓரங்களில் முட்டைகளும், வட்ட வடிவ துளைகளும் காணப்படும்.

தண்டு 'ஈ'

தண்டு ஈ, சாம்பல் கலந்த கருமை நிறமுடையது. பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்தவற்கு கத்தரி, வெண்டை, சோயா மொச்சை போன்ற செடிகளை பயன்படுத்திக் கொள்கின்றன. இப்பூச்சிகள் மஞ்சள் தேமல் வைரஸ் நோயை பரப்புகின்றன.

செடிகளின் ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் வைரஸ் நுண் கிருமிகளை செலுத்திவிடுவதால் நோயின் அறிகுறி வெளிப்படுவதற்கு 15 முதல் 20 நாட்கள் வரை தேவைப்படுகின்றது. இத்தகைய நோய் அறிகுறி வெளிப்பாடு இரகம், மண்ணில் இருக்கும் நுண்ணுட்டச்சத்துகள், அங்ககப் பொருள்கள், சீதோஷ்ண நிலை மற்றும் இவைகளின் கூட்டுச் செயலாக்கத்தை பொருத்து மாறுபடுகின்றது.

இலைப்பேன்

இவை இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இளம் தளிர்கள் மற்றும் இலை மொக்குகளில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி தடைபடுகின்றது. இதனால் விளைச்சல் கணிசமான அளவில் பாதிப்படைகின்றது.

அசுவினி

இவை அனைத்து பயறு வகைப் பயிர்களையும் தாக்குகின்றன. கருமை நிறமுடைய அசுவினிகள் கூட்டமாக அமர்ந்து சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். இலைகளில் கரும்பூசண எறும்புகளின் வளர்ச்சி, தேன் போன்ற திரவம் படிந்திருத்தல் போன்றவை தாக்குதலின் அறிகுறிகளாகும்.

தத்துப்பூச்சி

தத்துப்பூச்சிகள் இலைகளின் அடிப்பகுதியில் அமர்ந்து சாற்றை உறிஞ்சுகின்றன. செடிகள் வளர்ச்சிகுன்றி, சுருங்கி மஞ்சள் நிறமாக மாறும்.

ஈரியேபைட் சிலந்தி

இவ்வகை சிலந்திகள் காற்றின் மூலம் பரவுகின்றது. இவை நேரடியாக உண்டாக்கும் சேதம் குறைவு. ஆனால், மறைமுகமாக மலட்டுத் தன்மையை பரப்பவல்லது.

தேமல்

தேமல் தாக்கிய செடிகள், பூக்கள் பூக்கும் திறனை இழப்பதால் விளைச்சல் பாதிக்கின்றது. இதனை கட்டுப்படுத்த பயிர்களின் ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் நோய் தாக்குதல் தென்பட்டால், பெனசாகுபின் என்ற மருந்தை ஏக்கருக்கு 400 மி.லி. என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate