பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி பராமரிப்பு முறைகள்

பருத்தியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த பூச்சி பராமரிப்பு முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தமிழக வேளாண்மையில் பருத்தி ஒரு மிக முக்கியப் பணப்பயிராகும். இறவை பயிராகவும் மானாவாரிப் பயிராகவும் பயிரிடப்படுகிறது. நம் நாட்டில் வேளாண்மை செய்யப்படுகின்ற மொத்த பரப்பளவில் சுமார் ஐந்து விழுக்காடு பரப்பில் மட்டுமே பருத்தி பயிரிடப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் உபயோகிக்கப்படுகின்ற பூச்சி கொல்லிகளில் சுமார் 55 விழுக்காடு, பருத்தியை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

 • பருத்தியை பல வகையான பூச்சிகள் பயிர் வளர்ச்சியின் பல நிலைகளில் தாக்கி அழிக்கின்றன. அவைகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி பராமரிப்பு முறை பரிந்துரைக்கப்படுகிறது.
 • இயன்ற அளவிற்கு ஒரு கிராமம், வட்டாரத்தில் ஒரே பருத்தி இரகத்தை தேர்ந்தெடுத்து, அனைவரும் குறுகிய கால இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும்.
 • அமிலம் கொண்டு பஞ்சு நீக்கிய பொறுக்கு விதைகளை நடுவது நல்லது.

புதிய விதை நேர்த்தி

சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட விதை நேர்த்தி (அ) புதியதாய் வடிவமைக்கப்பட்ட விதை நேர்த்தி முறையை (பஞ்சு நீக்கப்பட்ட விதை + பாலிகோட் 3 கி /கிலோ + கார்பன்டாசிம் 2 கி / கிலோ + இமிடாகுளோபிரிட் 7 கி / கிலோ + சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 10 கி / கிலோ + அசோபாஸ் 40 கி / கிலோ) கடைபிடித்து விதைக்கவும். இப்புதிய விதை நேர்த்தி முறையைக் கடைபிடித்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் 45 நாட்கள் வரை கட்டுப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், பயிர் ஆரம்ப நிலையிலேயே ஊக்கத்துடன் வளரும்.

களை மேலாண்மை

 • பருத்தி இனத்தைச் சார்ந்த வெண்டை, புளிச்சை போன்ற பயிர்களும், துத்தி, கண்டங்கத்தரி போன்ற களை செடிகளும் பருத்திக்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • பல களை செடிகள் பருத்தியைத் தாக்கும் பூச்சிகளுக்கு மாற்று உணவு செடிகளாக இருப்பதால் காலத்தே களையெடுத்து, பருத்தி தோட்டம் மற்றும் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வதால் பின் விளைவுகளை சுலபமாக சமாளிக்கலாம்.
 • தக்க தருணத்தில் களை எடுத்து செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். இதனால் தண்டுக்கூன் வண்டின் சேதத்தை ஓரளவு தவிர்க்கலாம்.

உரம் மற்றும் நீர் நிர்வாகம்

உரம் மற்றும் நீர் பராமரிப்பு மிகவும் அவசியம் ஆகும். பரிந்துரை செய்யப்படுகின்ற உர அளவிற்கு மேல் உரமிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தேவைக்கேற்ப நீர் பாய்ச்சினால் போதுமானது. இவை இரண்டும் செடிகள் அதிக இலைகளுடன் வளர்ந்து பூச்சி பெருக்கத்தை ஓரளவு தடுக்க ஏதுவாகிறது. தொழு உரம் அதிகமாக உபயோகித்தால் நூற்புழு தாக்குதலைத் தவிர்க்கலாம். அதிக தழைச்சத்து, வெள்ளை ஈ, பச்சைப்புழு ஆகியவற்றின் பெருக்கத்திற்கு உகந்தது.

பூச்சி மேலாண்மை

 • விதை நட்ட 10-20 நாட்களில் விளக்குப்பொறி வைக்கவேண்டும். இது தத்துப்பூச்சி, புரோடீனியா, பச்சைக் காய்ப்புழு, காய்ப்புழுக்களின் அந்துப் பூச்சிகள் ஆகியவற்றின் நடமாட்டம், எண்ணிக்கை, சேதம் ஆகியவற்றைக் கணிக்க உதவுகிறது.
 • பச்சைக் காய்ப்புழு, இளஞ்சிவப்புக் காய்ப்புழு மற்றும் புரோடீனியா புழுக்களின் சேதத்தைத் தவிர்க்க ஒவ்வொரு பூச்சிக்கும் உரிய இனக்கவர்ச்சிப் பொறிகளை ஒரு ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் வைக்க வேண்டும். இதனால் ஆண் பூச்சிகளை வெகுவாகக் குறைக்கமுடியும்.
 • உயிரியல் முறையில் வைரஸ் கிருமிகளைக் கொண்டு புழுக்களை அழிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 300 வைரஸ் தாக்கிய புழுக்கள் வீதம் உபயோகித்து மாலை நேரங்களில் பருத்தி செடிகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 • பூச்சிகளின் முட்டைக்குவியல், சிறிய வளர்ந்த புழுக்கள், உதிர்ந்த சப்பைகள், பூக்கள், காய்கள் மற்றும் இலைகள் ஆகியவற்றை பொறுக்கி அழிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். தண்டுக்கூன் வண்டு மற்றும் வேர்புழு தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழித்து விடவேண்டும்.
 • பூச்சிகளின் எண்ணிக்கை, சேதம், பொருளாதார சேத நிலையை எட்டிவிட்டால் பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துவது தவிர மாற்று வழியில்லை. இந்நிலையில் பரிந்துரை செய்யப்படுகின்ற பூச்சி கொல்லிகளை சரியான அளவில் உபயோகிக்கவேண்டும். பூச்சி கொல்லிகளின் வீரிய சக்தி, நச்சுத்தன்மை ஆகியவற்றை நன்கு அறிந்து தெளிப்பானுக்குத் தக்கவாறு நீரின் அளவை உபயோகித்து, செடியில் நன்கு படியும்படி தெளிக்கவேண்டும்.
 • சில பூச்சிகொல்லிகள், பூச்சிகளின் பெருக்கத்தை ஊக்குவிக்கும் திறன் கொண்டிருப்பதால் அவற்றை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். மாறுபட்ட அமைப்பு கொண்ட பூச்சி கொல்லிகளை ஒவ்வொரு முறையும் தெளிக்க வேண்டும்.
 • பருத்தி அறுவடை முடிந்த பின்பு செடிகளை நிலத்தில் விட்டு வைக்கக்கூடாது. குறிப்பிட்ட வயது முடிந்ததும் எஞ்சியுள்ள காய்களை எல்லாம் பறித்துவிட்டு செடிகளை பிடுங்கிவிட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பொருளாதார சேத நிலையை கடந்து பூச்சிகள் பரவியிருந்தால் கீழ்க்கண்டவாறு பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.

 1. இலைப்பேன் : மீத்தைல் டெமட்டான் 25 இசி 200மில்லி (அ) டைமைத்தோயேட் மற்றும் அசுவிணி 30 இசி 200 மில்லி (அ) பாஸ்போமிடான் (85 டபுள்யூ. எஸ்.சி) (ஏக்கருக்கு). 120 மில்லி பூச்சிகொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
 2. தத்துப்பூச்சி : மோனோகுரோட்டோபாஸ் 400 மில்லி மற்றும் வேப்ப முத்துச்சாறு 5 சதம் ஆகியவற்றைத் தெளிக்கவும்.
 3. அமெரிக்கன் காய்ப்புழு : சப்பைக்கட்டும் பருவத்தில் எண்டோசல்பான் 800 மில்லி (அ) பச்சைக்காய்ப்புழு தெளிக்கவும். காய் பிடிக்கும் மற்றும் முற்றும் பருவங்களில் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். ஜோலான் 35 இசி ஒரு லிட்டர் (அ) கார்பரில் (50 டபுள்யூ.பி) ஒரு கிலோ (அ) பைரோகுளோரோபாஸ் 50 இசி 600 மில்லி.
 4. சிவப்புக்காய்ப்புழு : டிரையோசபாஸ் 0.1 சதம் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி மருந்து) (அ) எண்டோசல்பான் 0.07 சதம் (பத்து லிட்டர் தண்ணீருக்கு ஏழு மில்லி மருந்து)

பருத்தியில் மறுதாம்பு அல்லது கட்டைப்பயிர் விடக்கூடாது. பருத்திக்குப் பின் பருத்தியையே பயிரிடாமல் மாற்றுப் பயிர்களை பயிரிடுதல் வேண்டும். வெள்ளை ஈ நடமாட்டத்தை கணிக்க மஞ்சள் வர்ண பொறிகளை உபயோகிக்கலாம். பருத்தியை சுற்றிலும் கவர்ச்சிப் பயிராக ஆமணக்கு பயிரிடுவதால் புரோடீனியா பூச்சி கவரப்பட்டு, அதில் முட்டையிடுகின்றன. இதனால் இப்பூச்சியின் முட்டைக் குவியல்களை எளிதில் கண்டுபிடித்து அழிக்கலாம். இதைப்போல் வயல் வரப்புகளிலும் தட்டைப்பயறு பயிர் செய்வதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஈர்க்கப்படுகின்றன. இதன் மூலம் சிறிதளவு வருவாயும் அதிகமாகும். சாம்பல் வண்டு தாக்குதலை குறைக்கவும், நூற்புழு பாதிப்பை தவிர்க்கவும் பயிர் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். குறிப்பாக கத்தரி பயிரிடப்பட்ட பின் பருத்தி பயிரிடப்படுவது தவிர்க்கப்பட்டால், வேர்புழு தாக்குதலைக் குறைக்கலாம். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கை நிலத்தில் இடுவதன் மூலம் நூற்புழுக்கள் மற்றும் தண்டு கூன்வண்டு போன்ற மண்ணிலுள்ள மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

ஆதாரம் : வேளாண் பூச்சியியல்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் - 641 003

3.08333333333
Sreerevathi May 15, 2020 11:07 PM

பருத்தி செடியில் அதிகமாக சப்பை கொட்டுவதற்கு என்ன காரணம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top