பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சாகுபடி தொழில்நுட்பங்கள் / ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை / பூச்சிகளால் பரப்பப்படும் பயிர் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பூச்சிகளால் பரப்பப்படும் பயிர் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும்

பூச்சிகளால் பரப்பப்படும் பயிர் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

பூச்சிகள் செடிகளை உண்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சில நச்சுயிரி (வைரஸ்), மைக்கோபிளாஸ்மா போன்ற நோய்கிருமிகளையும் பரப்புகின்றன. நோயுள்ள செடிகளில் நோய்கிருமிகளையும் சேர்த்து உட்கொண்டு பின்னர் நோயற்ற செடிகளில் எச்சிலுடன் கலந்து கிருமிகளைப் பரப்புகிறது. பெரும்பான்மையான நச்சுயிரிகளும் மைக்கோபிளாஸ்மாக்களும் பயிர் நோய்களை பரப்புவதற்கு பூச்சிகளையே சார்ந்துள்ளன.

அசுவிணி, தத்துப்பூச்சிகள், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, வண்டுகள் போன்ற பூச்சிகள் நச்சுயிரி மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற நோய்கிருமிகளை பரப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றில் அசுவிணி மற்றும் தத்துப்பூச்சிகள் நச்சுயிரி நோய்கிருமிகளை பரப்புவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஏறக்குறைய 100 வகையான நச்சுயிரிகளை மைசஸ் பெர்ஸிகே எனும் அசுவிணி பரப்புகிறது. அதனால் பயிரில் தேமல் நோய் ஏற்படுகிறது.

தத்துப்பூச்சிகள், 48 வகையான நச்சுயிரிகள், 31 வகையான மைக்கோ பிளாஸ்மாக்கள் மற்றும் நான்கு வகையான ஸ்பைரோபிளாஸ்மா மற்றும் ரிக்கெட்ஸியா போன்ற நோய்கிருமிகளை பயிர்களில் பரப்பி மஞ்சள் குட்டை மற்றும் துங்ரோ நோய்களை உண்டாக்குகின்றன. பயிர்களில் உள்ள சாற்றை உறிஞ்சுவதற்கு ஏற்றவாறு அவற்றின் வாய் உறிஞ்சுக்குழல் போன்ற அமைப்புடன் உள்ளது. அசுவிணிகள் பயிரில் செல்களுக்கிடையிலும், தத்துப்பூச்சிகள் செல்லுக்குள்ளும் ஊசி போன்ற உறிஞ்சுக் குழலை செலுத்தி சாற்றை உறிஞ்சுகின்றன.

பூச்சிகளால் நச்சுயிரிகள் பயிர்களுக்கு பரவும் விதம்

நச்சுயிரிகள் பூச்சிகள் மூலம் நோயுற்ற பயிரிலிருந்து மற்ற பயிருக்கு மூன்று வழிகளில் பரவுகிறது.

முதல்வகை (உறிஞ்சு குழலில் தங்கும் நச்சுயிரி)

நோயுற்ற செடியிலமர்ந்து பூச்சி சாற்றை உறிஞ்சும் போது நச்சுயிரிகள் உறிஞ்சுக்குழலில் ஒட்டிக்கொள்ளும். பின்பு பூச்சி வேறு செடிக்கு சென்று அமர்ந்து சாற்றை உறிஞ்சும் போது அந்த செடிகளுக்கு நச்சுயிரி பரவும். நோயுற்ற செடியிலிருந்து சாற்றை உறிஞ்சிய குறிப்பிட்ட நேரத்திற்குள் அடுத்த செடிக்கு சென்று சாற்றை உறிஞ்சினால் மட்டுமே நச்சுயிரி பரவும். குறிப்பிட்ட நேரத்தை தாண்டினால் நச்சுயிரியால் வேறு செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது. மேலும் பூச்சி தோலுரித்து விட்டால் நச்சுயிரி பரவுவதற்கு வாய்ப்பே இல்லை.

இரண்டாம் வகை (சுழல் வகை நச்சுயிரி)

பூச்சிகள் சாற்றை உறிஞ்சும் போது வயிற்றுக்குள் செல்லும் நச்சுயிரிகள் இரத்தம் மற்றும் உமிழ்நீர் சுரப்பிகளுக்கு சென்று சிறிது நேரம் அல்லது சில நாட்கள் வரை பூச்சியின் உடம்பிற்குள்ளேயே இருக்கும். நச்சுயிரிகள் பல்கிப் பெருகாது. பின்பு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பூச்சிகள் வேறு செடியினை தாக்கும் போது உறிஞ்சுக் குழல் வழியாக உமிழ் நீருடன் கலந்து செடிகளுக்குப் பரவும். இவ்வகையில் பரவும் நச்சுயிரிகள் சில நாட்கள் வரை மட்டுமே பூச்சிகள் உடலில் இருக்கும். இவ்வகை நச்சுயிரிகள் அசுவிணி மூலம் பாதிப்பை ஏற்படுத்தும்.

முன்றாம் வகை (பல்கிப்பெருகும் நச்சுயிரி)

பூச்சிகளின் வயிற்றுக்குள் செல்லும் நச்சுயிரிகள் குறிப்பிட்ட நாட்களில் பல்கிப் பெருகும். நோயை பரப்பக்கூடிய அளவுக்கு நச்சுயிரிகள் பெருகியவுடன் உமிழ் நீருடன் கலந்து வேறு செடிகளுக்கு பரவி நோயை தோற்றுவிக்கும். இவ்வகை நச்சுயிரிகள் தத்துப்பூச்சிகள் மற்றும் அசுவிணி மூலம் பரவுகிறது.

அறிகுறிகள்

  1. பூச்சிகள் மூலம் நச்சுயிரிகள் பயிர்களில் பரப்பப்பட்டவுடன் அவைகள் இலைகளில் உள்ள பச்சையம் உற்பத்தியை குறைக்கிறது. இதனால் இலைகள் பச்சையம் அற்று வெளுத்துக் காணப்படும்.
  2. மஞ்சள் வண்ணத்திலும், பழுப்பு நிறத்திலும் தேமல் போன்று காணப்படும். சிலசமயம் சிவப்பு நிறமாகவும் இலைகள் மாறிவிடும்.
  3. நரம்புகள் வெளுத்தும், கோடுகள், புள்ளிகளுடனும் காணப்படும். சில இடங்களில் திசுக்கள் இறந்துவிடும். மேலும் இலைகள் சிறுத்தும் உருமாற்றம் பெற்றும் காணப்படும்.
  4. இலைகள் சுருண்டும், குடை போன்று வளைந்தும் காணப்படும். சிலசமயம் பயிரின் வளர்ச்சி பாதித்து குட்டையாகக் காணப்படும். சிலசமயம் மலர்கள் மலட்டுத்தன்மையுள்ள மலர்களாக மாறிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

நெல் : நெல்லில் வரும் துங்ரோ நோயை கட்டுப்படுத்த நடவு செய்த 15 மற்றும் 30வது நாளில் மோனோகுரோட்டோபாஸ் 36 டபுள்யூ.எஸ்.சி (1000 மி.லி. / எக்டர்), அல்லது பாஸ்போமிடான் 85 டபுள்யூ.எஸ்.சி (500 மி.லி. / எக்டர்) அல்லது பென்தியான் 100 இசி (500 மி.லி. / எக்டர்) பூச்சி கொல்லியைத் தெளிக்க வேண்டும். நெல் அறுவடை செய்தபின் எஞ்சிய தாழ்களை உழவு செய்வதன் மூலம் மஞ்சள் குட்டை நோய் காரணிகளை அழித்து அடுத்த பட்டத்திற்குப் பரவாமல் தடுக்கலாம்.

பயறு வகைகள் : நோயுற்ற செடிகளை ஆரம்பகட்டத்திலேயே பிடுங்கி அழிக்க வேண்டும். மோனோகுரோட்டோபாஸ் (500 மி.லி./ எக்டர்) அல்லது மீத்தைல் டெமட்டான் (500 மி.லி./ எக்டர்) பூச்சிகொல்லியை 15 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

எள் : பச்சை சிற்றிலை நோயை கட்டுப்படுத்த எள்ளுடன் துவரை பயிரை 6:1 என்ற விகிதத்தில் பயிரிட்டால் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.

புகையிலை  : புகையிலையில் தோன்றும் நோயை கட்டுப்படுத்த 1 சதவீத காகிதப்பூ இலை சாற்றை மூன்று முறை ஒரு வார இடைவெளியில் தெளிக்கலாம்.

தக்காளி : தக்காளி புள்ளி வாடல் நோயை எண்டோசல்பான் 35 இசி (1.5 மி.லி. / லிட்டர்) பூச்சிகொல்லியை நடவு செய்த 25, 40 மற்றும் 55வது நாட்களில் தெளிக்க வேண்டும்.

கத்தரி : கத்தரி சிற்றிலை நோய்கண்ட செடிகளை ஆரம்பகட்டத்திலேயே பிடுங்கி அழிக்க வேண்டும். மீத்தைல் டெமட்டான் 25 இசி (2 மி.லி. / லிட்டர்) அல்லது டைமெத்தோயேட் 30 இசி (2 மி.லி. / லிட்டர்) பூச்சிகொல்லியைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மிளகாய் : மிளகாயில் ஏற்படும் தேமல் நோயை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஐந்து வரிசைக்கும் இரண்டு வரிசை சோளம் அல்லது மக்காச்சோளப்பயிரை பயிரிட்டு தாக்கத்தைக் குறைக்கலாம். மேலும் மீத்தைல் டெமட்டான் 25 இசி (2 மி.லி./ லிட்டர்) அல்லது பாசலோன் 35 இசி (2 மி.லி. / லிட்டருக்கு) பூச்சிகொல்லியைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

வாழை : முடிக்கொத்து நோய் - பாஸ்போமிடான் (2 மி.லி. / லிட்டர்) அல்லது மீத்தைல் டெமட்டான் (2மி.லி./ லிட்டர்) அல்லது மோனோகுரோடோபாஸ் (1 மி.லி. /லிட்டர்) அல்லது டைமெத்தோயேட் (2 மி.லி. / லிட்டர்) எனும் பூச்சிகொல்லியை வாழை மர தலைப்பகுதி நன்கு நனையும்படியும் தண்டு மற்றும் அடிப்பகுதியிலும் 21 நாட்களுக்கொருமுறை தெளிக்க வேண்டும். (அல்லது) மோனோகுரோட்டோபாஸ் பூச்சிகொல்லியை 1 மி.லி. என்ற அளவில் நான்கு மி.லி. தண்ணீரில் கலந்து 45 நாட்கள் இடைவெளியில் மூன்றாம் மாதத்திலிருந்து பூக்கும் வரை ஊசி மூலம் செலுத்தி கட்டுப்படுத்தலாம்.

ஆதாரம் : வேளாண் பூச்சியியல்துறை வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்- 641 003

2.9756097561
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top