பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மக்காச்சோளப் பயிரை தாக்கும் பூச்சிகள்

மக்காச்சோளப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்

மக்காச்சோளப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கண்டறிந்து, தகுந்த தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம் மகசூல், வருவாய் இழப்பைத் தடுக்க முடியும்.

தமிழகத்தில் பயிரிடப்படும் பயிர்களில் மக்காச்சோளம் முக்கியமானது. இப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு வகை தடுப்பு மருந்துகளையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துகின்றனர். எனினும், பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

குருத்து ஈ

மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகளில் குருத்து ஈ எனப்படும் அதெரிகோனா ஓரியண்டாலிஸ் முக்கியமானது. இது வெள்ளை நிறத்தில் காணப்படும். முட்டையிலிருந்து வெளிவரும் காலற்ற புழுக்கள் இலையுறைக்கும், தண்டுக்கும் இடையே குடைந்து சென்று நடுக்குருத்தைத் தாக்கும். இதனால் நடுக்குருத்து அழுகிவிடும்.

இதைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்தால் விதை முலாம் பூசப்பட்ட விதைகளைப் பயன்படுத்த வேண்டும். அறுவடை செய்த உடனே சோளத் தட்டைகளை அகற்றிய பின்னர் உழுதுவிட வேண்டும். மேலும், தகுந்த தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

தண்டு துளைப்பான்

இதேபோல தண்டு துளைப்பான் எனப்படும் கைலோ பார்டெலஸ் எனப்படும் பூச்சியின் புழுக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப் பூச்சியின் புழு, தண்டைத் துளைத்து உள்ளே சென்று பகுதியைத் தின்று சேதம் விளைவிக்கும். இளம் பயிரில் இப் பூச்சியால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும்.

வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் காணப்படுவது இப் பூச்சி தாக்குதலின் அறிகுறி. இவற்றைக் கட்டுப்படுத்த அவரை அல்லது தட்டைப்பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். விளக்குப்பொறி அமைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்திழுத்து அழிக்கலாம்.

அறுவடை செய்த உடனே மக்காச்சோளத் தட்டைகளையும் சேர்த்து நிலத்தை உழுவதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். மேலும் தகுந்த தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்

இவ்வகை பூச்சிகளில் பெண் அந்துப் பூச்சி இலையின் அடிப் பகுதியில் முட்டையிடும். இதன் புழு சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும், தலை கருமை நிறமாகவும் காணப்படும். இப் பூச்சி தண்டைத் துளைத்து உள்ளே சென்று குருத்தைத் தாக்கும். இதனால் இளம் பயிரில் குருத்து அழுகிவிடும். இவற்றைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளை தெளிப்பது அவசியம்.

கதிர் துளைப்பான்

இவ்வகை பூச்சி "ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா' என அழைக்கப்படுகிறது. புழுப் பருவத்தில் பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். இதன் உடலின் மேற்பரப்பில் பழுப்பு, வெள்ளைக் கோடுகள் காணப்படும். இப் பூச்சியின் புழு, கதிரைத் துளைத்து உள்ளே சென்று சேதம் விளைவிக்கும். சேதக் கழிவுகள், தாக்கப்பட்ட பகுதியில் காணப்படும். விளக்குப்பொறி அமைத்து இப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறி அமைத்து ஆண் அந்துப் பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

கொத்துப்புழு

கிரிப்டோபிளேபஸ் கினிடியெல்லா எனப்படும் கொத்துப் புழுவானது நீளமாகவும், கரும்பழுப்பு நிறத்திலும் காணப்படும். இதன் தாய்ப்பூச்சியின் முன்னிறக்கைகள் கருஞ்சாம்பல் நிறத்திலும் காணப்படும். இதன் புழு, பூக்களின் பச்சையத்தை உண்ணும். பின்னர், கதிர்கள் பால்பிடிக்கும் தருணத்தில் சேதப்படுத்தும். மக்காச்சோளக் கதிர்கள் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

சாம்பல் வண்டு

மிலோசிரஸ் வகை பூச்சியான சாம்பல் வண்டு அதன் பருவத்தில் சாம்பல் நிறத்தில் காணப்படும். இப் பூச்சியின் புழுக்கள் வேர்களின் நுனிகளை உண்ணும். வண்டுகள் இலைகளின் ஓரங்களைக் கடித்து சேதப்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த தகுந்த பூச்சிக்கொல்லி, தடுப்பு மருந்துகளை வேளாண் அலுவலர்களின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்த வேண்டும்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

3.02739726027
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top