பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மலர்பயிர்களில் நூற்புழு நிர்வாகம்

மலர்பயிர்களில் நூற்புழு நிர்வாகம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ரோஜா, மல்லிகை, சம்பங்கி போன்ற மலர்களுக்கு முக்கியமான நகரங்களில் அதிக வரவேற்பு இருக்கிறது. வியாபார ரீதியில், அலங்கார பொருளாக பயன்படுத்தப்படும் மலர்கள் 45 சதம் இடத்தை கொண்டுள்ளது. தற்பொழுது ரோஜா, ஆர்கிட், கிலேடியோலை என்ற மலர்கள் வட ஆசிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன. தற்பொழுது முக்கியமான மலர்பயிர்கள் 10 மாநிலங்களில், 25000 எக்டரில் பயிரிடப்படுகின்றன. கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, ரோஜா, மல்லிகை, கேந்தி போன்றவை மிக அதிக அளவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மஹாராஷ்டிரம், மேற்கு வங்காளம், பீஹார், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகின்றன.

ஒரே பயிரை தொடர்ச்சியாகப் பயிரிடுவதன் மூலம் அதை தாக்கும் நூற்புழுக்கள் அதிக அளவில் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அந்த பயிரே முழுவதுமாக அழிந்துவிட வாய்ப்பு உள்ளது. அது தவிர சம்பங்கி, லில்லி கிழங்குகள் நூற்புழுவின் தாக்குதலினால் விற்பனைக்கு ஏற்றதாக இருப்பதில்லை. தாக்கப்பட்ட செடிப்பகுதிகளின் மூலம் இந்த நூற்புழுக்கள் மற்ற இடங்களுக்கு பரவுவதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் மலர்பயிர்களில் நூற்புழுவின் தாக்குதலினால் ஏற்படும் சேதம் வருடத்திற்கு 50 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக அளவில் மலர்பயிர்களில் நூற்புழுக்களினால் ஏற்படும் சேதம் 11.1 சதம் என தெரியவருகிறது.

கனகாம்பரம்

தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கனகாம்பரம் வியாபாரத்திற்கென்றே அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றது. இந்த பயிரை தாக்கும் நூற்புழுக்களில் முக்கியமானவை வேரழுகல் நூற்புழு, சுருள்வடிவ நூற்புழு, வேர்முடிச்சு நூற்புழு மற்றும் ஊசி நூற்புழு போன்றவைகளாகும்.

வேரழுகல் நூற்புழு

 • தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகவும், இலைகள் இளஞ்சிவப்பிலிருந்து கருஞ்சிவப்பு நிறமாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ மாறி மேல் நோக்கி சுருண்டு காணப்படும். பூக்கள் சிறுத்துக் காணப்படும். வேரின் வளர்ச்சி குன்றியும், கருப்பு நிறமாகி அழுகியும் காணப்படும். மலர்களின் மகசூல் குறைவாகவும், தரமற்றதாகவும் இருக்கும்.
 • இந்த வேரழுகல் நூற்புழு பியூசேரியம் சொலானி எனும் பூசணத்துடன் சேர்ந்து செடியைத் தாக்குவதால் ஏற்படும் விளைவுகளே தமிழ்நாட்டில் கனகாம்பர பயிர் வளர்ச்சி குறைந்து வருவதற்கு காரணம். இதனால் பாதிக்கப்பட்ட வேர்பகுதியில் பியூசேரியம் சொலானி, பியூசேரியம் ஆக்ஸிஸ்போரம் என்னும் பூசணங்களும் காணப்படுகின்றன.
 • தொழு உரத்தை இடுவதாலும், சாமந்தி வகைப் பயிரை ஊடுபயிராக பயிரிடுவதாலும், நூற்புழுவை குறைக்க முடியும். கார்போபியூரான் செடிக்கு ஒரு கிராம் வீதமோ அல்லது நாற்றங்காலில் ஒரு சதுர மீட்டருக்கு 6 கிராம் வீதமோ இடுவதன் மூலம் நூற்புழுவை கட்டுப்படுத்தலாம். பயிர்களில் ஒரு எக்டருக்கு 33 கிலோ என்ற வீதத்தில் இடுவதன் மூலம் நூற்புழுக்களை கட்டுப்படுத்த முடியும்.

வேர் முடிச்சு நூற்புழு

 • இந்த நூற்புழு தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும், கனகாம்பரம் பயிரிடும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.
 • தாக்கப்பட்ட செடிகள் குட்டையாக இருக்கும். கிளை ஓரங்கள் காய்ந்து காணப்படும். வேர் முடிச்சுகள் மலிந்து காணப்படும். மலர்கள் சிறுத்தும் இருக்கும். இந்த நூற்புழுவோடு பியூசேரியம் சொலானி என்னும் வாடல் பூசணமும் சேர்ந்து தாக்கினால் செடிகள் நோய்வாய்ப்பட்டு காய்ந்துவிடும்.
 • கேந்தி அல்லது பங்கோலா புல்லை ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் நூற்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இதில் கேந்திப் பூக்களை விற்பதால் கிடைக்கும் பலன் ஒரு இலாபமாகும். கார்போபியூரான் குருணை மருந்தை எக்டருக்கு 33 கிலோ இடுவதினாலும் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

ஊசி நூற்புழு

 • தாக்கப்பட்ட செடி கட்டை, குட்டையாக இருக்கும். வேர்களின் நுனிகள் வளைந்தும், கருத்தும் காணப்படும்.
 • காலிபிளவர், முட்டைகோசு, முள்ளங்கி போன்றவை இந்த நூற்புழு தாக்காத பயிர்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே இந்தப் பயிர்களில் ஒன்றை ஊடு பயிராகவோ அல்லது பயிர் சுழற்சியின் மூலமாகவோ உபயோகித்து பயன் பெறலாம்.

சாமந்தி

 • சாமந்தி பயிர் வியாபார ரீதியில், அதிக அளவில், தமிழ்நாடு, கர்நாடகம், மத்தியபிரதேசம், பீஹார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம் மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் முதிர்ந்த இலைகளின் திசுவரைகளில் உள்ள இடைவெளி அதிகமிருப்பதால் வேரழுகல் மற்றும் மேற்பகுதியைத் தாக்கும் நூற்புழுக்கள் முதிர்ந்த இலைகளில் தங்கி பல்கிப் பெருகுகின்றன.
 • இந்நூற்புழுக்களால் தாக்கப்பட்ட இலைகளை இலைகளின் நடு நரம்பில் உள்ள முக்கோண வடிவ பழுப்புநிற திட்டுக்கள் மூலம் கண்டறியலாம். இந்நூற்புழுக்களை பியூரடான் 3 ஜி குருணை மருந்தினை எக்டர் ஒன்றுக்கு 16.5 கிலோ வீதம் இட்டு கட்டுப்படுத்தலாம்.

வேரழுகல் நூற்புழு

 • தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் வெளுத்து மஞ்சள் நிறத்துடனும், காய்ந்தும் இருக்கும். பூக்கள் சிறுத்து காணப்படும். இந்த நூற்புழு வேர்களின் ஓரங்களில் இருக்கும் செல்களின் உள்ளேயும், இடையேயும் புகுந்து எல்லாவற்றையும் அழித்துவிடும்.
 • பித்தியம் மற்றும் ரைசோக்டோனியா ஆகிய பூசணங்களில் ஏற்படும் நோய், இந்த நூற்புழுவின் தாக்கத்தால் அதிகமாக்கப்படுகிறது.

ரோஜா

 • ரோஜா மலர்களை அழகுக்காக மட்டுமன்றி, அதிலிருந்து எடுக்கப்படும் வாசனை தைலத்துக்காகவும் பயிரிடுகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலங்களில் இந்த பயிர் அதிகமாக பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் ரோஜா பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
 • முக்கியமாக ரோஜாவை தாக்கும் நூற்புழுக்கள், ஈட்டி நூற்புழு, வாள் நூற்புழு, சுருள்வடிவ நூற்புழு மற்றும் உறை நூற்புழுக்களாகும். இவை ரோஜாசெடியின் வளர்ச்சியைப் பெரிதும் குறைக்கின்றன.
 • இந்த நூற்புழுக்களினால் தாக்கப்பட்ட செடிகள் பலமின்றி, வளர்ச்சி குன்றி இலை வெளுத்துக் காணப்படும். மலர்களின் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும். பக்கவாட்டு வேர்கள் எல்லாம் பட்டுப்போய், பொதுவாகவே வேர்களின் வளர்ச்சி குன்றி அதனால் செடிகளின் வளர்ச்சியும் குறைய ஏதுவாகிறது.

மல்லிகை

மல்லிகை செடி அதன் வாசம் வீசும் மலர்களுக்காக மட்டுமன்றி வாசனைத் தைலம் தயாரிப்பதற்கென்றும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், உத்திரபிரதேசம் முதலிய மாநிலங்கள் அதிக அளவில் இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. மல்லிகையை தாக்கும் நூற்புழுக்களில் வேர் முடிச்சு நூற்புழு, வாள் நூற்புழு மற்றும் சுருள்வடிவ நூற்புழு என்பவை முக்கியமான நூற்புழுக்கள். கார்போபியூரான் அல்லது போரேட் குருணை மருந்தினை செடி ஒன்றுக்கு 2 கிராம் வீதம் ஆண்டிற்கு இருமுறை (ஜனவரி, ஜூன் மாதங்களில்) இட்டு டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்தபின்பு தொழுஉரத்தினை செடி ஒன்றுக்கு 20 கிலோ இடவும்.

சம்பங்கி

வேர்முடிச்சு நூற்புழுக்கள் இந்த பயிரை அதிகமாக தாக்கி மிகுந்த சேதத்தை விளைவிக்கின்றன. வேரில் உள்ள முடிச்சுகள் ஒழுங்கற்றும், வெளிப்படையாகவும் காணப்படும். தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து காணப்படும். சில வேளைகளில் இந்த செடியின் இலைகள் கூட இந்த நூற்புழுக்களினால் பாதிக்கப்பட்டு முடிச்சுகள் காணப்படுகின்றன. கார்போபியூரான் குருணை மருந்தினை செடி ஒன்றுக்கு 2 கிராம் வீதம் இட்டு பயன் பெறலாம்.

போரேட் 10 ஜி. குருணை மருந்தை ஒரு எக்டருக்கு 33 கிலோ என்ற வீதத்தில் இடுவதன் மூலம் இந்நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். பொதுவாக எந்த பயிரையும் பயிர் செய்வதற்கு முன்பு, மண்ணை பரிசோதனை செய்து அந்த வயலில் உள்ள நூற்புழுக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அந்த இடத்தில் நூற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பயிர் நடவு செய்வதைத் தவிர்க்கலாம். குருணை மருந்தினை மண்ணில் இடும்பொழுது, நீர்ப்பாய்ச்சுதல் மிக அவசியம். தொழு உரம் இடுவதால் மண்ணிலுள்ள அங்கக உரப்பொருட்கள் அதிகரிப்பதன் மூலம் பயிர்கள் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்க முடிகிறது. மேலும் நூற்புழுக்களை தாக்கும் ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள் மண்ணில் பெருகி, நூற்புழுக்களை அழிக்க உதவுகிறது. மண்ணை ஆழ உழவு செய்து தரிசாக விடுவதாலும் நூற்புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்

ஆதாரம் : நூற்புழுவியல் துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் - 641 003

3.08333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top