பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சாகுபடி தொழில்நுட்பங்கள் / செங்காந்தள் நவீன சாகுபடடி தொழில்நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

செங்காந்தள் நவீன சாகுபடடி தொழில்நுட்பங்கள்

செங்காந்தள் நவீன சாகுபடடி தொழில்நுட்பங்கள் பற்றிய கட்டுரைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

செங்காந்தள் (குளோரியோசா சுபர்பா) ‘கொல்ச்சிகேசி என்ற குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவப் பயிராகும். இப்பயிரை கண்வலிக்கிழங்கு, கலப்பைக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு எனவும் அழைப்பர்.  இது ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் வெப்ப மண்டலப் பகுதிகளிலிருந்து தோன்றியது.

செங்காந்தள் சாகுபடியில் தமிழ்நாடு, கடந்த 20 ஆண்டுகளாக முன்னிலையில் உள்ளது. 1998-2013 வரையிலான 15 ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து சுமார் 7000 மெட்ரிக் டன் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 1000 கோடி ரூபாயளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.  ஆண்டொன்றிற்கு சராசரியாக 600 முதல் 700 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய செலவானி கிடைத்து வருகிறது. செங்காந்தள் மூன்று பகுதிகளில் வணிகரீதியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முதலாவதாக மூலனூர், மார்க்கம்பட்டி, திண்டுக்கல், தாராபுரம், ஒட்டஞ்சத்திரம் இரண்டாவதாக அரியலூர், ஜெங்ககொண்டும் பகுதிகளிலும், மூன்றாவதாக வேதாரண்ணியம் பகுதிகளிலும் வணிகரீதியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

நமது மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் செங்காந்தள் விதைகளை மருந்துத் தொழிற்சாலை நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன.  இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள், இதன் விதைகளை மருந்துப்பொருட்கள் தயாரிப்பதற்க இறக்குமதி செய்து வருகின்றன.

மருத்துவ குணம் நிறைந்த இதன் விதைகளில் அடங்கியுள்ள அல்கலாய்டுகளாக கோல்ச்சிசின், கோல்சிகோசைடு, தையோ கோல்சிகோசைடு ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.  இதில் கோல்ச்சிசின் மிக முக்கிய மருத்துவ தன்மை கொண்டது. இதை மூட்டுவலி நிவாரணத்திற்காக, அலோபதி மருந்து தயாரிக்க பயன்படுத்துகின்றனர். சமீபகால ஆராய்ச்சிகளின் மூலம், இந்த ஆல்கலாய்டுகள் புற்று நோயினை குணப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கோல்ச்சிசின் ஆல்கலாய்டின் அளவு, கிழங்கை விட (0.15 சதவிகிதம்) விதையில் (0.4 சதவிகிதம்) அதிகமாக காணப்படுவதால், விதைகளுக்கு உலகச் சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது.

சாகுபடிக்கு உகந்த தட்பவெப்பநிலை

செங்காந்தள் மலர் வறட்சியான தட்பவெப்ப நிலையில் வணிகரீதியாக பயிரிடப்படுகிறது. எனினும், அதிக அளவு காய்களின் உற்பத்திக்கு ஓரளவு நீர்பாசன வசதி இருத்தல் அவசியம். காற்றின் குறைந்த ஈரத்தன்மை உடைய, ஆண்டுக்கு சராசரி மழை அளவு 70 செ.மீ. உள்ள இடங்கள் சாகுபடிக்கு ஏதுவானவை.  இப்பயிர் சாகுபடி செய்ய மிதமான தட்பவெப்பமும், ஓரளவு பாசன வசதியும் தேவைப்படுகிறது. வெப்பநிலை அளவு பகலில்  22 முதல் 320 செல்சியஸ் வரையிலும், இரவில் 15 முதல் 200 செல்சியஸ் வரையிலும் உள்ள இடங்கள்  சாகுபடிக்கு ஏற்றவை. காற்றின் ஈரப்பதத்தின் அளவு 70 சதவிகிதம் மேல் இருந்தால், நோய்  தாக்குதலின் அளவு அதிகமாக இருக்கும்.  மேலும் பூக்கள் மற்றும் விதை பிடிக்கும் பருவத்தில் தொடர் மழை இருந்தால் வேர் அழூகல் நோய் மற்றும் கருகல் நோய்கள் அதிகமாக தாக்க வாய்ப்புள்ளது.

மண்வளம்

செம்மண், பொறை மண், மணற்பாங்கான சுண்ணாம்புச் சத்துள்ள மண் வகைகளில் பயிரிட ஏற்றது. மண்ணில் அமிலதன்மை 6 முதல் 7 ஆக இருத்தல் வேண்டும். வடிகால் வசதியுள்ள  இப்பயிர் சாகுபடிக்கு  ஏற்றவை. கடினமான மண் வகைகள் சாகுபடிக்கு உகந்தவை அல்ல.

பயிர்ப் பெருக்க முறை

இந்த மருந்துச் செடியை கிழங்கு மூலம் பயிர்ப் பெருக்கம் செய்ய வேண்டும். விதைக்க பயன்படுத்தப்படும் கிழங்குகள்  ஒவ்வொன்றும் 40 முதல் 60 கிராம் அளவில் இருக்க வேண்டும். சிறிய கிழங்குகள் விதைத்தால் பலவீனமான கொடிகள் உண்டாகி குறைந்த விளைச்சல் மற்றும் காலதாமதம் போன்ற பிரச்சனைகள் நேரும். கிழங்குகள் மழைக் காலங்கள் தவிர மற்ற மாதங்களில் (ஜனவரி – ஏப்ரல்) முளைக்காது. ஜுலை - செப்டம்பர் மாதத்தில்  கிழங்குகள் முளைக்கும்.

விதைக் கிழங்குகளின் அளவு

ஒரு எக்டரில் விதைக்க அளவு சுமார் 2000 முதல் 2500 கிலோ கிழங்குகள் தேவைப்படும். விதைக் கிழங்குகளை கார்பண்டாசிம் பூஞ்சாண கரைசலில் (1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மருந்து) முப்பது நிமிடம் நனைத்த பிறகு நடவு  செய்யலாம். இதனால், கிழங்கு அழுகல் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். கிழங்குகளை ஒரு முறை நட்டால், நன்றாக பராமரிக்கும் பட்சத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து பயிர் செய்யலாம்.

விதைக்கும் பருவம்

மழைக் காலத்தின் துவக்கத்தில், கிழங்குகளின் ஓய்வு  தன்மை முடிந்தபின் அதாவது ஆனி, ஆவணி மாதங்களில் விதைக் கிழங்குகளை விதைக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல் மற்றும் நடவு முறை

கிழங்குகளை நடவதற்கு ஏற்ற நிலத்தை இரண்டு முறை உழ வேண்டும். வாய்க்கால் முறை பாசனத்தை பின்பற்றும் விவசாயிகள், 6 அடி இடைவேளையில் ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழமுள்ள வாய்க்கால் எக்டருக்கு 25 டன் தொழு உரம் இட்டு நிலத்திலுள்ள மண்ணோடு நன்கு கலக்க வேண்டும். மண் மற்றும் தொழு உரங்களை நன்றாக கலந்து கார்பண்டாசிம் பூஞ்சாண கரைசலில் நனைத்த விதை கிழங்குகளை, ஓய்வுக்காலம் முடிந்த பின் ஓரடி இடைவெளியில் 5 செ.மீ. ஆழத்திற்கு மிகாமல் நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்ப் பாசன முறையில் பயிரிடும் விவசாயிகள், 6 அடி இடைவெளியில் 3 அடி அகல, 1அடி உயரமுள்ள பார்களை டிராக்டர் மூலம் ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலும் வரிசைப் பார்களை கிழக்கு – மேற்கு நோக்கிய திசைகளில் தயார் செய்ய வேண்டும்.

பந்தல் அமைத்தல்

செங்காந்தள் கொடிகளை தாழ்வான பந்தல் அமைத்து அவற்றின் மீது, படர விட வேண்டும். நீண்ட காலம் பராமரிக்க, பார்களின் பக்க வாட்டில் இரண்டடி இடைவெளியில் 15 அடி தூரத்தில் 3 ½ அடி உயரமுள்ள சவுக்கு மரத்துண்டுகளை நடவேண்டும். இதன் மேல் 3 அடி உயரத்தில் நான்கு  வரிசையில் கம்பி வேலியை அமைத்து அதன் மீது கொடிகளை படரவிடலாம்.  நட்ட 8  நாட்களில் கல் தூண்கள் அல்லது மரக்கன்றுகளை ஊன்றி, கம்பி வைத்து பந்தல் அமைத்து, கம்பி மேல் நாணல் தண்டு குச்சிகளை சொறுக வேண்டும். 30 ஆம் நாள் சணல் கயிறை செடியின் நுனியில் கட்டி பந்தலில் ஏத்தி விட வேண்டும்.

நீர்ப்பாசனம்

கிழங்கை விதைத்தவுடனும் பிறகு 3 நாட்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கின்ற சமயத்தில் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் கொடுப்பது அவசியம். காய்கள் முதிர்ச்சி பெறும் தருணத்தில் நீர்ப் பாசனம் அவசியமில்லை. சொட்டு நீர் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சல் பெறலாம். கிழங்குகள் முளைக்கும் தருணத்தில் சரியான இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் அவசியம்.

ஒருங்கிணைந்த உர மேலாண்மை

செங்காந்தள் பயிருக்கு சீரான இடைவெளியில் தேவைப்படும் உரங்களை அளிப்பது அவசியம்.  ஒரு எக்டருக்கு 120 கிலோ தழைச்சது, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து தரவல்ல இராசயன உரங்களை இடவேண்டும். பாதி அளவு தழைச்சத்து, முழூ அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். பாதி அளவு தழைச்சத்து, முழூ அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடியுரமாக இட்டு, மீதி பாதி தழைச்சத்து உரத்தை இரண்டு சமபாகமாக பிரித்து, கிழங்குகளை விதைத்த நாள் முதல் 30 ஆம் நாள் இடைவெளியில் இரண்டு முறை இடவேண்டும். அங்கக வேளாண்மையில்,  தொழூ உரத்தோடு இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம், இரண்டு கிலோ பாஸ்போபாக்டிரியா, மைக்கோரைசா உயிர் உரங்கள் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு சேர்த்து இடலாம்.

சொட்டு நீர்ப்பாசன வசதி இருக்கின்ற விவசாயிகள் கீழ்க்காணும் பரிந்துரையை மேற்கொள்ள வேண்டும். நட்ட 20 ஆம் நாள் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் 19:19 : 19-3 கிலோவை 4 நாளுக்கு ஒரு முறையும், சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீரை 2 நாளைக்கு ஒரு முறையும் கொடுக்க வேண்டும். நட்ட 45 நாள் வரைக்கும் இதே மாதிரி உரங்களையும் கொடுக்க வேண்டும். பெரும்பாலான விவசாயிகள், கிழங்கினை நட்ட 40-50 ஆம் நாள் மற்றும் 60 ஆம் நாளில் கடலை புண்ணாக்கு 100 கிலோவை 1000 லிட்டர் தண்ணீரில் 2 நாள் ஊற வைத்து செடிக்கு ஊற்றும் பழக்கம் உள்ளது. இதனால் இலைகளும், பிஞ்சுகளும் அதிகம் உருவாகும் என்று அனுபவம் மூலமாக கூறுகின்றனர். நட்ட 45 முதல் 90 நாள் வரை 3 கிலோ, 13 : 00 : 45, 4 நாளுக்கு ஒரு முறை உரப்பாசனம் மூலம் கொடுக்க வேண்டும். 90 முதல் 120 நாள் வரை 3 கிலோ 6 : 12 : 36, 4 நாளுக்கு ஒரு முறைகொடுக்க வேண்டும். நட்டது முதல் 100 நாள் வரை 15-30 நாள் இடைவெளியில் எக்டருக்கு 125 கிலோ பாக்டாம்பஸ் அல்லது 250 கிலோ டிஏபி உரங்களை இடவேண்டும்.

போரான், மெக்னீசியம் போன்ற நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய டேங்குக்கு (10 லிட்டருக்கு) 50 கிராம் நுண்ணூட்டக் கலவையை, நட்ட 50, 60, 70, 80, 90 மற்றும் 100 நாட்களில் தெளிக்க வேண்டும்.  45 ஆம் நாள் பூக்க ஆரம்பித்து 100 நாள் வரை பூக்கும். 55 முதல் 100 நாட்களிலிருந்து தொடர்ந்து காய் பிடிக்க ஆரம்பிக்கும். காய்கள் அதிக எடை கிடைக்க 13 : 43 : 13 உரம் டேங்குகள் 70 கிராமும், 6 : 12 : 36 உரம் டேங்குகள் 70 கிராமும் சேர்த்து ஒரு வார இடைவெளியில் நான்கு முறை காய் முதிரும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

பின்செய் நேர்த்தி

முளைத்து வரும் கொடிகளின் நுனிப்பகுதி சேதமடையாத வண்ணம் சாகுபடி முறைகளைக் கையாள வேண்டும். நுனிப்பகுதி தேசம் அடைந்து விட்டால் அந்தப் பருவத்தில்  கொடிகளின் வளர்ச்சி குன்றி, பூக்காமல் காய்ந்துவிடும். ஆண்டுக்கு ஒரு முறை, அதிகமாக வளர்ச்சி அடைந்த கிளுவை வேலியை வெட்டிவிடவேண்டும்.

களை நீக்கம்

முளைத்து வரும் பருவத்திலும், பூக்கள் பூக்கின்ற  பருவத்திலும், சரியான இடைவெளியில் களைகளை நீக்குதல் அவசியம். களைகளை நீக்கும் பொழுது முளைத்து வரும் கொடி மற்றும் கொடியின் நுனிப்பகுதி சேதமடையா வண்ணம், களை நீக்குதலைக் கையாள வேண்டும்.

பூக்களின் தன்மை மற்றும் மகரந்தச் சேர்க்கை

செங்காந்தளில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.  இது மகரந்தச் சேர்ப்பியினைப் பொருத்தும், அது நடைபெறும் நேரத்தைப் பொருத்தும் அமைந்துள்ளது. பூக்களின் மாறுப்பட்ட நிறங்கள் அயல் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்கின்றன. இதன் பூக்களின் மாறுபட்ட நிறங்கள் அயல் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்கின்றன.  இதன் பூக்கள் தனித்தன்மையான வடிவத்தில் அமைந்திருக்கும. பூவின் புறவட்டத்தில் 6 மடல்களும், கீழ்நோக்கி வளைந்தும் 5 கதிர்வீச்சத்தக்க மகரந்தப் பைகளும் காணப்படும். பூவின் புறவட்டத்தில் இதழ்கள் மொட்டு விரியும் தருணத்தில், இளம்பச்சை நிறத்தில் இருக்கும். இவை பச்சையிலிருந்து மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தை அடையும் பொழுது சூல் முடி இயைந்த நிலையை அடைகிறது. மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்பு புறவட்டத்தின் இதழ்கள் முழுவதும் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகின்றன. சூல்த்தண்டு சூல்பையிலிருந்து வளைந்து அகன்று காணப்படும்.

இதன் காரணமாக பூக்கள் வரிசை முறையில் பூக்கும் முறையை வகுத்துக் கொண்டுள்ளது. முதலில் பூத்த பூவிற்கும் அடுத்து பூக்கும் பூவிற்கும் சரியான கால இடைவெளி இருக்கும். கிளையில் கீழ் மட்டத்திலுள்ள பூக்கள் முதலில் பூக்கும், பின்பு அதன் மேல் உள்ள பூக்கள் வரிசையாக பூக்கும். கிளையின் நுனியில் உள்ள பூக்கள் கடைசியில் பூக்கும். முதலில் பூத்த பூக்கள் சூல்முடியின் இயைந்த நிலையை கடந்த பின்பு அடுத்த பூக்கள் மகரந்தச் சேர்க்கை நடைபெற்றால், அதிக அளவில் விதைகள் உருவாகும். மகரந்தச் சேர்ப்பிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சூல்ப்பை இயைந்த நிலையில் மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் போனாலும் விதைகள் உருவாகும் வீதம் குறையும். பொதுவாக, அதிக விளைச்சலைப் பெற விவசாயிகள் கை வழி அயல் மகரந்தச் சேர்க்கையை செய்கின்றனர். இம்முறையில் காலை நேரத்தில் (7 மணி முதல் 11 மணி வரை) முழுவதும் விரிந்த பூக்களிலிருந்து மகரந்த காம்புகளை சேகரிக்கின்றனர். ஒரு மகரந்தக் காம்பினை உபயோகித்து 5 - 6 பூக்களில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்யலாம்.   மகரந்தக் காம்பினை கொடிகளில் உள்ள மற்ற பூக்களின் சூல் பகுதியின் மீது தொட்டு அயல் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தலாம்.  இம்முறையின் முலம் 90 சதவிகிதம் காய்பிடிப்புத் தன்மை கிடைக்கும்.  ஆனால், கைவிழி அயல் மகரந்தச் சேர்க்கை செய்யாத பட்சத்தில் திறந்த வெளி மகரந்தச் சேர்க்கை மூலம் 40 சதவிகிதம் காய்பிடிப்பு மட்டுமே பெற முடியும்.  எனவே,  இந்த கை வழி அயல் மகரந்தச் சேர்க்கை முறை விவசாயிகளுக்கு அதிக விளைச்சலை பெற்றுத் தரும். இதோடு 0.1 மூ போரிக் அமிலம் 0.5 மூ ஜிங்க் சல்பேட் கலவையைத் ஒவ்வொரு வாரமும் தெளிப்பதன் மூலம் மகரந்த வளர்ச்சியை ஊக்குவித்து, விதை உற்பத்தியை அதிகரிக்கலாம்.

அறுவடை மற்றும் விளைச்சல்.

கிழங்குகள் முளைத்து 160 முதல் 180 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். விளைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம்பச்சை அல்லது பழுப்பு நிறமாகமாறி,  காய்களின் தோல் சுருங்கி விடும். இத்தருணத்தில் காய்களைப் பறிக்க வேண்டும். செங்காந்தல் விதை விளைத்தல் செடியின் வயதையும், வீரியத்தையும் பொருத்து அமைந்துள்ளது. ஒரு எக்டரில் 500 முதல் 625 கிலோ ஆறு மாதங்களில் விளைச்சலாக கிடைக்கும்.

காய்களை 7 முதல் 10 நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும்.  ஒவ்வொரு காயிலும் 70 முதல் 100 விதைகள் இருக்கும். காய்கள் மஞ்சள் நிறமாகவும் அவற்றினுள்  விதைகள் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் மாறும் போது தரையில் பரப்பி ஒரு வாரத்துக்கு உலர்த்தி, விற்பனைக்கு அனுப்பலாம். உலர்த்தப்பட்ட விதைகளை மண் மற்றும் கற்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து சாக்குப் பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம். விதைகளில் ஈரத்தன்மை 20 சதவிகித்திலிருந்து 7 சதவிகிதமாக குறையும் வரை உலர்த்த வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நவீன விதை பிரித்தெடுப்பு இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.  இதன் மூலம் குறைந்த செலவில், எளிதில் விதைகளைப் பிரித்தெடுக்கலாம். இது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆதாரம் : வளரும் வேளாண்மை மாத இதழ்

3.14925373134
சபரீஷ் குமார் Oct 31, 2019 02:16 PM

மகரந்தச் சேர்க்கை காலத்தில் செயற்கை முறையில் ஒட்டு வைப்பதன் மூலம் இன்னும் மகசூலை அதிகரிக்கலாம்.

Abinesh Aug 28, 2019 02:06 PM

பயனுள்ள தகவல்.......விதைகள் வாங்குபவர் குறித்து எதாவது தெரியுமா...???

கு.அண்ணாதுரை.குபேரன் நகர்.மொடச்சூர்.கோபி Aug 20, 2019 11:07 AM

செங்காந்தள் பயிர் சாகுபடி குறிப்பு விவசாய பெருமக்களுக்கு பயனுடையதாக இருக்கிறது

ஜட்ஜ்மென்ட் சிவா Apr 16, 2019 05:19 AM

அருமையான அதேவேளையில் முழுமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி....

இராஜேந்திரன்.க Dec 03, 2018 09:59 AM

நன்று

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top