பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சாகுபடி தொழில்நுட்பங்கள் / நெல் தரிசு பயறில் உற்பத்தியை அதிகரிக்கும் நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நெல் தரிசு பயறில் உற்பத்தியை அதிகரிக்கும் நுட்பங்கள்

நெல் தரிசு பயறில் உற்பத்தியை அதிகரிக்கும் நுட்பங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நமது உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் புரதச்சத்து மிகவும் அவசியமானது. இத்தகைய புரதச்சத்து பயறு வகைப் பயிர்களில் தானியப் பயிர்களைக் காட்டிலும் இரண்டு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1350 மில்லியனை எட்டுமென்பதால் ஏறத்தாழ 30.3 மில்லியன் டன் பயறு வகைகள் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியோ கடந்த 40 ஆண்டுகளாக மிகவும் தேங்கிய நிலையிலேயே உள்ளது. எனவே, இத்தகைய சூழ்நிலையில் வாழும் நாம், பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியை விரைவில் இரண்டு மடங்காக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

காவிரி டெல்டா பாசனப் பகுதியில் சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு பின்பு நெல் தரிசு வயல்களில் எஞ்சியுள்ள ஈரம், ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தியும், பின்பு பொழியும் பனி ஈரத்தைக் கொண்டும் உளுந்து, பச்சைப் பயறு, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

தற்போதைய புள்ளிவிவரப்படி காவிரிப் பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் 1.46 லட்சம் எக்டரில் பயறு வகைகள் (உளுந்து, பச்சைப்பயறு) நெல் தரிசில் பயிரிடப்பட்டு 30,000டன் உற்பத்தி செய்யப் படுகின்றது. சராசரி விளைச்சலாக எக்டருக்கு 204 கிலோ மட்டுமே உள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள மொத்த பரப்பளவில் 31 விழுக்காடும், உற்பத்தியில் வெறும் 40.5 விழுக்காடு மட்டுமே.

நெல் தரிசில் குறைந்த விளைச்சலுக்கான காரணங்கள்

பருவம் தவறி விதைத்தல், தரமான விதை பயன்படுத்தாமை, சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க இயலாமை, உயிர் உரங்கள், எதிர் உயிர் பூசணம் அல்லது பாக்டீரியா ஆகியவற்றுடன் விதை நேர்த்தி செய்யாமல் விதைத்தல், சரியான முறையில் இலை வழி உரம் இடாமை, பயிரின் பூக்கும், காய்கள் வளர்ச்சியடையும் தருணங்களில் வறட்சி நிலவுதல், சரியான பயிர்ப் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமை ஆகியவையே குறைந்த விளைச்சலுக்கான காரணங்களாகும்.

உயரிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற நிலம்

களிமண் கலந்த இரு மண்பாடு கொண்ட நிலங்கள் மிகவும் ஏற்றவை. பச்சைப் பயறு களர் உவர் நிலங்களில் நன்கு வளரும். சம்பா, தாளடிப் பருவத்தில் நெல் வயலை நன்கு சமன் செய்வது தரிசுப் பயிர் விதைப்பதற்கு சாதகமாக அமையும்.

ஏற்ற இரகங்கள்

உளுந்தில் ஆடுதுறை 3, ஆடுதுறை 5, பச்சைப் பயறில் ஆடுதுறை 3, கே.எம்-2 போன்ற உயர் விளைச்சல் இரகங்களைத் தேர்வு செய்து விதைக்கவும். நிறம், பருமன் வேறுபாடு இருப்பின் அவற்றை தவிர்த்து தரமான விதைகளைத் தேர்வு செய்யவும்.

விதைப்புப்பருவம்

உயர் விளைச்சலுக்கு தைப்பட்டம் மிகவும் சிறந்தது. ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15க்குள் விதைக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் முன் பட்டத்திலேயே விதைத்தல் நல்லது. விதைப்பு தள்ளிப்போகும்போது மண்ணின் ஈரப்பதம் குறைவதுடன் பனி ஈரமும் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் பயிர்கள் பின் பருவத்தில் வறட்சிக்கு உள்ளாகி விளைச்சல் மிகவும் பாதிக்கப்படுகின்றது.

விதையளவு

ஏக்கருக்கு 10 கிலோ தரமான பூச்சி, பூஞ்சானம் தாக்காத விதைகள், களிமண் கலந்த நெல். தரிசில் செயின் டைப் அறுவடை இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அறுவடை இயந்திரம் பயன் படுத்தினால், விதையளவு ஏக்கருக்கு 12 கிலோ போதுமானது.

விதைநேர்த்தி

ஒரு ஏக்கருக்கு தேவையான 10 கிலோ விதையுடன் ரைசோபியம் ஒரு பொட்டலம் (200 கிராம்), பாஸ்போபாக்டீரியா ஒரு பொட்டலம் (200 கிராம்), சூடோமோனாஸ் (100 கிராம்) ஆகியவற்றை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் விதைப்பு செய்ய வேண்டும்

விதைப்பு

சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு 7 - 10 நாள்கள் முன்னதாக வயல் மெழுகுப்பதமாக இருக்கும்போது மாலையில் அதிக விசையுடன் விதைக்க வேண்டும். இதனால், விதைத்த விதைகள் மெழுகு பத மண்ணில் பதிந்து நன்கு முளைக்கும். பயிர் எண்ணிக்கைச் சீராக இருக்கும். மெழுகுப்பதம் இல்லையெனில் பாசனம் செய்து மெழுகுப்பதம் வந்த பின் விதைக்கலாம் அல்லது நெல் அறுவடை செய்த பின் மெழுகுப்பதத்தில் நெல் தாள்களுக்கிடையில் வரிசையில் ஊன்றலாம்.

பயிர் எண்ணிக்கை

ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் அல்லது ஒரு சைக்கிள் டயறுக்குள் 11 செடிகள் இருக்க வேண்டும். முளைக்காத இடங்களில் முளைக் கண்ட விதைகளை மீண்டும் தெளித்து சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

இலைவழி ஊட்டம்

நெல் தரிசில் அடியுரம் இடமுடியாத நிலையில் இலை வழி ஊட்டமாக 2 சதம் டி.ஏ.பி. கரைசல், பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயறு ஒன்டர் தெளிப்பது விளைச்சல் அதிகரிப்பதற்கு வழி வகுக்கும். மேலும், பூக்கும் தருணத்தில் ஓரளவு வறட்சியைத் தாங்கி காய்கள் அதிகம் பிடித்து விளைச்சலை 20 - 25 சதம் வரை அதிகரிக்கின்றது.

விதைத்த 25ஆம் நாள் (பூக்கும் தருணம்), 45ஆம் நாள் (காய் பிடிக்கும் தருணம்) 2 சதம் டி.ஏ.பி., 1 சதம் பொட்டாசியம் குளோரைடு, 40 பி.பி.எம் பிளானோபிக்ஸ் கலந்த கரைசலை காலை அல்லது மாலை வேளையில் இலைகள் நன்கு நனையும் படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு தேவையான  கிலோ டி.ஏ.பியை 10 லிட்டர் நீரில் முதல் நாள் இரவு கரைத்து ஊறவைத்து மறுநாள் காலை தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து அதனுடன் 2 கிலோ பொட்டாசியம் குளோரைடு மற்றும் 180 மி.லி. பிளோனோபிக்ஸ் பயிர் வளர்ச்சி ஊக்கியை கலந்து மீண்டும் தேவையான தண்ணீர் சேர்த்து 200 லிட்டர் கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு தேவையான 2.25 கிலோ பயறு ஒன்டரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் பருவத்தில் காலை அல்லது மாலை வேளையில் கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிப்பதால் பூக்கள் உதிர்வது குறைந்து விளைச்சல் 20 சதம் வரை கூடும். மேலும், வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்கும். இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 120. இது கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள பயிர் வினையியல் துறையில் கிடைக்கும்.

நடமாடும் தெளிப்பு நீர்ப்பாசனம்

காய்ப்பிடிக்கும் பருவத்தில் ஏற்படும் வறட்சியிலிருந்து பயிரைக் காப்பாற்ற நடமாடும் தெளிப்பு பாசனம் கொண்டு ஒன்று அல்லது இரண்டு முறை பாசனம் செய்யலாம்.

ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு

பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் வரும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், காய்ப்புழு சேதம் இருந்தால் 3 சதம் வேப்ப எண்ணெய் கரைசல் (அ) 5 சதம் வேப்பம் பருப்புக் கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து புரோடினியா ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். மாலை வேளையில் நீல வண்ண கிழிந்த துணி அல்லது சாக்கை வரப்பு ஓரங்களில், பயிர் இடையில் பரப்பி மறுநாள் காலை அதனடியில் குவிந்துள்ள புரோடீனியா புழுக்களைப் பொறுக்கி அழிக்கலாம். புரோடீனியாவின் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு அதிகமாக இருப்பின் ஒரு ஏக்கருக்கு குளோர்பைரிபாஸ் 20 ஈசி 500 மி.லி. அல்லது டைகுளோர்வாஸ் 76 டபுள்யூ.எஸ்.சி. 400 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

மஞ்சள் தேமல் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த நோய் கண்ட செடியினை ஆரம்பத்திலேயே பிடுங்கி அழித்து விட வேண்டும். நோய் பரப்பும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மோனோ குரோட்டோபாஸ் 200 மி.லி. அல்லது டைமெத்தோயேட் 200 மி.லி. மருந்தினை விதைத்த 45 நாள்களுக்குள் தெளிக்க வேண்டும்.

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பங்கு

மேற்கூறிய உயரிய தொழில் நுட்பங்களைப் பரவலாக்கம் செய்யும் நோக்கோடு கடந்த வருடம் பயறுவகைப் பயிர்களுக்கான சிறப்புத் திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 27 ஏக்கரில் (உளுந்து -15, பச்சைப்பயறு - 12) ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் முதல் நிலை செயல்விளக்கத் திடல்கள் விவசாயிகளின் வயல்களில் நடத்தப்பட்டன. இந்தத் திட்டத்தில் களப் பயிற்சிகள், செயல்முறை விளக்கங்களோடு வயல் தின விழாவும் கொண்டாடப்பட்டது.

இதில் அனைத்து உயரிய தொழில் நுட்பங்களையும் கடைப்பிடித்ததில் நெல் தரிசு உளுந்தில் 43.2 சதவிகிதமும், பச்சைப்பயறில் 43.2 சதவிகிதமும் கூடுதல் விளைச்சல் பெறப்பட்டது. நிகர வருமானமாக உளுந்தில் 3 மடங்கும் ( ரூ. 9550 எக்டர்), பச்சைப்பயறில் 3.5 மடங்கும் (ரூ. 8750 எக்டர்) அதிகமாக பெறப்பட்டது.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை.

3.09677419355
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top