பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெருமரம் சாகுபடியும் தொழில் நுட்பமும்

பெருமரம் சாகுபடியும் தொழில் நுட்பமும் பற்றிய குறிப்புகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

பெருமரம்

குச்சி மரம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அளிணிலாந்தஸ் எக்செல்சா (Ailanthus Excelsa) அதாவது தமிழில் பெருமரம் அல்லது பீநாரி என்றழைப்பார்கள். இவை சைமரூபியேஸி என்ற தாவர இன குடும்பத்தைச் சார்ந்தது. இந்த மரமானது அதிக வெப்பநிலையிலும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மையை பெற்றுள்ளது. மேலும், இவை வேகமாக வளரக்கூடிய இலையுதிர் மரமாகும். முக்கியமாக, இந்த மரத்திலிருந்து தீக்குச்சி தயாரிப்பதற்கு காரணம் இவற்றின் நிறம், மரத்தன்மை மற்றும் வேகமாக வளரக்கூடிய தன்மை மற்றும் இலைபோல் எளிதில் உரியும் (Peeling) தன்மையை பெற்றுள்ளது. பெருமரத்தை தவிர மற்ற மரங்களான அல்ஸ்டோனியா ஸ்காலரிஸ், அந்தோசெப்பாலஸ் கடம்பா, கைரோகார்ப்பஸ் ஜேக்குனி, மீலியா கம்போசிடா, பாப்புலார் மற்றும் போஸ்வெளியா செர்ரேட்டா போன்ற மரங்களும் தீக்குச்சிக்காக இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

தேவையும், பற்றாக்குறையும்

இந்தியாவில் தீக்குச்சி மர உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடமும் இரண்டாவதாக கேரளா மாநிலமும் உற்பத்தி செய்கிறது. ஆண்டுதோறும் இவற்றின் பற்றாக்குறை அதிகரித்தவண்ணம் உள்ளது. ஏனென்றால் தீக்குச்சி மர உற்பத்தி குறைந்து கொண்டே உள்ளது. அதேசமயம் பிளைவுட் (Plywood)  மற்றும் பிற பயன்பாட்டிற்கும் தீக்குச்சி மரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இவற்றிற்கேற்ப உற்பத்தி முறையை கையாளுவதில்லை. ஒட்டுமொத்த இந்திய நாட்டின் தீக்குச்சி தேவையில் 95 விழுக்காடு மரத்தை மூலமாக கொண்டுள்ளது. மீதமுள்ள 5 விழுக்காடு மெழுகை மூலமாக கொண்டுள்ளன. இந்த 95 விழுக்காடு தீக்குச்சியை உற்பத்தி செய்ய நம் நாட்டில் ஒரு மாதத்திற்கு 2500 டன் தீக்குச்சி தேவைப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சமாக 1000 டன் மரம் (மூலப்பொருளாக) தேவைப்படுகிறது. இதற்கு 6000 ஹெக்டேர் பரப்பளவில் தீக்குச்சி மரத்தினை பயிரிட வேண்டும்.

சிறப்புகள்

  • இலைபோல் எளிதில் உறியும் தன்மை (Pelling).
  • வளர்க்கப்படும்போது அதிகமான பராமரிப்பு தேவையில்லை.
  • இலைகள் கடும் வெப்பத்திலும் பசுமையாக இருக்கும்.
  • பயிர் செய்வதற்கு இயலாத நிலங்களிலும் இவை செழித்து வளரும்.
  • குறைந்த அளவு நீரே போதுமானது.
  • இம்மரம் தூய்மையான வெள்ளை நிறத்தை கொண்டுள்ளது. இதனால் இவை ஏற்றுமதி தரம் வாய்ந்தது.

மரச்சாகுபடி குறிப்புகள் மற்றும் தட்பவெப்பநிலை

இம்மரம் நம் நாட்டில் குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப், ஒரிசா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வறண்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன. தமிழகத்தின் பீதன் மரத்தை மானாவரி விவசாய நிலங்களிலும், வரப்பு ஓரங்களிலும், தோட்டங்களின் வேலி ஓரங்களிலும் இம்மரத்தை வளர்க்கலாம். குறிப்பாக இம்மரம் வறண்ட பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மேலும் இந்த மரமானது பலவகை மண் வகைகளுக்கேற்ற முறையில் வளரும் தன்மையை பெற்றுள்ளது. அதாவது மானாவரிப் பகுதிகள், செம்மண், சரளைப் பகுதிகள், சுண்ணாம்பு நிலங்களிலும் நன்றாக வளரக்கூடியது. அதாவது போதுமான ஈரப்பதம் கொண்டிருந்தால் செழிப்பாக வளரக்கூடியது. ஆனால் கடற்பாங்கான மண்ணிலும் அதிக அளவு களிமண் உள்ள இடத்திலும், அதிக அளவு நீர் தேங்கும் இடத்திலும் வளர இயலாது.

நல்ல ஆழமான வடிகால் வசதியுடன் கூடிய மண்ணில் நன்றாக வளரக்கூடியது. இத்துடன் மழையளவு குறைந்தபட்ச அளவு 500*1900 மி.மீ. அதிகபட்சமாக 2500 மி.மீ. தேவைப்படுகிறது. அடுத்தபடியாக குறைந்தபட்ச வெப்பநிலையாக 0o செல்சியஸிலிருந்து 12.5o செல்சியஸும் அதிகபட்சமாக 45o செல்சியஸிலிருந்து 47.5o செல்சியஸும் தாங்கி வளரக்கூடியது. சராசரி வெப்பநிலை 30o செல்சியஸிலிருந்து 42.5o செல்சியஸ் வரை நன்றாக வளரக்கூடிய இயல்பை பெற்றுள்ளது. சராசரி காற்றின் ஈரப்பதம் 40x80 விழுக்காடு முதல் ஜனவரி மாதத்திலிருந்து 60x90 விழுக்காடு வரை ஜூலை மாதம் வரை நல்ல வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.

தரமான நாற்றுக்களை தயாரித்தல்

இவற்றில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது விதை சேகரிக்கும் மாதம் மற்றும் சேகரிக்கும் முறை. காரணம், இந்த வகை மரத்தின் விதையானது காற்றில் அடித்துச் செல்லக்கூடிய மிகவும் இலேசான விதையாகும். எனவே, முதிர்ந்த விதையை மரத்திலிருந்தே கொத்து கொத்தாக சேகரிக்கப்பட வேண்டும்.

தென்னிந்தியாவில் பிப்ரவரி மாதத்திலிருந்து மார்ச் மாதத்திற்குள் பூ பூக்க ஆரம்பித்துவிடும். அதே நேரத்தில் வட இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பூ பூக்கும். முதிர்ந்த விதைகளை  மே மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்குள் சேகரிக்க வேண்டும். ஒரு கிலோ எடையில் சுமார் 15000 விதைகள் கிடைக்கும். மேலும் விதையின் இறகுகளையும் மேல் தோலையும் நீக்கிய விதையை உடனே விதைக்கும் பொழுது முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும். சேகரித்த ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்குள் தாய் பாத்தியில் விதைத்திட வேண்டும். தாய் பாத்தியானது 10 மீ. நீளமும், 1 மீ. அகலமும் இருக்குமாறு மேட்டுப் பாத்தி அமைத்தல் வேண்டும். மேலும் 15 செ.மீ. ஆழத்திற்கு நன்கு கொத்தி பண்படுத்த வேண்டும். இந்த முறையில் 1:1:1 என்ற விகிதத்தில் மண், மணல் மற்றும் மக்கிய தொழு உரம் ஆகியவற்றை உபயோகித்து, 15 செ.மீ. உயரத்திற்கு மேட்டுத் தாய் பாத்தி அமைத்தல் வேண்டும்.

இம்மரத்தின் விதையின் முளைப்புத் திறனை அதிகரிப்பதற்காக விதைகளை குளிர்ந்த நீரில் ஊறவைத்து, பின்னர் உலர்த்தும் முறையை மூன்று நாள் தொடர்ந்து செய்யும் பொழுது இவற்றில் உள்ள முளைப்புத் திறனை தடுக்கும் வேதிப்பொருட்களை நீக்குகிறது. இதனால் விதையின் முளைப்புத் திறன் 51% அதிகரித்துள்ளது. மேலும், தண்டு மற்றும் வேரின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. 1 சதுர மீட்டர் மேட்டு பாத்தி இடத்தில் 50 கிலோ விதையை விதைப்பதன் மூலம் அதிகமான மற்றும் செழிப்பான நாற்றுகளை பெறமுடியும். அதாவது ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்குள் விதைக்கப்படாவிட்டால் விதை மலட்டு விதையாக மாறிவிடும் (Loss of Viability)  தாய் பாத்தியில் 45 நாட்கள் கழித்து அவற்றை பாலிதீன் பைகளில் நட வேண்டும். பாலிதீன் பையானது 1 : 1 : 1 என்ற விகிதத்தில் மண், மணல் மற்றும் சாண எரு, இவற்றுடன் தரமான நாற்றுக்கள் மற்றும் நாற்றுக்களின் வயதை குறைப்பதற்காக ஒருங்கிணைந்த நுண்ணூட்ட உர மேலாண்மையை கையாள வேண்டும். அதாவது 150 மி.கி. நைட்ரஜன், 250 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் 100 மி.கி. பொட்டாஸ் உரத்துடன் 40 கிராம் மண்புழு உரத்தை பயன்படுத்துவதன் மூலம் செழிப்பான நாற்றுக்களையும், நாற்றுக்களின் வயதையும் கணிசமாக குறைக்கலாம். இவ்வாறு தயாரித்த பைகளில் நாற்றை நடவேண்டும். இத்துடன் ஒவ்வொரு நாளும் நீர் தெளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் களைகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். இந்த காலத்திற்குள் குறைந்தது இரண்டு முறை இடமாற்றம் செய்யவேண்டும்.

அடுத்தபடியாக இந்த நாற்றுகளை தரம் பிரித்தல் வேண்டும். இந்த தரமானது தண்டின் தடிமனைப் பொருத்தது. முதல் தர நாற்றுக்களை மட்டும் நடவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த நாற்றுக்களை பயன்படுத்துவதன் மூலம் சீரான வளர்ச்சியைக் காண முடியும்.

நுண்ணூட்ட உர மேலாண்மையை கையாளுவதன் மூலம் 1000 பெருமர நாற்றுக்களை உற்பத்தி செய்ய ரூ.1634 செலவாகிறது. இந்த முறையின் மூலம் நாற்றுக்களின் வயதை 48 நாள் குறைக்க முடியும். இல்லையென்றால் நல்ல தரமான நாற்றுக்களை உற்பத்தி செய்ய குறைந்தது மூன்று மாத காலம் தேவைப்படுகிறது. மற்றும் இதர செலவான ரூ.304 வரை குறைக்கலாம் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

நடவு முறை

சுமார் மூன்று மாதம் வளர்ந்த பெருமரகன்றுகளை பண்படுத்தப்பட்ட நிலங்களில் நடவுசெய்யலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல விவசாய நிலங்களிலும் வரப்பு ஓரங்களிலும், தேவைப்பட்டால் தனித் தோட்டமாகவும் சாகுபடி செய்யலாம். தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் வருடத்தின் எம்மாதத்திலும் இம்மரக்கன்றுகளை நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவரி நிலங்களில் பருவ மழைக்காலங்களில் ஆரம்பத்தில் நடவு செய்வது நன்று. இந்த மரக்கன்றுகளை தோட்டங்களில் நடும்பொழுது 45 x 45 x 45 செ.மீ. நீளம், அகலம் மற்றும் ஆழம் கொண்ட குழிகளில் மேல் மண்ணுடன் சுமார் 150 மி.கி. நைட்ரஜன், 250 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் 100 மி.கி. பொட்டாஸ் உரத்துடன் 40 கிராம் மண்புழு உரமும் 20 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம் ஆகியவற்றை சரியான விகிதத்தில் நிரப்பப்பட்ட குழிகளில் பாலிதீன் பைகளை கிழித்து அப்புறப்படுத்தியப்பின், அதாவது வடகிழக்கு பருவமழையின் போது தண்ணீர் பாயும் நிலமாக இருந்தால் ஒவ்வொரு செடிக்கும், 3 x 3 மீ. இடைவெளியும் மானாவரிப் பகுதியில் 4 x 4 மீட்டர் இடைவெளியில் மரக்கன்றுகளை நடவு செய்யலாம். நடவு செய்யும் பொழுது மண்ணை உதிராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு செடியைச் சுற்றி நன்கு அழுத்திவிட வேண்டும். நடவு செய்த இரண்டு மாதத்திற்குள் காய்ந்து மடிந்த செடிகளை அகற்றிவிட்டு புதிய நாற்றுக்களை கொண்டு நடவு செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறைகள்

அவ்வப்போது களைகள் அதிகமாக இருக்கும்பொழுது நன்றாக உழுதுவிட வேண்டும். இவற்றைத் தவிர செடியை சுற்றி நன்றாக கொத்தி அதே மண்ணை கொண்டு செடிக்குச் செடி வட்டப்பாத்தி அமைத்தல் வேண்டும். இவை மழை நீரை சேமிக்க உதவுகிறது. இந்த வட்டப்பாத்தி மேடு பள்ளத்திற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.

மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாப்பதற்கும் களையின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கும் தோட்டத்தில் கிடைக்கும் தழை இழைகளை கொண்டு போர்வை இடுதல் வேண்டும். அத்துடன் இவை அதிக அளவில் மண்புழு வளர ஏதுவாக இருக்கும். மேலும் 3 அடி உயரம் வளர்ந்தவுடன் செடியை சுற்றி லேசாக கொத்தி மண் அணைக்க வேண்டும். மழை பெய்யும் காலத்திற்கு முன்னால் டிராக்டர் கொண்டு நன்கு உழுதுவிட்டால் மழை பெய்யும் போது கிடைக்கும் தண்ணீரானது செடி வளர்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். செடியைச் சுற்றி வளர்ந்துள்ள களைகளை மாதத்திற்கு ஒருமுறை கொத்தி எடுத்தால் செடிக்கு ஈரப்பதம் நன்றாக கிடைக்கும்.

நீர்ப்பாசனம், நீர்ப்பாய்ச்சுதல்

தண்ணீர் பாய்ச்சி பயிரிடும் வசதி உள்ள நாற்று நட்ட மூன்று ஆண்டிற்கு கோடை காலங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறையும், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சுதல் அவசியம். சொட்டு நீர்ப்பாசனமும் பயன்படுத்தலாம்.

உரமிடுதல்

நீர்ப்பாசன நிலங்களில் 100 கிராம் டி.ஏ.பி., 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் 5 கிலோ மக்கிய தொழு உரம் என்ற அளவு முறையில் இரண்டாவது ஆண்டில் இருந்து ஒவ்வொரு செடிக்கும் பயன்படுத்த வேண்டும்.

பக்க கிளைகளை அகற்றுதல் (Pruning)

உலர்ந்த மற்றும் நோய் (அ) பூச்சி தாக்கிய கிளைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது நமக்கு நேரான தடிமரத்தினைப் பெறமுடியும். குறைந்தது 10 அடி உயரமாவது தடி மரமாக கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பூச்சி மற்றும் நோய் தடுப்பு முறைகள்

இவற்றில் பூச்சி தாக்குதல் அதிகமாகவே உள்ளது. அதாவது இலைகளை தாக்கக்கூடிய Atteva Fabricilla  மற்றும் Eligma Narcis என்ற பூச்சியும் அதிக அளவில் தாக்குகின்றது. இவற்றை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் வளர்ச்சி குன்றிவிடும். இவை மட்டுமல்லாமல் தடிமரத்தை வண்டுகள் தாக்கும் அபாயம் உள்ளது. நாற்றங்கால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பெவிஸ்டினை 0.1 சதவீதம் என்ற முறையில் பயன்படுத்துதல் வேண்டும். வளர்ந்த தோட்டத்தில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த 2 மில்லி லிட்டர் மோனோகுரோட்டபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தல் வேண்டும். மேலும் என்டோசல்பானை பயன்படுத்தலாம். மேற்கண்ட முறையை பின்பற்றி வளர்க்கும் மரமானது ஆண்டு ஒன்றுக்கு ஒரு மரமானது 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இத்துடன் 8 முதல் 14 செ.மீ. வரை சுற்றளவும் வளரக்கூடியது. மரத்தை வெட்டும் பொழுது பூமியிலிருந்து 15*20 செ.மீ. உயரம் விட்டு வாள் கொண்டு நன்றாக அறுக்க வேண்டும். இப்படி அறுப்பதால் மீண்டும் அதிலிருந்து நன்றாக தளிர வாய்ப்புள்ளது. 2 (அ) 3 மாதம் கழித்து இவற்றில் 1 (அ) 2 தளிர்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை களைத்துவிட வேண்டும். இதன் மூலம் இரண்டிலிருந்து மூன்று முறை அறுவடை செய்யலாம். இதேபோல் அத்தோட்டத்தை 24 வருடம் வரை பயன்படுத்தலாம். மீண்டும் அவற்றை அகற்றிவிட்டு புதியதாக நடவு செய்ய வேண்டும்.

பயன்பாடுகள்

இதிலிருந்து தரமான தீக்குச்சிகளை தயாரிப்பதுடன், இவற்றின் இலையிலிருந்து மண்புழு உரம் தயாரிப்பதற்கும், பென்சில், மீன்பிடிக்க உதவும் மிதவைகளாகவும் பயன்படுகிறது. இவற்றின் இலை கால்நடைகளுக்கு ஏற்ற தீவனமாக உள்ளது. எனவே, நான்காவது வருடத்திலிருந்து இவற்றின் இலையை தீவனத்திற்காக பக்க கிளைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இம்மரமானது வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியது. எனவே, இம்மரத்தை மண்ணரிப்பை தடுப்பதற்கும் சாலை ஓரங்களில் நிழலிற்காகவும் பயன்படுத்தலாம். பெருமரமும் ஊடுபயிரும் இந்த தீக்குச்சி மரத்தை பயிரிட்டால் ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு வருமானத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சற்று கூடுதலாக இடைவெளிவிட்டு நடவு செய்தால் ஊடுபயிறும் செய்ய ஏதுவாக இருக்கும். மானாவாரி இடங்களில் பச்சை பயிறு, சூரியகாந்தி, சோளம், துவரை, அவரை என முதல் ஒரு வருடத்திலும், பின்வரும் காலங்களில் பூசணி, தர்பூசணி மற்றும் மருத்துவ செடிகளையும் பயிரிடலாம். தண்ணீர் வசதி உள்ள இடங்களில் கத்தரி, வெண்டை மற்றும் கீரை வகைகளையும் பயிரிட்டுக் கொள்ளலாம். மேலும் வாழை, சப்போட்டா என பழவகை செடிகளையும் பயிரிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு ஊடுபயிர் செய்வதன் மூலமும் அதிக அளவு இலாபம் ஈட்ட முடியும்.

மகசூல் மற்றும் சந்தை நிலவரம்

பெருமரத்தை மானாவாரி நிலங்களில் 4 x 4 மீட்டர் இடைவெளிவிட்டு நடவு செய்யும் பொழுது ஏக்கருக்கு 250 மரங்களும் இவையே நீர்பாங்கான இடங்களில் 3 x 3 மீட்டர் இடைவெளிவிட்டு நடவு செய்யும் பொழுது ஏக்கருக்கு 444 மரங்களும் கிடைக்கும்.

இவற்றை ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகள் கழித்து வெட்டும் பொழுது ஒவ்வொரு மரமும் மானாவாரி நிலத்தில் 250 முதல் 300 கிலோவும் இவையே நீர்பாங்கான நிலத்தில் 300 முதல் 250 கிலோவும் குறைந்தபட்ச மகசூலாக கிடைக்கும். மேலும், இப்பெருமரத்தை தோட்டத்தை சுற்றி வேலிப் பயிராகவும் வரப்பு ஓரங்களில் பயிரிடும் பொழுது சுமார் 90 மரம் அதாவது 10 அடி இடைவெளிவிட்டு நடவு செய்யலாம். இப்படி செய்யும் பொழுது நல்ல மகசூலையும் பெற முடியும். தோட்டத்தில் நடவு செய்வதை காட்டிலும் வேலிப் பயிராகவோ, வரப்பு ஓரங்களிலோ நடவு செய்து கணிசமான மகசூலையும் பெறலாம் என மர விவசாயிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்போது சந்தை நிலவரம் இம்மரத்திற்கு நல்ல வரவேற்பாகவே உள்ளது. இவை மட்டுமல்லாமல் முதல் மூன்று வருடத்திற்கு ஊடுபயிராக பயிரிட்டும் நல்ல வருமானத்தை பெறமுடியும். பெரு சிறு விவசாயிகள் இந்த வழிமுறைகளை பின்பற்றி இப்பெருமரத்தை மேற்கண்ட இடங்களில் பயிரிட்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆதாரம் : வளரும் வேளாண்மை

3.12307692308
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top