பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உணவு மூங்கில் - ஓர் அறிமுகம்

உணவு மூங்கில் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உலகிலேயே இந்தியா மற்றும் சீனாவில் மட்டும்தான் மூங்கில் வளம் அதிகளவில் (90%) இயற்கையாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 136 வகையான மூங்கில் சிற்றினங்கள் காணப்படுகின்றன. பொதுவாக மூங்கில் ஏழைகளின் நண்பன் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் மூங்கில் குடிசைத் தொழிலுக்கு ஏற்ற ஒரு மரமாகும்.

மூங்கிலிலிருந்து மட்டுமே மிகத்தரமான காகிதம் செய்யப்படுவதால் வணிக ரீதியில் மூங்கிலின் தேவை வெகுவாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத்தவிர, மூங்கில் ஒரு அற்புதமான உணவாகப் பயன்படுகிறது. சிலவகை மூங்கில் குருத்துக்கள் மிகச்சுவை மிக்கதாக இருப்பதால் அவைகள் உணவுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. உலகளவில் இரண்டு மில்லியன் டன் உணவு மூங்கில் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இந்த உணவு மூங்கில் தேவையை நிவர்த்தி செய்ய சீனா 20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உணவு மூங்கில் பொருட்களை ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்கிறது. உணவு மூங்கில் ஏற்றுமதியில் இந்தியா உலகளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது. எனவே, "உணவு மூங்கில்” என்ற புதிய வகையான தேவை உலகளவில் பெருகிக் கொண்டேயிருக்கிறது. இந்தியாவில் உணவு மூங்கில்

நமது நாட்டில், வடகிழக்கு மாநிலங்களில் உணவு மூங்கில்கள் இயற்கையாகவே வளர்கின்றன. இவ்வகையாகப் பெறப்படும் மூங்கில்கள் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களால் அறுவடை செய்யப்பட்டு அவர்களுக்கும் மற்றும் காடு சார்ந்த குறு மற்றும் சிறு நகரங்களில் வாழும் மக்களுக்கும் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக உணவு மூங்கில்கள் அறுவடை செய்யப்பட்டு, உலர்த்தப்பட்டு, சிறு துண்டுகளாக வெட்டி ஊறுகாய் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. இதைத்தவிர, பெரிய நட்சத்திர உணவு விடுதிகளில் சூப்புகளும், ஊறுகாய் வகைகள் செய்யவும் பயன்படுகின்றன.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காடுகளில் வளரும் “பேம்பூஸா பேம்பூஸ்” என்ற மூங்கில் வகையின் இளங்குருத்துக்கள் பழங்குடியினருக்கு முக்கிய உணவுப் பொருளாக அமைந்துள்ளன. பொதுவாக, இந்தியாவில் வியாபார ரீதியில் உணவு மூங்கில் வளர்ப்பதற்கான முயற்சிகள் பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை. நம் நாட்டில் தேசிய மூங்கில் மேம்பாட்டு இயக்கம், உணவு மூங்கில் உற்பத்தியை அதிகரிக்க முனைப்புடன் செயல் பட்டு வருகிறது. உணவு மூங்கில் அறுவடைக்குப்பின் பின்பற்றப்படும் தொழில் நுட்பத்தை இந்த இயக்கம் நிர்ணயம் செய்துள்ளது. நாகாலாந்து, திரிபுரா போன்ற மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால், உணவு மூங்கில் பெருமளவில் வளர்க்கப்படாததால் இத்தொழில் பெருக்கம் இந்தியாவில் இன்னும் வளரும் நிலையிலேயே காணப்படுகிறது. எனவே, விவசாயிகள் உணவு மூங்கில் பயிர் செய்து இலாபம் ஈட்ட அதிகம் வாய்ப்புள்ளது.

உணவுக்கு உகந்த மூங்கில் வகைகள்

மேற் கூறியது போல் இந்தியாவில் 136 வகையான மூங்கில் கள் காணப்பட்டாலும், கீழ்க்காணும் மூங்கில் வகைகள் உணவுக்கு உகந்தவை என ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

  • டென்ரோகலாமஸ் அஸ்பர்
  • டென்ரோகலாமஸ் ஹேமில்டோனி
  • டென்ரோகலாமஸ் ஜைய்ஜான்டியஸ்
  • பேம்பூஸா பேம்பூஸ்
  • பேம்பூஸா பல்குவா
  • பேம்பூஸா பாலிமார்பா

இவ்வகை மூங்கில்கள் அனைத்தும் அதிகமான மழையளவு கொண்ட இடங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டவை. எனினும், "பேம்பூஸா பேம்பூஸ்", "பேம்பூஸா பல்குவா” போன்ற மூங்கில்கள் தமிழ்நாட்டில் நன்கு வளரக் கூடியவை. மற்ற மூங்கில் வகைகளை பசுங்குடில் போன்ற அமைப்பை ஏற்படுத்தி வளர்க்கும் தொழில் நுட்பம் குறித்து வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆய்வு, மேற்கொண்டுள்ளது.

உணவு மூங்கிலில் காணப்படும் சத்துக்கள் உணவு மூங்கிலில் கீழ்க்காணும் சத்துக்கள் அடங்கியுள்ளன என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உணவு மூங்கில் உற்பத்தி

மற்ற மூங்கில் இனங்களைப் போலவே, உணவு மூங்கில்களையும் அவற்றின் வகைகளுக்கேற்ப 5 x 5 மீ அல்லது 6 x 6 மீ என்ற இடைவெளியில் நடவேண்டும். சாதாரண மூங்கில்களுக்கு மேற்கொள்ளப்படும் வளர்ப்பு மேலாண்மை முறைகளே உணவு மூங்கில் வகைகளுக்கும் செய்யப் படுகின்றன. நன்கு வளர்ந்த மூங்கில்களில் 22 முதல் 3 ஆண்டுகள் வளர்ச்சிக்குப் பிறகு உணவு மூங்கில்களில் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. மூங்கில் தூரிலிருந்து புதிதாக முளைக்கும் குருத்துக்கள் 10-15 செ.மீ. உயரம் வந்தவுடன் அறுவடை செய்யப்படுகிறது. இந்தப் பருவத்தில் அறுவடை செய்யப்படும் குருத்துக்களே அதிக சுவை கொண்டவைகளாக உள்ளன என்பது ஆய்வுகளின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட குருத்துக்களில் உள்ள இளம் இலைச் செதில்களும், தோலும் அகற்றப்பட்டு, நடுவிலுள்ள குருத்து பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறாக பிரித்தெடுக்கும் பொழுது, 40% இலைச்செதில்களும், தோல்களும் கழிவுகளாக அகற்றப்பட்டு மீதமுள்ள 60% தண்டுப்பகுதி மட்டும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மூங்கில் குருத்துக்கள் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையில் தூர்ப்பகுதிகளில் உருவாகின்றன. நன்கு தண்ணீர் பாய்ச்சி குறிப்பிட்ட காலவேளையில் உர மேலாண்மை மேற்கொண்டால் அதிகமான குருத்துக்கள் பெறப்படுவது மட்டுமின்றி குருத்துக்கள் உருவாகும் காலங்களும் நீட்டிக்கப்படுகின்றன.

உணவு மூங்கில் என்ற உன்னதமான பயன்பாடு மூங்கிலில் இன்னும் வளரும் நிலையில்தான் உள்ளது. உணவு மூங்கில்கள் மருத்துவ குணம் கொண்டவை என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வணிக ரீதியில் உணவு மூங்கில்கள் வளர்க்கப்பட்டு, அறுவடைக்குப்பின் பதப்படுத்தும் தொழிற்சாலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் வணிகம் மேற்கொள்ளப்பட்டால் உலகளவில் மூங்கில் வணிகத்திற்கு உன்னதமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை


மூங்கில் சாகுபடி

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
2.88
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top