பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மூங்கிலில் இனப்பெருக்கம் மற்றும் மேம்பாடு

மூங்கிலில் இனப்பெருக்கம் மற்றும் மேம்பாடு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மூங்கில் மர வகையானது போயேசியே (Poaceae) குடும்பத்தையும், பேம்பூஸாய் டேயி என்ற துணைக்குடும்பத்தையும் சார்ந்தது. மூங்கில் என்ற பெயர் பொதுவான பெயர். மூங்கில் மரமானது கட்டுமானப் பொருட்களாகவும், வேளாண் கருவிகள் செய்யவும், மீன் பிடிக் கருவிகளின் கைப்பிடி செய்யவும், மேலும் பல இன்றியமையாதப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. மிக முக்கியமாக, காகிதத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. 80களின் இறுதிவரை 62% மூங்கில் உற்பத்தி காகிதக்கூழ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்சமயம், இதன் விகிதம் அதிகரித்துள்ளது. மூங்கில் மரவகையில் உலகம் முழுவதுமாக மொத்தம் 75 பேரினங்களும் மற்றும் 1250 சிற்றினங்களும் பரவியுள்ளன. இதில் இந்தியாவில் 24 பேரினங்களும் 130 சிற்றினங்களும் உள்ளன. சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா மூங்கில் உற்பத்தியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்தக் காடுகளின் பரப்பளவில் மூங்கில் காடுகள் 12.8% ஆகும் (10.03மி.எ.). இந்தியாவில் மூங்கில் மித வெப்பக் காடுகளிலும், பசுமை மாறாக் காடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. மரபியல் மற்றும் உடற்செயலியல் மாற்றம் காரணமாக மூங்கிலின் குரோமோசோம் எண், முளைப்புத்திறன், பூக்களின் செயல் பாடுகள் போன்றவற்றில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. மூங்கிலின் வெளிப்புறத்தோற்றத்திலும் மாற்றம் காணப்படுகிறது. மூங்கிலில் மரப்பெருக்கம்

மூங்கில் வகைகளில் பேம்பூஸா டுல்டா, பேம்பூஸா நியூட்டன்ஸ் மற்றும் பேம்பூஸா பல்குவா ஆகியவை முள்ளில்லா மூங்கில்களாகும். பேம்பூஸா பேம்பூஸ், டென்ரோகலாமஸ் ஸ்டிரிக்டஸ் மற்றும் பேம்பூஸா வல்காரீஸ் ஆகியவற்றில் வனக்கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் மூலம் பேம்பூஸா பேம்பூஸ்-இல் இருந்து 106 வகைகளும் டென்ரோகலாமஸ் ஸ்டிரிக்டஸ்இல் இருந்து 48 வகைகளும் தேர்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய் வுகள் மூலம் நூற்றிற் கும் மேற் பட் ட தரமான மூங்கில் இனங்கள் கண்டறியப்பட்டு மூங்கில் கருவூலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மூங்கில் மரப்பெருக்கத்தின் வழிமுறைகள்

விதையைத் தேர்வு செய்தல்

வேறுபாட்டை அறிதல், தனிமைப்படுத்துதல், ஒன்று சேர்த்தல் போன்ற செயல்பாடுகள் மூங்கில் மர இனப்பெருக்கத்தில் மிக முக்கியமானதாகும். வெளிப்புறத்தோற்றத்தில் முழுமையான நல்ல மரத்தை தேர்வு செய்தலின் மூலம் நாம், மரப்பெருக்கத்தில் 5 முதல் 10% வெற்றியடையலாம். ஆனால், தேர்வு செய்வதற்கு முன்பாக, முதலில் மூங்கில் மர வகையை கண்டறிந்து, பின்பு அதனுடைய பயன்பாட்டைப் பற்றியும், எந்த இடத்தில் மூங்கில் மரத்தைப் பயிர் செய்யலாம் என்பது பற்றியும் முன்பே அறிந்து கொள்ள வேண்டும்.

தேர்வு செய்தலின்போது கடைப்பிடிக்க வேண்டியவை

  1. நேரான, செங்குத்தான, தடிமனான தண்டைத் தேர்வு செய்ய வேண்டும்
  2. உயரமான மற்றும் பெரிய அளவுடைய தண்டைத் தேர்வு செய்தல் வேண்டும்.
  3. கிளைகள் மேற்புறம் உள்ளதாக இருக்க வேண்டும்.
  4. அதிக எண்ணிக்கையில் தண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
  5. அதிக வீரியமுள்ள தண்டாக இருத்தல் வேண்டும்.
  6. தண்டு ஆரோக்கியமுள்ளதாகவும், பூச்சி, நோய்களின் தாக்குதலில் இருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும்.

மூங்கிலில் இருந்து பெறப்படும் காகிதக் கூழ் தரமானதாக இருக்க வேண்டுமெனில், நூலிழையின் நீளம் (fibre length) அதிகமாக இருக்க வேண்டும். கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பதாக இருந்தால் மூங்கிலில் இயந்திர ஆற்றலும், வாழ்நாளும் அதிகமானதாக இருக்க வேண்டும்.

வேறுபட்ட பல்வேறு இடங்களில் ஆராய்ந்த பிறகு தரமான மேம்பட்ட மூங்கில் வகையைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வுசெய்தபின், மரபு வங்கியில் சேமிக்க வேண்டும். பிறகு மரப்பெருக்கத்திற்காகவும், சோதனைக்காகவும் பயன்படுத்த வேண்டும். சிறு செடியாக இருக்கும்போதே தேர்வு செய்ய வேண்டும். சிறு செடியிலேயே நல்ல முளைப்புத்திறன் மற்றும் அதிக வீரியமுள்ளதாகவும் இருக்கும் செடியைத் தேர்வு செய்ய வேண்டும். நேராக வளரும் இயல்புடைய செடி, அதிக முளைப்புத்திறன் கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

இனக்கலப்பு

இயற்கை, செயற்கை இனக்கலப்பு முறையில் நல்ல செயல்பாடுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலமாக, நல்ல மரபியல் மாற்றமும் ஏற்படுகிறது. ஆனால், மூங்கில் வகைகளில் வாழ்நாளில் ஒரேயொரு முறை மட்டுமே பூக்கள் பூப்பதால், இனக்கலப்பு செய்வது மிகக் கடினம். இந்த முறையின் முதல் நோக்கமே, மூங்கிலில் பூக்கள் அடிக்கடி பூக்கச் செய்வதாகும். கதிரியக்கம் அல்லது ஹார்மோன்களின் மூலமாக திசு வளர்ப்பு முறையில் பூக்கள் பூக்க வைப்பது மிக முக்கியமானதாகும். வெற்றிகரமான இனக்கலப்பிற்கு முதலில் நாம் அறிய வேண்டியவை, உடற்செயலியல், பூக்களின் அமைப்பியல், பூக்கள் திறப்பது மற்றும் மூடுவது பற்றியும், மகரந்தம் முளைப்புத்திறன் மற்றும் சூலகத்தைச் சென்றடைவது பற்றியும், மகரந்தக் குழாயின் நீளம் போன்றவைகளாகும். மூங்கிலின் மகரந்தம் முளைப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 10-20 நிமிடங்கள் ஆகும்.

பாலிப்ளாய்டி

பாலிப்ளாய்டியின் மூலமாகவும் மூங்கிலில் மர இனப் பெருக்கத்தை விரிவடையச் செய்யலாம். மூங்கிலின் உடல் குரோமோசோம் எண் 48, 52, 72 மற்றும் 96. இவை முறையே 2x, 6x, 8x மற்றும் 12x ஆகும். இயற்கையாகவே, மூங்கிலில் பாலிப்ளாய்டி முறை காணப்படுகிறது. டிரைப்ளாய்டி மற்றும் டெட்ராபிளாய்டி முறையும் மூங்கிலில் இயற்கையாகவே காணப்படுகிறது. ஹோமோஸைகஸ் ஆண், பெண் தாவர இனப்பெருக்கத்தின் மூலம் நாம் ஹேப்ளாய்டு தாவரங்களை உருவாக்க முடியும்.

கதிரியக்கம்

கதிரியக்க முறையின் மூலமாக, பூக்கள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் போன்றவைகளில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

மூங்கில் மரப்பெருக்கத்தின் வகைகள்

பெரிய அளவில் மரப்பெருக்கம் செய்தல்

இந்த முறையில் மூங்கிலில் கிழங்கு, தண்டு மற்றும் கிளைகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

அடித்தண்டு முறை மூங்கில் மரப்பெருக்கம்

இந்த முறை மிகவும் சிறந்ததாகும். இதற்கு அதிக சுற்றளவுள்ள தண்டு, அதாவது அடிச்சுற்றளவைப்போல் 5 மடங்கு பெரியதாக இருக்கும் தண்டைத் தேர்வு செய்து பெருக்கத்திற்கு உபயோகப்படுத்த வேண்டும்.

தண்டுமுறை

மூங்கிலில் இந்த முறை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு 1-3 இலைக்கணு உள்ள தண்டைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தத் தண்டு ஒரு வருடம் முதிர்ந்த தண்டாக அமைய வேண்டும். இந்த முறையில் தண்டினை சாய்வாக நடவேண்டும்.

கிளைகள் முறை

இந்த முறை, அதிகளவில் உற்பத்தி செய்யும்போது பயன்படுத்தப்படுகிறது. தடிமனான கிளைகள், சிறிய கிளைகளை விட அதிகத் திறனுடையதாக இருக்கும். எனவே, தடிமனான கிளையைத் தேர்வு செய்ய வேண்டும்.

பதியம் போடுதல்

ஒரு வருடம் முதிர்ந்த தண்டு மிக உபயோகமானது. கிளைகளை வெட்டும்போது, துளிர்க்கத் தொடங்கும் கிளைகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் தகுந்த சூழல் இருப்பதால், இந்த மாதங்களில் அதிகம் பதியம் போடப்படுகிறது.

சிறிய அளவில் பெருக்கம் செய்தல்

இந்த முறையின் மூலமாகப் பெறக்கூடிய தாவரங்கள் பெற்றோரைப்போலவே இருக்கும். 10-15 மி.மீ. நீளமுள்ள கிளைகளை, தரமான மரத்திலிருந்து தேர்வு செய்தல் வேண்டும். மெர்குரிக்குளோரைடு கொண்டு முதலில் தூய்மை செய்தபிறகு, ஆளு தளத்துடன் பென்சைல் அமினோ ப்யூரைன் மற்றும் நாப்தலின் அசிட்டிக் அமிலம் போன்றவையும் பயன் படுத்தப்படுகின்றன. மூங்கிலில் தண்டின் முளைப்புத்திறன் நன்கு உள்ளது. ஆனால், வேரின் முளைப்புத்திறன் மிகக் குறைவாக உள்ளது.

தண்டு முளைத்தல்

ஆரம்ப நிலை உயிர்ப் பொருளில் தண்டின் முளைப்புத்திறன் அடங்கியுள்ளது.

விதை வங்கி

முதலில் தேர்வு செய்து பின்பு பாதுகாத்தல் வேண்டும். மூங்கிலின் விதைகளில் முளைப்புத்திறன் மிகக்குறைந்த வாழ்நாளுடையது. பேம்பூஸா டுல்டா 30-35 நாட்களும், கல் மூங்கில் 55 நாட்களும், பேம்பூஸா அருண்டீநேசி 65 நாட்களும் விதை முளைப்புத்திறன் கொண்டவை. ஆனால் சரியான பாதுகாப்பு முறைகளினால் மூங்கிலின் விதையானது 34 மாதம் வரை முளைப்புத்திறனைப் பெற்றிருக்கும்.

குளோன் வங்கி

வேர்த்துண்டுகளும், தண்டுகளும் சேமிக்கப்பயன்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் தாவரங்கள் பொற்றோரைப் போலவே இருக்கும்.

திசு வளர்ப்பு முறை

இந்தமுறை மிகப்புதுமையானதாகும். திசு வளர்ப்பு முறையில் பயன்படுத்தப்படும் தாவரபாகம், அதிக நாட்கள் சேமித்து வைக்கப் பயன்படுகிறது. மிகக்குறைந்த வெப்பநிலையான -190°செ. பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையின் மூலமாக மிகச் சிறிய இடத்தில், அதிக அளவில் தாவரங்களை சேமிக்கலாம். முளைப்புத்திறனும், பெருக்குத் திறனும் அதிகரிக்கும்.

தற்சமயம், மூங்கிலின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. காகிதத் தொழிற்சாலைகள் மற்றும் பல துறைகளில் மூங்கிலின் பயன்பாடு பெருகியுள்ளது. எனவே மூங்கிலின் மர இனப்பெருக்கம் இன்றியமையாததாகும். நல்ல தரமான முறையில் தேர்வு செய்யப்பட்ட தாய் மரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் விதை மற்றும் கிழங்குகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றங்காலை விவசாயிகள் பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
2.93333333333
devaraaaj Jul 16, 2019 02:43 PM

நல்ல கட்டுரை.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top