பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விதை நேர்த்தி மற்றும் சேமிப்பு முறைகள்

மூங்கிலில் விதை இனப்பெருக்க முறையில் விதை நேர்த்தி மற்றும் சேமிப்பு முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மூங்கிலில் விதை இனப்பெருக்க முறையில் நன்கு வீரியமுள்ள முளைப்புத்திறன் கொண்ட விதைகளைப் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இதற்கு மூங்கிலில் காணப் படும் பல் வேறு சிற்றினங்களின் பூக் கும் தன்மையை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் விதையின் முளைப்புத்திறன் அவை பூக்கின்ற தன்மையைப் பொருத்தே மாறுபடுகிறது. பொதுவாக சுமார் 30-35 வருட வயதுடைய மூங்கில்கள் ஒட்டு மொத்தமாக நன்கு பூத்துக் குலுங்கிய பின்பு முழுவதுமாக இறந்துவிடும். மேலும் தேவையான மூங்கில் விதைகள் சரியான நேரத் தில் தேவைக் கு ஏற்ப கிடைக்காததாலும் நாற்றுகளை விதை மூலம் உற்பத்தி செய்வது, பெரும் பாலும் நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.

மூங்கில் விதைகள்

பொதுவாக ஒரு நெற்றில் ஒரு விதைதான் காணப்படும். சாதாரணமாக கதிரின் வெளிப்புறத்தோல் மிகவும் லேசாக விதை உறையுடன் சேர்ந்து ஒட்டிக்காணப்படும். விதையின் நீளம், அகலம் மற்றும் பருமன் அந்தந்த இனத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். மேலும் விதைகள் சிறியதாகவும், கோதுமை நிற வண்ணத்திலும் காணப்படும். ஒரு கிலோவிற்கு சுமார் 13,000 முதல் 15,000 வரை விதைகள் காணப்படும். விதையின் எடையைப் பொருத்து மூங்கில் நாற்றுகளின் முளைப்புத்திறனும், வீரியத்தன்மையும் அமையும். விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தன்மை சுமார் 60-80 சதம் காணப்படும். விதைகளை மேட்டுப்பாத்தியில் விதைக்க வேண்டும். விதைத்த மூன்று நாட்களில் முளைப்பு தோன்றும்.

விதை சேகரித்தல்

விதைகள் நன்கு முதிர்ச்சியடைந்த பின்புதான் அறுவடை செய்ய வேண்டும். சேகரித்த விதைகளின் மேற்புறத் தோல் நன்கு பழுப்பு நிறமாகவும் கடினமாகவும் இருந்தால் அவைகள் விதைகளின் முதிர்ச்சித் தன்மையைக் காட்டுகிறது. நன்கு முற்றிய விதைகளைக் கொண்ட பூங்கொத்தை சாய்த்தோ அல்லது மரத்தை கை மூலம் உலுக்கியோ புதிதாக கீழே விழும் விதைகளை சேகரிக்க வேண்டும். மரத்தில் மீதமுள்ள பிற விதைகளை கைகளில் பிரித்து சேகரிக்க வேண்டும். சரியான முறைப்படி அறுவடை செய்து பூங்கொத்திலிருந்து பிரித்து எடுக்கப்படாத விதைகள் தரமாக இருப்பதில்லை. எனவே, சரியாக முறைப்படுத்தப்பட்ட விதை தொழில்நுட்பங்களை கையாளுவதால் நல்ல தரமான விதைகளைப் பெறலாம்.

விதை சுத்திகரிப்பு

கதிரிலிருந்து விதைமணிகளைப் பிரித்தெடுக்க அவற்றைத் தரையில் அடித்தோ அல்லது கைகளில் தேய்த்தோ பிரித்தெடுக்கலாம். அவ்வாறு சேகரிக்கப்பட்ட விதைகளைத் தூற்றி, தேவையற்ற பொருட்களைத் தவிர்த்து பின்பு சேகரித்த விதைகளை மட்டும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவி பிறகு நன்கு முற்றிய விதைகளையும் பொக்கு விதைகளையும் தனித்தனியே பிரித்து எடுக்க வேண்டும். நன்கு முதிர்ச்சியடையாத தண்ணீரின் மேல் மிதக்கும். விதைகளைப் பெரிய விரிப்பின் மேலோ அல்லது வெள்ளை நிற பாலித்தீன் விரிப்பு மேல் பரப்பி நன்கு சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் காயவைக்க வேண்டும். பின்பு விதையின் ஈரப்பதம் பழைய நிலைக்குத் திரும்பும் வரை அதனுடைய ஈரப்பதத்தைக் குறைத்து சேமிக்க வேண்டும். விதைகளைக் காய வைக்கும்போது 4-5 முறை நன்கு கிளறிவிட வேண்டும். அவ்வாறு செய்வதால் சீரான முறையில் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்காமல் சேகரிக்கலாம்.

விதை நேர்த்தி

மூங்கில் விதைகளை 100 பிபிஎம் ஜிப்ரலிக் அமிலத்தில் சுமார் 24 மணிநேரம் ஊறவைத்து பின்பு நன்கு உலர்த்தி விதைப்பதால் விதையின் வீரியம் மற்றும் முளைப்புத்திறன் சுமார் 30 சதம் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் மூங்கில் விதையுடன் அஸோஸ்பைரில்லம் நுண்ணூட்டக் கலவையை ஒரு கிலோ விதைக்கு 50 கிராம் என்ற அளவில் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு விதை முலாம் பூசும் கலவையைக் கொண்டு விதை முலாம் செய்து அவற்றை சுமார் 16 மணிநேரம் இருட்டறையில் வைத்திருந்து விதைத்தால் விதையின் முளைப்புத்திறன் விதை முலாம் பூசப்படாத விதையைக் காட்டிலும் சுமார் 21 சதம் அதிகரித்துக் காணப்படுவதோடு நாற்றங்காலில் நல்ல வளமான நாற்றுகளைப் பெறலாம்.

விதை சேமிப்பு

மூங்கில் விதைகளை சாதாரண அறை வெப்பநிலையில் கால்சியம் குளோரைடு கரைசலில் சேமித்து வைத்தால் அதனுடைய முளைப்பு மற்றும் வீரியம் பாதுகாக்கப்படும். மேலும் டை-சோடியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் ஊறவைத்து பின்பு உலரவைத்து சேமித்தால் விதையின் வீரியம் மற்றும் முளைப்புத்திறன் அதிகரிக்கப்படும். இது விதையை, சாதாரண தண்ணீரில் ஊறவைத்து உலரவைப்பதைக் காட்டிலும் சிறந்த முறையாகும்.

பொதுவாக விதையின் முளைப்புத்திறன் ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும். எனவே, விதைகளின் முளைப்புத்திறனை 60 நாட்களுக்கு மேல் நீட்டிக்க மணல் நிரப்பப்பட்ட கோணிப்பைகளில் சேமித்து வைக்க வேண்டும்

மூங்கில் விதையை ஆல்டர்னேரியா, ஆஸ்பர் ஜில்லஸ், செர்க்கோஸ் போரா, பெனிசிலியம் மற்றும் போமாப்சிஸ் போன்ற பூசணங்கள் விதையைத் தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே, விதையின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த தற்போது ட்ரைகோடர்மா விரிடி (4 கிராம்/கிலோ) என்ற எதிர் உயிர்பூசணம் மற்றும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (10 கிராம் / கிலோ) என்ற எதிர் உயிர் பாக்டீரியத்தைக் கொண்டு விதைநேர்த்தி செய்வதனால் விதையின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தி நல்ல தரமான நாற்றுகளைப் பெறலாம். பொதுவாக சேகரித்த மரவிதைகளை சில நாட்களுக்குள் பயன்படுத்தாவிட்டால் அவற்றின் முளைப்புத்திறன் வெகுவாகக் குறைந்துவிடும். எனவே, அதிகளவு தரமான மரவிதைகள் கிடைக்க விதைகளை மரத்திலிருந்து குறிப்பிட்ட காலத்தில் சேகரித்துப் பிரித்தெடுத்துச் சுத்தம் செய்து பாதுகாப்பான இடத்தில் தகுந்த முறையில் சேமித்து வைத்தல் மிகவும் அவசியமாகும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.70967741935
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top