பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சாகுபடி தொழில்நுட்பங்கள் / மூங்கில் சாகுபடி / மூங்கிலைத் தாக்கும் நோய்களும் அவற்றின் மேலாண்மை முறைகளும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மூங்கிலைத் தாக்கும் நோய்களும் அவற்றின் மேலாண்மை முறைகளும்

மூங்கிலைத் தாக்கும் நோய்களும் அவற்றின் மேலாண்மை முறைகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மூங்கிலை பல்வேறு நோய்கள் தாக்கி அதன் தரத்தினை பெருமளவு பாதிக்கின்றன. மூங்கிலைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

நோய்கள்

மூங்கில் இலையுறை கருகல் நோய்

இது மூங்கிலைத் தாக்கும் மிக முக்கியமான நோயாகும். இலை உறைகளில் முதலில் பழுப்பு நிற நீர் கோர்த்த புள்ளிகள் தோன்றும். இவை மிக வேகமாக பரவி இலையுறை முழுவதும் காய்ந்து விடும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இலையுறைகளை மரத்திலிருந்து எளிதில் உரித்து விடலாம். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது மூங்கில் கழிகள் குருத்திலிருந்து கீழ்நோக்கி காய்ந்துவிடும். இதனால் தரமான மூங்கில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படுகிறது.

நோய்க்காரணி :  சேரோகிலேடியம் ஒரைசே

கழி அழுகல் நோய்

இந்நோய் இளம் மற்றும் முதிர்ந்த மூங்கில் கழிகளை தாக்குகிறது. பாதிக்கப்பட்ட மூங்கில் கழிகளில், அடிப்பாகத்தில் முதலில் கரும்பழுப்பு மற்றும் கருப்புநிற புள்ளிகள் தோன்றும். பின் வேகமாக பரவி தண்டுப் பகுதி பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட கழிகளில் நீளவாக்கில் பிளவுகள் தோன்றும். சில சமயங்களில் இவை 2 மீட்டர் நீளம் உடையதாக இருக்கும். பாதிக்கப்பட்ட கழிகள் மிக வேகமாக காற்று வீசும்போது முறிந்து விழுந்துவிடும்.

நோய்க்காரணி : ஃப்யூசேரியம் பெல்லிடாரோசியம்

மூங்கில் கிழங்கு அழுகல் நோய்

இந்நோய் இரண்டு வருடத்திற்குட்பட்ட மரங்களை தாக்குகிறது. பழுப்பு நிற நீர் கோர்த்த புள்ளிகள் முதலில் கழிகளின் அடிப்பாகத்தில் தோன்றும். இவை மிக வேகமாக கீழ்நோக்கி பரவி கிழங்கினைத் தாக்கும். இவ்வாறு பாதிக்கப்பட்ட  மரங்களில் வேர்விடுதல் மற்றும் இளம் குருத்து விடுதல் பாதிக்கப்படும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது நீர் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் பாதிக்கப்பட்டு, மொத்தத் துார்களும் காய்ந்து விடும்.

நோய்க்காரணி : பித்தியம் அப்பானிடெர்மேட்டம் மற்றும் ஃப்யூசேரியம் வகை பூசணங்கள்.

வேர் அழுகல் நோய்

நோய்க்காரணி வேர்களைத் தாக்கி, அவற்றில் அழுகல் நோயை ஏற்படுத்தும். இதனால் நீர் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் பாதிக்கப்படுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும். நோய் தாக்கப்பட்ட மரங்கள் மிக விரைவாக காய்ந்துவிடும். காய்ந்த கழிகளின் அடிப்பாகத்தில் காளான்கள் தோன்றும்.

நோய்க்காரணி : கேனோடெர்மா லூசிடம் மற்றும் போரியா ரைசோமார்பா

இலைக்கருகல் நோய்

நோய் தாக்கப்பட்ட இலைகளில் முதலில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். இலை பெரிதாகி இலை முழுவதும் பரவி, இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும்.

நோய்க்காரணி : ஹெல்மின்தாஸ்போரியம்

துருநோய்

நோய் தாக்கப்பட்ட இலைகளில் முதலில் செம்பழுப்பு அல்லது சிவப்பு நிற புள்ளிகள் தோன்றும். இவை இலை முழுவதும் பரவி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும்.

நோய்க்காரணி :டஸ்டருல்லா டிவினா, ட. பேம்பூஸியானா மற்றும் பக்சீனியா சேன்தோஸ்பெர்மா

நச்சுயிரி நோய்

இரண்டு வகையான நச்சுயிரி நோய்கள் மூங்கிலைத் தாக்குகின்றன. முதல் வகையில் வெளிர் பச்சை நிற கோடுகள் இலை நரம்புகளுக்கு இணையாக இலைகளில் தோன்றும். இரண்டாவது வகையில் வெளிர் பச்சை நிற கோடுகள் விட்டுவிட்டு காணப்படும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் உதிர்ந்துவிடும்.

நோய்க்காரணி : நச்சுயிரி

சிற்றிலை நோய்

நோய் தாக்கப்பட்ட மரங்களின் புதிய குருத்துகள் மற்றும் இடைக்கணுக்கள் வளர்ச்சி குறைந்து புதர் போன்று தோன்றும். இலைகள் அகலம் குறைந்து நீளவாக்கில் ஊசி போன்று காணப்படும். மேலும் இலைகள் வெளிர்பச்சை நிறமாகவும் இடைக்கணுப்பகுதி குறைவதால் கொத்து கொத்தாகவும் காணப்படும். நோயுற்ற கழிகள் வளர்ச்சி குறைந்து உள்நோக்கி வளைந்து காணப்படும். இதனால் தரமான கழிகள் உற்பத்தி அதிக அளவில் பாதிக்கப்படும்.

நோய்க்காரணி : மைக்கோபிளாஸ்மா

ஒருங்கிணைந்த நோய்க்கட்டுப்பாட்டு முறைகள்

  • தரமான வேர்க்கிழங்கு அல்லது நாற்றுகளை நடுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
  • நாற்று நட்ட இடங்களில் வடிகால் வசதி நன்கு இருக்கும் படி அமைக்க வேண்டும்.
  • நோயுற்ற இலையுறைகளை அகற்றிவிட வேண்டும்.
  • கிழங்கு அழுகல், வேர் அழுகல் மற்றும் கழி அழுகல் நோய் கண்ட மரத்தினைச் சுற்றிலும் காப்பர் ஆக்சி குளோரைடு 0.25 சதம் அல்லது கார்பென்டாசிம் 0.1 சதம் மருந்தினை வேர்கள் நனையும் படி மண்ணில் ஊற்றவேண்டும்.
  • இலைக்கருகல் நோயுற்ற நாற்றுக்கு மான்கோசெப் 0.25 சதம் மற்றும் துரு நோயுற்ற நாற்றுக்கு நனையும் கந்தகம் 0.2 சதம் மருந்தினையும் தெளிக்க வேண்டும்.
  • நச்சுயிரி நோய் மற்றும் சிற்றிலை நோயுற்ற மரங்களை அகற்றி அழித்து விட வேண்டும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
3.09677419355
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top