பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மூங்கில் சார்ந்த வேளாண் காடுகள்

மூங்கில் சார்ந்த வேளாண் காடுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வளர்ந்து வரும் மூங்கிலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மூங்கில்களை வேளாண் காடுகளில் உணவுப் பயிர்களுடன் சேர்த்துப் பயிரிடுவதே மிகச் சிறந்த வழியாகும். மற்ற மரங்களை விட மூங்கில் மிகவும் விரைவில் வளரக்கூடியது. கட்டுமானப் பொருட்களையும், உணவுப்பொருட்களையும் இடைவெளியின்றி தொடர்ந்து தரக்கூடியது. மூங்கில்கள் தைலமரத்தின் வளர்ச்சியைப் போன்று மூன்று மடங்கு அதிகமானது. மூன்று வருடத்திலேயே முற்றி, அறுவடைக்குத் தயாராகிவிடும். இதனால்தான் மூங்கில்கள் விவசாய நிலங்களில் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன.

மூங்கில்களை வேளாண் காடுகளில் வளர்ப்பதால் ஏற்படும் பயன்கள்

  • விவசாயப் பயிர்களுடன் மூங்கிலை சாகுபடி செய்வதால் உணவு மற்றும் தீவனப் பயிர்களை கால்நடைகளுக்கு அளிப்பதுடன், விறகு, மருத்துவப்பொருள், கட்டிடப் பொருட்களையும் கொடுத்து, நிலத்தின் அழகையும் உற்பத்தித் திறனையும் பாதுகாக்கிறது.
  • நிலையான வருமானம் கிடைக்கிறது.
  • மண் அரிப்பைத் தடுக்கிறது.
  • வளி மண்டல கார்பனை கவர்ந்து தன்னுள் வைத்துக் கொண்டு உலக வெப்பமடைதலைக் குறைக்கிறது.

மூங்கில் சார்ந்த வேளாண் பயிர்கள்

வேளாண் பயிர்களான சோயாபீன்ஸ், கோதுமை, நிழலில் வளரக்கூடிய மஞ்சள், இஞ்சி போன்றவை மூங்கில்களின் இடையில் நன்கு வளரக்கூடியவை.

இந்த முறையில் பலவகையான விவசாயப் பயிர்கள் மூங்கிலுடன் வளர்க்கப்படுவதால் ஆரம்ப காலத்திலேயே நிறைய வருமானம் கிடைக்கும். இவை இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நிதிநிலைமையில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

கல் மூங்கிலுடன் சோயாபீன்ஸை வளர்ப்பதால் அதிக வருமானம் பெறலாம் என்று கண்டறியப் பட்டுள்ளது. மேற்கு இமாலயப் பகுதிகளில், மூங்கில்கள் வீட்டுத் தோட்டங்களின் வரப்புகளிலும், நீர்ப் பாசன வழிகளிலும், காலியிடங்களிலும் வளர்க்கப்படுகின்றன. தமிழ் நாட்டில் மூங்கிலுடன் துவரை, சோயாபீன்ஸ் அதிக மகசூலைக் கொடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மா, முந்திரி, இரப்பரை விட மூங்கில்கள் வேளாண் காடுகளில் நன்கு வளரக்கூடியவை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 23-30 வயதான பேம்பூஸா நியூட்டன்ஸ் என்ற ஒரு வகையான மூங்கில், நிலத்தின் பாஸ்பரஸ் அளவை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் பொதுவாக எல்லா இடங்களிலும் அரிசி, சோயாபீன்ஸ், காய்கறிகள் மூங்கில் காடுகளில் வளர்க்கப்படுகின்றன.

சீனாவில் மூங்கில்கள் அதன் முளைக்குருத்திற்காகவும், தடி மரத்திற்காகவும் வளர்க்கப்படுகின்றன. முதல் இரண்டு, மூன்று வருடங்களுக்கு விவசாயப் பயிர்களான சோயாபீன்ஸ் மூங்கிலுடன் வளர்க்கப்படுகிறது. மேலும் மூங்கில் பண்ணைகளில் கோழிகளையும் சேர்த்து வளர்த்து அதிக இலாபம் பெறுகின்றனர்.

தற்பொழுது மக்கள் மூங்கிலிலிருந்து கிடைக்கும் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். பெருகிவரும் தேவையினை நிறைவு செய்ய கீழ்க்காணும் வெவ்வேறு வகையான மூங்கில் சார்ந்த வேளாண் காடுகளை இந்தியாவில் செயல்முறைப்படுத்தலாம்.

மூங்கிலுடன் விவசாயப் பயிர்களை ஊடு பயிர் செய்தல்

உணவுக்குப் பயன்படுகின்ற மூங்கில்கள் முறையே மெலக்கானா பேசிஃபெரா, கல் மூங்கில், பேம்பூஸா பல்குவா, டென்ரோகலாமஸ் ஆஸ்பர் போன்ற மூங்கில்கள் வெப்ப, மிதவெப்பப் பகுதிகளில் விவசாயப் பயிர்களுடன் நல்ல விளைச்சலைத் தருகின்றன. பொதுவாக, மூங்கில் மரங்களுடன் தட்டைப்பயறு, மல்லி மற்றும் உளுந்து ஆகியவை நன்கு வளர்வது கண்டறியப்பட்டுள்ளது.

மூங்கில் + விவசாயப் பயிர்கள் + மீன் குட்டை

தாழ்வான, நீர் தேங்கும் இடங்களிலுள்ள மீன்குட்டைகளைச் சுற்றி 1-3 வரிசைகளில் 8-9 மீட்டர் இடைவெளிகளில் மூங்கில்களை நடலாம். மூங்கில்களுக்கு இடைப்பட்ட இடங்களில் விவசாயப்பயிர்களான சோயாபீன்ஸ், துவரம்பருப்பு போன்றவற்றைப் பயிர் செய்யலாம்.

மூங்கில் + உண்ணக்கூடிய பூஞ்சை புரதச்சத்து அதிகம் நிறைந்த உண்ணக்கூடிய பூஞ்சை வகைகளை மூங்கில்களின் இடையே வளர்க்கலாம். முக்கியமான உண்ணக்கூடிய பூஞ்சை வகைகளான டிக்டிபோரா, ப்ளுரோட்டஸ் மற்றும் ஆரிகுளேரியா ஆகியவற்றை வளர்க்கலாம்.

மூங்கில் + மருத்துவச் செடிகள்

மூங்கில்களுடன் சோற்றுக் கற்றாழை, புதினா, துளசி போன்ற மருத்துவச் செடிகளையும் ஊடுபயிர்களாக வளர்க்கலாம். குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ள இடங்களுக்கு இந்தமுறை மிகவும் சிறந்ததாகும்.

மூங்கில் + கோழிப்பண்ணை

மூங்கில்களுடன் கோழிகளையும் சேர்த்து வளர்ப்பதால் மூங்கில்களிலிருந்து கிடைக்கும் கட்டுமானப் பொருட்கள், முளைக்குருத்து தவிர கோழிகளிலிருந்தும் அதிக வருமானம் ஈட்டலாம். மேலும் இதன் மூலம் மண் வளம் பெருகும். அதே வேளையில் மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது.

நிலங்களின் வரப்புகளில் மூங்கில் வளர்த்தல்

தமிழ்நாட்டில் காவேரி டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்களின் வரப்புகளில் மூங்கில் வளர்க்கப்படுகிறது. சில இடங்களில் தோப்பாகவும் வளர்க்கப்படுகிறது.

ஆகவே மூங்கில் சார்ந்த வேளாண்காடுகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் பெருகிவரும் மூங்கில் சார்ந்த பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்ய விவசாய நிலங்களில் மூங்கிலை வளர்ப்பது மிக அவசியம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.90625
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top