பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மூங்கில் - வேளாண்காடுகளுக்கேற்ற மரம்

மூங்கில் மரத்தின் சிறப்பியல்புகள் மற்றும் பயன்பாடுகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்தியாவில் காடுகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் அவை தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதோடு முதல் இரண்டாம் மற்றும் கடை நிலை துறைகளிலும் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இந்தியாவின் தனிமனிதனுக்கான வன நிலம் 0.06 எக்டர் மட்டுமே. மக்கள்தொகை மட்டுமின்றி கால்நடை எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், இயற்கைக் காடுகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. இதனைத் தடுக்க செயற்கைக் காடுகள் (Plantation forestry) வளர்ப்பதே சரியான தீர்வாகும்.

செயற்கை காடுகள்

இந்தியாவில் செயற்கை காடுகள் வளர்ப்புத் திட்டத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை, முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (1951 - 1956) ஆரம்பித்து 1978-ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த கால கட்டத்தில் தான் இந்திய வனக்கொள்கையும் (1952) மாற்றி அமைக்கப்பட்டது. இக்காலக் கட்டத்தில் அதன் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருந்தது. இரண்டாம் நிலையில் (1979-1992), சமூகக் காடுகள் திட்டம் மற்றும் தரிசு நிலங்கள் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மரங்கள் அதிக அளவில் நடப்பட்டதால் செயற்கைக் காடுகளின் சதவிகிதம் அதிகரித்தது. காடுகள் மூலம் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறைத்து மதிப்பிடப்படுவதால் நாட்டின் மொத்த ஆக்கம் (GDP) குறைவாகவே உள்ளது. கடந்த கால கட்டங்களில் உள்நாட்டின் மொத்த ஆக்கத்தில் (GDP) வனத்துறையின் பங்கு 1.1 முதல் 2.9 சதவிகிதம் வரை இருந்ததாலும் இயற்கை காடுகளில் மரம் வெட்டுவது தடை செய்யப்பட்டதால் 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்நாட்டின் மொத்த ஆக்கத்தில் (GDP) வனத்துறையின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது.

விவசாய திட்டக் குழுவின் உருவாக்கம் செயற்கை காடுகள் வளர்ச்சிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இந்திய விவசாய திட்டக் குழுவின் (1976) அறிக்கையின் படி இந்தியாவின் தொழிற்சாலை மற்றும் எரிபொருளின் தேவையை பூர்த்தி செய்வதில் செயற்கை காடுகளின் பங்கு அதிகமாக இருப்பினும், அந்த துறையின் முதலீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய வனக்கொள்கையின் (1988) முக்கியக் குறிக்கோள்களாக, இயற்கை காடுகளில் மரம் வெட்டுவதில் தடை மற்றும் காடு வளர்ப்பில் மக்களின் பங்கு சொல்லப்பட்டன. இக் கொள்கை சுற்றுச்சூழல் மற்றும் வனங்களின் பாதுகாப்பை வலியுறுத்தியது.

காடுகளிலிருந்து கிடைக்கும் மரம் மற்றும் இதரப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. காடுகள் மற்றும் காடுகளைச் சார்ந்த உயிரினங்களைக் காப்பதற்காக வனச் சரணாலயங்கள், உயிர் சூழல் காப்பகங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்களை உள்ளடக்கிய 15.6 மில்லியன் எக்டர் பரப்பளவு காடுகள் இக்கொள்கையின் கீழ் நிறுவப்பட்டன.

இந்திய வனக்கொள்கையில் (1988), காடு சார்ந்த தொழிற்சாலைகளில் மூலப்பொருள் தேவைகளை பூர்த்தி செய்வதை விட பழங்குடி மக்கள் மற்றும் கிராம மக்களின் தேவையான விறகு, கால்நடைத் தீவனம், சிறுமரம் மற்றும் மரமில்லாப் பொருட்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வனம் சார்ந்த தொழிற்சாலைகள் தங்களது மூலப்பொருள் தேவைகளை விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பதின் மூலம் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. மரம் சார்ந்த தொழிற்சாலைகளில், காகிதத் தொழிற்சாலை தனது மூலப்பொருளுக்கு செயற்கை காடுகளை அதிகம் நம்பி இருக்கிறது. இந்தியாவில் உள்ள காகிதத் தொழிற் சாலைகளை மூலப் பொருட்கள் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன : மரம் சார்ந்த, விவசாயம் சார்ந்த மற்றும் பழைய காகிதம் சார்ந்த தொழிற்சாலைகள் ஆகும். இத்தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை உருவாக்கும் மரங்கள் தைலம் (Eucalyptus sp.), குமிழ் (Gmelina arborea), கத்திவேல் (Acacia auriculiformis), தீக்குச்சி (Ailanthus excelsa), சவுக்கு (Casuarina equisetifolia), மூங்கில் (Bamboo) மற்றும் பாப்புலர்ஸ் (Poplars) ஆகியன ஆகும். இன்றைய சூழ் நிலையில் தரம் வாய்ந்த காகிதக் கூழ் பற்றாக் குறையினால் அவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

மூங்கிலின் சிறப்பியல்புகள்

இந்தியாவில் காகிதக் கூழ் மற்றும் காகித தயாரிப்பில் மூங்கில் தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிலையத்தின் கண்டுபிடிப்புக்கு (1920) பிறகு மூங்கில் காகிதத் தொழிற்சாலையில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மொத்த வருட மூங்கில் உற்பத்தியில் கணிசமான அளவு காகிதத் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாக சென்றுவிடுகிறது. இயற்கைக்கு உகந்த மூலப்பொருளாக முக்கியத்துவம் பெற்றுள்ள மூங்கில் மக்களின் பல்வேறு தேவைகளை அதிக அளவில் பூர்த்தி செய்வதற்கு உகந்ததாக உலகளவில் ஏற்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு காலத்தில் ஏழைகளின் மரம் என அழைக்கப்பட்ட மூங்கில் இன்று 21ஆம் நூற்றாண்டின் மரம் என்ற நிலையை எட்டியுள்ளது. இந்த மூங்கிலைப் பிரபலப்படுத்துவதற்காக உலகளவிலான மூங்கில் மற்றும் பிரம்பு அமைப்பு (International Bamboo and Rattan Network- INBAR) ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் உறுப்பு நாடாக கையெழுத்திட்டுள்ளது. கீழே கூறப்பட்டுள்ள மூங்கிலின் சிறப்பியல்புகளினால் அவற்றை காகித உற்பத்தியில் பெரும் அளவு பயன்படுத்தலாம்.

 1. மூங்கில் இதர மரங்களைவிட வேகமாக வளரக்கூடியது.
 2. நடவு செய்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளிலேயே பலன் தரக் கூடியது.
 3. மூங்கில் காடுகளை வளர்ப்பதற்குத் தேவையான முதலீடு மிகவும் குறைவானது. விவசாயிகளினால் எளிதாக வளர்க்கக் கூடியது.
 4. இவற்றை ஆண்டுதோறும் அறுவடை செய்யலாம்.
 5. சாதாரண நிலங்களிலும் நன்றாக வளரக்கூடியது. மண் அரிப்பை தடுக்கக் கூடியது.
 6. மூங்கில் வேளாண் காடுகளுக்கு ஏற்ற மரமாகும்.
 7. மூங்கிலின் எல்லா பாகங்களுமே உபயோகப்படக் கூடியது. உதாரணமாக குருத்துக்கள் உணவாகவும், இலைகள் தீவனமாகவும் மற்றும் கிளைகள் விறகு, கை வினைப் பொருட்கள் மற்றும் காகிதக் கூழ் செய்வதற்குப் பயன்படுகிறது.

காகிதக் கூழ் தயாரிப்பில் மூங்கில்

 1. மூங்கிலை காகிதத் தொழிற் சாலைகளில் மூலப் பொருட்களாகப் பயன்படுத்தலாம்.
 2. மற்ற மரங்களைப் போல மரத்துகள்காக எளிதில் மாற்றலாம்.
 3. மூங்கில் துகள்களை மற்ற மரத் துகள்களுடன் கலந்து காகித உற்பத்திக்குப் பயன்படுத்தலாம்.
 4. மூங்கிலை விதையில்லா இனப்பெருக்கத்தின் மூலம் எளிதாக உற்பத்தி செய்யலாம். இதனால் தரம் வாய்ந்த தாய் மரங்களை எளிதாக இனப்பெருக்கம் செய்யலாம்.
 5. மூங்கில் காடுகளை அதிக அளவில் வளர்ப்பதன் மூலம் காகிதத் தொழிற்சாலையின் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்யலாம்.
 6. மூங்கில் கூழ் தரம் வாய்ந்த காகித உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள மூங்கில் வகைகளில் காகித கூழ் உற்பத்திக்கு மிகவும் உகந்தவையாக கருதப்படுவது பேம்பூஸா வல்காரீஸ் (Bambusa vulgaris) மற்றும் மெலக்கானா பேசிஃபெரா (Melocana bacifera). ஆனால் இவை இரண்டும் அதிக அளவில் பயிரிடப்படாததால், அதிகமான இடங்களில் காணப்படும் பேம்பூஸா பேம் பூஸ் (Bambusa bamb00s) மற்றும் டென் ரோகலாமஸ் ஸ் டிரிக் டஸ் (Dendrocalamus strictus) ஆகிய இரண்டு மூங்கிலுமே காகிதத் தொழிற்சாலைகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மூங்கில் கூழ் மற்ற தரம் தாழ்ந்த கூழ்களுடன் கலக்கப்பட்டு தரமான காகிதம் மற்றும் அட்டை செய்யப் பயன்படுகிறது. அதிகத் தரம் வாய்ந்த மூங்கில் கூழ் தனியாகவே புத்தகக் காகிதங்கள் மற்றும் பல்வேறு வகையான உயர்தரம் வாய்ந்த காகிதம் செய்வதற்கும் பயன்படுகிறது. மூங்கில் கூழின் அதிகமான நீள அகலத் தன்மையினால் காகித உற்பத்தியில் மூங்கிலின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

கைவினை மூங்கில் காகிதம்

செல்லுலோஸ் நார்களிலிருந்து காகிதம் செய்யும் திறமையை இந்தியர்கள் மூன்றாம் நூற்றாண்டிலேயே பெற்றிருந்தனர். தற்போது பிரபலமடைந்து வரும் கைவினை காகிதங்கள் மிகவும் அழகாகவும் எழுதுவதற்கு சிறந்ததாகவும் உள்ளது. மேலும் அவை இயற்கைக்கு உகந்த பொருளாக கருதப்படுகிறது. தற்போது நம் நாட்டில் சுமார் 157 கைவினை காகிதக் கூடங்கள் உள்ளன. இதற்கான பொருளாதார உதவியை ஐக்கிய நாடுகளின் முன்னேற்றத் திட்டம் (United Nations Development Programme - UNDP) பல வருடங்களாக வழங்கி வருகிறது. இந்தியாவில் சுமார் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள கைவினைக் காகிதங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கிராமங்களில் சுமார் 10,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டுகிறது. இந்தியாவில் உள்ள கைவினை காகிதத் தொழிற்கூடங்கள் பெருகி வரும் காகிதத் தேவையை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிறைவேற்றக் கூடியவை.

மூங்கில் கைவினை காகிதத்தின் சிறப்பியல்புகள்

 1. காகித உற்பத்திக்கு மற்ற மரங்களை வெட்டுவதைக் குறைப்பதன் மூலம் காடுகளும் சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படுகிறது.
 2. மூங்கில் நடுவதன் மூலம் பல்வேறு தரிசு நிலங்களை புணரமைக்க முடியும்.
 3. கைவினை காகிதம் செய்வதற்கு அதிக ஆட்பலம் தேவை. எனவே கைவினை காகிதத் தொழிற்கூடங்கள் அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்குவதோடு மூங்கில் வளர்ப்போரின் வருமானத்தையும் பெருக்கும்.
 4. இத்தொழிற்கூடங்களுக்குக் குறைந்த அளவு முதலீடு போதுமானது.
 5. கைவினை காகித உற்பத்தியில் பெண்களை அதிக அளவில் அனைத்து நிலைகளிலும் ஈடுபடுத்தி அவர்களின் வருமானத்தைப் பெருக்கலாம்.

மூங்கிலின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஐந்தாவது ஆண்டு முதல் எக்டருக்கு ரூ.20,000/- முதல் ரூ.30,000/- வரை இலாபம் கிடைக்கும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வேகமாக வளரும் மற்றும் அதிக விளைச்சல் கிடைக்கும் மூங்கில் வகைகளைக் கண்டுபிடித்து, அவற்றை காகிதத் தொழிற்சாலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்து விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது. மூங்கில்கள் வேளாண் காடுகளுக்கு உகந்ததாக இருப்பதாலும், அதனை காகிதத் தொழிற்சாலைகள் ஒப்பந்த அடிப்படையில் வளர்ப்பதற்கு உதவி செய்வதாலும் விவசாயிகள் மூங்கிலை வளர்த்துப் பயன்பெறலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் - 641 003

Filed under:
3.05128205128
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top