பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / சாகுபடி தொழில்நுட்பங்கள் / வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள்

வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆமணக்கினை கடந்த 100 ஆண்டுகளாக எண்ணெய் தேவைக்காக நாம் தொடர்ந்து சாகுபடி செய்து வந்தாலும், எகிப்தியர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் வீடுகளில் உள்ள விளக்கிற்கு ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தி வந்தார்கள். ஆமணக்கில் 50 சதத்துக்கும் மேலாக எண்ணெய்ச்சத்து இருப்பதால் மிக முக்கிய எண்ணெய் வித்து பயிராக ஆமணக்கு கருதப்படுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பரவலாக பல்வேறு பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக அதிவேக மகிழுந்து மற்றும் விமான இயந்திரத்தின் உராய்வை தடுக்கவும், சோப்பு, காகிதம், அச்சு மை, வர்ணபூச்சி மற்றும் நெகிழி பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க ஆமணக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது மட்டுமின்றி வெடி மருந்து பொருட்கள் தயாரிப்பிலும், நெசவு எண்ணெய் சாய பட்டறையிலும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலும் அதிக அளவில் ஆமணக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஆமணக்கை பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்காகவும், காலம் தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மூட்டுவலி, குடல் தூய்மை, மலம் நீக்கி, வலி நிவாரணம், சுழுக்கு மற்றும் வீக்கம் குறைக்க, எதிர்ப்புத்திறன் அதிகரிக்க, பொடுகு மற்றும் தேமல் நீங்க, ஆமணக்கை சித்த மருத்துவம் மற்றும் நாட்டு வைத்தியத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். சமீபகாலமாக ஆமணக்கினை புற்று நோய் குணப்படுத்தும் மருந்தாகவும் வயதோகித்தை குறைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆமணக்கின் தாயகமாக எத்தியோப்பியாவை கருதினாலும் இந்தியாவில்தான் ஆமணக்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான விவசாய பெருங்குடி மக்கள் இன்று தனி பயிராக இறவை மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்து வருவதற்கு வீரிய ஒட்டு ஆமணக்கின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். இலாபம் கொழிக்கும் பல்வேறு பணப்பயிர்களை விவசாயிகள் முன்பு சாகுபடி செய்திருந்தாலும், பெரும்பான்மையான சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆமணக்கினை விருப்ப பயிராக தேர்வு செய்து தொடர்ந்து சாகுபடி செய்வதற்கான காரணங்களாக இருப்பது, குறைந்த செலவீனம் (ஏக்கருக்கு ரூ. 8000/-) குறைந்த நீர் தேவை மற்றும் கூலியாட்கள், வறட்சியை தாங்கி வளரும் பண்பு மற்றும் நிலையான சந்தை மதிப்பு (கிலோவுக்கு ரூ. 35 முதல் ரூ. 42 வரை) போன்ற காரணங்களால் விவசாயிகள் அதிக அளவில் குறிப்பாக இறவையில் சித்திரை மானாவாரியில் ஆடிய்பட்டத்தையும் தேள்வு பட்டத்தையும், செய்து இலாபகரமாக ஆமணக்கை சாகுபடி செய்து வருகிறார்கள்.

ஆமணக்கு சாகுபடி பரப்பரளவு மற்றும் உற்பத்தியை பொருத்த வரையில், ஆமணக்கு சாகுபடி செய்யும் நாடுகளிலேயே இந்தியா உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. இந்தியா, ஆமணக்கு சாகுபடியில் உலக பரப்பளவில் 59 சதமும், உலக உற்பத்தியில் 82 சதமும் உள்ளது. இந்தியாவில் சுமார் 13.17 இலட்சம் எக்டரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 21.77 இலட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 15,000 எக்டரில் சித்திரை, ஆடி மற்றும் ஐப்பசி பட்டத்தில் ஆமணக்கு பயிரிடப்பட்டு வருகிறது. உலக எண்ணெய் தேவையில் 80 சதவிகித ஆமணக்கு எண்ணெய் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதோடு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ. 4000 கோடி வருமானம் ஈட்டுகிறது. ஆமணக்கின் தேவை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருவதால், உலக மற்றும் இந்திய சந்தையில் இதன் விலை சீராகவும், நிலையாகவும் உயர்ந்து கொண்டு வருகின்றது.

வீரிய ஒட்டு ஆமணக்கு இரகங்களில் செடியின் தன்மை, தண்டின் நிறம், மற்றும் சாம்பல் பூச்சி ஆகியவை இரகங்களுக்கு ஏற்ப மாறுபடும். தனிப்பயிராக சாகுபடி செய்யும் பொழுது ஏக்கருக்கு சராசரியாக 1500 கிலோ வரை இறவையிலும், 1000 கிலோ வரை மானாவாரியிலும் பெறலாம்.

ஆமணக்கில் ஊடுபயிர் சாகுபடி

 • ஆமணக்கு + நிலக்கடலை (1 : 6 விகிதம்)
 • ஆமணக்கு + சின்ன வெங்காயம் (1 : 2 விகிதம்)
 • ஆமணக்கு + உளுந்து (1 : 2 விகிதம்)
 • ஆமணக்கு + பச்சை பயறு ( 1 - 2 விகிதம்)

ஒய்.ஆர்.சி.ஹெச் ஆமணக்கின் சிறப்பியல்புகள்

 • சராசரி விளைச்சல் திறன் மானாவாரியில் 1860 கிலோ / எக்டர். எண்ணெய் சத்து 49 சதவிகிதம்
 • குறுகிய கால வீரிய ஒட்டு இரகம் (150 - 160 நாட்கள்)
 • அதிக கிளைப்பு, நடுத்தர உயரம், அதிக விளைச்சல் திறன். காய் குலைகளில் பெண் பூக்களின் அளவு 95 சதவிகிதத்திற்கு மேல்
 • செடிகள் சாயாத மற்றும் காய்கள் வெடிக்காத தன்மை கொண்டது. அதிக உரமேற்கும் திறன்.
 • குறைவான வயது உடையதால் மானாவாரிக்கும், பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கும் மிகவும் ஏற்றது.
 • குறுகிய கால இடைவெளியில் அதிக குலைகள் ( 40 -50 குலைகள் ஒரு செடிக்கு) தோன்றும் பண்பு.
 • செடியின் உயரமும் கிளைகளின் நீளமும் குறைவாக உள்ளதால் ஊடுபயிர் சாகுபடிக்கு ஏற்றது.
 • குறைவான வயதுடைய காரணத்தால் தமிழ்நாட்டில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யும்போது காய் அழுகல் நோய் தாக்குதல் குறைவாக (11 - 25 சதவிகிதம் மட்டும்) உள்ளது.

மண் மற்றும் தட்ப வெப்பநிலை

நல்ல, ஆழமான, வடிகால் வசதியுடன் கூடிய, கார, அமிலத்தன்மையற்ற, வண்டல் மற்றும் செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தது. வெப்பநிலை 20° முதல் 32° செல்சியல் வரை நல்ல பலன் தரக்கூடியது. வெப்பநிலை அதிகமானால் ஆண் பூக்கள் அதிகம் தோன்றி விளைச்சல் குறையும். மழை அளவு ஆண்டிற்கு 750 மி.மீ. அளவு பரவலாகக் காணப்பட்டால் மிகச் சிறந்தது. நீர் தேங்கி நிற்கும் நிலத்தில் பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும்.

விதையளவு : ஏக்கருக்கு 2 கிலோ

இடைவெளி : மானாவாரி 120 X 120 செ.மீ., இறைவையில் 150 X 150 செ.மீ.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு கார்பன்டாசிம் இரண்டு கிராம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கவும். டிரைக்கோடெர்மா விரிடி எதிர் உயிர்ய்பூசணம் ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதையினை 10 மணி நேரம் தண்ணிரில் ஊற வைத்து விதைத்தால் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.

விதைப்பு

குத்துக்கு இரண்டு விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த 15 முதல் 20 நாட்களுக்குள் இரண்டு செடிகளில் ஒன்றை களைத்து விடவேண்டும். வீரிய ஒட்டு ஆமணக்கு வரை தாய்ச் செடி இருப்பதற்கான வாய்ப்பு சாகுபடியில் 15 சதவிகிதம் உள்ளது. இந்த தாய்ச் செடி சாம்பல் பூச்சி இன்றி கிளிப்பச்சை நிற தண்டினை பெற்று இருக்கும். ஒரு குத்தில் உள்ள இரண்டு செடிகளில் ஒரு செடிதாய்ச்செடியாக இருப்பின், தாய்ச் செடியை களைத்து விட வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு குத்தில் இரண்டுமே தாய்ச் செடியாக இருப்பின், வீரியம் குறைந்த ஒரு செடியினை களைத்து விடவேண்டும்.

உரமிடுதல்

இறவை வீரிய ஒட்டு ஆமணக்கிற்கு எக்டருக்கு 12.5 டன் தொழு உரமும், 90:45:45 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தும் இடவும், 30 - 45 சாம்பல் சத்தை அடி உரமாகவும், மீதமுள்ள 60 கிலோ தழைச்சத்தையும், 30 கிலோ சாம்பல் சத்தையும் இரண்டு தவனையாக பிரித்து 30வது நாள் மற்றும் 60வது நாள் இடவும். மானாவாரி வீரிய ஒட்டு ஆமணக்கிற்கு 60 : 30 : 30 தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும். 30:30:15 அடியுரமாகவும், 30 கிலோ தழைச் சத்தையும், 15 கிலோ சாம்பல் சத்தையும் மேலுரமாக மழை கிடைக்கும் போது 40 - 60 நாட்களுக்குள் இட வேண்டும்.

விதைத்தவுடன் ஒரு முறை உயிர் தண்ணிருக்கு பின்பு மண்ணின் தன்மைக்கு ஏற்ப 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்ப் பாய்ச்ச வேண்டும். நீர், நிலத்தில் நீண்ட காலத்திற்கு தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பயிர் எண்ணிக்கை பராமரிப்பு

10 முதல் 15வது நாள் இரண்டு விதை முளைத்த இடத்தில் ஒன்றைகளைத்துவிடவும். முளைக்காத இடத்தில் மீண்டும் விதைத்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கவும்.

களை நிர்வாகம்

விதைத்த 3 - 5 நாட்களுக்குள் புளுகுளோரலின் 800 மி.லி. / ஏக்கர் அல்லது பெண்டிமெத்திலின் 1300 மி.லி. / ஏக்கர் களைக் கொல்லியை தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த 20 மற்றும் 40வது நாள் கைக்களை எடுக்கவும்.

பூச்சிக் கட்டுப்பாடு

ஆமணக்கில் இலைப்புழுக்கள் (காவடிப்புழு, புரொடினியா மற்றும் கம்பளிப் புழுக்கள்), சாறு உறிஞ்சம் பூச்சிகள் (பச்சை தத்துப் பூச்சி, வெள்ளை ஈ, சிவப்பு சிலந்தி பூச்சி) மற்றும் காய்ப்புழுக்களினால் அதிக சேதம் ஏற்படுகிறது.

இலைப்புழுக்கள்

காவடிப்புழு மற்றும் புரொடினியா புழுக்களின் தாக்குதல் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கும். இளஞ்செடியை முற்றிலுமாக தின்று அழிக்கின்றன. காவடிப் புழுக்கள் இலைத்திசுக்களை கொரித்து உண்டு, ஒட்டையிட்டு, பின் முற்றிலுமாக இலையின் நரம்பு பகுதியை மட்டும் விட்டு விட்டு உண்கின்றன. புரொடினியா புழுக்களின் இளநிலைப் புழுக்கள் இலைகளின் அடியில் குவியல் குவியலாக இருந்து இலையை சல்லடை போல் அரிக்கும். வளர்ந்த புழுக்கள் இலையை முற்றிலுமாக உண்ணும்.

கட்டுப்பாடு

 • புரொடினியா புழுக்களை அரிக்கப்பட்ட இலைகளோடு சேகரித்து அழிக்க வேண்டும்.
 • இளம் புழுக்களை கட்டுப்படுத்த வேய்பங்கொட்டை பருப்புச்சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் கரைசலை ஒட்டும் திரவத்துடன் ( 1 மி.லி. / லிட்டர் நீரில்) கலந்து தெளிக்கவும்.
 • என்.பி. வைரஸ் நுண்ணுயிரியை 100 புழு சமண் அளவில் ஒட்டும் திரவத்துடன் சேர்த்து தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

ஆமணக்கில் உர நிர்வாகம்

 • வளர்ந்த புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்பட்டால் ஏக்கருக்கு பென்தியான் 100 இ.சி. 400 மி.லி. அல்லது குளோர்பைரிபாஸ் 20 இ.சி 400 மில்லியை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

காய்த்துளைய்பான்

காய்புழுக்கள் ஆமணக்குப் பயிரை பூக்கும் தருணத்திலிருந்து தாக்கி, பூக்களையும், காய்களையும் நூலாம்படை கொண்டு பின்னியிருக்கும். புழுக்கள் இளம் காய்களின் உட்சென்று விதைகளை தின்றுவிடுவதால், காய்கள் சுருங்கி காணப்படும்.

இப்புழுக்களின் தாக்குதலால் 80 சதவிகித காய்க்கொத்துக்கள் சேதமடைகின்றன.

கட்டுப்பாடு

 • பூப்பிடிக்கும் தருணத்தில் வேப்பங்கொட்டைப் பருப்புச்சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதவிகிதம், 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளித்து தாக்குதலை தவிர்க்கலாம்.
 • ஏக்கருக்கு பெனிதியான் 100 இ.சி 400 மி.லி. தெளித்து தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

நோய்க் கட்டுப்பாடு

காய் அழுகல் நோய் (போட்ரைட்டிஸ் ரிசினி)

ஆமணக்கில் இந்த நோய் தாக்குதல் காரணமாக 80 சதவிகிதம் விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. இந்நோய் முக்கியமாக குலைகளைத் தாக்கி பெருஞ்சேதத்தை ஏற்படுத்துகிறது. குலைகளில் காய்கள் உருவாகும் நிலையில், தொடர்ந்து மழை இருந்தால் நோய் தாக்குதல் தீவிரமடையும். பாதிக்கப்பட்ட காய்களைச் சுற்றி பூசணம், தூள் படர்ந்தார்போல் காணப்படும். காய்களில் விதைகள் பொக்காக காணப்படும்.

கட்டுப்பாடு

 • விசாலமான இடைவெளியை (90 செ.மீ. X 90 செ.மீ.) கடைபிடிக்க வேண்டும்.
 • பாதிக்கப்பட்ட குலைகளை அப்புறப்படுத்தி, எரித்துவிட வேண்டும். இழந்த விளைச்சலை ஈடுகட்ட, ஏக்கருக்கு 20 கிலோ யூரியா மற்றும் 12.5 கிலோ பொட்டாஷ் உரங்களை செடிகளைச் சுற்றி இடவும். நோய் வருவதற்கு முன், மழைக்காலங்களில் கார்பன்டாசிம் 2 கிராம் / லிட்டர் நீர் வீதம் கலந்து தெளிக்கவும். 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் இருமுறை தெளிக்கவும்.

பயிர் அறுவடை மற்றும் விளைச்சல்

அறுவடை

பெரும்பான்மையான வீரிய ஒட்டு ஆமணக்கு இரகங்களில் 150 - 170 நாட்களுக்குள் அறுவடை முடிந்துவிடும். முதல் அறுவடை விதைத்த 90-ஆம் நாளும், இரண்டாவது அறுவடை 120-வது நாட்களிலும், கடைசி அறுவடை 150வது நாட்களிலும் செய்யலாம். முதிர்ச்சி அடையாத காய்களை அறுவடை செய்வதை தவிர்த்தல் அவசியம். ஏனெனில், இதில் எண்ணெய்ச் சத்து குறைவாக இருப்பதுடன் மணி எடையும் குறைந்து காணப்படும். இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு குலையில் உள்ள ஒன்று அல்லது இரண்டு காய்கள் முற்றிலும் முதிர்ந்த நிலையில் காணப்பட்டால் (காய்கள் பழுப்பு நிறமாக இருக்கும்) அவை அறுவடைக்கு தயார் என தெரிந்து கொள்ளலாம். பின்பு முழு குலையையும் அறுத்து எடுத்து சூரிய ஒளியில் மூன்று நாட்கள் உலர்த்தி, பின் காய் உடைப்பான் கருவி கொண்டு உடைத்து பருப்புகளை சேகரிக்கலாம்.

ஒரு ஏக்கருக்கான சாகுபடி செலவு கணக்கு மற்றும் நிகர இலாபம்

வ. எண்

விவரம்

மொத்த தொகை ரூ. ஏக்கர்

1.

வயலை தயார் செய்தல்

1400

2.

விதைப்பு

1200

3.

ஒருங்கிணைந்த உரநிர்வாகம்

2500

4.

ஒருங்கிணைந்த களை நிர்வாகம்

3750

5.

நீர் மேலாண்மை

750

6.

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்

1750

7.

அறுவடை

2150

8.

மொத்த செலவு

13500

9.

மொத்த வருமானம்

55500

10.

நிகர வருமானம்

42000

11.

வரவு செலவு விகிதம்

4.1

 • இறவையில் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 1500 கிலோ
 • சராசரி சந்தை விலை ரூ. 37/ கிலோ

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

ஆக்கம் : முனைவர். சே. மாணிக்கம், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், சேலம்

2.97080291971
அன்பு May 11, 2020 07:20 PM

ஆமணணக்கு விதை என்ன விலை

R. முருகன் Mar 19, 2020 06:03 PM

நன்றி நல்ல தகவல் சந்தை படுத்துதல் பற்றியும்.எங்க எங்கே ஆமனக்கு கமிட்டி உள்ளது என்பதை தெரிய படுத்தவும்

Anonymous Dec 18, 2019 07:12 AM

டிசம்பர் மாதம் ஆமணக்கு பயிரிடுவதற்கு உகந்ததா

Velusamy s /7373652866 Dec 06, 2018 12:13 PM

நன்றி.இன்றஅளவில் நல்ல லாபம் தரக்கூடிய குரைவான இடுபொருள் செலவினம் செய்து நல்ல வருமானம் ஈட்டும் பயிர்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top