பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேம்பு சாகுபடி முறைகள்

வேம்பு சாகுபடி முறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வேம்புவின் இலைகள் தொழுநோய், கண்களில் உண்டாகும் அலர்ஜி, குடற்புழுக்கள், அல்சர், தோல் நோய் போன்றவைகளைக் கட்டுப்படுத்தவும், பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்கள் அலர்ஜி, காய்ச்சல் போன்றவைகளைக் கட்டுப்படுத்தவும், பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் வயிற்றுப்புழுக்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. இவற்றைப் போல் இருமல், காய்ச்சல், தோல் வியாதி, தொழுநோய், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் போன்றவைகளைக் கட்டுப்படுத்தவும் வேம்புவின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் தயாரிக்கப்படும் மூலிகை மருந்துப்பொருட்கள் பயன்படுவதால் இதனை சஞ்சீவி மூலிகைக்கு சமமாக சித்த மருத்தவத்திலும் மற்றைய மருத்துவ முறைகளிலும் கருதப்படுகிறது.

மண், தட்பவெப்ப நிலை

வேம்பு இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் வளரக்கூடிய மர மூலிகைப் பயிராகும். மண் வகைகளாகிய மணல்சாரி முதல் களிமண் மற்றும் பாறை, சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள மண் பகுதிகளிலும் நன்றாக வளரும் இயல்புடையது.

தட்பவெப்பநிலையில் வேம்பு 20°செ முதல் 15°செ வரையிலான குறைந்த வெப்பநிலையிலும் நன்றாக வளரும் தன்மையுடையது. வேம்பு பயிரின் நல்ல வளர்ச்சிக்கு மழையளவு ஆண்டிற்கு 450 முதல் 1125மிமீ தேவை. இருப்பினும் வறட்சியான பகுதிகளிலும் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையைக் கொண்டது.

தட்பவெப்ப நிலை மாற்றங்களினால் வேம்புவின் இலைகள் உதிர்தல், பூக்கள் கொட்டுதல் போன்றவைகள் சாதாரணமாக நடைபெறும். இதனால் பயிரின் வளர்ச்சியில் எந்த மாற்றமும் வருவதில்லை. புதிய அல்லது உதிர்வுக்குப்பின் தளிர் இலைகள் மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் உண்டாகும்.

பூக்கள் பொதுவாக வெள்ளை நிறத்துடன் ஏப்ரல் முதல் மே மாதங்களில் உருவாகும். பூக்கள் சரங்களாக காணப்படும். இதில் மலைவேம்பின் பூக்கள் ஊதா நிறத்தில் காணப்படும். பூவிலிருந்து பழங்களாக இரண்டு முதல் மூன்று மாதங்களில் நீளவடிவ முட்டை போன்று மஞ்சள் நிறத்தில் உண்டாகும். பொதுவாக பழங்கள் ஜூன் முதல் ஜூலை மாதங்களில் உண்டாகும். இதனுடைய விளைச்சலாக மரம் ஒன்றிற்கு 30 முதல் 35 கிலோ விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ எடையில் சராசரியாக 3300 விதைகள் கிடைக்கும்.

நன்கு முற்றிய பழங்களைப் பறித்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை பிதுக்குதல் அல்லது அலசி எடுத்தல் மூலமாக விதையின் மேல் தோலை நீக்கவேண்டும். பின்பு மணல் அல்லது சாம்பல் கலந்து நன்றாக கிளறி விடவேண்டும். கிளறி எடுத்த விதைகளைச் சேகரித்து, உடனடடியாக நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைகள் 20 முதல் 30 நாள்களில் முளைக்க ஆரம்பித்து விடுகின்றன. பின்பு இரண்டு முதல் நான்கு இலைப் பருவத்தில் அதவாது மூன்று வாரங்களில் இதனை பாலித்தீன் பைகளில் மாற்றி நடவேண்டும். ஆறு மாதங்களான நாற்றுக்களை நடுவதற்கு பயன்படுத்தலாம்.

நடவு செய்தல்

ஜூன், ஜூலை மாதங்கள் நடவு செய்வதற்கு ஏற்ற மாதங்களாகும். இம்மாதங்களில் 60 x 60 x 60 செ.மீ. நீளம், அகலம், உயரமுள்ள குழிகளை 4 x 4 மீட்டர் இடைவெளியில் தயாரித்து தொழுஉரம், மேல் மண் ஆகியவற்றைக் கலந்து குழிகளை நிரப்பி, ஒரு மாத காலம் ஆறவிட வேண்டும். பின்பு பருவ மழை ஆரம்பித்ததும் விதை நாற்றுக்களைக் குழியின் நடுப்பகுதியில் நடவு செய்யவேண்டும். நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் கழித்த பிறகு 8 X 10 க்கு என்ற இடைவெளி இருக்குமாறு ஒன்று விட்டு ஒன்று செடிகளை அகற்றிவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் பயனாக மரங்களுக்கு தேவையான சத்துக்கள், சூரிய ஒளி நன்றாக கிடைத்து அதிக பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.

உர மேலாண்மை / களை நிர்வாகம்

  • உரங்களை மரத்தினின்று ஒரு மீட்டர் இடைவெளியில் வட்ட வடிவில் மண்ணை அகற்றி விட்டு தொழு எரு 10கிலோ, மேல்மண்ணோடு கலந்து குழியின் முக்கால் பாகம் இடவேண்டும்.
  • நட்ட முதல் ஆண்டில் பொதுவாக பலன் கொடுக்கும் மரப்பயிருக்கு 10:10:20 கிராம் தழை, மணி, சாம்பல் சத்துக்களை ஒவ்வொரு மரத்திற்கும் இடவேண்டும்.
  • இந்த உர அளவை சிறிது சிறிதாக அதிகரித்து நன்கு காய்க்கும் மரமொன்றிற்கு 50 கிலோ பசுந்தாள் உரத்துடன் 250; 250; 500 கிராம் தழை, மணி, சாம்பல் சத்துக்களைத் தொடர்ந்து இடுவதால் நல்ல வளர்ச்சியைப் பெறுவதுடன் அதிக விளைச்சலையும் பெறலாம்.
  • வேம்பு மரப்பயிர் நன்றாக வளர்ச்சியடைய ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை களை எடுத்து தோட்டத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இச்செடியைச் சுற்றி பசுந்தாள் இலைகளை நிலப்போர்வையாக அமைத்து ஈரப்பதத்தைப் பராமரிக்க வேண்டும்.

நீர்மேலாண்மை

பொதுவாக வறட்சி காலங்களில் ஏழு முதல் பத்து நாள்களுக்கு ஒரு முறையும் மற்ற காலங்களில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் போதுமானது. பின்பு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தேவையான அளவு நீர் ஊற்றினால் சர்வ சுகந்தி பயிர் வளர்வதற்கு போதுமானதாகும்.

அறுவடை / விளைச்சல்

நாற்றுகள் நடவு செய்து ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் பூக்க ஆரம்பித்து விடுகின்றன. பூக்க ஆரம்பித்த இரண்டு - மூன்று மாதங்களில் மரம் ஒன்றிற்கு ஆண்டுக்கு 40 - 50 கிலோ பழங்களாகவோ அல்லது 20 - 30 கிலோ விதைகளாகவோ விளைச்சலைப் பெறலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.14893617021
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top