பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / நீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி

நீடித்த பசுமைப் புரட்சிக்கான புதிய பயிர் இரகங்கள், பண்ணைக் கருவிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

 • தமிழகத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆற்றியுள்ள பணிகளில் குறிப்பிடத்தக்கவை பயிர் இரகங்கள், பண்ணைக்கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களுமாகும்.
 • திருப்பதிசாரம் 5 நெல், மதுரை 1 உளுந்து, கோ 31 தீவனச்சோளம், ஊட்டி 1 பேரிக்காய் ஆகிய புதிய பயிர் இரகங்களும், டிராக்டரால் இயங்கும் ஒரு / இரு வரிசை மரவள்ளிக்கிழங்கைத் தோண்டும் கருவி என்ற பண்ணைக்கருவியும் 11.01.2014 ஆம் நாள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கோயம்புத்தூர் வளாகத்தில் நடைபெற்ற உழவர் தினவிழாவில் வெளியிடப்பட்டன.
 • நெல் - திருப்பதிசாரம் 5 தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த இரகம் கார், மற்றும் பிந்தைய பாசனப் பருவங்களில் பயிரிட ஏற்றது. இந்த இரகம் ஒரு எக்டருக்கு சராசரியாக 6300 கிலோ விளைச்சலைத் தரும் இயல்புடையது.
 • ஏற்கனவே வெளியிடப்பட்டு பயன்பாட்டில் உள்ள அம்பை 16 இரகத்தை விட 14 விழுக்காடு அதிக விளைச்சலைத் தரும். விதைத்த 118 நாள்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த இரகம் தண்டுத்துளைப்பான், இலைச்சுருட்டுப்புழு, புகையான் ஆகிய பூச்சிகளுக்கு மிதமாக எதிர்ப்புத்திறன் கொண்டது. இந்த இரகத்தின் அரிசி குறுகிய வடிவில் தடிமனானது. அமைலோஸ் அரிசியில் இடைப்பட்ட நிலையில் உள்ளதால் சமைக்க உகந்தது. மேலும், நல்ல அரவைத்திறனைக் கொண்டது. நாமக்கல் மாவட்டத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்ட போது 11,567 கிலோ விளைச்சலைத் தந்துள்ளது.

உளுந்து - மதுரை 1

 • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உளுந்து பயிரைத்தாக்கும் மஞ்சள் தேமல் நோயைத் தாங்கி வளரும் இயல்புடைய வம்பன் 1, வம்பன் 2, வம்பன்3, வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6, உளுந்து கோ 6 ஆகிய இரகங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. உளுந்து விளைச்சலில் சாதனை படைத்த உளுந்து கோ 6 இரகத்தைவிட அதிக விளைச்சலைத் தரும் மதுரை-1 இரகம் அதன்பின் வெளியிடப்பட்டது.
 • ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கோ 6, வம்பன் 6 இரகத்தை விட முறையே 15 மற்றும் 13 சதம் விளைச்சலைத் தரும். அதாவது இந்த புதிய இரகம் எக்டருக்கு 790 கிலோ விளைச்சலைத்தரும். மேலும் உளுந்தின் மாவு பொங்கும் தன்மையைக் கொண்டது. உளுந்து விதைத்த 70 முதல் 75 நாள்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த இரகம், மஞ்சள்தேமல் நோய், காய்ப்புழு தாக்குதலைத் தாங்கிவரும் இயல்புடையது.
 • தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கு (நீலகிரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் தவிர) பயிரிட ஏற்ற இந்த இரகம் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்டபோது எக்டருக்கு அதிக விளைச்சலாக 1679 கிலோ கொடுத்துள்ளது.

தீவனச்சோளம் - கோ 31

 • இந்தியாவிலே முதன்முதலாக தீவனப்பயிர்களுக்காக ஒரு புதிய துறை 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. இந்த துறையின் சார்பில் கம்பு நேம்பியர் ஒட்டுப்புல் கோ (சிஎன் 4) கினியாபுல் கோ (ஜி.ஜி)3, மறுதாம்பு தீவனச்சோளம் கோ (எய்எஸ்) 29 ஆகிய இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது இந்த ஆண்டு தீவனச்சோளம் கோ 31 இரகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பயிரிட ஏற்ற இந்த இரகம் கோ 29 இரகத்தைவிட 15 சதம் கூடுதல் தீவன விளைச்சலைத் தரும் இயல்புடையது. அகன்ற இலைகள், விதை உதிராத தன்மையுடன் விரைவாக தழைக்கும் திறன், குறைந்த அளவு நச்சுய்பொருள்கள், (நார்ச்சத்து 19.8 சதம்), புரதம் 1986 சதம் ஆகியவை இந்த இரகத்தின் சிறப்பியல்புகளாகும்.
 • கறவைமாடுகள், ஆடுகள் விரும்பும் சுவையுள்ள இந்த இரகம் 190 டன் முதல் 227 டன் வரை பசுந்தீவன விளைச்சலைத் தரவல்லது. இதன் உலர் எடை விளைச்சல் 49.73 டன் ஆகும். இந்த இரகத்தை ஆண்டுக்கு ஆறு முதல் ஏழு முறை அறுவடை செய்து பலன் பெறலாம்.

பேரிக்காய் - ஊட்டி 1

 • உதகமண்டலத்தில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சிநிலையம் இதுவரை புஷ்பீன்ஸ், ரோஸ்மேரி, தைம், செலரி, சக்கரவர்த்திக்கீரை, பாலைக்கீரை, காளிப்பிளவர் உள்ளிட்ட 14 பயிர் இரகங்களை வெளியிட்டுள்ளது.
 • இந்த ஆராய்ச்சி நிலையத்தின் 15 ஆவது வெளியீடான மெதுபேரி ஊட்டி 1 இரகம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
 • ஊட்டியில் பயிரிடப்படும் பேரிக்காயின் உள்ளூர் இரகங்கள் அனைத்தும் மழைக்காலங்களில் அறுவடை செய்யப்படுகின்றன. மழைக்காலங்களில் அறுவடை செய்யப்படும் இந்த பழங்கள் குளிர்ப்பானங்களைத் தயாரிக்கவும், மது தயாரிக்கவும் குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றன.
 • மெதுபேரி ஊட்டி 1 இரகம் : உள்ளூர் வெண்ணையை போன்ற மிருதுவான சதைப்பற்றுடன் நறுமணம் கொண்ட நீண்ட வடிவிலான பழங்களை உடைய இந்த இரகத்தை ஜூன்-ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம். நட்ட ஐந்தாவது ஆண்டிலிருந்து விளைச்சலைத் தரும் இந்த இரகம் ஏப்ரல், மே, மாதங்களில் (குறிப்பாக ஊட்டிக்கு சுற்றுலாப்பயணிகள் வரும் காலகட்டத்தில்) அறுவடைக்கு வருவதால் சந்தையில் மிக நல்ல விலை கிடைக்கும். ஒரு மரத்திற்கு 97 கிலோ காய்களை விளைச்சலாக தரவல்ல இந்த இரகத்தின் பழத்திலிருந்து ஜாம், ஊறுகாய், பழரசம் போன்ற மதிப்பூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்கலாம். இந்த இரகத்தின் பழங்களில் அதிக அளவு கால்சியம், சோடியம், பொட்டாசியம், அஸ்கார்பிக் அமிலம், மாவுச்சத்து, நார்ச்சத்துக்கள் உள்ளன. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடைக்கானல் பகுதிகளில் பயிரிட ஏற்ற இந்த இரகம் அசுவினிப்பூச்சி, தீக்கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.
 • மரவள்ளிக் கிழங்கைத் தோண்டும் கருவி : பண்ணைப் பணியாளர்களின் பற்றாக்குறையைப் போக்க இயந்திரம் மூலம் விதைப்பு, களையெடுப்பு, அறுவடைக்கருவிகள் என இதுவரை தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் 160 கருவி, இயந்திரங்களை வெளியிட்டுள்ளது.

மாறிவரும் சூழலில், குறைந்த நிலத்தில், குறைவான நீரைக் கொண்டு இடுபொருள்களைக் குறைத்து, சூழலுக்கு கேடின்றி வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. அதற்கான முயற்சியில் இரகங்கள், கருவிகள், தொழில் நுட்பங்கள் வளர்ந்துக்கொண்டிருக்கின்றன.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top