பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / நீர்ப் பற்றாக்குறையும், மேலாண்மையும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர்ப் பற்றாக்குறையும், மேலாண்மையும்

பருவக் காலங்களில் நீண்ட வறண்ட நிலை நிலவும் நேரத்தில் பயிர் வளர்ச்சி, மகசூல் பாதிப்பதைத் தவிர்க்கவும், பாதிக்கப்பட்ட பயிரைப் பாதுகாக்க ஊட்டச்சத்து மேலாண்மை முறையை பின்பற்றலாம்.

நீர்ப் பற்றாக்குறை

நீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது, பயிர்களின் முக்கிய சத்துகளான பொட்டாட்சியம், மக்னீசியம் பற்றாக்குறை அதிகம் காணப்படும். இதுமட்டுமின்றி கரும்பில் துத்தநாகம், போரான் நுண்ணூட்டச் சத்துகளின் பற்றாக்குறையும் ஏற்படும். இந்தக் குறைபாட்டை நீக்க 20 சதவீதம் அம்மோனியம் பாஸ்பேட், 0.5-1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு, 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.5-1 சதவீதம் இரும்பு சல்பேட் அத்துடன் 1 சதவீதம் யூரியா, 0.3 சதவீதம் போரிக் அமிலம் ஆகியவற்றை பயிர்களுக்கு ஏற்ப தெளிக்க வேண்டும்.

நீராவிப் போக்கைத் தடுக்க

பயிர்களின் நீராவிப் போக்கைத் தடுக்கப் பயன்படும் பொருள்கள் ஆன்டி-டிரான்ஸ்பிரன்ட்ஸ் எனப்படும் இலைத் துளைகளை மூடுவதால் அதிக அளவு நீராவி வெளியேறுவதைத் தடுக்க முடியும்.

2.4டி, எத்ரல், டிபா, சக்சினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், சைக்கோசெல் ஆகியன இலைகளை மூடும் தன்மை கொண்டவை. அதேபோல் கயோலின், சீன களிமண், கால்சியம் பை கார்பனேட், சுண்ணாம்பு நீர் ஆகியவையும் நீராவிப் போக்கை தடுக்கும் தன்மை கொண்டவை. போதுமான அளவு மழை பெய்யாதபோது பயிர்களின் மகசூலை அதிகரிக்கவும், கடுமையான வறட்சி நிலவும்போதும், ஒரு நிலையான மகசூலை எடுக்க இந்த முறை உதவுகிறது. தானியங்கள் அளவு பாதிக்கப்படுவதில்லை. விதைகளின் தரம் உயர்கிறது. குறைந்த முதலீட்டில் பயிர்களின் சேதம் தவிர்க்கப்படுகிறது.

வளர்ச்சி ஊக்கிகள்

வறட்சிக் காலத்தில் பயிரின் வளர்ச்சி, மகசூலை நிலைநிறுத்த வளர்ச்சி ஊக்கிகள் பெரிதும் உதவுகின்றன. வேரின் வளர்ச்சியைத் தூண்டவும், நீராவிப் போக்கை தடுக்கவும் சைக்கோசெல், மெபிகுவாட் குளோரைடு ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவை இலைகள் முதிர்ச்சியடையும் முன்பே உதிர்வதைத் தடுக்கிறது. தண்டில் சேமித்து வைக்கும் உணவை வளர்ச்சி காலத்தில் பயிரின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள சைட்டோகைனின், சாலிசிலிக் அமிலம் பயன்படுத்தலாம். வறட்சிக் காலத்தில் செல் சவ்வுகளின் பாதிப்பைத் தடுக்க அஸ்கார்பிக் அமிலம் உதவுகிறது.

மேலாண்மைத் தொழில்நுட்பங்கள்

2 சதவீதம் டிஏபி, 1 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை பூக்கும் பருவம், தானியங்கள் உருவாகும் பருவத்தில் தெளிக்க வேண்டும். 3 சதவீதம் கயோலின் கரைசலை வறட்சி காலங்களில் குறித்த பருவத்தில் தெளிக்க வேண்டும்.

கரும்பு, சோளத்தின் சோகையை நிலப் போர்வையாக பயன்படுத்துவதன் மூலம் நிலத்தின் ஈரப்பதத்தை நிலை நிறுத்தலாம். தழைச் சத்து உரங்களைப் பிரித்து விதைத்த 45, 60 நாள்கள் கழித்து இடலாம். உயிர் உரங்களை பயன்படுத்தலாம். விதைகளைப் கடினப்படுத்தலாம்.

பருத்தியில் 15, 20-ஆவது கணுப் பகுதிக்கு மேலே உள்ள பகுதியை கிள்ளிவிடுவதன் மூலம் நீராவிப்போக்கைத் தவிர்க்கலாம்.

பூசா ஐடரோஜல்

நீர்ப் பற்றாக்குறைக்கு நிவர்த்தியாக பூசா ஐடரோஜலை பயன்படுத்தலாம். இது மண்ணை பக்குவப்படுத்தும். இதை ஏனைய உரங்களைப் போல் மண்ணில் இடும்போது, அதன் எடைக்கு 400 மடங்கு தண்ணீரை உரிஞ்சி பயிர்களின் தேவைக்கேற்ப நீரை வெளியிடும் தன்மை கொண்டது. இது மண்ணில் ஓராண்டு வரை அழியாமல் இருக்கக் கூடியது. நிலக்கடலை, தானியப் பயிர்கள், கரும்பு, பயறுவகைகளுக்கு நிலத்தில் இடுவதற்கு ஏற்றது. இதை ஒரு ஹெக்டேருக்கு 3 கிலோ எனும் அளவில் மண்ணில் இட வேண்டும்.

நீர்ப் பற்றாக்குறையில் இருந்து பயிர்களைக் காப்பாற்ற மெத்தைலோ பாக்டீரியம் நுண்ணுயிர் திரவத்தைப் பயன்படுத்தலாம். மெத்தைலோ பாக்டீரியா இலையின் துவாரத்தில் இருந்து வெளிப்படும் மெத்தனாலை உள்கொள்ளும் தன்மையுடையது. இதை தண்ணீர் கலந்து தெளித்தால் பயிரின் ஈரம் வறண்டு விடாமல் பாதுகாக்கப்படும். 20 நாள்களுக்கு தேவையான ஈரத்தை இது சேமித்து வைக்கும். ஒரு ஏக்கருக்கு 200 மில்லி திரவத்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

ஆதாரம்: தினமணி

2.875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top