பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உயிரியல் முறைக்கட்டுப்பாடு

உயிரியல் முறைக்கட்டுப்பாடு முறைகளை பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் 20 முதல் 30 விழுக்காடு பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றன. பருத்தி, கரும்பு மற்றும் நெற்பயிரில் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகின்றன. அதனால் மிக அதிகமாக பூச்சி மருந்துகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. ஆந்திர மாநிலத்தில் 20 விழுக்காடும், பஞ்சாப் மாநிலத்தில் 10 விழுக்காடும், தமிழ்நாட்டில் 9 விழுக்காடும், கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் முறையே 6 விழுக்காடும் பூச்சி மற்றும் நோய்க் கொல்லிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் உற்பத்தியான பயிர்கள் நச்சுத்தன்மை கொண்டதாகவும், உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பனவாகவும் மாறுகின்றன. மேலும் பூச்சிக்கொல்லிகளால் பெரும் அளவிலான நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. எனவே வேதியியல் முறைக்குப் பதிலாக இயற்கை வழியிலான உயிர்க் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்துவதன் மூலமாக நிலைப்புள்ள வேளாண்மை மேற்கொண்டு நச்சுத் தன்மையற்ற பயிர்களைச் சாகுபடி செய்யலாம்.

உயிர்க் கட்டுப்பாட்டு முறை என்பது இயற்கைக் காரணிகளான இரை விழுங்கிகள், ஒட்டுண்ணிகள் மற்றும் என் பி. வி. என்ற வைரஸ் நச்சுயிர்கள் மூலமாகப் பூச்சிகளையும், நோய்களையும் கட்டுப்படுத்துதலாகும்.

காரணிகள்

டிரைக்கோகிரம்மா, கிரைசோபா, சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா, என். பி. வி நச்சுயிர் வைரஸ்.

டிரைக்கோகிரம்மா

முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா பூச்சியை ஏக்கருக்கு 40,000 என்ற அளவில் பயன்படுத்தி பச்சைக் காய்ப் புழு மற்றும் வெள்ளை ஈ போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம். தயாரிக்கப்பட்ட மட்டை ஒட்டுண்ணிகள் வேளாண்மைத் துறையிலும், தனியார் துறைகளிலும் கிடைக்கின்றன.

என். பி. வி வைரஸ்

நிலக்கடலையில் சிவப்புக் கம்பளிப்புழு மற்றும் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த மாலை நேரத்தில் ஏக்கருக்கு 100 புழு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

கிரைசோபா

இரை விழுங்கியான பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சியின் புழுக்களை ஒரு ஏக்கருக்கு 20,000 என்ற அளவில் விடுவதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அசுவுணி மற்றும் தத்துப்பூச்சிகளை அழிக்க ஏக்கருக்கு 2000 புழுக்கள் வீதம் விட வேண்டும். இவை காய்ப்புழுக்களையும் அழிக்கும்.

டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ்

இவ்விரண்டு பூசண வித்துக்களும் நிலக்கடலையில் வேர் அழுகல் மற்றும் வாடல் நோயை அழிக்கவல்லது. டிரைக்கோடெர்மாவைக் கொண்டு ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு 4 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும் சூடோமோனசை 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். நிலத்தில் இடும்போது ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனசை 50 கிலோ உலர்ந்த சாண எரு அல்லது மணலுடன் கலந்து இட வேண்டும்.

அபரிவிதமாக உற்பத்தி செய்தல்

 • கொன்றுண்ணியை பெருமளவில் உற்பத்தி செய்தல்
 • ஒட்டுண்ணியை பெருமளவில் உற்பத்தி செய்தல்
 • பூசணத்தை பெருமளவில் உற்பத்தி செய்தல்
 • நச்சுயிரியை பெருமளவில் உற்பத்தி செய்தல்
 • டிரைகோடெர்மா விரிடியை பெருமளவில் உற்பத்தி செய்தல்

உயிரின பூச்சிக்கொல்லிகள்

 • பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் சிற்றினம் இஸ்ரேலென்சிஸ்
 • பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் சிற்றினம் குர்ஸ்டகி
 • பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் சிற்றினம் கேலெரியே
 • பேசில்லஸ் ஸ்பெரிகஸ்
 • டிரைகோடெர்மா விரிடி
 • டிரைகோடெர்மா ஹர்சியானம்
 • சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ்
 • பேவேரியா பேசியானா
 • ஹெலிகோவெர்பா ஆர்மிஜிராவுக்கான நச்சுயிரி
 • ஸ்போடோப்டீர லிட்டுராவுக்கான நச்சுயிரி
 • வேம்பு சார் பூச்சி விரட்டிகள்
 • எலுமிச்சைப்புல்

உயிரியல் முறை கட்டுப்பாட்டு கூடம்

மாநில மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள உயிர்க்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள்

வ. எண்.

மாநிலம்

இடம்

1.

ஆந்திர பிரதேசம்

நிட்டவோலா மேற்கு கோதாவரி

2.

அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

ஹேட்டோ, அந்தமான் & நிக்கோபார் நிர்வாகம்., போர்ட் பிளேயர்

3.

அருணாச்சல பிரதேசம்

நாகர்லாகுன், பாபும்போரே, இட்டாநகர்

4.

அஸ்ஸாம்

1. டெலகோன் மாவட்டம். டாராங்
2. ஆர்.கே. மிஷன் வீதி, உலுபரி, குவஹாத்தி –7.

5.

பீகார்

மீதாபூர், பாட்னா

6.

சத்திஸ்கர்

ராய்பூர்

7.

கோவா

விவசாயிகள் பயிற்சி நிலையம்,
இலா பண்ணை, ஓல்ட் கோவா

8.

குஜராத்

1. காந்திநகர் 
2. நவ்சாரி வேளாண்மை பல்கலைக்கழகம், நவ்சாரி -396450

9.

ஹரியானா

1. சிர்சா 
2. சண்டிகர்

10.

ஹிமாச்சல பிரதேசம்

1.  ஹோல்டா, பலன்பூர், காங்க்ரா மாவட்டம்
2.  மாண்டி மாவட்டம், ஹிமாச்சல பிரதேசம்

11.

ஜம்மு & காஷ்மீர்

லால் மண்டி வளாகம், ஸ்ரீநகர்

12.

ஜார்க்கண்ட்

ராஞ்சி

13.

கர்நாடகா

கோட்னூர் “டி”, குல்பர்கா -585102

14.

கேரளா

1. மன்னூத்தி, திருச்சூர் -680655 
2. திருவனந்தபுரம்

15.

லட்சத்தீவுகள்

அண்டிராட் தீவுகள்

16.

மகாராஷ்டிரா

1. அவுரங்காபாத் மாவட்டம்
2. நண்டுர்பார் மாவட்டம்

17.

மத்திய பிரதேசம்

பார்கேரி காலன், பத்பாடா, போபால்

18.

மேகாலயா

நான்ங்யர் அஞ்சல், மேல் ஷில்லாங் -793009, கிழக்கு காசி மலை

19.

மிசோரம்

நெய்பவி, சிப்ஹிர்

20.

மணிப்பூர்

மாண்ட்ரிபுக்ரி, இம்பால்

21.

நாகாலாந்து

மெட்ழிபிமா, கோஹிமா

22.

ஒரிசா

பரமுண்டா, 
டெல்டா காலனி போஸ்ட், புவனேஸ்வர் -751003

23.

பாண்டிச்சேரி

KVK குரும்ப்பேட்டை -9

24.

பஞ்சாப்

மான்சா

25.

ராஜஸ்தான்

துர்காபுரா, டொங் சாலை, ஜெய்ப்பூர்

26.

சிக்கிம்

ட்டடொங், காங்டாக்

27.

தமிழ்நாடு

வினையாபுரம், மேலூர் தாலுக்கா, மதுரை

28.

திரிபுரா

டுட்டா டில்லா, பாதர்காட், அருந்துதீ நகர் அஞ்சல், திரிபுரா மேற்கு -799003

29.

உத்தர பிரதேசம்

மொரதபாத்

30.

உத்தரகண்ட்

1. ஹால்ட்வானி 
2. தக்ராணி, டேராடூன்

31.

மேற்கு வங்காளம்

230 ஏ, நேதாஜி சுபாஷ் சந்திர சாலை, கொல்கத்தா -700040

 

மொத்தம்

38

பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள்: உற்பத்தி முறைகள்

 

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி உற்பத்தி முறை

 • டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிகள் ஆய்வுக்கூடங்களில்  கோர்சைரா என்று அழைக்கப்படும் நெல் அந்துப்பூச்சியின் முட்டைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரே சீரான ஒட்டுண்ணி உற்பத்திக்கு நெல் அந்துப்பூச்சிகளின் உற்பத்திப்பெருக்கம் மிகவும் முக்கியம்.

நெல் அந்துப்பூச்சி உற்பத்தி முறை

 • நன்கு வெயிலில் உலர வைத்த பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நச்சுத்தன்மை இல்லாத கம்பு தானியத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை அரவை இயந்திரங்கள் மூலம் உடைத்து குறுணை செய்யப்பட வேண்டும்.
 • இரண்டரை கிலோ உடைத்த கம்பு குருணையுடன் 100 கிராம் தூளாக்கப்பட்ட நிலக்கரி 5 கிராம் நனையும் கந்தகத்தூள், 5 கிராம் நொதி தூள் இவற்றை நன்கு ஒரே சீராக கலக்கவும். பின்னர் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 0.05 சதம் கலவை மருந்தினை தெளித்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவையை 16” விட்டம் x 16” உயரம் கொண்ட பிளாஸ்டிக் தட்டுகள் தேர்வு செய்து நிரப்ப வேண்டும். நீர் தெளித்து குருணையினை புரட்டி விட வேண்டும். உணவுக்கலவையின் மேல் பகுதியில் 0.5 மிலி நெல் அந்துப்பூச்சியின் முட்டைகளைத் தூவ வேண்டும் (1 மிலி முட்டையில் சுமார் 16,000 முதல் 18000 வரை முட்டைகள் இருக்கும்). பிளாஸ்டிக் தட்டுகளாக இருந்தால் கெட்டி காடா துணிகளைக்கொண்டு மூடி இரப்பர் நாடாவுடன் கயிறு இணைத்துக்கட்டி வைக்க வேண்டும்.
 • முட்டைகளிலிருந்து 3-4 நாட்களில் இளம் புழுக்கள் வெளிவந்து கம்புக்குருணைகளில் கூடு கட்டி உண்ணத் துவங்கும். இதன் புழுப்பருவம் 26-28 நாட்களும் கூட்டுப்புழுப்பருவம் 5 நாட்களாகும். கூட்டுப்புழுக்களிலிருந்து வெளிவரும் முழு வளர்ச்சியடைந்த அந்திப்பூச்சிகள் 6-7 நாட்கள் மட்டுமே உயிர் வாழும். இவ்வாறு கம்பு குறுணை நிரப்பப் பட்ட தட்டுகளிலிருந்து 35 நாட்கள் கழித்து ஒவ்வொரு நாளும் காலைப்பொழுதில் 7 மணியிலிருந்து 10 மணிக்குள் அந்திப்பூச்சிகளை கண்ணாடிச் சோதனைக்குழாய் மூலம் 6”x1” அல்லது இதற்கென அமைக்கப்பட்டுள்ள காற்று உறிஞ்சும் கருவி மூலம் பிடித்து துத்தநாகத் தகட்டினால் ஆன இனச்சேர்க்கைக் கூண்டுக்கு மாற்ற வேண்டும்.
 • இனச்சேர்க்கைக் கூண்டின் அடிப்பாகத்தில் இரும்புக்கம்பி வலை அமைந்திருப்பதால் தாய் அந்திப்பூச்சிகள் இடும் முட்டைகள் அதன் வழியே கீழே வந்து சேகரிக்கும் தட்டில் விழும் அதிக அளவு முட்டைகளைப் பெறுவதற்கு 5 மில்லி தேன் கலந்து அதில் ஒரு வைட்டமின் - இ குளிகையினுள் உள்ள திரவத்தினை கலந்து பஞ்சில் நனைத்து இனச்சேர்க்கை கூண்டிற்குள் நூலில் கட்டித்தொங்க விட வேண்டும். இவ்வாறாக ஒருமுறை இனச்சேர்கைக் கூண்டுக்கு மாற்றப்படும். அந்திப்பூச்சிகள் 4 நாள் வரை தொடர்ந்து முட்டைகள் இடும். ஒவ்வொரு கூண்டிற்குள் 2500 முதல் 3000 அந்திப்பூச்சிகள் வரை விடலாம். முட்டைகளைச் சேகரிக்க இனச்சேர்க்கைப் பெட்டியின் அடிப்பாகத்தில் இனாமல் தட்டு அல்லது காகித அட்டையினை விரித்து விட்டால் சுத்தமான முட்டைகளைப் பின்னர்  சேகரிக்க உதவும்.
 • முட்டைகளுடன் அந்திப்பூச்சிகளின் இறக்கை, செதில்கள், உடைந்த கால்கள், துகள்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் கலந்திருக்கும். இவற்றை பிளாஸ்டிக் வடிகட்டிகள் மூலமாகவோ அல்லது அந்திப்பூச்சிகள் முட்டை மற்றும் செதில் பிரித்தெடுக்கும் கருவியின் உதவியோடு தூசி இல்லாத தூய்மையான முட்டைகளைப் பெறலாம். உணவுக்கலவை நிரப்பப்பட்ட  ஒரு தட்டிலிருந்து மொத்தம் 2500 முதல் 2800 அந்திப்பூச்சிகள் வரை 90 நாட்களில் வெளிவரும். ஆதலின் ஒரு உணவுக்கலவை நிரப்பப் பட்ட தட்டுகளை 90 நாட்களுக்குப்பிறகு வெளியே எடுத்து குருணைகளை அகற்றி தட்டுகளை பார்மலின் சோடியம் ஹைப்போகுளோரைட் கலவை கொண்டு சுத்தம் செய்து விட வேண்டும்.

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி உற்பத்தி முறை

 • சுத்தம் செய்யப்பட்ட அந்திப்பூச்சியின் முட்டைகளை கண்ணாடித் தட்டில் சீராகப்பரப்பி 45 செ.மீ. நீளம் கொண்ட 40 வாட் புற ஊதா நிறக்குழல் விளக்கின் கீழ் 20 செ.மீ. இடைவெளியில் 30 நிமிடம் கதிர் வீச்சு படும்படி வைத்தால் முட்டையின் கரு அழிந்து பூச்சியின் புழு பருவம் வெளிவருவது தடைப்படுகிறது.
 • இவ்வாறு கரு அழிக்கப்பட்ட முட்டைகளை பசை தடவப்பட்ட காகித அட்டையின் (30X 15 செ.மீ.) மேல் வடிகட்டிக்கொண்டு ஒரே சீராகத்தூவ வேண்டும். பசையின் மீது விழும் முட்டைகள் மட்டும் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர்  அட்டையினைத் திருப்பி வைத்து மெதுவாகத் தட்டினால் அட்டையில் ஒட்டாத முட்டைகள் கீழே விழுந்து விடும். அட்டைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் கோடுகள் போட்டு வைத்தால் முட்டைகளின் அளவினைத் தெரிந்து கொள்ள வாய்ப்பாகும். ஒரு 30 X 15 செ.மீ. அட்டையில் 6 மி.லி. முட்டைகளை ஒட்டலாம். இதனை 30 சிறுகட்டங்களாகப் பிரித்தால் 5 சிறு கட்டங்கள் கொண்ட பகுதி 1 மிலி என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு முட்டை ஒட்டப்பட்ட அட்டைகளை சுமார் 20 நிமிடங்கள் மின் விசிறியின் கீழ் உலர வைக்க வேண்டும். இவ்வட்டைகளை ஒட்டுண்ணிகள் தாக்குவதற்கு ஏதுவாக முட்டை ஒட்டுண்ணி வெளிவந்து தயாராக இருக்கும் பாலித்தீன் பைகளுக்குள் வைக்க வேண்டும்.
 • 6 மி.லி. அந்திப்பூச்சி முட்டைகள் 1 மிலி ஒட்டுண்ணி அதாவது 6:1 என்ற விகிதத்தில் பாலித்தீன் உறைகளின் உள்ளே வைத்து மூடி விட வேண்டும். டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளின் முட்டை பருவம் 1 நாள், புழுப்பருவம் 3 நாள், கூட்டுப்புழுப்பருவம் 2 நாள் ஆகும். இவை அனைத்தும் முட்டைக்குள் இருந்து 6 நாட்களில் முழு வளர்ச்சியடைந்து ஒட்டுண்ணியாக வெளிவந்து 5-8 நாட்கள் வரை உயிர் வாழும்.
 • அந்திப்பூச்சியின் முட்டைகளுக்கு உள்ளேயே ஒட்டுண்ணி வளர்ச்சியடையும். மூன்று நாட்கள் கழித்து முட்டைகள் கருமை நிறமாக மாறும். இந்த நிறமாற்றம் ஒட்டுண்ணுதலை உறுதி செய்ய உதவும். ஒட்டுண்ணிகளின் மொத்த வாழ்க்கைப்பருவம் 7 நாட்கள் தான். எனவே ஒட்டுண்ணி அட்டைகளை விரைவாக வயல்களுக்கு 7 நாட்களுக்குள் கொண்டு செல்லுதல் முக்கியம். தேவை ஏற்படாத சூழ்நிலையில் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை விரைவாக வயல்களுக்கு 7 நாட்களுக்குள் கொண்டு செல்லுதல் முக்கியம். தேவை ஏற்படாத சூழ்நிலையில் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை 10 சென்டிகிரேடு வெப்பநிலையில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 20 நாட்கள் வரை சேமிக்கலாம்.
 • வெவ்வேறு ஆய்வுக்கூடங்களிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளையும் கோர்சைரா அந்திப்பூச்சி முட்டைகளையும் வரவழைத்து ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து ஆய்வுக்கூட ஒட்டுண்ணிகளுடன் கலப்பதால் அதன் தரம் உயர்கிறது.

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளைத் தோட்டங்களில் விடும் முறை

 • ஒட்டுண்ணி அட்டைகளை மாலை வேளையில் வயலில் கட்ட வேண்டும்.
 • ஒட்டுண்ணி அட்டைகளை சிறு துண்டுகளாக வெட்டி இலைகளின் கீழ்பகுதியில் காற்றில் அசையாமல் நன்கு கட்ட வேண்டும். அழுந்தி ஊக்கி கருவி கொண்டு குத்தி வைக்க வேண்டும்.
 • வயல்களில் ஓரங்களில் ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டுவதைத் தவிர்த்து உள்பகுதியில் பல இடங்களில் கட்டுவதால் ஒட்டுண்ணிகள் சீராகப் பரவுவதற்கு வழிவகுக்கும்.
 • ஒட்டுண்ணி அட்டைகள் கட்டிய பின் 7-10 நாட்களுக்குப் பயிரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏதும் பயன்படுத்தக்கூடாது.

தென்னைக் கருந்தலைப்புழுவை தாக்கும் பிரக்கோனிட் ஒட்டுண்ணி உற்பத்தி முறை

இது ஒரு புழுப்பருவ வெளிப்புற ஒட்டுண்ணியாகும். மிருதுவான உடல் அமைப்புடன் தேன் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். தாய் ஒட்டுண்ணிகளுக்கு நீண்ட முட்டையிடும் உறுப்பும், வயிற்று பகுதி ஆண் ஒட்டுண்ணிகளை விட பெரிதாக இருக்கும். முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணிகள் 20-25 நரட்கள் உயிர் வாழும். ஒரு தாய் ஒட்டுண்ணி சுமார் 100 முதல் 125 முட்டைகள் இடும். புழுக்களின் உடலின் வெளிப்புறத்தில் முட்டைகளை வைக்கும். முட்டைகளின் எண்ணிக்கை புழுவின் உடல் நீள அளவிற்கும் பருமனுக்கும் தக்கவாறு வேறுபடும். பிரக்கோனிட் முட்டைப்பருவம் ஒரு நாள் ஆகும். புழுப்பருவத்தை 4-6 நாட்களிலும், கூட்டுப்புழு பருவத்தை 3-4 நாட்களிலும் முடிக்கின்றன. இதன் மொத்த வாழ்க்கைப்பருவம் 8-10 நாட்கள் ஆகும்.

ஆய்வுக்கூடங்களில் பிரக்கான் பிரிவிகார்னிஸ் ஒட்டுண்ணியை நெல் அந்துப்பூச்சியின் புழுப்பருவம் அல்லது தென்னை கருந்தலைப்புழு இவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம்.

உற்பத்தி முறை

ஒரு சிறிய கண்ணாடி குழாயில் (6”x1”) 50 சதம் தேன் கலவியினை பஞ்சில் நனைத்து சோதனை குழாய் உட்புறம் ஒட்டி வைத்து முழு வளர்ச்சி அடைந்த பிரக்கோனிட் ஆண், பெண் ஒட்டுண்ணிகளை சம எண்ணிக்கையில் இருக்குமாறு விட்டு இரண்டு நாட்கள் இனச்சேர்க்கை நடைபெற அனுமதிக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து ஆண் ஒட்டுண்ணிகளைத் தனியாகப் பிரித்து எடுத்து விட வேண்டும்.

ஒட்டுண்ணி உற்பத்தி  முறை

 • நமது இல்லங்களில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் அரிக்கேன் விளக்கின் கண்ணாடிச் சிம்னியினை நன்றாக சுத்தம் செய்யவும். அரிக்கேன் விளக்குக் கண்ணாடியின் இரண்டு பக்கங்களும் திறந்து இருப்பதைக் காணலாம். கண்ணாடிச் சிம்னியைத் தலைகீழாக திருப்பி பிடித்தால் அகன்ற வாய்ப்பகுதி மேல்புறமாகவும், குறுகிய வாய் பகுதி மேல் ஒரு மெல்லிய மஸ்லின் அல்லது வாயில் துணி அல்லது மெல்லிய திசுக்காகிதம் ஒன்றினை (10x10 செ.மீ.) வைத்து இரப்பர் நாடாவினால் இறுக்கி விடவும். அதன் மேல் நெல் அந்திப்பூச்சியின் புழுப்பருவத்தினை ஒரு புழுப்பருவத்தினை ஒரு பெண் பிரக்கோனிட்டிற்கு 2 புழு என்ற விகிதத்தில் வைக்கவும். நெல் அந்திப்பூச்சி புழுக்கள் 20 நாள் வயது உடையதாகவும் 1.5 செ.மீ. நீளமுள்ளதாகவும், மிருதுவான மற்றும் ஆரோக்கியமான புழுக்களாகவும் இருக்கும் படி தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மற்றுமொரு மெல்லிய துணியை புழுக்களின் மேல் வைத்து இரப்பர் நாடா கொண்டு இறுக்கவும். தற்பொழுது இரண்டு மெல்லிய துணிகளுக்கிடையே புழுக்கள் வைக்கப்படுகின்றன. ஆதலின் இம்முறையை ‘சாண்ட்விச்’ அல்லது இடைப்படுத்துதல் முறை என்றும் அழைக்கப்படுகிறது.
 • கண்ணாடிச் சிம்னியின் குறுகிய வாய்ப்பகுதி வழியாக பிரக்கோனிட் தாய் ஒட்டுண்ணிகளை இரண்டு புழுவிற்கு ஒரு பெண் ஒட்டுண்ணி என்ற விகிதத்தில் உள்ளே செலுத்த வேண்டும். பின்னர் சிம்னியின் குறுகிய கீழ்வாய் பகுதியினையும் ஒரு துணி கொண்டு மூடி இரப்பர் நாடா இட்டு கட்டிக்கொள்ள வேண்டும்.  ஒட்டுண்ணிகளுக்கு உணவாக 50 சதம் தேன் கலவையினை பொட்டு பொட்டாக ஒரு மெழுகு தாளில் வைத்து சிம்னியின் உள் வைக்க வேண்டும். ஒட்டுண்ணிகள் சிம்னியின் அகன்ற வாய்ப்பகுதி பக்கம் சென்று மெல்லிய துணியினைத் துளைத்து  தன் முட்டையிடும் உறுப்பு மூலமாக புழுக்களை முதலில் குத்தி செயலிழக்க செய்த பின்னர் அவற்றின் மீது முட்டைகளை இடுகின்றன.
 • ஒரிரு நாட்களுக்குப் பின்னர் தாய் ஒட்டுண்ணிகளை குறுகிய வாய்ப்பகுதியின் வழியாக வெளியேறி புதிய புழுக்களை ஒட்டுண்ணுதற்கு பயன்படுத்தலாம். நான்கு நாட்கள் கழித்து கண்ணாடி சிம்னியின் அகன்ற வாய்ப்பகுதியில் கட்டப்பட்ட இரப்பர் நாடாவை அகற்றி மேல் பகுதியில் உள்ள இரண்டு துணிகளையும் எடுத்துப் பிரித்துப் பார்த்தால் ஒட்டுண்ணி தாக்கப்பட்ட நெல் அந்திப்பூச்சி புழுக்களைப் பார்க்கலாம். ஒட்டுண்ணிகளின் புழுக்கள் வளர்ந்து ஓம்புயிரி புழுவை அழித்த பின் அருகாமையிலேயே துணியின் மீது கூடுகட்டி கூட்டுப்புழுக்களாக மாறும். இறந்த ஓம்புயிரி புழுக்களை மட்டும் ஒரு சிறிய இடுக்கி அல்லது சாமனத்தின் உதவியால் அகற்றி விட வேண்டும். ஏனெனில் இறந்த புழுக்கள் உடல் மீது வேறு பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் பெருகி துர்நாற்றம் வீச வாய்ப்புண்டு. ஒட்டுண்ணியின் கூட்டுப்புழுக்களுடன் கூடிய துணியினை வேறு ஒரு அட்டைப்பெட்டி அல்லது நெகிழி(பிளாஸ்டிக்) கொள்கலன்களில் சிறிது காற்றோட்டத்துடன் வைத்திருந்தால் முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணிகள் வெளிவரும் நாட்களில் அவற்றைச் சேகரிக்கலாம்.
 • ஒட்டுண்ணிகள் கூட்டுப்புழு பருவ நிலையில் குளிர் சாதன பெட்டிகளில் 10 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் சுமார் 20 நாட்கள் சேமிக்கலாம். முழு வளர்ச்சியடைந்த பூச்சிகளை குளிர் சாதனப்பெட்டியில் வைத்து சேமிக்க முடியாது.

தேவையான அளவு

தென்னைக் கருந்தலைப்புழுவைக் கட்டுப்படுத்த ஒரு முறை மரத்திற்கு 10 பிரக்கோனிட் ஒட்டுண்ணிகள் தேவை. ஏக்கருக்கு ஒரு முறை 800 ஒட்டுண்ணிகள் வீதம் தேவை. இது போன்று கருந்தலைப்புழு பருவத்தில் 10 நாட்கள் இடைவெளியில் 3 முறை பிரக்கோனிட் ஒட்டுண்ணி விட்டு நல்ல பலன் பெறலாம்.

பெத்திலிட் புழுப்பருவ ஒட்டுண்ணி

கோணியோசஸ் என்ற பெத்திலிட் குளவியினத்தைச் சார்ந்த ஒரு புழுப்பருவ புற ஒட்டுண்ணியாகும். இது தென்னைக் கருந்தலைப்புழுவை மிகவும் திறமையாக அழிக்கும் தன்மை கொண்டது.

பெத்திலிட் ஒட்டுண்ணிகள் வளர்க்கும் முறை

 • இந்த ஒட்டுண்ணி கருமை நிறத்தில் பளபளப்பாக உடல் பகுதி கூர்மையாகவும் சிறு எறும்பு போன்றும் இருக்கும். தாக்கப்பட்ட ஒரு புழுவிலிருந்து 13 லிருந்து 19 ஒட்டுண்ணிகள் வரை வளர்ச்சியடையக்கூடும்.
 • ஒரு 1.5x2.5 செ.மீ. கண்ணாடிச் சோதனைக்குழாயில் ஒட்டுண்ணிகளை ஒரு நாள் இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். மறுநாள் பெண் ஒட்டுண்ணிகளை தனித்தனியாக சிறு கண்ணாடிக்குழாய்களில் அல்லது கண்ணாடிக்குப்பிகளில் பிரித்து வைக்க வேண்டும்.
 • இனச்சேர்க்கைக்கு பாலிதீன் பைகளில் விட்டு வைத்தால் கண்ணாடிக்குழாய்களில் அல்லது குப்பிகளில் பிரித்து மாற்றுவது எளிது.
 • ஒட்டுண்ணிக்கு 50 சதம் தேன்கலவையினை உணவாகக் கொடுக்க வேண்டும். பின்னர் நன்றாக முழு வளர்ச்சியடைந்த தென்னைக் கருந்தலைப்புழு அல்லது நெல் அந்துப்பூச்சி புழுவை கண்ணாடி குழாய் அல்லது குப்பிக்கு ஒன்று வீதம் எடுத்துக்கொள்ள வேண்டும். தாய் ஒட்டுண்ணி ஓம்புயிரி புழுவைத்தாக்கி செயல் இழக்க செய்த பின் அதன் உடல் மீது வெள்ளை நிறத்தில் சிறிய முட்டைகளை வைக்கின்றன.
 • ஒட்டுண்ணியின் முட்டைப்பருவம் 15 நாட்கள் ஆகும். அவற்றிலிருந்து வரும் ஒட்டுண்ணிப்புழுக்கள் ஓம்புயிரி புழுவினைக் காயப்படுத்தி வெளிப்புற ஒட்டுண்ணிகளாக இருந்து ஒட்டுண்ணுகின்றன.
 • ஓம்புயிரி புழுக்களைத்தாக்கி முட்டைகள் வைத்த பின்னர் 2-3 நாட்களுக்கு ஒட்டுண்ணியின் புழுக்கள் சிறிது வளர்ச்சியடையும் வரை தாய் ஒட்டுண்ணி, தாக்கப்பட்ட புழுவின் மீது அமர்ந்து தன் இன சந்ததியினைப் பராமரிக்கும். இவ்வாறு தாயின் பாச அரவணைப்பில் ஒட்டுண்ணிப்புழுக்கள் வளர்ச்சியடைவது விந்தையான செய்தியாகும். அதன் பின்னரே அடுத்த புழுவைத் தேடுகின்றன. பெத்திலிட் புழுப்பருவம் 4-6 நாட்கள் வரை இருக்கும்.
 • ஒட்டுண்ணிப்புழுக்கள் ஓம்புயிரியினை தின்று வளர்ந்த பின் இறந்த புழுக்களின் அருகிலேயே நூல் கூடு கட்டி கூட்டுப்புழுக்களாக மாறும். ஆதலின் முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணி புழுக்களுடன் சேர்ந்து இறந்த ஓம்புயிரி புழுக்களைப் பொறுக்கி மடித்த அட்டைகளின் இடுக்குகளில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்தல் வேண்டும். இதனால் அட்டையின் மீது ஒட்டுண்ணிகள் கூட்டுப்புழுக்களாக மாறுவதற்கு வசதியாகின்றது. கூட்டுப்புழுக்களாக மாறியவுடன் இறந்த ஓம்புயிரி புழுக்களைப் பொறுக்கி அழித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் மீது பாக்டீரியா போன்ற நோய் கிருமிகள் உற்பத்தியாகி ஒட்டுண்ணிகளையும் பாதிக்க நேரிடும்.
 • கூட்டுப்புழுக்கள் அடங்கிய அட்டைகளை நெகிழி(பிளாஸ்டிக்) கொள்கலனில் வைத்து தென்னை மர தோப்புகளுக்கு எடுத்து சென்று ஒட்டுண்ணிகள் வெளிவந்தவுடன் மரங்களில் விட வேண்டும். முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணிகள் 20 நாட்கள்வரை உயிருடன் இருக்கும்.

தேவையான அளவு

ஒரு தென்னை மரத்திற்கு 10 ஒட்டுண்ணிகள் வீதம் 3-4 முறை 10 நாட்கள் இடைவெளியில் விட வேண்டும். கருந்தலைப்புழுக்கள் அதிகம் இருப்பின் அதிக எண்ணிக்கையில் ஒட்டுண்ணிகளை விடுவது நல்லது.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

3.05660377358
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top