பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / பயிர்களின் பொருளாதார முக்கியத்துவம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பயிர்களின் பொருளாதார முக்கியத்துவம்

பயிர்களின் பொருளாதார முக்கியத்துவம் (Economic Importance of Crops) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வேளாண் சாகுபடியில் எல்லா விளைப்பொருட்களும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. பயிர்களின் வெவ்வேறு பாகங்கள் உணவுப்பொருட்களாகவும், மருந்துப் பொருட்களாகவும், உடைகளுக்காகவும், நார்ப்பொருள் உற்பத்திக்காகவும், தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றன. மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றைப் பெரும்பாலும் தாவரங்களே பூர்த்தி செய்கின்றன. எனவே அனைத்து தாவரங்களும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

தானியப்பயிர்கள் (Cereals)

நெல், கோதுமை, சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, சாமை, பனிவரகு, குதிரைவாலி போன்ற தானியப்பயிர்களில் மாவுச்சத்து அடங்கியுள்ளது. இப்பயிர்களின் அனைத்துப் பாகங்களும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

கதிரிலுள்ள மணிகள் உணவுப்பொருளாகவும், அவல், பொரி தயாரிக்கவும் பயன்படுகிறது. தண்டுகள் கால்நடைத்தீவனமாகவும், வைக்கோல் பழங்களை பதப்படுத்தவும் மற்றும் காளான் உற்பத்திக்கு ஊடகமாகவும் பயன்படுகிறது. நெல்லின் மேலுறை (தவிடு) மாட்டுத் தீவனமாகவும், தவிட்டு எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுகிறது. புண்ணாக்கு கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. ராகி, தினை, சோளம் ஆகியவை நீரிழிவு நோய்க்கு சிறந்த உணவாகும். மக்காச்சோளத்திலிருந்து சோளப்பொரி, சோளமாவு போன்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கலாம். எல்லா தானியங்களையும் கலந்து நவதானிய சத்து மாவு என்ற பெயரில் சரிவிகித உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பயிறு வகைப்பயிர்கள் (Pulses)

துவரை, அவரை, கொண்டைக்கடலை, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சை, பட்டாணி, சோயா மொச்சை ஆகியவற்றில் புரதச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இப்பயிர்களின் காய்ப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன. இவற்றின் வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தக் கூடிய பாக்டீரியங்கள் இருப்பதால் இது மண்ணில் தழைச்சத்தினை நிலைநிறுத்தி மண்ணை வளமாக்குகிறது. கொள்ளு மனித உடலிலுள்ள அளவுக்கதிகமான கொழுப்பைக் குறைக்கப் பயன்படுகிறது.

எண்ணெய் வித்துப்பயிர்கள் (Oil Seed Crops)

 • நிலக்கடலை, எள், சூரியகாந்தி, கடுகு, ஆமணக்கு, இலுப்பை, தென்னை, குசும்பா, ஆளி, பனை ஆகிய பயிர்கள் அதிக அளவு எண்ணெய் சத்தைக் கொண்டுள்ளன. இப்பயிர்களின் விதைப்பகுதிகளில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. கொழுப்புப் பொருளாகிய எண்ணெயைப் பிரித்தெடுத்தபின் மீதியுள்ள பொருள் பிண்ணாக்கு என்ற பெயரில் கால்நடைத் தீவனமாகவும், பயிருக்கு உரமாகவும் பயன்படுகிறது. சோப்புத் தொழிலுக்கு எண்ணெய் ஆதாரமாக உள்ளது. எனவே எண்ணெய் வித்துப்பயிர்களை வியாபாரப் பயிர்களாக கருதலாம். எண்ணெய் வகைகளை இரண்டாகப் பிரிக்கலாம்.
 • 1. எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உ.ம். யூகலிப்டஸ், சந்தன தைலம் 2. நிலையான எண்ணெய்கள். நிலையான எண்ணெய், உணவுக்குப் பயன்படுபவை மற்றும் உணவாக உட்கொள்ள முடியாதவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் போன்றவை உணவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆளிவிதை, குசும்பா, இலுப்பை எண்ணெய் ஆகியவை சோப்புத்தொழிற்சாலைகளிலும், பெய்ண்ட், வார்னிசுகள் தயாரிப்பிலும், உரம் மற்றும் தீவனமாகவும் பயன்படுகின்றன.
 • தென்னையின் அனைத்து பாகங்களும் பயன் அளிக்கக்கூடியதாகையால் இது “கற்பக விருட்சம்' என்றழைக்கப்படுகிறது. பாளை, இளநீர், தேங்காய், தென்னை மட்டை, ஓலைகள் போன்ற பொருட்கள் மனிதனுக்கு பல்வேறு வகைகளில் உபயோகப்படுகின்றன. தேங்காய் எண்ணெய் சமையலுக்கும், சோப்பு தொழிற்சாலைகளிலும், மருந்துப் பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.

நார்ப்பயிர்கள் (Fibre Crops)

உடை தயாரிக்கவும், மனிதனின் பல்வேறு தேவைகளுக்கும் நமக்கு நார்ப்பொருள்கள் தேவைப்படுகின்றன. பருத்தி, இலவம்பஞ்சு, தென்னை முதலியவற்றின் காய்களிலிருந்தும், புளிச்சை, சணல், சணப்பு முதலியவற்றின் தண்டிலிருந்தும், கற்றாழை, பனை முதலியவற்றின் இலைப்பகுதியிலிருந்தும் நார்ப்பொருள்கள் கிடைக்கின்றது. பருத்தி விதைகள் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ள சக்கை பிண்ணாக்காகவும், உரமாகவும் பயன்படுகிறது. பருத்தி விதை எண்ணெய் சோப்பு, செயற்கைத்தோல், காப்புப் பொருள், கிளிசரின் போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது. சணப்பையில் காய்கள் உருவானவுடன் பயிரை அடியோடு வெட்டி எடுத்து தண்ணீரில் ஊறவைத்து நாரைப்பிரித்து எடுக்கலாம். புளிச்சைச் செடியினை தண்ணீரில் ஊறவைத்து சுமார் மூன்று வாரங்கள் கழித்து நார்ப்பொருளை உரித்து எடுக்கலாம். மீதியுள்ள உள்ள குச்சிகள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.

சர்க்கரைப்பயிர்கள் (Sugar Crops)

கரும்பு, பனை, ஈச்சை, பீட்ரூட் ஆகிய பயிர்கள் சர்க்கரை உற்பத்திக்குப் பயன்படுகின்றன. ஆயினும் உலகின் சர்க்கரை உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு கரும்பிலிருந்தே கிடைக்கிறது. கரும்பு, பனை பயிர்கள் வெல்லம் தயாரிக்கப் பயன்படுகின்றன. மீதமுள்ள கரும்புச் சக்கையுடன் சர்க்கரைக் கழிவைச் சேர்த்து சிறந்த கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். சர்க்கரை ஆலைக்கழிவு (Molasses) சாக்லேட் மற்றும் ஆல்கஹால் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

நறுமணப்பயிர்கள் (Spices and Condiments)

உணவுக்கு சுவை மற்றும் வாசனையைக் கொடுக்கக்கூடிய பயிர்களில் மஞ்சள், இஞ்சி, மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, பெருங்காயம், பட்டை, இலவங்கம், மிளகு, சீரகம், சோம்பு ஆகியவை முக்கியமானவையாகும். இவை மருந்துப் பொருளாகப் பயன்படுகின்றன. மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி; இது சாயத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இஞ்சி உணவு ஜீரணிக்கப் பயன்படுகிறது. இதன் மேல் தோலை நீக்கி சுண்ணாம்பு நீரில் போட்டு உலர்த்தி சுக்கு என்ற பெயரிலும் பயனாகிறது. பூண்டு வாயுக்கோளாறுகளை நீக்கவும், கொழுப்புச்சத்தை குறைக்கவும், புற்று நோய் எதிரியாகவும் பயன்படுகிறது. கொத்தமல்லி இலைகளை கீரையாக சமைத்து உண்ணலாம்; இதன் விதைகள் பித்தம் மற்றும் தலைசுற்றலைப் போக்க உதவுகிறது. பெருங்காயம் ஃபெருலா அசபோடிடா என்னும் தாவரத்தின் வேர்ப்பகுதியிலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்திலிருந்து கிடைக்கிறது. இது உணவு செரிமானத்திற்குப் பயன்படுகிறது. பட்டை, இலவங்கம், மிளகு, சீரகம், சோம்பு ஆகிய பயிர்களின் பாகங்கள் உணவுக்கு நறுமணம் கொடுக்கவும், செரிமானத்திற்கும் உதவுகின்றன.

லாகிரிப் பயிர்கள் (Norcotics)

புகையிலை விதையில் 35 - 38 சதம் எண்ணெய் உள்ளது, இது சோப்பு மற்றும் சாய மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் பிண்ணாக்கு மாட்டுத்தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இப்பயிர் தொழிற்சாலைகளிலும், பூச்சி மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. சிலவகைப் புகையிலை இரகங்கள் அலங்காரச்செடிகளாகப் வளர்க்கப்படுகின்றன.

காய்கறிப் பயிர்கள் (Vegetable Crops)

சாகுபடி செய்யப்படும் பல்வகைப் பயிர்களில் காய்கறிப்பயிர்கள் மிகவும் முக்கியமானவையாகும். நம் உணவில் காய்கறிகளை போதிய அளவு சேர்த்துக் கொள்ளும் போதுதான் நமக்கு வேண்டிய எல்லா சத்துக்களும் கிடைத்து சரிவிகித உணவாகிறது.

மாவுப்பொருளும் சர்க்கரையும் காய்கறிகளில் பொதுவாக காணப்படும். மாவுப்பொருள் சதவீதம் குறைவே எனினும் கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றில் மாவுப்பொருள் மிக அதிகம். புரதம் - அவரை, கொத்தவரை, பட்டாணி போன்ற அவரையினத்தைச் சேர்ந்த காய்கறிகள் புரதச்சத்து நிறைந்தவை. தாது உப்புக்கள் - காய்கறிப்பயிர்களிலிருந்து கிடைக்கும் மிக முக்கிய உணவுச்சத்து தாது உப்புக்களாகும். கால்சியம் - கீரை வகைகளிலிருந்து கிடைக்கும் இச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு இன்றியமையாதது  பாஸ்பரஸ் - வெண்டை, முருங்கை முதலியவற்றில் குறைந்தளவில் உள்ளது. இரும்பு - தண்டுக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கருவேப்பிலை முதலியவற்றில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் சரிவர இயங்க இன்றியமையாதது. வைட்டமின்கள் சமைக்காமல் உண்ணக்கூடிய மற்றும் குறைந்த வெப்பநிலையில் வேகவைக்கப்படும் காய்கறிகளிலிருந்தும் நமக்கு வைட்டமின்கள் கிடைக்கின்றன. உணவை உயர்ந்த வெப்பநிலையில் சமைக்கும் போது வைட்டமின்கள் அழிக்கப்பட்டுவிடும். இவை உணவில் போதிய அளவில் இல்லாவிடில் பற்றாக்குறை நோய்கள் ஏற்படும். வைட்டமின் A - பச்சைக்காய்கறிகள், கீரைகள் வைட்டமின் C நெல்லிக்காய், கீரைகள் வைட்டமின் E வெங்காயம், முருங்கை

நார்ப்பொருள்

காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் மற்ற பயிர்களைவிட நார்ப்பொருளின் அளவு அதிகமாக உள்ளது. இதனை உணவில் சேர்த்து மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.

பழப்பயிர்கள் (Fruit Crops)

பொதுவாக பழங்கள் முக்கியமான சத்துமிக்க உணவாகப் பயன்படுகிறது. முக்கியமான பழவகைகளான வாழை, மாம்பழம், சப்போட்டா, பலா, மாதுளை, கொய்யா, சீத்தா, ஆப்பிள், திராட்சை போன்ற பழப்பயிர்கள் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. இதில் வாழையின் எல்லா பாகங்களும் உணவாகப் பயன்படுகிறது. மேலும் வாழைமட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நார் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது; மா, கொய்யா, சப்போட்டா ஆகிய பழங்களில் நார்ச்சத்தும், வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிகம் காணப்படுகின்றன. மேலும் உடல்நலம், நோய் எதிர்ப்புச்சக்தி போன்றவற்றை பழங்களை உண்பதன் மூலம் பெறலாம். பழங்களில் உள்ள அங்கக அமிலங்கள் பசியைத் தூண்டவும், உணவு செரிக்கவும் உதவி புரிகின்றன. பழங்கள் சிறந்த காப்பு உணவாகவும், துணை உணவாகவும் செயல்படுகின்றன.

மலைத்தோட்டப் பயிர்கள் (Plantation Crops)

தேயிலை, காப்பி, ரப்பர், கோகோ, பாக்கு, முந்திரி போன்றவை மலைத்தோட்டப்பயிர்களாகும். இதில் காப்பி கொட்டையிலிருந்து காப்பித்தூள், தேயிலையிலிருந்து தேயிலைத்தூள், கோகோவிலிருந்து கோகோ பவுடர், கோகோ வெண்ணெய், கோகோ சாக்லெட் போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. கோகோ பருப்பின் மேலுறை கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. ரப்பர் மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் பால் பொருள் ரப்பர் தயாரிக்கப் பயன்படுகிறது. பாக்குக் கொட்டைகள் பாக்குத்தூள் தயாரிக்கவும், காய்களின் மேலுறை பேப்பர், போர்டுகள், விளம்பரப் பலகைகள், அட்டைகள் செய்யவும் பயன்படுகின்றன. பாக்கின் இளம் காய்களில் டானின் சத்து நிறைந்துள்ளதால் தோல் பதனிடவும், மை தயாரிக்கவும் பயன்படுகின்றன. பாக்கு மரத்தின் பாளைகள் தொன்னைகள், சாப்பிடும் தட்டுகள், தயாரிக்கவும், மரத்தின் தண்டுப்பகுதி கட்டிடங்கள் கட்டவும் பயன்படுகின்றன.

அலங்காரத் தாவரங்கள் (Ornamental Crops)

இதில் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலிருந்து பெறப்படும் திரவம் வாசனைப்பொருட்கள், கூந்தல் எண்ணெய்கள், சோப்புகள் தயாரிக்க பயன்படுகின்றன.

வாசனை எண்ணெய், பன்னீர், குல்கந்து மல்லிகை வாசனை எண்ணெய் சாமந்தி தாவரப் பூச்சிக்கொல்லி ஆர்கிட் மலர்கள் கிளாடியோலஸ் கொய்மலர், பூங்கொத்து ஜெர்பெரா, கினியா

வனப்பயிர்கள் (Forest Crops)

 • யூகலிப்டஸ், சின்கோனா, சவுக்கு, வேப்பமரம், பீயமரம் (அய்லாந்தஸ்), புங்கம், காட்டாமணக்கு, வாகை, மூங்கில், பெருநெல்லி, புளியமரம், இலவம்பஞ்சு, தேக்கு, ஓக் போன்றவை காடுகளில் அதிக அளவு வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள், மரப்பட்டைகள், தண்டுப்பகுதிகள், பூக்கள் போன்றவை பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.
 • யூகலிப்டஸ் - இலைகள் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது. சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைன் மருந்து தயாரிக்கப்படுகிறது.
 • சவுக்கு மரம் எரிபொருளாகவும், மண் அரிமானம் மற்றும் வேகமான காற்றைத் தடுக்கவும் பயன்படுகிறது. வேப்பமரம் இலைகள், காய்கள், பூக்கள் மருந்தாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது. பீயமரம் தீக்குச்சிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. காட்டாமணக்கு - விதைகள் எரிபொருள் தயாரிக்கப் பயன்படுகிறது.
 • புங்கம் இலைகள் பூச்சிக்கொல்லியாகவும், மரங்கள் எரிபொருளாகவும் பயன்படுகிறது. வாகை - கட்டிடங்கள் கட்டவும், எரிபொருளாகவும் பயன்படுகிறது. புளியமரம் காய்கள், பழங்கள் உணவிற்கு சுவையூட்டவும், மரங்கள் எரிபொருளாகவும் பயன்படுகிறது.
 • தேக்கு - வீடு கட்டுவதற்காகப் பயன்படுகிறது. மூங்கில் இலைகள் காகிதம் தயாரிக்கவும், தண்டுப்பாகம் இசைக்கருவிகள், மூங்கில் கூடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன.
 • இலவம் பஞ்சு - இவற்றின் உலர்ந்த காய்களின் பஞ்சானது மெத்தைகள், தலையணைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
 • சந்தனமரம் : இதன் தண்டுப்பகுதி வாசனைப்பொருள்கள் தயாரிக்கவும், வாசனை எண்ணெய்கள் தயாரிக்கவும், மரச்சாமான்கள், மாலைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top