பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / மானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்

மானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நமது நாட்டின் பெரும்பாலான மூலிகை உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை வணங்களிலிருந்து தான் சேகரித்து வருகின்றனர்.  இயற்கையாக காடுகளில் விளையும் மூலிகைகளின் தரம் நன்றாக இருக்கும். இயற்கை சூழ்நிலையை ஒரளவு ஒத்த மானாவாரி மூலிகை சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. நம் நாட்டில் அமுக்கிரா, இசப்கல், நிலாவாரை, நித்யகல்யாணி, துளசி போன்ற முக்கிய பயிர்கள் அநேகமாக மானாவாரியிலேயே சாகுபடி செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அதிக அளவில் ஏற்றுமதியாகி வரும் மானாவாரி மருந்துப் பயிர்களில் நிலாவாரை மற்றும் நித்தியகல்யாணி முக்கிய இடத்தை பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் மூலிகைப் பயிர்களை மானாவாரியில் பயிர் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. நிலாவாரை உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கின்றது. இதேபோல நித்தியகல்யாணி மருந்துப்பயிர் உற்பத்தியிலும் தமிழகம் முன்னலை வகிக்கிறது. இத்தாவரத்தின் இலை மற்றும் வேர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இவையோடு அல்லாமல் சோற்றுக்கற்றாழை போன்ற பிற மூலிகைப் பயிர்களும் மானாவாரியில் அதிக அளவில் பயிர்  செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் நிலாவாரை, நித்யகல்யாணி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.  நம் நாட்டில் அதிக அளவில் வணிகத்தில் உள்ள நிலாவாரையில் சென்னோசைடு வேதிப்பொருட்கள் பிரிக்கப்பட்டு நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நிலாவாரை

நிலாவாரை வறட்சியில் வளரும் மூலிகைப் பயிராகும். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் “திருநெல்வேலி சென்னா என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திர மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் கரிசல் அல்லது தரிசு நிலங்களிலேயே சாகுபடி செய்யப்படுகிறது.  ரூபாய் 50 மில்லியன் வரை அந்நியச் செலாவணி ஈட்டித்தருகின்ற இம்மூலிகைப்பயிர் 2700 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் 5000 டன் இலைகள்  மற்றும் காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இலை மற்றும் காய்கள் மலச்சிக்கலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.   இயற்கை மலமிளக்கியான நிலாவாரை, ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவ முறைகளிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்ட கிள்ளிகுளம்-1 (கே.கே.எம்-1) சென்னா, 7-8 கிளைகளுடன் அடர்த்தியான படர்ந்து வளரும் தன்மையுடையது.  134-140 நாட்களில் அதிக விளைச்சல் மற்றும் 234 சதவிகீதம் சென்னோஸைடு மூலப்பொருள் உடையது.  மானாவாரி சாகுபடியில் ஒரு எக்டரில் 1000 கிலோ காய்ந்த காய்கள் விளைச்சலாக கிடைக்கும்.  மத்திய மருந்து மற்றும் நறுமணத் தாவரங்கள் ஆராய்ச்சி மையத்திலிருந்து ‘சோனா’ இரகமும், தேசிய மருந்து மற்றும் மணமூட்டும் ஆராய்சசி இயக்குனரகத்தின் மேம்படுத்தப்பட்ட இரகமும் சாகுபடி உகந்தது.  இதன் மூலம் ஒரு எக்டருக்கு ரூ 30000 வரை மானாவாரி சாகுபடியில் வருமானம் பெறலாம்.

விதைப்பதற்கு முன்பு விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்னர் நிழலில் ஒரு மணி நேரம் உலர வைத்து விதைத்தால் முளைப்புத்திறன் அதிகமாகும். விதைத்த இரண்டாவது மாதத்தில் செடிகளில் பூக்கள் தோன்றும். இலைகளில் விளைச்சலை அதிகரிக்க பூக்களைக் கிள்ளிவிடுவது நல்லது.  ஒவ்வொரு செடியிலும் குறைந்தது 10 சதவிகிதப் பூக்களை விட்டுவிட வேண்டும்.  தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இலை மற்றும் காய்கள் விளைச்சலுக்காகவே பயிர் செய்யப்படுகிறது.  முதல் அறுவடையாக விதைத்த 85-90 நாட்களில் இடைவெளியில் செய்ய வேண்டும். இரண்டாவது அறுவடையில் காய்கள் இளமஞ்சள் நிறமாக மாறும்போது பறிக்க வேண்டும். கடைசி அறுவடையில் செடிகளை வேரோடு பிடுங்கி இலைகளையும், காய்களையும் பறித்து பதப்படுத்தலாம். நிலாவாரையின் காய்களில் அதிக ‘சென்சோஸைடு’ மூலப்பொருள் இருப்பதால் அதன் இலையைக் காட்டிலும் அதிக விதை கிடைக்கிறது. அதே சமயம் காய்களை அறுவடை செய்து, தூய்மையான சூழலில் சூரிய ஒளியில் நன்றாக உலர்த்த வேண்டும்.  ஏனெனில், சரியாக உலர்த்தப்படாத காய்களில் ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சாணம் ஏற்படும். இது நிலாவாரை ஏற்றுமதியை பெரிதும் பாதிக்கிறது.

அங்கக வேளாண்மையில் நிலாவாரை சாகுபடி

நிலாவாரை மூலிகைப் பயிர் சுமார் ஆயிரம் ஏக்கரில் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான நான்கு கிலோ விதைகள் நவம்பர் மாதத்தில் விதைக்கப்படுகிறது. நான்கு டிராக்டர் லோடு மக்கிய தொழுஉரம் மற்றும் 50 கிலோ டி.ஏ.பி அடியுரமாக இடப்பட்டு, முற்றுலும் அங்கக வேலாண்மை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. இம்மூலிகைப்பயிரில் ஒரு ஏக்கரில் முதல் அறுவடையில் ஜனவரி மாதத்தில் 200 கிலோ காய்ந்த இலைகள், இரண்டாவது அறுவடை ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 200 கிலோ காய்ந்த இலைகள் மற்றும் காய்கள் மற்றும் மூன்றாவது அறுவடை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் 200 கிலோ காய்ந்த மற்றும் காய்கள் அறுவடை செய்யப்படுகிறது.  ஒரு கிலோ காய்ந்த இலைகளை ரூபாய்  இருபத்தைந்துக்கும், காய்ந்த காய்களை ரூபாய் அறுபதுக்கும் இப்பகுதி விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

நித்திய கல்யாணி

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சுமார் 1000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நித்தியகல்யாணி மானாவாரிப் பயிராக அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 2,000 டன் காய்ந்த இலைகள் மற்றும் வேர்கள் ஏற்றுமதி செய்ய்படுகிறது. நித்தியகல்யாணி இலையிலுள்ள ஆல்கலாய்டுகள் லுகெமியா இரத்தப் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

லக்னோவிலுள்ள மத்திய மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள் ஆராய்ச்சி மையத்திலிருந்து வெளியிடப்பட்ட ‘நிர்மல்’ மற்றும் ‘தாவல்’ என்ற புதிய இரகங்கள் மானாவாரியில் 1200 கிலோ உலர் இலைகளும்,800 கிலோ வேர்களும் தரவல்லது. அதிக பலனையும் வருமானத்தையும பெறுவதற்கு நித்தியகல்யாணி செடிகளை நாற்றங்காலில் விதைத்து நாற்றுகளை நடவு செய்வது சிறந்தது. ஒரு எக்டரில் நேரடி விதைப்பிற்கு 2.5 கிலோ விதையும், நாற்றாங்காலில் விதைக்க 500 கிராம் விதையும் போதுமானது. விதைகள் சிறியதாக இருப்பதால் ஒரு கிலோ விதைக்கு 10 கிலோ மணல் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். செடிகள் நட்ட ஓர் ஆண்டில் முதிர்ச்சி அடைந்த வேர்களை அறுவடை செய்யலாம். ஐந்தாவது மற்றும் ஏழாவது மாதங்களில் இலைகளை மட்டும் அறுவடை செய்யலாம். செடிகளில் வேர்களை எடுப்பதற்கு விதைத்த ஓர் ஆண்டு கழித்து செடிகளை 10 செ.மீ உயரத்தில் வெட்டி இலை, தண்டு மற்றும் காய்களை எடுக்க வேண்டும்.  வேர்களிலுள்ள மண்ணைச் சுத்தப்படுத்திய பிறகு நிழலில் சிறிது காலம் உலர்த்தி சிறிய கட்டுகளாக் கட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.  மானாவாரிப் பயிரில் எக்டருக்கு 750 கிலோ உலர்ந்த வேர்களும், 1000 கிலோ தண்டுகளும், 1000 கிலோ இலைகளும் விளைச்சலைப் பெறலாம்.  மானாவாரியில் ஒரு எக்டருக்கு வேர்களின் அறுவடை மூலம் ரூ.50,000 வரை வருமானம் பெறலாம்.

இப்பயிரில் வேரியல்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள் துறையில் சடுதி மாற்றம் மற்றும் அதிக விளைச்சலுக்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மானாவாரி மூலிகை பயிராகும். தமிழ்நாட்டில் மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.  வணிக ரீதியான இதன் கூழ் உலகெங்கிலும் சரும லோசன், சவரன் செய்வதற்கான கிரீம், ஷாம்பு ஆகியவற்றில் சேர்க்கப்டுகிறது. கற்றாழைச்சாறு சத்துமிகு பானமாகவும், குடல்புண் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.  25 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்பமண்டல பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது. தாய்ச் செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.  ஒரே அளவிலுள்ள பக்கக் கன்றுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். கற்றாழையை தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது எக்டருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும்.

சோற்றுக் கற்றாழை இலைகளை நட்ட ஒரு ஆண்டிலிருந்து செடியின் அடிப்பகுதியில் உள்ள முதிர்ந்த இலைகளை மட்டும் தனியாக வெட்டி எடுத்து அறுவடை செய்யலாம். பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து இலைகளை அறுவடை செய்யலாம். மானாவாரி சாகுபடி மூலம் எக்டருக்கு 18 முதல் 20 டன் இலைகளை விளைச்சலாக பெறலாம்.

சோற்றுக்  கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட மூலிகை குளிர்பானம். அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

சோற்றுக் கற்றாழை எண்ணற்ற மருத்துவ பண்புகளைக் கொண்டது. இதனை முக்கிய பயிராக சாகுபடி செய்வதற்கு, பதப்படுத்தும் நிறுவனங்களின் உடன்பாட்டோடு ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது மிகவும் அவசியம்.  இலையில் கூழ் எடுத்து பதப்படுத்தும் நிறுவனங்களின் உடன்பாட்டோடு ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது மிகவும் அவசியம்.  இலையிலட கூழ் எடுத்து பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.  அவ்வாறில்லாமல் வெளி சந்தையில் கற்றாழை இலையை விற்பனை செய்வது மிகவும் கடினம்.

மூலிகைச் செடிகளை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தூத்துக்குடி, சிவகாசி, மதுரை ஆகிய இடங்களில் உள்ளன.   வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புடைய மூலிகைப் பயிர்களை தேவைக்குத் தகுந்தாற் போல குறிப்பாக ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.97530864198
சரத்குமார் Aug 13, 2020 12:17 PM

யாரை அணுகுவது தொடர்பு கொள்வது நம்பர்
இருந்தால் கொடுக்கவும்

அ.சுந்தரம் Aug 01, 2019 03:48 PM

கற்றாழை ஒப்பந்த நிலையில் சாகுபடி செய்ய நிறுவனத்தின் விலாசம் தெரிவிக்கவும்

பன்னீர்செல்வம் Dec 31, 2018 10:54 AM

அருமையான பதிவு

பா சுந்தர் சிங் Apr 11, 2017 10:03 PM

சோற்று கற்றாழை விதை எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரிவிக்கவும்380

சீனாவின் Feb 27, 2017 10:55 AM

ஜயா வணக்கம்
நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த,மாலகுப்பம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மருத்துவ தாவரங்கனை பயிரிட ஆர்வம் உள்ளது தாவர பயிர்கள் மற்றும் எப்படி பயிரிட வேண்டும் மற்றும் வாரியம் எங்கு உள்ளது என்று என் மின்அஞ்சலக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுகெள்கிறேன்.*****@gmail.com.
நன்றி
இப்படிக்கு
சீனி

வீ.சிவகுமார் Dec 13, 2016 08:19 PM

அருமையான தகவலுக்கு நன்றி. சோற்றுக்கற்றாலயை வி்ற்பனை செய்வது எப்படி?31

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top